யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 21வது வாரம் புதன்கிழமை
2013-08-28

புனித அகுஸ்தீன்


முதல் வாசகம்

எங்கள் பிழைப்புக்காக இராப் பகலாய் வேலை செய்துகொண்டே, கடவுளுடைய நற்செய்தியை உங்களுக்குப் பறைசாற்றினோம்.
புனித பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்

அன்பர்களே! நாங்கள் எவ்வாறு பாடுபட்டு உழைத்தோம் என்பதை நினைத்துப் பாருங்கள். உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி, எங்கள் பிழைப்புக்காக இராப் பகலாய் வேலை செய்துகொண்டே, கடவுளுடைய நற்செய்தியை உங்களுக்குப் பறைசாற்றினோம்.10 நம்பிக்கை கொண்டுள்ள உங்கள் முன்பாக நாங்கள் மிகவும் தூய்மையோடும் நேர்மையோடும் குற்றமின்றியும் ஒழுகினோம் என்பதற்கு நீங்களும் சாட்சி, கடவுளும் சாட்சி!11 ஒரு தந்தை தம் பிள்ளைகளை நடத்துவதுபோல உங்களை நடத்தினோம்.12 தம்முடைய ஆட்சியிலும் மாட்சியிலும் பங்குபெற உங்களை அழைக்கும் கடவுளுக்கு ஏற்ப நடக்குமாறு உங்கள் ஒவ்வொருவருக்கும் அறிவுரை வழங்கினோம்: உங்களை ஊக்குவித்தோம்: வற்புறுத்தினோம். இவையெல்லாம் உங்களுக்குத் தெரிந்தவையே.13 கடவுளின் வார்த்தையை நீங்கள் எங்களிடமிருந்து கேட்டபோது அதை மனித வார்த்தையாக அல்ல, கடவுளின் வார்த்தையாகவே ஏற்றுக் கொண்டீர்கள். இதற்காக நாங்கள் கடவுளுக்கு இடைவிடாது நன்றி கூறுகிறோம். உண்மையாகவே அது கடவுளுடைய வார்த்தைதான்: அதுவே நம்பிக்கை கொண்ட உங்களில் செயலாற்றுகிறது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

உமது ஆற்றலைவிட்டு நான் எங்கே செல்லக்கூடும்? உமது திருமுன்னிலிருந்து நான் எங்கே தப்பியோட முடியும்?
திருப்பாடல்கள் 139;7-12

7 உமது ஆற்றலைவிட்டு நான் எங்கே செல்லக்கூடும்? உமது திருமுன்னிலிருந்து நான் எங்கே தப்பியோட முடியும்?பல்லவி

8 நான் வானத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கே இருக்கின்றீர்! பாதாளத்தில் படுக்கையை அமைத்துக் கொண்டாலும் நீர் அங்கேயும் இருக்கின்றீர்!பல்லவி

9 நான் கதிரவனின் இடத்திற்கும் பறந்து சென்றாலும் மேற்கே கடலுக்கு அப்பால் வாழ்ந்தாலும்,பல்லவி

10 அங்கேயும் உமது கை என்னை நடத்திச் செல்லும்; உமது வலக்கை என்னைப் பற்றிக் கொள்ளும்.பல்லவி

11 'உண்மையில் இருள் என்னை மூடிக்கொள்ளாதோ? ஒளி சூழ்வதென இரவும் என்னைச் சூழ்ந்து கொள்ளாதோ?' என்று நான் சொன்னாலும், 12 இருள்கூட உமக்கு இருட்டாய் இல்லை; இரவும் பகலைப்போல ஒளியாய் இருக்கின்றது; இருளும் உமக்கு ஒளிபோல் இருக்கும்.பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்களும் வெளியே மக்களுக்கு நேர்மையாளராய்த் தோற்றமளிக்கிறீர்கள். ஆனால் உள்ளேயோ போலித்தனமும் நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்23;27-32

27 வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள். அவை புறம்பே அழகாகத் தோற்றமளிக்கின்றன; அவற்றின் உள்ளேயோ இறந்தவர்களின் எலும்புகளும் எல்லாவகையான அழுக்குகளும் நிறைந்திருக்கின்றன.28 அவ்வாறே நீங்களும் வெளியே மக்களுக்கு நேர்மையாளராய்த் தோற்றமளிக்கிறீர்கள். ஆனால் உள்ளேயோ போலித்தனமும் நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள்.29 ' வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் இறைவாக்கினர்களின் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்; நேர்மையாளரின் நினைவுச் சின்னங்களை அழகுப்படுத்துகிறீர்கள்;30 ' எங்கள் மூதாதையர் காலத்தில் நாங்கள் இருந்திருந்தால் இறைவாக்கினர்களின் கொலைக்கு உடந்தையாக இருந்திருக்க மாட்டோம் ' என்கிறீர்கள்.31 இவ்வாறு நீங்கள் இறைவாக்கினரைக் கொன்றவர்களின் வழிமரபினர் என்பதற்கு நீங்களே சாட்சிகள்.32 உங்கள் மூதாதையர் செய்த கொடுமையின் அளவுக்கு நீங்களும் செய்து முடியுங்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே,... நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள்'' (மத்தேயு 23:27)

மின்னுவதெல்லாம் பொன்னல்ல, வெளுத்ததெல்லாம் பாலல்ல என்பார்கள். கண்ணுக்கு அழகாகத் தோன்றுவது உண்மையிலேயே அதற்கு நேர்மாறாகக் கூட இருக்கலாம். இயேசு பரிசேயரையும் மறைநூல் அறிஞரையும் குறித்துப் பேசியது இதுதான். அவர்கள் வெளியே மக்களுக்கு நேர்மையாளராய்த் தோற்றமளிக்கிறார்கள்; ஆனால் உள்ளேயோ போலித்தனம் நிறைந்திருக்கிறார்கள். இதை விளக்க இயேசு ''வெள்ளையடித்த கல்லறை'' என்னும் உருவகத்தைப் பயன்படுத்துகிறார். பாலஸ்தீன நாட்டு வழக்கப்படி சாலையோரங்களில் கல்லறைகளை அமைப்பதுண்டு. அக்கல்லறைகளை அணுகிச்சென்றாலோ, தெரியாமல் தொட்டுவிட்டாலோ தீட்டு ஏற்பட்டுவிடும் என்று மக்கள் நம்பினார்கள். எனவே, அக்கல்லறைகளுக்கு அருகில் மக்கள் போய்விடாமல் இருக்க அவற்றின் மீது வெள்ளை பூசுவது வழக்கம். குறிப்பாக மக்கள் அதிகம் நடமாடுகின்ற காலமாகிய விழாக் காலங்களில் இவ்வாறு கல்லறைகள் வெள்ளையடிக்கப்படும். அப்போது சூரிய ஒளியில் அக்கல்லறைகள்மீது வீசும்போது அவை பளிச்சென்று தோற்றமளிக்கும். இதைப் பார்த்துப் பழகிய இயேசு பரியேரும் மறைநூல் அறிஞரும் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைக்கு ஒப்பாவர் என்றுரைத்தார். மக்களைத் தீட்டுப்படுத்துவது யாது? வெளியே மின்னிக்கொண்டும் உள்ளே அழுகியவற்றைத் தாங்கிக்கொண்டும் இருக்கின்ற கல்லறைபோல இயேசுவின் எதிரிகளும் உள்ளே அழுக்கு நிறைந்தவர்களாகவும் வெளியே மட்டும் கவர்ச்சியுடையவர்களாகவும் இருந்ததால் அவர்களது நிலை ஏற்கத்தகாகது என இயேசு கூறுகிறார். உண்மையாகவே நம்மைத் தீட்டுப்படுத்துபவை பேராசை, அழுக்காறு, சிற்றின்ப நாட்டம், ஆணவம் போன்றவையே. -- மக்களிடையே நிலவிய அநீதிகளைச் சுட்டிக்காட்டிய இறைவாக்கினர்களைப் பண்டைக்காலத்தில் கொன்றுபோட்டவர்களே அந்த இறைவாக்கினருக்கு அழகிய கல்லறைகளைக் கட்டிவைத்தார்கள் என்பத முரண்பாடான உண்மை. இயேசு எதிர்பார்க்கின்ற தூய்மை வெளித் தோற்றம் மட்டுமல்ல, மாறாக நம் உள்ளத்தில் நாம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக வாழ்ந்திட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளத்தில் நாங்கள் தூய்மை உடையவர்களாகவும் வெளி நடத்தையில் நேர்மையுள்ளவர்களாகவும் வாழ்ந்திட அருள்தாரும்.