யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 20வது வாரம் வியாழக்கிழமை
2013-08-22

அரசியான தூயகன்னிமரியாளின் விழா


முதல் வாசகம்

காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 9: 2-4, 6-7

காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. ஆண்டவரே! அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்; அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவது போல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்; கொள்ளைப் பொருளைப் பங்கிடும் போது அக்களிப்பது போல் களிகூர்கிறார்கள். மிதியான் நாட்டுக்குச் செய்தது போல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர். அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்; அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஒடித்தெறிந்தீர். ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ `வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்' என்று அழைக்கப்படும். அவரது ஆட்சியின் உயர்வுக்கும் அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது; தாவீதின் அரியணையில் அமர்ந்து தாவீதின் அரசை நிலைநாட்டுவார்; இன்றுமுதல் என்றென்றும் நீதியோடும் நேர்மையோடும் ஆட்சிபுரிந்து அதை நிலைபெயராது உறுதிப்படுத்துவார்; படைகளின் ஆண்டவரது பேரார்வம் இதைச் செய்து நிறைவேற்றும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரின் ஊழியர், அவரைப் புகழுங்கள். அவரது பெயரைப் போற்றுங்கள்.
திருப்பாடல்கள் 113: 1-2. 3-4. 5-6. 7-8

1 ஆண்டவரின் ஊழியர்களே, அவரைப் புகழுங்கள். அவரது பெயரைப் போற்றுங்கள். 2 ஆண்டவரது பெயர் வாழ்த்தப் பெறுவதாக! இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப் பெறுவதாக! பல்லவி

3 கீழ்த்திசை முதல் மேற்றிசை வரை ஆண்டவரது பெயர் போற்றப்படுவதாக! 4 மக்களினங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் மேலானவர்; வானங்களையும் விட உயர்ந்தது அவரது மாட்சி. பல்லவி

5 நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்? அவர் போல வானளாவிய உயரத்தில் வீற்றிருப்பவர் யார்? 6 அவர் வானத்தையும் வையகத்தையும் குனிந்து பார்க்கின்றார். பல்லவி

7 ஏழைகளைத் தூசியிலிருந்து அவர் தூக்கி நிறுத்துகின்றார்; வறியவரைக் குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி விடுகின்றார்; 8 உயர்குடி மக்களிடையே - தம் மக்களுள் உயர்குடி மக்களிடையே - அவர்களை அமரச் செய்கின்றார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! `நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்'' அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38

ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, ``அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்'' என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். வானதூதர் அவரைப் பார்த்து, ``மரியா, அஞ்ச வேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின்மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது'' என்றார். அதற்கு மரியா வானதூதரிடம், ``இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!'' என்றார். வானதூதர் அவரிடம், ``தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை'' என்றார். பின்னர் மரியா, ``நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்'' என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன்...திருமணத்திற்கு வாருங்கள்'' (மத்தேயு 22:4)

கடவுளாட்சி அல்லது விண்ணரசு என்றால் என்னவென்பதை இயேசு பல உவமைகள் வழியாக விளக்கினார். இத்தகைய உவமைகளில் சிறப்பான ஒன்று ''திருமண விருந்து உவமை'' ஆகும். விருந்து என்பது எல்லாருக்கும் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி. இஸ்ரயேல் மக்களிடையே விருந்தோம்பல் மிக உயர்வாக மதிக்கப்பட்டது. அதிலும் விதவிதமான உணவுகளைப் பரிமாறி அறுசுவை உண்டி வழங்கி விருந்தினரை மகிழ்விப்பது சாலச் சிறந்ததாக எண்ணப்பட்டது. விவிலியத்திலும் விருந்து பற்றிய குறிப்புகள் பல உண்டு. கடவுள் மனிதருக்குத் தம் கொடைகளை வாரி வழங்குவது விருந்துக்கு ஒப்பிடப்பட்டது (காண்க: எசாயா 25:6; லூக்கா 5:29; 14:13; யோவான் 2:2; 1 கொரிந்தியர் 11:20). எனவே, கடவுளின் ஆட்சியில் மக்கள் அனைவருக்கும் சுவையான விருந்து வழங்கப்படும் என்று இயேசு போதித்தார். கடவுளின் அன்பில் நாம் திளைத்திருக்கும்போது ஏற்படுகின்ற மகிழ்ச்சி நம் உள்ளத்திற்கும் இதயத்திற்கும் நிறைவை அளிக்கும். இவ்வாறு, கொடை வள்ளலாகச் செயல்படுகின்ற கடவுளின் அழைப்பைச் சிலர் ஏற்காமல் இருப்பதும் உண்டு. முதலில் அழைக்கப்பட்டவர்கள் இஸ்ரயேலர். அவர்களில் பலர் இயேசுவை மெசியாவாக ஏற்கத் தயங்கினர். ஆனால் பிற இனத்தார் பலர் கடவுளின் அழைப்பை ஏற்று, இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர். அழைப்பை ஏற்று இயேசுவைப் பின்செல்ல வருவோருக்கும் சில பொறுப்புகள் உண்டு. அழைப்புக்கு ஏற்ப நடக்காதவர்க்கு உருவகமாகத் ''திருமண ஆடையின்றி வந்தவர்'' (காண்க: மத்தேயு 22:11) குறிக்கப்படுகிறார்.

கடவுள் நமக்குத் தருகின்ற விருந்து நம் உடலை வளர்க்க உதவுகின்ற உணவு மட்டுமல்ல. மனிதரின் முழு வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் நாம் கடவுளிடமிருந்து கொடையாகவே பெற்றுக்கொள்கிறோம். கடவுள் அளிக்கும் விருந்து வெறும் பொருள்கள் மட்டுமல்ல. இயேசுவின் வழியாகக் கடவுள் நமக்குத் தம்மையே விருந்தாக அளித்துவிட்டார். இதையே நாம் நற்கருணைக் கொண்டாட்டத்தின்போது நினைவுகூர்கின்றோம். தம்மையே விருந்தாகத் தரும் கடவுளுக்கு நாம் நன்றியறிந்திருக்க வேண்டும். நம்மையே விருந்தாகப் பிறருக்கு அளிக்க முன்வரவேண்டும். அப்போது நமக்காகக் கடவுள் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் நிறைவுக் கால விருந்து நம்மை மகிழ்ச்சியால் நிரப்பும்.

மன்றாட்டு:

இறைவா, உம் அருள்கொடைகளை நன்றியோடு ஏற்றிட எங்களுக்கு அருள்தாரும்.