யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 20வது வாரம் திங்கட்கிழமை
2013-08-19


முதல் வாசகம்

ஆண்டவரின் கை அவர்களுக்கு எதிராகத் தீமை விளைவித்தது
நீதித் தலைவர்கள் நூலிலிருந்து வாசகம் 2: 11-19

அந்நாள்களில் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்தனர். அவர்கள் பாகால்களுக்கு ஊழியம் செய்தனர். அவர்கள் தங்கள் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டுவந்த தங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரைக் கைவிட்டனர். தங்களைச் சுற்றி வாழ்ந்த மக்களினங்களின் தெய்வங்களைப் பின்பற்றி, வழிபட்டு, ஆண்டவருக்குச் சினமூட்டினர். அவர்கள் ஆண்டவரைக் கைவிட்டுப் பாகாலுக்கும் அஸ்தரோத்துக்கும் ஊழியம் செய்தனர். இஸ்ரயேலின்மேல் ஆண்டவரின் கோபக் கனல் கனன்றது. எனவே, அவர் கொள்ளையடிப்போரிடம் அவர்களை ஒப்படைக்க, அவர்களும் அவர்களைக் கொள்ளையடித்தனர். அவர்களைச் சூழ்ந்திருந்த எதிரிகளிடம் ஆண்டவர் அவர்களை விற்றார். அதனால் அவர்கள் எதிரிகளின் முன், அவர்களால் எதிர்த்து நிற்க இயலாமற் போயிற்று. ஆண்டவர் அவர்களுக்கு ஆணையிட்டுக் கூறியதுபோல், அவர்கள் போருக்குச் சென்றபொழுதெல்லாம், ஆண்டவரின் கை அவர்களுக்கு எதிராகத் தீமை விளைவித்தது. அவர்கள் பெருந்துயரத்துக்கு உள்ளாயினர். ஆண்டவர் நீதித் தலைவர்களை எழச் செய்தார். அவர்கள் அவர்களைக் கொள்ளையடித்தவர்களின் கைகளிலிருந்து விடுவித்தனர். ஆயினும் அவர்கள், தங்கள் நீதித் தலைவர்களுக்குச் செவி கொடுக்கவில்லை. ஏனெனில் அவர்கள் வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றித் தொழுது வேசித்தனம் செய்தனர்; தங்கள் மூதாதையர் ஆண்டவரின் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து நடந்த நெறியை விட்டு விரைவில் விலகினர். ஆண்டவர் அவர்களுக்காக நீதித் தலைவர்களை எழச் செய்த பொழுதெல்லாம் அவர் அந்தத் தலைவர்களுடன் இருந்து, அத்தலைவர்களின் வாழ்நாள் முழுவதும் எதிரிகளின் கையிலிருந்து மக்களை விடுவித்தார். ஏனெனில் துன்புறுத்தப்பட்டு, ஒடுக்கப்பட்ட அவர்களின் அழுகுரலைக் கேட்டு ஆண்டவர் அவர்கள் மீது இரக்கம் கொண்டார். ஆனால் அவர்கள் ஒவ்வொரு நீதித் தலைவர் இறந்த பொழுதும், வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றியும், அவற்றுக்கு ஊழியம் செய்தும், அவற்றை வழிபட்டும், தங்கள் மூதாதையரை விட இழிவாக நடந்தனர். அவர்களுடைய தீய பழக்கங்களையும் முரட்டுத்தனமான நடத்தையையும் விட்டு அகலவில்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து, அவர்களது துன்பத்தைக் கண்டு மனமிரங்கினார்.
திருப்பாடல்கள்

34 ஆண்டவர் இட்ட கட்டளைக்கு மாறாக, மக்களினங்களை அவர்கள் அழிக்கவில்லை. 35 வேற்றினத்தாரோடு கலந்துறவாடி, அவர்களின் வழக்கங்களைக் கற்றுக்கொண்டனர். பல்லவி

36 அவர்களின் தெய்வச் சிலைகளைத் தொழுதனர்; அவையே அவர்களுக்குக் கண்ணிகளாயின. 37 அவர்கள் தங்கள் புதல்வர், புதல்வியரைப் பேய்களுக்குப் பலியிட்டனர். பல்லவி

39 அவர்கள் தங்கள் செயல்களால் தங்களைக் கறைப்படுத்திக் கொண்டனர்; தங்கள் செயல்கள்மூலம் வேசித்தனம் செய்தனர். 40 எனவே, ஆண்டவரின் சினம் அவர்தம் மக்களுக்கு எதிராகப் பற்றியெரிந்தது; தமது உரிமைச் சொத்தை அவர் அருவருத்தார். பல்லவி

43 பன்முறை அவர் அவர்களை விடுவித்தார்; அவர்களோ திட்டமிட்டே அவருக்கு எதிராகக் கலகம் செய்தனர்; தங்கள் தீச்செயல்களினால் அவர்கள் தாழ்நிலை அடைந்தனர். 44 எனினும் அவர் அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து, அவர்களது துன்பத்தைக் கண்டு மனமிரங்கினார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உன்மீது நீ அன்பு கூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக'' அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 16-22

அக்காலத்தில் செல்வரான இளைஞர் ஒருவர் இயேசுவிடம் வந்து, ``போதகரே, நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு நான் என்ன நன்மை செய்ய வேண்டும்?'' என்று கேட்டார். இயேசு அவரிடம், ``நன்மையைப் பற்றி என்னை ஏன் கேட்கிறீர்? நல்லவர் ஒருவரே. நீர் வாழ்வடைய விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடியும்'' என்றார். அவர், ``எவற்றை?'' என்று கேட்டார். இயேசு, ``கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச் சான்று சொல்லாதே; தாய் தந்தையை மதித்து நட. மேலும், உன்மீது நீ அன்பு கூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக'' என்று கூறினார். அந்த இளைஞர் அவரிடம், ``இவை அனைத்தையும் நான் கடைப்பிடித்து வந்துள்ளேன். இன்னும் என்னிடம் குறைபடுவது என்ன?'' என்று கேட்டார். அதற்கு இயேசு, ``நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்'' என்றார். அவர் சொன்னதைக் கேட்ட அந்த இளைஞர் வருத்தத்தோடு சென்றுவிட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''இயேசு, 'நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்' என்றார்'' (மத்தேயு 19:21)

இயேசுவைப் பின்பற்ற விரும்புவோர் உலகப் பற்றுக்களுக்கு அடிமைகளாக இருத்தல் ஆகாது. இந்த உண்மையை நற்செய்தி நூல்கள் பல இடங்களில் தெளிவுபடுத்துகின்றன. இயேசுவைத் தேடிவந்த செல்வரான இளைஞரிடம் ''ஏராளமான சொத்து'' இருந்தது (மத் 19:22). அச்சொத்தையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, பின்னர் இயேசுவைப் பின்பற்ற அந்த இளைஞருக்குப் போதிய துணிச்சல் இல்லை. எனவே அவர் ''வருத்தத்தோடு'' சென்றுவிட்டார் (மத் 19:22). இயேசுவை அணுகிய அந்த இளைஞர் கடவுளுக்கு உகந்த வாழ்க்கை நடத்தினார் என்பதில் ஐயமில்லை. அவர் கடவுள் அளித்த கட்டளைகளைக் கடைப்பிடித்துவந்தவர்தாம் (மத் 19:17-20). இருந்தாலும் தன்னிடம் ஏதோ குறையிருக்கிறதோ என அவர் ஐயப்படுகிறார் (மத் 19:21). குறைபோக்கும் விருப்பம் அந்த இளைஞரிடம் இருப்பதை உணர்ந்த இயேசு அவர் ''நிறைவடைய'' வழிசொல்லித் தருகிறார்: ''நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும்'' (மத் 19:21).

இங்கே இயேசு குறிப்பிடுகின்ற ''நிறைவு'' என்றால் என்ன? தொடங்கிய செயலை ''முழுமையாக''ச் செயல்படுத்துவது இங்கே குறிக்கப்படுகிறது. அந்த இளைஞர் நல்வழியில் நடக்கத் தொடங்கியிருந்தார் என்பது உண்மையே. என்றாலும், ''உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்'' என்று மலைப் பொழிவின் போது இயேசு கூறியிருந்ததை மத்தேயு ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார் (காண்க: மத் 5:48). கடவுளின் ''நிறைவு'' அவருடைய எல்லையற்ற அன்பில் அடங்கும். அவர் உலக மக்கள் அனைவரையும் எவ்வித வேறுபாடுமின்றி அன்புசெய்கிறார். நல்லவர் தீயவர் என அவர் வேறுபாடு காட்டுவதில்லை. எனவே, கடவுளிடம் துலங்குகின்ற ''நிறைவு'' நம்மிடமும் விளங்க வேண்டும். கடவுள் நமக்கு அளித்துள்ள கட்டளைகளை முழுமையாக நிறைவேற்றி, பரிசேயரின் நெறியைவிடச் சிறப்பான நெறியுடையவர்களாக நாம் வாழும்போது நாமும் ''நிறைவு'' அடைவோம். இயேசுவைத் தேடி வந்த இளைஞருக்கும் இயேசு இத்தகைய சவாலை முன்வைக்கிறார். தன் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு இயேசுவைப் பின்செல்ல அந்த இளைஞருக்கு அழைப்பு வந்தது. ஆனால் அந்த அழைப்பை ஏற்க அவருக்குத் துணிவில்லை. நாமும் இயேசுவின் குரலுக்குச் செவிமடுக்கும்போது இத்தகைய சவால் நமக்கு விடுக்கப்படுவதை உணர்வோம். முழு உள்ளத்தோடும் விருப்போடும் இயேசுவைப் பின்பற்றத் துணிந்தவர்கள் தியாக மனப்பான்மையோடு செயல்படுவார்கள் என்பதில் ஐயமில்லை.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் தாராள உள்ளத்தோடு இயேசுவைப் பின்பற்ற அருள்தாரும்.