யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 19வது வாரம் செவ்வாய்க்கிழமை
2013-08-13


முதல் வாசகம்

அவர் உன்னை விட்டு விலக மாட்டார். அவர் உன்னைக் கைவிடவும் மாட்டார் அஞ்சாதே, திகைக்காதே!
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம். 31;1-8

மோசே தொடர்ந்து பின்வரும் வார்த்தைகளை இஸ்ரயேலர் அனைவருக்கும் கூறினார்:2 அவர் சொன்னது: இன்று எனக்கு வயது நூற்று இருபது. இனி என்னால் நடமாட இயலாது. மேலும், நீ யோர்தானைக் கடக்க மாட்டாய் என்று ஆண்டவர் எனக்குக் கூறியுள்ளார்.3 கடவுளாகிய ஆண்டவரே உன்முன் செல்வார். அவரே உன் முன்னின்று இந்த வேற்றினங்களை அழிப்பார். நீ அவற்றுக்கு உரியவற்றை உடைமையாக்கிக் கொள்வாய். ஆண்டவர் சொன்னபடி, யோசுவா உனக்கு முன்பாகச் செல்வான்.4 எமோரியரின் மன்னர்களான சீகோனுக்கும் ஓகுக்கும் அவர்களின் நாட்டுக்கும் செய்ததுபோல - அவர்களை அழித்தது போல - ஆண்டவர் அவற்றுக்கும் செய்வார். 5 ஆண்டவர் அவர்களை உங்களிடம் ஒப்படைப்பார். நான் இன்று உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்துக் கட்டளைகளின்படி நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள்.6 வலிமைபெறு: துணிவுகொள்: அஞ்சாதே, அவர்கள் முன் நடுங்காதே: ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவரே உனக்குமுன் செல்பவர்! அவர் உன்னை விட்டு விலக மாட்டார்: உன்னைக் கைவிடவும் மாட்டார்.7 பின்னர் மோசே யோசுவாவை வரவழைத்து, இஸ்ரயேலர் அனைவர் முன்னிலையிலும் அவரிடம் கூறியது: வலிமை பெறு: துணிவுகொள்: இவர்களுக்குக் கொடுப்பதாக அவர்களின் மூதாதையருக்கு ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்குள், இந்த மக்களோடு நீ செல்லவேண்டும். அதை இவர்கள் உரிமையாக்கிக் கொள்ளமாறு செய்யவேண்டும்.8 ஆண்டவரே உனக்குமுன் செல்வார். அவர் உன்னோடு இருப்பார். அவர் உன்னை விட்டு விலக மாட்டார். அவர் உன்னைக் கைவிடவும் மாட்டார் அஞ்சாதே, திகைக்காதே!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18;1-5 10-14

1 அந்நேரத்தில் சீடர்கள் இயேசுவை அணுகி, 'விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?' என்று கேட்டார்கள்.2 அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி,3 பின்வருமாறு கூறினார்: ' நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.4 இந்தச் சிறு பிள்ளையைப்போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர்.5 இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.0 ' இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம்; கவனமாயிருங்கள்! இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.11 ( ஏனெனில் மானிட மகன் நெறிதவறியோரை மீட்கவே வந்தார். )12 இந்த நிகழ்ச்சியைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று வழி தவறி அலைந்தால், அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைப்பகுதியில் விட்டுவிட்டு வழிதவறி அலையும் ஆட்டைத் தேடிச் செல்வார் அல்லவா?13 அவர் அதைக் கண்டுபிடித்தால் வழிதவறி அலையாத தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பற்றி மகிழ்ச்சியடைவதைவிட வழி தவறிய அந்த ஓர் ஆட்டைப்பற்றியே மிகவும் மகிழ்ச்சியடைவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.14 அவ்வாறே இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''இயேசு ஒரு சிறு பிள்ளையை அழைத்துச் சீடர்கள் நடுவில் நிறுத்தி, பின்வருமாறு கூறினார்: 'நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'...'' (மத்தேயு 18:3)

கடவுளின் பார்வையை நாம் பெற வேண்டும் என்பது இயேசுவின் போதனையின் முக்கிய அம்சம். எனவே கடவுளாட்சி பற்றிப் பேசும் போதெல்லாம் இயேசு சாதாரண மனித கண்ணோட்டத்தின்படி நாம் தீர்ப்பிடலாகாது என வலியுறுத்துகிறார். பதவி, அந்தஸ்து, சமூகப் படிநிலை போன்ற மதிப்பீடுகளுக்குப் பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட அன்றைய சமூகத்தில் இயேசுவின் போதனை விசித்திரமாகத் தோன்றியிருக்கும். ஏன், இன்றும் கூட, எத்தனையோ மனிதர் பதவி, பணம், சமூக மதிப்பு, அந்தஸ்து போன்ற மதிப்பீடுகளையே தங்கள் வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதைக் காண்கின்றோம். இயேசுவின் பார்வையோ இந்த ''உலகப் பார்வை''யிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அவர் ஒரு சிறு குழந்தையை அழைக்கின்றார். வளர்ந்த, பலம் பொருந்திய மனிதராகச் சீடர்கள் அவரைச் சூழ்ந்து நிற்கின்றனர். அங்கே இயேசு புரிந்த இச்செயல் தனிப் பொருள் கொண்டது. சிறு குழந்தைகளுக்கு அன்றைய சமூகத்தில் மதிப்பில்லை. அவர்கள் பெற்றோரையும் பெரியோரையும் சார்ந்து வாழ வேண்டிய நிலை. பிறரிடமிருந்து உதவி பெற்றுத்தான் அவர்கள் தங்கள் தேவையை நிறைவு செய்ய இயலும்.

இச்செயலைத் தொடர்ந்து இயேசு கூறிய சொற்கள் அச்செயலின் பொருளை வெளிப்படுத்துகின்றன. அதாவது சீடர்கள் ''மனம் திரும்ப'' வேண்டும்; ''சிறு பிள்ளையாக'' மாற வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு விண்ணரசில், கடவுளின் ஆட்சியில் இடம் உண்டு. மனம் திரும்புதல் என்றால் வாழ்க்கை முறையை வேரோட்டமாக மாற்றியமைத்தல் எனப் பொருள்படும். பயணம் செல்லும் ஒருவர் தான் அதுவரை நடந்துசென்ற பாதை தவறானது என உணர்ந்ததும் உடனேயே திரும்பி, வந்த வழியே மீண்டும் நடந்து சரியான பாதையில் போகிறார் என்பது ''மனம் திரும்புதல்'' ஆகும். முதிர்ச்சியடைந்த மனிதர் எனத் தங்களைக் கருதுவோர் மீண்டும் ஒரு குழந்தைபோல சிறிய உருவினராய் மாறுவது இயலாது. ஆனால் கடவுளையே முற்றிலுமாக நம்பியிருக்கின்ற மனிதராக நாம் மாற முடியும், மாறவும் வேண்டும். இவ்வாறு கடவுளிடத்தில் நாம் முழு நம்பிக்கை கொண்டு வாழ்ந்தால் கடவுளின் ஆட்சியில் நமக்குப் பங்குண்டு என இயேசு வாக்களிக்கிறார்.

மன்றாட்டு:

இறைவா, குழந்தை உள்ளம் கொண்டு வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.