யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 18வது வாரம் செவ்வாய்க்கிழமை
2013-08-06

ஆண்டவரின் தோற்றமாற்ற விழா


முதல் வாசகம்

"என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்"
2பேதுரு 1;16-19

16 நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் பற்றி நாங்கள் உங்களுக்குத் தெரிவித்தபோது சூழ்ச்சியாகப் புனைந்த கதைகளை ஆதாரமாகக் கொண்டு பேசவில்லை. நாங்கள் அவரது மாண்பை நேரில் கண்டவர்கள். 17 "என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று மாட்சிமிகு விண்ணகத்திலிருந்து அவரைப்பற்றிய குரல் ஒலித்தபோது, தந்தையாகிய கடவுளிடமிருந்து மதிப்பும் மாட்சியும் பெற்றார். 18 தூய மலையில் அவரோடு இருந்தபோது விண்ணிலிருந்து வந்த இக்குரலொளியை நாங்களே கேட்டோம். 19 எனவே, இறைவாக்கினர் கூறியது இன்னும் உறுதியாயிற்று. அவர்கள் கூறியதை நீங்கள் கருத்திற்கொள்வது நல்லது; ஏனெனில் பொழுது புலர்ந்து விடிவெள்ளி உங்கள் இதயங்களில் தோன்றும்வரை அது இருண்ட இடத்தில் ஒளிரும் விளக்கைப் போன்றது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

பல்லவி: உலகனைத்தையும் ஆளும் உன்னதராம் ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்.
திருப்பாடல்கள் 97: 1-2. 5-6. 9

1 ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக! 2 மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன; நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம். பல்லவி

5 ஆண்டவர் முன்னிலையில், அனைத்துலகின் தலைவர் முன்னிலையில், மலைகள் மெழுகென உருகுகின்றன. 6 வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன; அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன. பல்லவி

9 ஏனெனில், ஆண்டவரே! உலகனைத்தையும் ஆளும் உன்னதர் நீர்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலானவர் நீரே! பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மோசே, எலியா என்னும் இருவர் இயேசுவின் இறப்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 28b-36

அக்காலத்தில் இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக் கொண்டு இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறினார். அவர் வேண்டிக்கொண்டிருந்த போது அவரது முகத்தோற்றம் மாறியது; அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது. மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக் கொண்டிருந்தனர். மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேறவிருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் தூக்கக் கலக்கமாய் இருந்தார்கள். அவர்கள் விழித்தபோது மாட்சியோடு இலங்கிய அவரையும் அவரோடு நின்ற இருவரையும் கண்டார்கள். அவ்விருவரும் அவரை விட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு இயேசுவை நோக்கி, ``ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்'' என்று தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார். இவற்றை அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது ஒரு மேகம் வந்து அவர்கள் மேல் நிழலிட்டது. அம்மேகம் அவர்களைச் சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார்கள். அந்த மேகத்தினின்று, ``இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்'' என்று ஒரு குரல் ஒலித்தது. அந்தக் குரல் கேட்டபொழுது இயேசு மட்டும் இருந்தார். தாங்கள் கண்டவற்றில் எதையும் அவர்கள் அந்நாள்களில் யாருக்கும் சொல்லாமல் அமைதி காத்தார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, 'என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவி சாயுங்கள்'என்று ஒரு குரல் ஒலித்தது'' (மாற்கு 9:7)

பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூன்று சீடர்களும் இயேசுவுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அவர்கள் இயேசுவின் வாழ்க்கையில் முக்கியமான நிகழ்ச்சிகளின் போது அவரோடு கூட இருந்தார்கள். எடுத்துக்காட்டாக, பேதுருவின் மாமியார் குணமடைந்தபோதும் (மாற் 1:29-31), தொழுகைக்கூடத் தலைவர் யாயிரின் மகள் உயிர்பெற்றெழுந்தபோதும் (மாற் 5:37), கெத்சமனித் தோட்டத்தில் இயேசு இறைவேண்டல் செய்தபோதும் (மாற் 14:33) இயேசுவோடு கூடச் சென்றவர்கள் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரே. இவர்கள் இயேசு தோற்றம் மாறிய வேளையிலும் அவரோடு இருந்தார்கள். அப்போது இயேசு யார் என்பது அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. வானிலிருந்து வந்த குரல் இயேசுவை அடையாளம் காட்டுகிறது; ''இயேசு கடவுளின் மகன்''. -- இயேசுவின் போதனைக்குச் செவிமடுப்போர் கடவுளின் குரலுக்கே செவிமடுக்கின்றனர் என்னும் உண்மை இங்கே வெளிப்படுகிறது. வானில் தோன்றிய மேகம் கடவுளின் பிரசன்னத்திற்கு அடையாளம். எனவே, இயேசுவுக்கும் அவர் தந்தை என அழைத்த கடவுளுக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்ததை நற்செய்தி சுட்டுகின்றது. இன்று இயேசுவின் சீடராக வாழ்வோர் இயேசுவின் குரலுக்குச் செவிமடுக்க அழைக்கப்படுகின்றனர். இயேசுவின் போதனையை நாம் ஏற்று அதற்கேற்ப வாழும்போது அது நம் உள்ளத்தையும் இதயத்தையும் உருமாற்றுவதோடு நம்மைப் புதுப் பிறப்புகளாகவும் மாற்றும். கடவுளின் புத்துயிரைப் பெறும் நாம் அதைப் பிறரோடு பகிர்ந்திட முன்வருவோம்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளங்களில் ஒலிக்கின்ற உம் திருமகனின் குரலுக்கு நாங்கள் எப்போதும் செவிசாய்த்திட அருள்தாரும்.