யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 17வது வாரம் வியாழக்கிழமை
2013-08-01

புனித அல்போன்ஸ் மரியலிகோரி


முதல் வாசகம்

பகலில் ஆண்டவரின் மேகம் இருப்பதையும், இரவிலோ அதில் நெருப்பு இருப்பதையும் இஸ்ரயேல் வீட்டார் காண்பார்கள்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 40: 16-21, 34-38

அந்நாள்களில் ஆண்டவர் கட்டளையிட்டபடியெல்லாம் மோசே செயல்பட்டார். இரண்டாம் ஆண்டில், முதல் மாதம், முதல் தேதியன்று திருஉறைவிடம் எழுப்பப்பட்டது. மோசே திருஉறைவிடத்தை எழுப்பினார்; பாதப் பொருத்துகளை வைத்து அதன்மேல் சட்டங்களைப் பொருத்தினார், குறுக்குச் சட்டங்களையும் பொருத்தினார்; தூண்களையும் நிறுத்தினார். திருஉறைவிடத்தின்மேல் அவர் கூடாரத்தை விரித்தார்; அதற்குமேல் கூடார மேல்விரிப்பை அமைத்தார். இதுவும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது. உடன்படிக்கைப் பலகையை அவர் எடுத்து, அதைப் பேழையில் வைத்தார். தண்டுகளைப் பேழையில் செருகினார். இரக்கத்தின் இருக்கையைப் பேழையின்மேல் வைத்தார். திருஉறைவிடத்தினுள் பேழை எடுத்துச் செல்லப்பட்டது. திருத்தூயகத் திரை தொங்கவிடப்பட்டு, உடன்படிக்கைப் பேழை மறைக்கப்பட்டது. இதையும் ஆண்டவர் கட்டளையிட்டபடியே மோசே செய்தார். பின்பு, மேகம் சந்திப்புக் கூடாரத்தை மூடிற்று; ஆண்டவரின் மாட்சி திருஉறைவிடத்தை நிரப்பிற்று. சந்திப்புக் கூடாரத்தின் மேலே மேகம் நின்றிருந்ததாலும், ஆண்டவரின் மாட்சி திருஉறைவிடத்தை நிரப்பியதாலும் மோசே உள்ளே நுழைய முடியாமல் போயிற்று. இஸ்ரயேல் மக்கள் தங்கள் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், மேகம் திருஉறைவிடத்தை விட்டு எழும்பும் போதெல்லாம் புறப்பட்டுச் செல்வார்கள். மேகம் எழும்பாதிருக்கும் போதோ, அது மேலே எழும்பும் நாள் வரை, அவர்கள் புறப்பட மாட்டார்கள். ஏனெனில் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் திருஉறைவிடத்தின்மேல் பகலில் ஆண்டவரின் மேகம் இருப்பதையும், இரவிலோ அதில் நெருப்பு இருப்பதையும் இஸ்ரயேல் வீட்டார் காண்பார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவரே! உம் உறைவிடம் எத்துணை அருமையானது!
திருப்பாடல்கள் 84;3-6,8-11

2 என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது; என் உள்ளமும் உடலும் என்றுமுள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது. -பல்லவி r>
3 படைகளின் ஆண்டவரே! என் அரசரே! என் கடவுளே! உமது பீடங்களில் அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்துள்ளது; தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச் சிட்டுக் குருவிகளுக்குக் கூடும் கிடைத்துள்ளது. -பல்லவி r>
4 உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறுபெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள். 5 உம்மிடமிருந்து வலிமை பெற்ற மானிடர் பேறுபெற்றோர். 7 அவர்கள் நடந்து செல்கையில் மேலும் மேலும் வலிமை பெறுகின்றார்கள். -பல்லவி r>
10 வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும் உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒரு நாளே மேலானது; பொல்லாரின் கூடாரங்களில் குடியிருப்பதினும், என் கடவுளது இல்லத்தின் வாயிற் காவலனாய் இருப்பதே இனிமையானது. -பல்லவி r>


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 47-53

அக்காலத்தில் இயேசு மக்களை நோக்கிக் கூறியது: ``விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க் கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர். இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.'' ``இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா?'' என்று இயேசு கேட்க, அவர்கள், ``ஆம்'' என்றார்கள். பின்பு அவர், ``ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப் போல் இருக்கின்றனர்'' என்று அவர்களிடம் கூறினார். இவ்வுவமைகளை இயேசு சொல்லி முடித்த பின்பு அவ்விடத்தை விட்டுச் சென்றார். .

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

"விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும்" (மத்தேயு 13:47)

இயேசு தம் சீடராகத் தெரிந்துகொண்டவர்களுள் பலர் மீனவர். பேதுரு, அந்திரேயா, யோவான், யாக்கோபு ஆகியோர் மீன்பிடித்துக்கொண்டிருந்த வேளையில் இயேசுவால் அழைக்கப்பட்டு, அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்தொடர்ந்தனர். சீடர்கள் மீன்பிடித்த இடம் கடல்போல் விரிந்து பரந்த "கெனசரேத்து ஏரி" ஆகும் (லூக்கா 5:1). இதுவே மக்களால் "கலிலேயக் கடல்" என்றும் "திபேரியக் கடல்" என்றும் அழைக்கப்பட்டது. அந்த ஏரியில் வலைவீசி மீன்பிடித்தல் கலிலேயாவில் நடந்த முக்கிய தொழிலாகும். இந்தக் கலிலேயப் பகுதியில்தான் இயேசுவின் பணி பெருமளவு நிகழ்ந்தது. கலிலேயக் கடல் என்றழைக்கப்பட்ட அந்த ஏரியின் பரப்பளவு 166 சதுர கிலோமீட்டர்; ஆழம் சுமார் 30 மீட்டர். இந்த ஏரியில் மீன்பிடிக்க வலைவீசும்போது பல மீனவர் சேர்ந்து உழைப்பில் ஈடுபடுவர். அவர்கள் வீசிய வலையில் விழுகின்ற மீன்கள் பலவகையாக இருக்கும். சமைத்து உண்பதற்குத் தகுந்த நல்ல மீன்களும் சமையலுக்குப் பயன்படாத மீன்களும் பிற உயிரினங்களும் வலையில் அகப்படும். வலையைக் கரையில் இழுத்துக் கொண்டுவந்தபின் மீனவர் நல்ல மீன்களைத் தேர்ந்தெடுத்துவிட்டு, பயனற்றவற்றை வெளியே எறிந்துவிடுவர். இந்த நிகழ்ச்சியை இயேசு எத்தனையோ முறை நேரில் பார்த்திருந்தார். அது இயேசுவின் வாயில் இறையாட்சி பற்றிய ஓர் உவமையாக உருவெடுத்தது. வலையில் அகப்பட்ட நல்ல மீன்களை எடுத்துக்கொண்டு கெட்ட மீன்களை விட்டுவிடுவதுபோல கடவுளாட்சியின் இறுதியிலும் கடவுள் நல்லவர்களைத் தீயோரிடமிருந்து பிரித்துத் தீர்ப்பு வழங்குவார்.

இவ்வுலகில் கடவுளாட்சி படிப்படியாக வளர்கின்ற காலத்தில் வலையில் நல்ல மீன்களும் கெட்ட மீன்களும் படுவதுபோலவே கடவுளாட்சியிலும் நல்லவரும் இருப்பர், தீயவரும் இருப்பர். இவர்களை வேறுபடுத்திப் பார்த்து, ஒருசிலரை ஏற்றுப் பிறரை ஒதுக்கிவைப்பது நம் பொறுப்பு அல்ல. கடவுள்தாமே மக்களில் நல்லவர் யார் என்றும் தீயவர் யார் என்றும் இறுதிக்காலத்தில் தீர்ப்பு வழங்குவார். எந்தவொரு வேறுபாடும் காட்டாமல் அனைவரையும் அன்போடு ஏற்று வரவேற்பதே நம் கடமை. தீர்ப்பு வழங்கும் உரிமை கடவுளுக்கே உண்டு. இருப்பினும், நன்மை தீமை அறிவதற்கான திறமையை நாம் கடவுளிடமிருந்து இறைஞ்சிக் கேட்க வேண்டும். நன்மையைத் தேர்ந்துகொண்டு தீமையை நாம் தவிர்க்க வேண்டும். ஆனால், பிற மனிதரை நல்லவர் தீயவர் எனத் தீர்ப்பிடும் பொறுப்பைக் கடவுளிடமே விட்டுவிட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, பிறர் மட்டில் யாதொரு வேறுபாடும் காட்டாமல் அன்போடு அவர்களை ஏற்றிட அருள்தாரும்.