யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 17வது வாரம் புதன்கிழமை
2013-07-31

புனித லொயேலா இஞ்ஞாசியார்


முதல் வாசகம்

மோசே ஆண்டவரோடு பேசச் செல்லும்வரை தம் முகத்தின் மேல் மீண்டும் முக்காடு போட்டுக் கொள்வா
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 34: 29-35

மோசே சீனாய் மலையிலிருந்து இறங்கிச் செல்கையில், உடன்படிக்கைப் பலகைகள் இரண்டையும் தம் கைகளில் தாங்கிக் கொண்டிருந்தார். மோசே கடவுளோடு பேசியதால் அவர் முகத்தோற்றம் ஒளிமயமாய் இருந்தது. ஆனால் மோசே அதை அறியவில்லை. ஆரோனும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் மோசேயைப் பார்த்தபோது, அவர் முகத்தோற்றம் ஒளிமயமாய் இருந்ததைக் கண்டு அவரை அணுகிச் செல்ல அஞ்சினர். ஆனால் மோசே அவர்களைப் கூப்பிட்டார். ஆரோனும் மக்கள் கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் அவரை நோக்கி வந்தனர். மோசேயும் அவர்களிடம் பேசினார். பின்னர் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் அவர் அருகில் வந்தனர். அப்போது, ஆண்டவர் சீனாய் மலையில் தமக்கு அறிவித்த அனைத்தையும் அவர் அவர்களுக்குக் கட்டளையாகக் கொடுத்தார். மோசே அவர்களோடு பேசி முடித்தபின், தம் முகத்தின் மேல் ஒரு முக்காடு போட்டுக் கொண்டார். மோசே ஆண்டவரோடு உரையாடும்படி அவர் திருமுன் செல்வதுமுதல் வெளியே வருவதுவரை முக்காட்டை எடுத்து விடுவார். அங்கிருந்து வெளியே வந்து, அவருக்குக் கட்டளையிடப் பட்டவற்றை அவர் இஸ்ரயேல் மக்களுக்கு எடுத்துக் கூறுவார். இஸ்ரயேல் மக்கள் மோசேயின் முகத்தைப் பார்க்கும்போது, மோசேயின் முகத்தோற்றம் ஒளிமயமாய் இருக்கும். மோசே ஆண்டவரோடு பேசச் செல்லும்வரை தம் முகத்தின் மேல் மீண்டும் முக்காடு போட்டுக் கொள்வார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

நம் கடவுளாகிய ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்;
திருப்பாடல்கள் 99;5-7,9

5 நம் கடவுளாகிய ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது அரியணைமுன் தாள் பணிந்து வணங்குங்கள்; அவரே தூயவர்! -பல்லவி r>
6 மோசேயும் ஆரோனும் அவர்தம் குருக்கள்; அவரது பெயரால் மன்றாடுவோருள் சாமுவேலும் ஒருவர்; அவர்கள் ஆண்டவரை நோக்கி மன்றாடினர்; அவரும் அவர்களுக்குச் செவிசாய்த்தார். -பல்லவி r>
7 மேகத் தூணிலிருந்து அவர்களோடு பேசினார்; அவர்கள் அவருடைய ஒழுங்குமுறைகளையும் அவர் அவர்களுக்குத் தந்த நியமங்களையும் கடைப்பிடித்தார்கள். -பல்லவி r>
9 நம் கடவுளாகிய ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது திருமலையில் அவரைத் தொழுங்கள். ஏனெனில், நம் கடவுளாகிய ஆண்டவரே தூயவர். -பல்லவி r>


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 44-46

அக்காலத்தில் இயேசு மக்களை நோக்கிக் கூறியது: ``ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்துவிட்டு, மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும். வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச்செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அதை வாங்கிக் கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

"ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார்" (மத்தேயு 13:44)

கடவுளாட்சி எத்தகையது என்று விவரிக்க இயேசு கூறிய ஒரு சிறிய உவமை "மறைந்திருந்த புதையல்" பற்றியதாகும். இந்த உவமையில் வருகின்ற அடிப்படைக் கருத்தை நம் வாழ்வோடு இணைத்துப் பார்க்கலாம். சிலவேளைகளில் நாம் எதிர்பாராமலே சில நிகழ்ச்சிகள் நடந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிடுவதுண்டு. நிலத்தைப் பண்படுத்திப் பயிர்செய்வதற்காகத்தான் அந்த மனிதர் வேலையில் ஈடுபட்டார். ஆனால் அவருக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. யாரோ எக்காலத்திலோ புதைத்துவைத்த புதையல் அவருடைய கண்களுக்குத் தென்பட்டது. திட்டமிட்டுத் தேடிச் சென்று கண்டுபிடித்த புதையல் அல்ல அது. மாறாக, எதிர்பாராவண்ணம் அவரைத் தேடி வந்த செல்வம் அது. பிறருடைய பொருளை அவருடைய இசைவின்றி எடுத்துக்கொள்வது தவறு என்பதை இவண் சுட்டிக்காட்டவேண்டும். எனவே, எதிர்பாராமல் வந்த புதையலை, வேறு யாருக்கோ சொந்தமான புதையலை, அந்த மனிதர் தமக்கென்று எடுத்துக்கொண்டது சரியல்ல என நாம் வாதாடலாம். அதே நேரத்தில், நமது சொந்த முயற்சியால், நமது உழைப்பால் உருவாகாத செல்வங்கள் நம்மைத் தேடிவருவதும் உண்டு. அப்போது அச்செல்வத்தை நாம் நன்றியுணர்வோடு ஏற்றுக்கொண்டு, நன்மை செய்ய அதைப் பயன்படுத்துவது நலமான செயலே எனலாம்.

நம்மைத் தேடிவரும் செல்வம் யாது? கடவுள் நமக்கு இயல்பாகவே வழங்கியுள்ள கொடைகளை நாம் நினைத்துப் பார்க்கலாம். அனைத்திற்கும் அடிப்படை, கடவுள் நம்மை இவ்வுலகில் படைத்துக் காத்துவருதாகும். நம்மை அன்போடு ஏற்றுப் பேணுகின்ற மனிதரைப் பெற்றோராக, நண்பராக நாம் பெறுவதும் கடவுளின் கொடையே. கடவுள் நம்மைக் கிறிஸ்துவில் தேர்ந்துகொண்டதும் கொடையே. இவ்வாறு நம்மைத் தேடிவருகின்ற செல்வங்களை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். சிலவேளைகளில் நமக்குள்ளேயே மறைந்திருக்கின்ற புதையல்களும் உண்டு. நம்மில் புதைந்துகிடக்கின்ற திறமைகள் ஏராளம். காலப் போக்கில் நமது கவனக்குறைவால் புதைந்துபோகின்ற கொடைகளும் உண்டு. அவற்றைத் தோண்டி வெளிக்கொணர்ந்து, உலகம் வாழப் பயன்படுத்துவது சிறப்பு. பிறர் தம் திறமைகளைக் கண்டுகொள்ள நாம் அவர்களுக்குத் துணைசெய்யலாம் என்பதையும் இவண் குறிப்பிடலாம். ஆக, "மறைந்திருக்கும் புதையல்" அப்படியே மறைந்திருந்தால் அதனால் யாருக்கும் பயனிராது. மாறாக, அப்புதையலை நாம் வெளிக்கொணர்ந்து, அதைப் பயன்படுத்தி நல்லது செய்தால் அது நமக்கும் நலம் பயக்கும், பிறருக்கும் பயனுடையதாகும். அப்போது, கடவுளின் கொடை வீணாகப் போகாமல் கடவுளின் மாட்சியைப் பறைசாற்ற நமக்குத் தூண்டுதலாக அமையும்.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் கண்டுபிடிக்கும் வண்ணம் எங்கள் வாழ்வில் புதையல்களை மறைத்துவைத்ததற்கு நன்றி!