பொதுக்காலம் 16ஆம் ஞாயிறு

திருவழிப்பாட்டு ஆண்டு C (21-07-2013)

மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து,
'ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டு விட்டாளே,
உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்/>


திருப்பலி முன்னுரை

எல்லாம் வல்ல இறைவனின் அன்பு மக்களுக்கு, ஆண்டின் பொதுக்காலம் 16 ஆம் வாரம் ஞாயிறு திருப்பலி வழிபாட்டில் பங்கேற்க அணியமாயிருக்கும் உங்கள் அனைவருக்கும் வல்லவராம் இறைவனின் ஆசீரும் அருளும் பெருகுவதாக. உயிர்த்த இயேசுவின் பாதத்தில் இறைவார்த்தையைக் கேட்கவும், இறையாசீர் பெறவும் இத்தினத்தில் நாம் ஆண்டவரின் சந்நிதானத்தில் ஒன்று கூடியுள்ளோம்.

இயேசுவின் நண்பர்களான மார்த்தாவும், மரியாவும் பேறுபெற்றவர்கள். இயேசு எப்போதெல்லாம் ஓய்வெடுக்க விரும்பினாரோ, அப்போதெல்லாம் அவரைத் தம் வீட்டில் வரவேற்கும் பேறு பெற்றிருந்தனர். உரிமையுடன் இயேசுவை உபசரிப்பதிலும், அவரோடு தனியே உரையாடி, அவர் அமுத மொழிகளைக் கேட்கவும் கொடுத்து வைத்தவர்கள். இன்றைய வாசகத்தில் மார்த்தாவின் மன நிலையைக் கொஞ்சம் சிந்திப்போம். மார்த்தாவுக்கு நல்ல எண்ணம் இருந்தது. இயேசுவை நன்கு உபசரிக்க வேண்டும், அவருக்கு நன்கு பணிவிடை செய்ய வேண்டும். இந்த எண்ணம் பாராட்டுக்குரியது. ஆனால், அடுத்து அவர் செய்ததுதான் இயேசுவின் கவனத்தை ஈர்த்தது. மார்த்தா இயேசுவின் பாதத்தில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த மரியா பற்றி இயேசுவிடமே உரிமையுடன் புகார் சொல்கின்றார். என்னைத் தனியே விட்டுவிட்டாள் என்ற குற்றச்சாட்டுடன், எனக்கு உதவி புரியும்படி சொல்லும் என்ற விண்ணப்பத்தையும் இயேசுவிடம் வைக்கிறார். இயேசு அவரது தவறான மனநிலையை அவருக்குச் சுட்டிக்காட்டுகிறார்.

நல்ல எண்ணம் கொண்டவர்களும் தவறு செய்யலாம் என்பதற்கு இந்த நிகழ்வு எடுத்துக்காட்டாக இருக்கிறது. எனவே, நாம் கவனமோடு இருப்போம். பிறரது வழிபாட்டுப் பங்கேற்பு, ஆர்வங்கள் பற்றி அவசரப்பட்டு தீர்ப்பிட்டு விடாமலும், குற்றம் சுமத்தாமலும் நம்மைக் காத்துக்கொள்வோம். அத்துடன், வாழ்க்கையில் நல்ல பங்கு எது என்கிற தெளிவையும் கற்றுக்கொள்வோம். இத்திருப்பலியில் பங்கேற்று இறையாசீர் பெறுவோம்.முதல் வாசகம்

உன் மனைவி சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்
தொடக்க நூலிலிருந்து வாசகம் 18;1-10

அந்நாட்களில் ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்களருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார். பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில் ஆபிரகாம் தம் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில், கண்களை உயர்த்திப் பார்த்தார்; மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்களைக் கண்டவுடன் அவர்களைச் சந்திக்கக் கூடார வாயிலைவிட்டு ஓடினார். அவர்கள்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, அவர்களை நோக்கி, "என் தலைவரே, உம் கண்களில் எனக்கு அருள் கிடைத்தாயின், நீர் உம் அடியானை விட்டுக் கடந்து போகாதிருப்பீராக! இதோ விரைவில் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும். உங்கள் கால்களைக் கழுவியபின், இம் மரத்தடியில் இளைப்பாறுங்கள். கொஞ்சம் உணவு கொண்டுவருகிறேன். நீங்கள் புத்துணர்வு பெற்றபின், பயணத்தைத் தொடருங்கள். ஏனெனில் உங்கள் அடியானிடமே வந்திருக்கிறீர்கள்" என்றார். "நீ சொன்னபடியே செய்" என்று அவர்கள் பதில் அளித்தார்கள். அதைக் கேட்டு ஆபிரகாம் தம் கூடாரத்திற்கு விரைந்து சென்று, சாராவை நோக்கி, "விரைவாக மூன்று மரக்கால் நல்ல மாவைப் பிசைந்து, அப்பங்கள் சுடு" என்றார். ஆபிரகாம் மாட்டு மந்தைக்கு ஓடிச்சென்று, ஒரு நல்ல இளங்கன்றைக் கொணர்ந்து வேலைக்காரனிடம் கொடுக்க, அவன் அதனை விரைவில் சமைத்தான். பிறகு அவர் வெண்ணெய், பால், சமைத்த இளங்கன்று ஆகியவற்றைக் கொண்டுவந்து அவர்கள் முன் வைத்தார். அவர்கள் உண்ணும்பொழுது அவர்களருகே மரத்தடியில் நின்றுகொண்டிருந்தார். பின்பு அவர்கள் அவரை நோக்கி, "உன் மனைவி சாரா எங்கே?" என்று கேட்க, அவர், "அதோ கூடாரத்தில் இருக்கிறாள்" என்று பதில் கூறினார். அப்பொழுது ஆண்டவர்; "நான் இளவேனிற் காலத்தில் உறுதியாக மீண்டும் உன்னிடம் வருவேன. அப்பொழுது உன் மனைவி சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்" என்றார். அவருக்குப் பின்புறத்தில் கூடார வாயிலில் சாரா இதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?
திருப்பாடல்கள் 15;2-5

2 மாசற்றவராய் நடப்போரே! இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமாற உண்மை பேசுவர். -பல்லவி

3 தம் நாவினால் புறங்கூறார்; தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார். 4 நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்; தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார். -பல்லவி

5 தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். -பல்லவி

இரண்டாம் வாசகம்

கிறிஸ்து தம் உடலாகிய திருச்சபைக்காக வேதனையுற்றார்.
திருத்தூதர் பவுல் கொலேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1;24-28

சகோதர சகோதரிகளே! உங்கள் பொருட்டுத் துன்புறுவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். கிறிஸ்து தம் உடலாகிய திருச்சபைக்காக வேதனையுற்றார். அவர் மேலும் படவேண்டிய வேதனையை என் உடலில் ஏற்று நிறைவு செய்கிறேன். என்மூலம் இறைவார்த்தையை முழுமையாக உங்களுக்கு வழங்கும் பொறுப்பைக் கடவுள் எனக்குக் கொடுத்தார். எனவே நான் திருத்தொண்டன் ஆனேன். நான் வழங்கும் இறைவார்த்தை ஊழிஊழியாக, தலைமுறை தலைமுறையாக மறைந்திருந்த இறைத்திட்டத்தைப் பற்றியது. அத்திட்டம் இப்பொழுது இறைமக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. மக்களினங்களிடையே அது அளவற்ற மாட்சியுடன் செயல்படுகிறது என்பதைத் தம் மக்களுக்குத் தெரிவிக்க கடவுள் திருவுளம் கொண்டார். உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவைப் பற்றியதே அத்திட்டம். மாட்சி பெறுவோம் என்னும் எதிர்நோக்கை அவரே அளிக்கிறார். கிறிஸ்துவைப்பற்றியே நாங்கள் அறிவித்து வருகிறோம். கிறிஸ்துவோடு இணைந்து ஒவ்வொருவரும் முதிர்ச்சிநிலை பெறுமாறு ஒவ்வொருவருக்கும் அறிவுரை கூறி முழு ஞானத்தோடு கற்பித்து வருகிறோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித லூக்காஸ் எழுதிய நற்செய்தியில் இருந்து வாசகம் 10;38-42

அக்காலத்தில் இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, ' ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டு விட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும் ' என்றார். ஆண்டவர் அவரைப் பார்த்து, ' மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது ' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.விசுவாசிகள் மன்றாட்டுகள்:


"உம் அன்பர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்.!

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

“நம்பிக்கை அளிப்பவராம் இறைவா,

உம் திருச்சபையை வழிநடத்தும்; எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், கன்னியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் உம் நற்கருணை பிரசன்னத்திலே, உம் வார்த்தையிலே இணைந்திருந்து உம் திருச்சபையை சிறப்புற வழிநடத்தி செல்ல வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நல்ல நண்பரான இயேசுவே,

உம்மைப் போற்றுகிறோம். மார்த்தாவின் அறியாமையை அவருக்கு அன்புடன் சுட்டிக்காட்டியதுபோல, எங்களின் அறியாமையையும், குறை காணும் மனநிலையையும் சுட்டிக்காட்டியருளும். இதனால், நாங்கள் சரியானவைகளை உணரும் ஆற்றலை உமது தூய ஆவியால் பெற்றுக்கொள்ள வரம்தந்தருள வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!

எமது பிள்ளைகளை உமக்குக் காணிக்கையாக்குகின்றோம் அவர்கள் உமது வார்த்தையை ஆர்வமுடன் கேட்டு உமது சாட்சிகளாய் வாழ அவர்களுக்கு அருள் தந்து அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

தந்தையே இறைவா!

இன்று அரசியல், பொருளாதார, சமூக விடுதலைக்காகவும்: கவலை, நோய், துன்பம் போன்றவற்றிலிருந்தும் விடுதலை பெறத்தவித்துக் கொண்டிருக்கும் அனைத்து மக்களும் நீர் கொடுக்கின்ற ஆறுதலைப் பெற்றுக் கொள்ளவும், இயற்கை, செயற்கை அழிவுகளிலிருந்து அவர்களைப் பாதுகாத்திடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

வாழ்வளிககும் வார்த்தைகளைக் கொண்டுள்ள தந்தையே!

இறைவார்த்தைக்கு பிழையான விளக்கங்களைக் கொடுத்து பிரிவினைகளோடும், கசப்புணர்வுகளோடும்,போட்டி மனநிலையோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவர்மீதும் மனமிரங்கி அவர்கள் இறைவார்த்தையை சரியாக விளங்கிக்கொண்டு தாங்கள் பெற்றுக் கொண்ட அழைப்பிற்கேற்ப பிரமாணிக்கமாய் வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக்காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!

உமது அன்பையும், இரக்கத்தையும் பெற்று மகிழும் நாங்கள் அனைவரும் அவைகளை மற்றவர்களோடு பகிர்ந்து: எங்கள் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் எம் கடவுளாம் ஆண்டவர் உம்மிடம் அன்பு கொண்டு, எம்மீது அன்புகூர்வது போல் எமக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்ந்து ; உமது சாட்சிகளாய் வாழ எமக்கு அருள் தந்து எம்மை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இன்றைய சிந்தனை

''மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, 'ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டு விட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்' என்றார்'' (லூக்கா 10:40)

மார்த்தாவும் மரியாவும் இரண்டு துருவங்கள் என்றும், ஒருவர் மற்றவருக்கு எதிரான நிலைக்கு உருவகமாகக் காட்டப்படுகிறார் என்றும் விளக்கம் தருவது வழக்கம். மார்த்தா செயல்முறை வாழ்வுக்கும் மரியா தியான வாழ்வுக்கும் உருவகம் என்பார்கள். மார்த்தா இவ்வுலக நிலைக்கும் மரியா மறுவுலக நிலைக்கும் உருவகம் என்பார்கள். மார்த்தா யூத மரபுக்கும் மரியா கிறிஸ்தவ மரபுக்கும் உருவகம் என்பார்கள். மார்த்தா செயல்வழி மீட்பு என்பதற்கும் மரியா நம்பிக்கைவழி மீட்பு என்பதற்கும் உருவகம் என்பார்கள். இவ்வாறு மார்த்தாவையும் மரியாவையும் எதிர் துருவங்களாகக் காண்பது சரியல்ல. விவிலிய அறிஞர் கருத்துப்படி, மார்த்தாவும் மரியாவும் இயேசுவை நாம் எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக உள்ளார்கள். மார்த்தா என்னும் சொல்லுக்குத் ''தலைவி'' என்பது பொருள். மார்த்தா இயேசுவைத் தம் வீட்டில் வரவேற்கிறார். அவர் பல பணிகளைச் செய்கிறார். ஏதோ உணவு தயாரித்துப் பரிமாறுவது மட்டுமல்ல இப்பணி. மார்த்தா உண்மையிலேயே வீட்டுத் தலைவியாக இருந்ததால் எல்லாப் பொறுப்புகளும் அவரிடம் இருந்தன. அந்நாட்களில் கிறிஸ்தவர்கள் வீடுகளில் கூடி இறைவார்த்தையைக் கேட்டு, நற்கருணைக் கொண்டாட்டம் நிகழ்த்தினார்கள். இத்தகைய ஒரு ''இல்லத் திருச்சபை''யில் நிகழும் பணிகளுக்கு மார்த்தா உருவகமாகிறார். மரியா இயேசுவின் காலடி அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார். லூக்கா நற்செய்தியில் இயேசு பல முறை ''கடவுளின் வார்த்தையைக் கேட்டு, அதைச் செயல்படுத்தவேண்டும்'' எனக் கூறுகிறார் (காண்க: லூக் 8:21). அவ்வாறு செயல்படுவோர் இயேசுவின் குடும்பத்தினர் ஆவர் (லூக் 8:21).

எனவே, மரியா இயேசுவின் வார்த்தையைக் ''கேட்டுக்கொண்டிருந்தார்'' என்றால் மரியா அந்த வார்த்தையைச் ''செயல்படுத்திக் கொண்டிருந்தார்'' எனலாம். மார்த்தா இயேசுவிடம் சென்று முறையிட்டார் என்பதை விட ஒரு கோரிக்கையை அவர்முன் வைத்தார் என்பதே பொருத்தம். அந்த வேண்டுதலுக்கு இயேசு அளித்த பதில்மொழி நமக்குச் சிறந்த பாடமாக உள்ளது. அதாவது, மார்த்தாவும் மரியாவும் சகோதர உறவால் இணைந்தவர்கள். அவர்களிடையே நிலவியது இரத்த உறவு மட்டுமல்ல, மாறாக, இயேசுவிடம் நம்பிக்கை கொண்ட குழுவைச் சார்ந்தவர்கள் என்பதால் அவர்கள் ஒரு புதிய குடும்பத்தில் உறுப்பினராக உள்ளனர். அந்த உறவின் அடிப்படையில் அவர்களிடையே மிக நெருக்கமான ஒத்துழைப்பும் ஒற்றுமையும் நிலவ வேண்டும். இயேசுவின் சீடர்களாக அழைக்கப்பட்டவர்கள் கடவுளின் வார்த்தையைக் கேட்பதோடு நின்றுவிடாமல் அதைச் செயல்படுத்தவும் வேண்டும். செயல்பாட்டில் தங்கள் கவனத்தை முழுவதும் செலுத்தாமல் தொடர்ந்து கடவுளின் வார்த்தையைக் கேட்க வேண்டும். வார்த்தைக்குச் செவிமடுத்தலும் அதைச் செயல்படுத்தலும் இணைந்து செல்லும்போது அங்கே நிறைவான சீடத்துவம் துலங்கும். அதாவது, இயேசுவின் சீடராக விரும்புவோர் இறைவார்த்தையைக் ''கேட்க வேண்டும்''; அதைச் ''செயல்படுத்த வேண்டும்''. அப்போது மார்த்தாவும் மரியாவும் ஒன்றிணைந்து நமக்கு முன்மாதிரியாக மாறுவார்கள்.

மன்றாட்டு:

இறைவா, உம் வார்த்தையை எப்போதும் கேட்டு அதை வாழ்வில் செயல்படுத்த எங்களுக்கு அருள்தாரும்