யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 15வது வாரம் வியாழக்கிழமை
2013-07-18


முதல் வாசகம்

`இருக்கின்றவர் நானே' என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 3: 13-20

அந்நாள்களில் மோசே கடவுளிடம், ``இதோ! இஸ்ரயேல் மக்களிடம் சென்று உங்கள் மூதாதையரின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் என்று நான் சொல்ல, `அவர் பெயர் என்ன?' என்று அவர்கள் என்னை வினவினால், அவர்களுக்கு என்ன சொல்வேன்?'' என்று கேட்டார். கடவுள் மோசேயை நோக்கி, `இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே' என்றார். மேலும் அவர், ``நீ இஸ்ரயேல் மக்களிடம், `இருக்கின்றவர் நானே' என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்'' என்றார். கடவுள் மீண்டும் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: ``நீ இஸ்ரயேல் மக்களிடம், `உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் - ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் - என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார்' என்று சொல். இதுவே என்றென்றும் என் பெயர்; தலைமுறை தலைமுறையாக என் நினைவுச் சின்னமும் இதுவே! போ. இஸ்ரயேலின் பெரியோர்களை ஒன்றுதிரட்டி அவர்களை நோக்கி, `உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் - ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் - எனக்குக் காட்சியளித்து இவ்வாறு கூறினார்: உங்களையும், எகிப்தில் உங்களுக்கு நேரிட்டதையும் நான் கண்ணாலே கண்டுகொண்டேன். எகிப்தின் கொடுமையிலிருந்து கானானியர், இத்தியர், எமோரியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் வாழும் நாட்டிற்கு - பாலும், தேனும் பொழியும் நாட்டிற்கு - உங்களை நடத்திச் செல்வேன்' என்று அறிவிப்பாய். அவர்கள் நீ சொல்வதைக் கேட்பர். நீயும் இஸ்ரயேலின் பெரியோர்களும் எகிப்திய மன்னனிடம் செல்லுங்கள். அவனை நோக்கி, `எபிரேயரின் கடவுளாகிய ஆண்டவர் எங்களைச் சந்தித்தார். இப்போதே நாங்கள் பாலை நிலத்தில் மூன்று நாள் வழிப்பயணம் போக இசைவு தாரும். ஏனெனில், எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலிசெலுத்த வேண்டும்' என்று சொல்லுங்கள். என் கைவன்மையைக் கண்டாலன்றி, எகிப்திய மன்னன் உங்களைப் போகவிடமாட்டான் என்பது எனக்குத் தெரியும். எனவே என் கையை ஓங்குவேன். நான் செய்யப்போகும் அனைத்து அருஞ்செயல்களாலும் எகிப்தியனைத் தண்டிப்பேன். அதற்குப் பின் அவன் உங்களை அனுப்பிவிடுவான்.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
திருப்பாடல்கள் 105: 1,5. 8-9. 24-25. 26-27

1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! 2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! பல்லவி

3 அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். 4 அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். பல்லவி

6 ஆண்டவரின் செயல்கள் நீதியானவை; ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும் அவர் உரிமைகளை வழங்குகின்றார். 7 அவர் தம் வழிகளை மோசேக்கு வெளிப்படுத்தினார்; அவர் தம் செயல்களை இஸ்ரயேல் மக்கள் காணும்படி செய்தார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில், விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீ அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 28-30.

அக்காலத்தில் இயேசு கூறியது: ``தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம். என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்'' என்று கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''இயேசு, 'பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்' என்றார்'' (மத்தேயு 11:28)

இயேசு கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட ஞானத்தைத் தம் சீடர்களோடு பகிர்ந்துகொள்கிறார். அவர் கடவுளோடு நெருங்கிய உறவு கொண்டிருந்ததால் கடவுளை நமக்கு வெளிப்படுத்துகிறார். கடவுளறிவை நாம் இயேசு வழியாகப் பெற்றுக்கொள்கிறோம். இந்த அறிவை நமக்கு அளிக்க விரும்புகின்ற இயேசு நம்மைப் பார்த்து, ''பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்'' என அன்போடும் கரிசனையோடும் அழைக்கின்றார். சீராக் நூலில் இத்தகையதோர் அழைப்பு உளது. கடவுளைப் பற்றி ஆழ்ந்த அறிவைப் பெற நம்மை ஞானம் அழைக்கின்றது: ''என் அருகே வாருங்கள்; நற்பயிற்சியின் இல்லத்தில் தங்குங்கள்'' (சீராக் 51:23). இயேசு கடவுளின் ஞானம் என்பதால் அவரை அணுகிச் செல்வோருக்குக் கடவுளறிவு கிடைக்கும். அது பெரும் சுமையாக இராது. இயேசுவின் காலத்தில் மறைநூல் அறிஞர் போன்றோர் மக்களின் தோள்களில் பெருஞ்சுமைகளை ஏற்றிவிட்டிருந்தனர். சட்டம் என்பது தாங்கவியலா சுமையாயிற்று. ஆனால் இயேசுவின் போதனை என்னும் நுகம் எளிதானது, இனிமையானது. இயேசு நமக்கு இளைப்பாறுதல் தருகின்றார். ஓய்வு நாள் என்பதன் உண்மைப் பொருளை இயேசு நமக்கு உணர்த்துகிறார். கடவுள் பற்றிய அறிவைப் பெற்று, கடவுளின் இதயத்தில் நாம் ஓய்வு கொள்வதே இயேசு நமக்கு வாக்களிக்கின்ற இளைப்பாறுதல்.

மனிதர் தாங்கவியலா சுமைகள் பலவற்றைச் சுமக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படுவதுண்டு. இயற்கைச் சீற்றத்தால் ஏற்படுகின்ற அழிவுகள் ஒருபுறம், மனிதர் மனிதப்பண்பின்றி நடந்துகொள்வதால் ஏற்படுகின்ற சுமைகள் மறுபுறம் என்று நம்மை வாட்டுகின்ற சுமைகளின் பளுவைக் குறைக்க இயேசு வருகிறார். அவரோடு சேர்ந்து நாமும் சிலுவையைச் சுமந்தால் அது இனிய சுமையாக மாறிவிடும். ஓய்வில்லாத இதயத்தை நமக்குத் தந்த கடவுள் நாம் அவரிடத்தில் ஓய்வுபெற வேண்டும் என்றே நம்மைப் படைத்துள்ளார் என தூய அகுஸ்தீன் அழகாகக் கூறுகிறார். இயேசுவை நாம் அணுகிச் சென்றால் நம் சுமைகள் எளிதாகிவிடும்; நம் உள்ளமும் ஆறுதலைக் கண்டடையும்.

மன்றாட்டு:

இறைவா, இயேசுவிடத்தில் துலங்கிய கனிவும் பணிவும் எங்கள் வாழ்வில் ஒளிர்ந்திட அருள்தாரும்.