யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 15வது வாரம் செவ்வாய்க்கிழமை
2013-07-16

தூய கார்மேல் அன்னை


முதல் வாசகம்

`நீரிலிருந்து நான் இவனை எடுத்தேன்' என்று கூறி, அவள் அவனுக்கு `மோசே' என்று பெயரிட்டாள்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 2: 1-15

அந்நாள்களில் லேவி குலத்தவர் ஒருவர் லேவி குலப் பெண்ணொருத்தியை மணம் செய்துகொண்டார். அவள் கருவுற்று ஓர் ஆண் மகவை ஈன்றெடுத்தாள்; அது அழகாயிருந்தது என்று கண்டாள்; மூன்று மாதங்களாக அதனை மறைத்து வைத்திருந்தாள். இதற்கு மேல் அதனை மறைத்து வைக்க இயலாததால், அதனுக்காகக் கோரைப் புல்லால் பேழை ஒன்று செய்து அதன்மீது நிலக்கீல், கீல் இவற்றைப் பூசினாள்; குழந்தையை அதனுள் வைத்து நைல் நதிக் கரையிலுள்ள நாணல்களுக்கிடையில் விட்டு வைத்தாள். அதற்கு என்ன ஆகுமோ என்பதை அறிந்து கொள்ளக் குழந்தையின் சகோதரி தூரத்தில் நின்று கொண்டிருந்தாள். அப்போது பார்வோனின் மகள் நைல் நதியில் நீராட இறங்கிச் சென்றாள். அவள் தோழியரோ நைல் நதிக்கரையில் உலாவிக் கொண்டிருந்தனர். அவள் நாணலிடையே பேழையைக் கண்டு தன் தோழி ஒருத்தியை அனுப்பி அதை எடுத்தாள்; அதைத் திறந்தபோது ஓர் ஆண் குழந்தையைக் கண்டாள்; அது அழுதுகொண்டிருந்தது. அதன் மேல் அவள் இரக்கம் கொண்டாள். ``இது எபிரேயக் குழந்தைகளுள் ஒன்று'' என்றாள் அவள். உடனே குழந்தையின் சகோதரி பார்வோன் மகளை நோக்கி, ``உமக்குப் பதிலாகப் பாலூட்டி இக்குழந்தையை வளர்க்க, எபிரேயச் செவிலி ஒருத்தியை நான் சென்று அழைத்து வரட்டுமா?'' என்று கேட்டாள். பார்வோனின் மகள் அவளை நோக்கி, ``சரி. சென்று வா'' என்றாள். அந்தப் பெண் சென்று குழந்தையின் தாயையே அழைத்து வந்தாள். பார்வோனின் மகள் அவளை நோக்கி, ``இந்தக் குழந்தையை நீ எடுத்துச் செல். எனக்குப் பதிலாக நீ பாலூட்டி அதனை வளர்த்திடு. உனக்குக் கூலி கொடுப்பேன்''என்றாள். எனவே குழந்தையை எடுத்துச் சென்று அதனைப் பாலூட்டி வளர்த்தாள் அப்பெண். குழந்தை வளர்ந்தபின் அவள் பார்வோனின் மகளிடம் அவனைக் கொண்டுபோய் விட்டாள். அவள் அவனைத் தன் மகன் எனக் கொண்டாள். `நீரிலிருந்து நான் இவனை எடுத்தேன்' என்று கூறி அவள் அவனுக்கு `மோசே' என்று பெயரிட்டாள். அக்காலத்தில் மோசே வளர்ந்துவிட்ட போது தம் இனத்தவரிடம் சென்றிருந்தார்; அவர்களுடைய பாரச் சுமைகளையும் பார்த்தார்; மேலும், தம் இனத்தவனான எபிரேயன் ஒருவனை எகிப்தியன் ஒருவன் அடிப்பதையும் கண்டார்; சுற்றுமுற்றும் பார்த்து, யாருமே இல்லையெனக் கண்டு, அந்த எகிப்தியனை அடித்துக் கொன்று மணலுக்குள் புதைத்து விட்டார். அடுத்த நாள் அவர் வெளியே சென்றபோது, எபிரேயர் இருவருக்கு இடையே கைகலப்பு நடந்து கொண்டிருந்ததைக் கண்டார்; குற்றவாளியை நோக்கி, ``உன் இனத்தவனை ஏன் அடிக்கிறாய்?'' என்று கேட்டார். அதற்கு அவன், ``எங்கள்மேல் உன்னைத் தலைவனாகவும் நடுவனாகவும் நியமித்தவன் எவன்? எகிப்தியனைக் கொன்றதுபோல் என்னையும் கொல்லவா நீ இப்படிப் பேசுகிறாய்?'' என்று சொன்னான். இதனால் மோசே அச்சமுற்றார்; ``நடந்தது தெரிந்துவிட்டது உறுதியே'' என்று சொல்லிக் கொண்டார்! இச்செய்தியைப் பார்வோன் கேள்வியுற்றபோது மோசேயைக் கொல்லத் தேடினான். எனவே மோசே பார்வோனிடமிருந்து தப்பியோடி, மிதியான் நாட்டில் குடியிருக்க வேண்டியதாயிற்று.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

கடவுளை நாடித் தேடுவோரே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக.
திருப்பாடல்கள் 69: 2. 13. 29-30. 32-33

2 ஆழமிகு நீர்த்திரளுள் அமிழ்ந்திருக்கின்றேன்; நிற்க இடமில்லை; நிலைகொள்ளாத நீருக்குள் ஆழ்ந்திருக்கின்றேன்; வெள்ளம் என்மீது புரண்டோடுகின்றது. பல்லவி

13 ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்; கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர். பல்லவி

29 எளியேன் சிறுமைப்பட்டவன்; காயமுற்றவன்; கடவுளே! நீர் அருளும் மீட்பு எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக! 30 கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன். பல்லவி

32 எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக. 33 ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை. பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 20-24

அக்காலத்தில் இயேசு வல்ல செயல்கள் பல நிகழ்த்திய நகரங்கள் மனம் மாறவில்லை. எனவே அவர் அவற்றைக் கண்டிக்கத் தொடங்கினார். ``கொராசின் நகரே, ஐயோ! உனக்குக் கேடு! பெத்சாய்தா நகரே, ஐயோ! உனக்குக் கேடு! ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால் அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பல் பூசி மனம் மாறியிருப்பர். தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையைவிட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். கப்பர்நாகுமே, நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ? இல்லை, பாதாளம் வரை தாழ்த்தப்படுவாய். ஏனெனில் உன்னிடம் செய்யப்பட்ட வல்ல செயல்கள் சோதோமில் செய்யப்பட்டிருந்தால் அது இன்றுவரை நிலைத்திருக்குமே! தீர்ப்பு நாளில் சோதோமுக்குக் கிடைக்கும் தண்டனையைவிட உனக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''இயேசு, 'கப்பர்நாகுமே, நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ? இல்லை, பாதாளம் வரை தாழ்த்தப்படுவாய். ஏனெனில் உன்னிடம் செய்யப்பட்ட வல்ல செயல்கள் சோதோமில் செய்யப்பட்டிருந்தால் அது இன்றுவரை நிலைத்திருக்குமே!' என்றார்'' (மத்தேயு 11:23)

கப்பர்நாகும் என்னும் ஊருக்கு இயேசு அடிக்கடி செல்வதும் அங்குத் தங்கியிருப்பதும் வழக்கம். இயேசுவின் போதனையும் அவர் புரிந்த வல்ல செயல்களும் அந்த ஊர் மக்களுக்கு நன்றாகவே தெரியும். இயேசு கப்பர்நாகுமில் பணியாற்றியது பற்றி மத்தேயு பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார் (காண்க மத் 4:12; 8:5; 9:1; 17:24). கப்பர்நாகும் மக்கள் இயேசுவின் போதனையைக் கண்டு வியப்புற்று, கடவுளைப் போற்றிய நேரங்களும் இருந்தன (காண்க: மத் 9:8). இருந்தாலும் கப்பர்நாகும் ஊரில் இயேசுவுக்கு முதல்முறையாக எதிர்ப்பும் எழுந்தது (காண்க: மத் 9:3,11). எசாயா இறைவாக்கினர் நூலிலி பாபிலோனியாவுக்கு எதிராகக் கூறப்பட்ட வாக்கு இங்கே கப்பர்நாகுமுக்கு எதிராக உரைக்கப்டுகிறது. வானளாவ உயர்த்தப்பட்ட கப்பர்நாகும் கடவுளின் வல்லமை இயேசுவில் துலங்கியதைக் காணும் பேறுபெற்றிருந்தது. ஆனால் இயேசுதான் ''கடவுளால் அனுப்பப்பட்டவர்'' (மத் 11:3) என்னும் உண்மையை ஏற்க கப்பர்நாகும் ஊர் மக்கள் தவறிவிட்டார்கள். இயேசுவிடத்தில் கடவுளின் ஞானம் துலங்கியதை அவர்கள் ஏற்க முன்வரவில்லை (மத் 11:9).எனவே, கப்பர்நாகும் ''பாதாளம் வரை தாழ்த்தப்படும்''. இங்கே நாம் காணும் உண்மை என்னவென்றால், இயேசு நமக்கு அறிவிக்கின்ற செய்தியை நாம் திறந்த மனத்தோடு ஏற்றிட வேண்டும். அந்த உண்மையை நம் உளக் கண்கள் நமக்கு உணர்த்திய பிறகும் நாம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தால் அதன் விளைவு நமக்கு அழிவையே கொணரும்.

உண்மையைக் கண்டும் அதை ஏற்க மறுப்பது கடவுளையே புறக்கணிப்பதற்கு சமம். ஏனென்றால் கடவுள் நம் உள்ளத்தின் ஆழத்தில், நமது மனச் சாட்சியின் வழியாக நமக்குத் தம்மை வெளிப்படுத்துகிறார். நாம் இவ்வாறு கண்டுகொள்கின்ற கடவுளின் உண்மையை ஏற்காமல் உதறித்தள்ளும்போது கடவுளின் செயலுக்கே முட்டுக்கட்டை இடுகிறோம். எனவே, கடவுளிடமிருந்து நம்மையே பிரித்துவிடுகிறோம். நாம் உயர்வதும் தாழ்வதும் நம்மைப் பொறுத்ததே எனலாம். கடவுள் நம் சுதந்திரத்தை மதிக்கிறார். அவருடைய உண்மையை அவர் நம்மீது திணிப்பதில்லை. எனவே நாம் சுதந்திர உணர்வோடு அவருடைய செய்தியை ஏற்றிட முன்வரவேண்டும். அன்றைய கப்பர்நாகும் மக்கள் இயேசு கொணர்ந்த உண்மையைக் காணத் தவறியதால் அவர் அவர்களைக் குறித்து மன வருத்தம் அடைந்தார். கடவுளிடமிருந்து வருகின்ற செய்தியை ஏற்று, நாம் மனம் மாற வேண்டும்; நம் வாழ்க்கையைத் திருத்தி ஒரு புதிய முறையில் அதை வாழ்ந்திட வேண்டும். அப்போது கடவுளின் அருள் நம்மோடு என்றும் தங்கியிருந்து நம்மை வழிநடத்திச் செல்லும்.

மன்றாட்டு:

இறைவா, உம் குரலுக்கு நாங்கள் கவனத்தோடு செவிமடுக்க அருள்தாரும்.