திருவழிப்பாட்டு ஆண்டு C (14-07-2013)

எனக்கு அடுத்திருப்பவர் யார்?/> எனக்கு அடுத்திருப்பவர் யார்?/> எனக்கு அடுத்திருப்பவர் யார்?/> எனக்கு அடுத்திருப்பவர் யார்?/>


திருப்பலி முன்னுரை

இறைத்திருமகன் அருளால் ஆண்டின் பொதுக்காலம் 15 ஆம் வாரம் ஞாயிறு திருப்பலி வழிபாட்டில் பங்கேற்க அணியமாயிருக்கும் அன்பின் சொந்தங்கள் அனைவருக்கும் பணிவான அன்பு வாழ்த்துகளைக் கூறி மகிழ்வு அடைகிறேன்.

இறைவனை அனைத்துக்கும் மேலாக முழு இதயத்தோடும், முழு ஆற்றலோடும் அன்பு செய்ய அழைக்கிறார் ஆண்டவர். இதனை இன்றைய முதல் வாசகத்திலும், நற்செய்தி வாசகத்திலும் காண்கிறோம். ‘முழு உள்ளத்தோடும், முழு இதயத்தோடும் ஆண்டவரிடம் திரும்பு’ என்னும் அழைப்பை இணைச்சட்ட நூல் நமக்குத் தருகிறது. ஒவ்வொரு முறை இறைவார்த்தையை நாம் வாசிக்கும்போதும் இந்த அழைப்பு நமக்குத் தரப்படுகிறது. அது மட்டுமல்ல, இறைவனைத் தேட வேண்டும் என்னும் ஆர்வத்தை இறைவன் இயற்கையாக நமது இதயத்திலே வைத்திருக்கிறார். அதனையே நாம் ‘மனச்சான்று’ என்று அழைக்கிறோம். ஆம், நமது மனச்சான்று எப்போதும் நாம் தீமையை விட்டு விலகி, இறைவனிடம் திரும்ப வேண்டுமென்றும், அவரையே அனைத்துக்கும் மேலாக அன்பு செய்ய வேண்டும் என்றும் அழைத்துக்கொண்டே இருக்கிறது. நமக்கு மிக அருகில், நமது வாயில், நமது உள்ளத்தில் ஒலிக்கும் இந்த அழைப்பை இன்று சற்று உன்னிப்பாகக் கவனிப்போமா! இத்திருப்பலியில் பங்கேற்று இறையாசீர் பெறுவோம்.முதல் வாசகம்

நீ அதை நிறைவேற்றுமாறு வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது:
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம். 30:10-14

மோசே மக்களை நோக்கிக் கூறியது: உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடு. சட்ட நூலில் எழுதப்பட்டுள்ள அவர்தம் கட்டளைகளை யும் நியமங்களையும் கடைப்பிடி உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பு.
ஏனெனில், இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இந்தக் கட்டளை உனக்குப் புரியாதது இல்லை: உன்னிடமிருந்து வெகு தொலையிலும் இல்லை. நாம் அதைக்கேட்டு, நிறைவேற்று மாறு, நமக்காக யார் விண்ணகத்துக்குப் போய், அதைக் கொண்டு வருவார் ; என்று நீ சொல்லாதவாறு, அது விண்ணில் இல்லை. நாம் அதைக்கேட்டு நிறைவேற்று மாறு, நமக்காக யார் கடல்கடந்து சென்று, அதை நம்மிடம் கொண்டு வருவார் ; என்று நீ சொல்லாதவாறு, அது கடல்களுக்கு அப்பால் இல்லை. ஆனால், நீ அதை நிறைவேற்றுமாறு வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது: உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரின் நியமங்கள் சரியானவை: இதயத்தை மகிழ்விக்கின்றன.
திபா: 66: 1-7. 16-20

ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது: அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது: எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது........பல்லவி

ஆண்டவரின் நியமங்கள் சரியானவை: அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளி மயமானவை: அவை கண்களை ஒளிர்விக்கின்றன..........பல்லவி

ஆண்டரைப் பற்றிய அச்சம் தூயது: அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை: அவை முற்றிலும் நீதியானவை........பல்லவி

அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை: தேனினும் தேனடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை...........பல்லவி

இரண்டாம் வாசகம்

அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன.
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 15-20

அவர் கட்புலனாகாத கடவுளது சாயல்: படைப்பனைத்திலும் தலைப்பேறு. ஏனெனில் விண்ணிலுள்ளவை, மண்ணி லுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை, அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியா ளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழியாய் அவருக் காகப்படைக்கப்பட்டன. அனைத்துக்கும் முந்தியர் அவரே: அனைத்தும் அவரோடிணைந்து நிலைபெறுகின்றன. திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமும் அவரே. எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு இறந்து உயிர்த்தெழுவோருள் அவர் தலைப்பேறு ஆனார். தம் முழுநிறைவும் அவருள் குடிகொள்ளக் கடவுள் திருவுளம் கொண்டார். சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணி லுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உம் வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலை வாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன! அல்லேலூயாஅல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10:25-37

அக்காலத்தில் திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். அதற்கு இயேசு, திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்? என்று அவரிடம் கேட்டார். அவர் மறுமொழியாக, உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வா யாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக என்று எழுதியுள்ளது ; என்றார். இயேசு, சரியாய்ச் சொன்னீர்: அப்படியே செய்யும்: அப்பொழுது வாழ்வீர் என்றார். அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, எனக்கு அடுத்திருப்பவர் யார்? என்று இயேசுவிடம் கேட்டார். அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை:
ஒருவர் எருசலேமி லிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். குரு ஒருவர் தற்செயலாய் அவ் வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார். ஆனால் அவ்வழியே பயணம் செய்து கொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார். மறுநாள் இரு தெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, இவரைக் கவனித்துக் கொள்ளும்: இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன் என்றார்.
கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது? என்று இயேசு கேட்டார். அதற்கு திருச்சட்ட அறிஞர், அவருக்கு இரக்கம் காட்டியவரே என்றார். இயேசு, நீரும் போய் அப்படியே செய்யும் என்று கூறினார்.என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.விசுவாசிகள் மன்றாட்டுகள்:


"உம் அன்பர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்.!

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

“நம்பிக்கை அளிப்பவராம் இறைவா,

உம் திருச்சபையை வழிநடத்தும்; எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், கன்னியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் உம் நற்கருணை பிரசன்னத்திலே, உம் வார்த்தையிலே இணைந்திருந்து உம் திருச்சபையை சிறப்புற வழிநடத்தி செல்ல வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அன்பின் இலக்கணமான இயேசுவே,

அன்புக்கும், பரிவுக்கும் அடையாளமாக நல்ல சமாரியர் உவமையை எங்களுக்குத் தந்தீர். அந்த நல்ல சமாரியர் போலவே நாங்களும் எங்களது அன்பை பல்வேறு செயல் வடிவங்களில் வெளிப்படுத்த எங்களுக்கு நல் மனதும், ஆற்றலும் தந்தருள வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எங்கள் உள்ளத்தின் ஆழத்தில் உறையும் இறைவா,

உம்மைப் போற்றுகிறோம். எங்கள் இதயமும், மனச்சான்றும் எப்போதும் விடுக்கும் அழைப்புக்குக் கவனமுடன் செவி சாய்த்து, அனைத்துக்கும் மேலாக உம்மை அன்பு செய்யும் வரத்தை எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் திருவுளம் கொண்ட தந்தையே!

இன்று எம் மத்தியில் ஆழமாக புரையோடிப்போயுள்ள பகைமை, பழிவாங்கும் மனநிலை என்பனவற்றை நாம் அழித்து: அனைவரோடும் ஓப்புரவாகி ஒற்றுமையாக வாழும் நல்லுள்ளத்தை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எங்கள் உள்ளத்தின் ஆழத்தில் உறையும் இறைவா,

உம்மைப் போற்றுகிறோம். எங்கள் இதயமும், மனச்சான்றும் எப்போதும் விடுக்கும் அழைப்புக்குக் கவனமுடன் செவி சாய்த்து, அனைத்துக்கும் மேலாக உம்மை அன்பு செய்யும் வரத்தை அளித்துக் காத்திடவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அன்புத் தந்தையே இறைவா!

உமது அன்பையும், இரக்கத்தையும் பெற்று மகிழும் நாங்கள் அனைவரும் அவைகளை மற்றவர்களோடு பகிர்ந்து: எங்கள் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்ற லோடும், முழு மனத்தோடும் எம் கடவுளாம் ஆண்டவர் உம்மிடம் அன்பு கொண்டு, எம்மீது அன்புகூர்வது போல் எமக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்ந்து ; உமது சாட்சிகளாய் வாழ எமக்கு அருள் தந்து எம்மை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இன்றைய சிந்தனை

ஒயாத கேள்வி

தொடக்கத்தில் கேட்ட கேள்வி நிலை வாழ்வைப்பற்றியது. முடிவில் சொன்ன பதில் இரக்கம் என்று. இரண்டுக்கும் இடைப்பட்ட இடத்தில் வருவது அயலான். இந்த அயலானைப்பற்றி தெழிவாக புரிந்துகொண்டால் தொடக்கமும் முடிவும் சரியாகிவிடும்.

இயேசுவின் காலத்திலிருந்து இன்றுவரையிலும் உள்ள பெரிய பிரச்சனையே அயலான் யார் என்ற தெளிவு இல்லாததுதான். அருகில் இருப்பவன் எல்லாம் அயலான் அல்ல. ஆடை அணிகலன்களோடு விருந்து விழாக்களில் கூடி வருபவன் எல்லாம் அயலான் அல்ல. சட்டத்தையும் சம்பிரதாயத்தையும் கடைபிடிப்பதால் அயலானின் அன்பன் ஆகிவிட முடியாது. மனிதாபிமானம் இல்லாத மதமும் சாரமற்ற வழிபாடும் அயலானின் அன்பன் ஆக்க உதவாது. அடித்தள மனிதனின் ஆதங்கத்தை உணராமல் ஆகாயத்தில் சிறகடிக்கும் மனிதனால் அயலானைக் காண கண் பார்வை போதாது.

தேவையில் இருப்பவன் அயலான். சமூகம், பொருளாதாரத்தால் தாக்குண்டு தவிக்கும் மனிதன் ஒரு அயலான்.கொள்னை கொலை வன்முறையால் பாதிக்கப்பட்டவன் அயலான்.அநீதியாலும் சாதீயத்தாலும் நசுக்கப்பட்ட மனிதன் ஒரு அயலான். தனிமையில் வாடுவோர், அனாதைகள், ஆதரவற்றோர் அனைவரும் அயலானே.

இயேசுவின் இவ்வுவமைக் கதை அயலான் யார் என்பதன் விளக்கமும் நிலை வாழ்வுக்கு வழிகாட்டுதலும் இணைந்தது. அயலானை அடையாளம் காண்போம். இரக்கச் செயல்களைச் செய்வோம். நலை வாழ்வை வாழ்ந்து மகிழ்வோம்.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் நற்செய்தியை அச்சமின்றி முழங்கிட அருள்தாரும்.