யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 13வது வாரம் வியாழக்கிழமை
2013-07-04


முதல் வாசகம்

ஆபிரகாம் கண்களை உயர்த்தி அந்த இடத்தைத் தூரத்திலிருந்து பார்த்தார்
தொடக்க நூலிலிருந்து வாசகம் 22: 1-19

அந்நாள்களில் கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, ஆபிரகாம்! என, அவரும் `இதோ! அடியேன்' என்றார். அவர், ``உன் மகனை, நீ அன்புகூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு, மோரியா நிலப் பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரிபலியாக அவனை நீ பலியிட வேண்டும்'' என்றார். அவ்வாறே ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தமது கழுதைக்குச் சேணமிட்டு, தம் வேலைக்காரருள் இருவரையும் தம் மகன் ஈசாக்கையும் அழைத்துக் கொண்டு, எரிபலிக்கு வேண்டிய விறகுக் கட்டைகளை வெட்டியபின், கடவுள் தமக்குக் குறிப்பிட்டிருந்த இடத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். மூன்றாம் நாள் ஆபிரகாம் கண்களை உயர்த்தி அந்த இடத்தைத் தூரத்திலிருந்து பார்த்தார். உடனே ஆபிரகாம் தம் வேலைக்காரர்களை நோக்கி, ``நீங்கள் கழுதையோடு இங்கேயே காத்திருங்கள். நானும், பையனும் அவ்விடம் சென்று வழிபாடு செய்தபின் உங்களிடம் திரும்பி வருவோம்'' என்றார். பின் ஆபிரகாம் எரிபலிக்கு வேண்டிய விறகுக் கட்டைகளை எடுத்துத் தம் மகன் ஈசாக்கின்மீது வைத்தார். நெருப்பையும் கத்தியையும் தம் கையில் எடுத்துக்கொண்டார். இவ்வாறு இருவரும் சேர்ந்து சென்றனர். அப்பொழுது, ஈசாக்கு தன் தந்தையாகிய ஆபிரகாமை நோக்கி, `அப்பா!' என, அவர், `என்ன? மகனே!' என்று கேட்டார். அதற்கு அவன், ``இதோ நெருப்பும் விறகுக் கட்டைகளும் இருக்கின்றன. எரிபலிக்கான ஆட்டுக் குட்டி எங்கே?'' என்று வினவினான். அதற்கு ஆபிரகாம், ``எரிபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பொறுத்தமட்டில், கடவுளே பார்த்துக்கொள்வார் மகனே'' என்றார். இருவரும் சேர்ந்து தொடர்ந்து நடந்தனர். ஆபிரகாமுக்குக் கடவுள் குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தை அவர்கள் அடைந்தனர். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடம் அமைத்து, அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்தார். பின் தம் மகன் ஈசாக்கைக் கட்டி, பீடத்தின்மீது இருந்த விறகுக் கட்டைகளின்மேல் கிடத்தினார். ஆபிரகாம் தம் மகனை வெட்டுமாறு தம் கையை நீட்டிக் கத்தியைக் கையில் எடுத்தார். அப்பொழுது ஆண்டவரின் தூதர் வானத்தினின்று `ஆபிரகாம்! ஆபிரகாம்' என்று கூப்பிட, அவர் `இதோ! அடியேன்' என்றார். அவர், ``பையன்மேல் கை வைக்காதே; அவனுக்கு எதுவும் செய்யாதே; உன் ஒரே மகனையும் எனக்குப் பலியிட நீ தயங்கவில்லை என்பதிலிருந்து நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது நான் அறிந்துகொண்டேன்'' என்றார். அப்பொழுது ஆபிரகாம் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார். இதோ, முட்செடியில் கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் கண்டார். உடனே ஆபிரகாம் அங்குச் சென்று அந்தக் கிடாயைப் பிடித்து தம் மகனுக்குப் பதிலாக எரிபலியாக்கினார். எனவே, ஆபிரகாம் அந்த இடத்திற்கு `யாவேயிரே' என்று பெயரிட்டார். ஆதலால்தான் `மலையில் ஆண்டவர் பார்த்துக்கொள்வார்' என்று இன்றுவரை வழங்கி வருகிறது. ஆண்டவரின் தூதர் ஆபிரகாமை வானத்தினின்று மீண்டும் அழைத்து, ``ஆண்டவர் கூறுவது இதுவே! நான் என்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். உன் ஒரே மகனை எனக்குப் பலியிடத் தயங்காமல் நீ இவ்வாறு செய்தாய். ஆதலால் நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து, விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் உன் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர் தம் பகைவர்களின் வாயிலை உரிமையாக்கிக் கொள்வர். மேலும், நீ என் குரலுக்குச் செவி கொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்'' என்றார். பின் ஆபிரகாம் தம் வேலைக்காரரிடம் திரும்பி வந்தார். அவர்கள் ஒன்று சேர்ந்து பெயேர்செபாவுக்குத் திரும்பிச் சென்றார்கள். அங்கேயே ஆபிரகாம் வாழ்ந்து வந்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.
திருப்பாடல்கள் 116: 1-2. 3-4. 5-6. 8-9

1 ஆண்டவர்மீது அன்பு கூர்கின்றேன்; ஏனெனில், எனக்கு இரங்குமாறு நான் எழுப்பிய குரலை அவர் கேட்டருளினார். 2 அவரை நான் மன்றாடிய நாளில், எனக்கு அவர் செவிசாய்த்தார். -பல்லவி

3 சாவின் கயிறுகள் என்னைப் பிணித்துக் கொண்டன. பாதாளத்தின் துன்பங்கள் என்னைப் பற்றிக்கொண்டன; துன்பமும் துயரமும் என்னை ஆட்கொண்டன. பல்லவி

4 நான் ஆண்டவரது பெயரைத் தொழுதேன்; `ஆண்டவரே! என் உயிரைக் காத்தருளும்' என்று கெஞ்சினேன். -பல்லவி

5 ஆண்டவர் அருளும் நீதியும் கொண்டவர்; நம் கடவுள் இரக்கம் உள்ளவர்.6 எளிய மனத்தோரை ஆண்டவர் பாதுகாக்கின்றார்; நான் தாழ்த்தப்பட்டபோது எனக்கு மீட்பளித்தார். -பல்லவி

8 என் உயிரைச் சாவினின்று விடுவித்தார்; என் கண் கலங்காதபடியும் என் கால் இடறாதபடியும் செய்தார். 9 உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ``மகனே, துணிவோடிரு, உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன'' அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 1-8

அக்காலத்தில் இயேசு படகேறி மறு கரைக்குச் சென்று தம் சொந்த நகரை அடைந்தார். அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி அவரிடம் கொண்டு வந்தனர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு முடக்குவாதமுற்றவரிடம், ``மகனே, துணிவோடிரு, உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன'' என்றார். அப்பொழுது மறைநூல் அறிஞர்கள் சிலர், ``இவன் கடவுளைப் பழிக்கிறான்'' என்று தமக்குள் சொல்லிக் கொண்டனர். அவர்களுடைய சிந்தனைகளை இயேசு அறிந்து அவர்களை நோக்கி, ``உங்கள் உள்ளங்களில் நீங்கள் தீயன சிந்திப்பதேன்? `உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்பதா, `எழுந்து நட' என்பதா, எது எளிது? மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்'' என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, ``நீ எழுந்து உன்னுடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் போ'' என்றார். அவரும் எழுந்து தமது வீட்டுக்குப் போனார். இதைக் கண்ட மக்கள் கூட்டத்தினர் அச்சமுற்றனர். இத்தகைய அதிகாரத்தை மனிதருக்கு அளித்த கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி இயேசுவிடம் கொண்டு வந்தனர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு முடக்குவாதமுற்றவரிடம், 'மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்றார்'' (மத்தேயு 9:2)

முடக்குவாதமுற்ற ஒரு மனிதரைச் சிலர் இயேசுவிடம் கொண்டுவருகிறார்கள். இயேசு அந்த மனிதருக்கு அவர்தம் நோயிலிருந்து விடுதலை அளித்ததோடு அவருடைய பாவங்களையும் மன்னிக்கிறார். இந்தப் புதுமையை மாற்கு விரிவாகத் தருகிறார் (காண்க: மாற் 2:1-13). மத்தேயு இந்நிகழ்ச்சியைச் சுருக்கமாகவே குறித்துள்ளார் (மத் 9:1-8). மக்களுக்கு நோய் ஏற்படுவது அவர்கள் செய்த பாவத்தின் காரணமாகவே என்னும் எண்ணம் அக்கால இஸ்ரயேலரிடம் இருந்தது. ஆனால் இயேசு இக்கருத்தை ஏற்கவில்லை (காண்க: யோவா 9:3). பாவம் என்பது மனித வாழ்க்கையில் நிலவுகின்ற ஒரு தீமை. அதை முறியடித்து அழிக்கும் வல்லமை கடவுளுக்கே உண்டு. ஆனால் இயேசு முடக்குவாதமுற்ற மனிதரை நோக்கி, ''மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன'' (மத் 9:2) என்று கூறியதன் வழியாகத் தமக்குப் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டெனக் காட்டுகிறார். கடவுள் ஒருவருக்கு மட்டுமே உரிய அதிகாரத்தை இயேசு தாமும் கொண்டிருப்பதாகக் கூறியதால் அங்கிருந்த மறைநூல் அறிஞர்கள் சிலர் ''இவன் கடவுளைப் பழிக்கிறான்'' என்று தமக்குள் கூறிக்கொண்டனர்.

இயேசு முடக்குவாதமுற்ற மனிருக்கு உடல்நலம் மட்டும் அளிக்கவில்லை; அந்த மனிதருக்கு உளநலமும் ஆன்ம நலமும் இயேசு வழங்கினார். பாவம் என்னும் கொடிய பிணியிலிருந்து அந்த மனிதருக்கு இயேசு விடுதலை அளித்தார். அவ்வாறு வழங்கப்பட்ட விடுதலையின் வெளி அடையாளம்தான் அந்த மனிதரின் முடக்குவாதம் நீங்கி, எழுந்து நடக்கும் சக்தியைப் பெற்றது. இயேசுவின் வல்லமையால் நலம் பெற்ற அந்த மனிதர் ''எழுந்து வீட்டுக்குப் போனார்'' (மத் 9:7). இயேசு பாவத்தை மன்னித்து மக்களுக்கு நலம் அளிக்கவே இந்த உலகிற்கு வந்தார். அவர் ஆற்றிய பணியைத் தொடர்ந்து நடத்த திருச்சபை அழைக்கப்படுகிறது. திருச்சபையும் கடவுளின் வல்லமையோடு செயல்பட்டு, கடவுள் வழங்குகின்ற பாவ மன்னிப்பை மக்களுக்கு அளிக்கின்ற கருவியாகச் செயல்படுகிறது. திருச்சபை ஆற்றுகின்ற பாவ மன்னிப்புப் பணி மனிதருடைய ஆன்ம நலனை மட்டுமே கொணர்வதில்லை. மாறாக, முழு மனிதரின் நலனுக்காகவும் உழைக்க திருச்சபை அழைக்கப்படுகிறது. மக்களுடைய வாழ்வைச் சிறுமைப்படுத்துகின்ற அனைத்துத் தீமைகளிலிருந்தும் அவர்களுக்கு விடுதலை வழங்க இயேசு நம்மிடையே வந்தார். அதுபோலவே, திருச்சபையும் இயேசு கொணர்ந்த நலமளிக்கும் பணியைத் தொடர்ந்து ஆற்றிட வேண்டும். இயேசுவின் வல்லமையால் புதுத் தெம்பு பெற்ற நாம் ''எழுந்து நடக்க'' வேண்டும். பிறர் ''எழுந்து நடக்க'' நம்மையே அர்ப்பணிக்க வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் அன்பினால் முழுநலம் பெற்ற நாங்கள் நன்றியுடைய மக்களாக வாழ்ந்திட அருள்தாரும்.