திருவழிப்பாட்டு ஆண்டு C (23-06-2013)
 />
 />
திருப்பலி முன்னுரை
இறைமகன் இயேசுவில் அன்பானவர்களே ஆண்டின் பொதுக்காலம் 12 – ஆம் வாரத்தில்
திருப்பலியில் பங்கேற்க அணியமாயிருக்கும் உங்கள் எல்லாரையும் அன்புடன் வாழ்த்துகிறேன்.
இன்றைய நற்செய்தியில், தான் யார் என்பது பற்றி இயேசு ஒரு சுய ஆய்வு மற்றும் பொது ஆய்வு நடத்தி அறிந்துகொண்டார்
என்பது ஆழ்ந்து சிந்தித்தால் வியப்பு தருகின்ற ஒரு செய்தி.
ஒவ்வொரு மனிதரும் அவ்வப்போது செய்துகொள்ளவேண்டிய ஒரு பணி தன் பணியும் வாழ்வும் பற்றிய ஆய்வு.
இதில் தன்னாய்வும் இருக்க வேண்டும், பிறருடைய கருத்துக் கணிப்புகளும் இடம் பெறவேண்டும்.
இதன்படியே, இயேசுவும் தன்னாய்வு ஒன்றை மேற்கொண்டார்.
அதற்கு உதவியாகத் தம் சீடர்களிடம் மக்களின் கருத்தை அறிந்துகொள்கிறார்.
ஆனால், இந்தத் தன்னாய்வுக்கு முன் அவர் என்ன செய்தார் என்பதையே இன்றைய சிந்தனைக்காக நாம் எடுத்துக்கொள்ளலாம்.
அவர் தனித்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார் என்று பதிவு செய்திருக்கிறார் நற்செய்தியாளர்.
ஆம், தனித்திருந்தார், வேண்டுதல் செய்துகொண்டிருந்தார். தனிமையும், இறைவேண்டுதலும்தான் தன்னாய்வு செய்வதற்குரிய அருமையான சூழல்கள்.
இயேசு நமக்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறார். நாமும் அவரைப் போல அவ்வப்போது தனித்திருக்கவும்,
இறைவேண்டலில் ஈடுபடவும் அத்தகைய வேளைகளில் நம் வாழ்வு மற்றும் பணிகள் பற்றிய தன்னாய்வில் இறங்கவும் உறுதிகொள்வோமா?
இத்திருப்பலியில் பங்கேற்று இறையாசீர் பெறுவோம்.
முதல் வாசகம்
நான் தாவீது குடும்பத்தார் மேலும், எருசலேமில் குடியிருப்போர்மேலும் இரக்க உள்ளத்தையும் மன்றாடும் மனநிலையும் பொழிந்தருள்வேன்
முதல் வாசகம் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 12:10-11,13:1
ஆண்டவர் கூறியது: நான் தாவீது குடும்பத்தார் மேலும், எருசலேமில் குடியிருப்போர்மேலும் இரக்க உள்ளத்தையும் மன்றாடும் மனநிலையும் பொழிந்தருள்வேன். அப்போது அவர்கள் தாங்கள் ஊடுருவக் குத்தியவனையே உற்றுநோக்குவார்கள்: அவனை உற்று நோக்கி ஒரே பிள்ளையைப் பறிகொடுத்து ஓலமிட்டு அழுபவரைப் போலும், இறந்துபோன தம் தலைப் பிள்ளைக்காகக் கதறி அழுபவர் போலும் மனம் கசந்து அழுவார்கள்.அந்நாளில் எருசலேமில் எழும்பும் ஓலம் மெகிதோவின் சமவெளியில் அதத்ரிம்மோனின் புலம்பலைப்போலப் பெரிதாயிருக்கும். அந்நாளின் பாவத்தையும் தீட்டையும் நீக்கித் தூய்மையாக்கும் நீரூற்று தாவீதின் குடும்பத்தாருக்கெனவும் எருசலேமில் குடியிருப்போருக்கெனவும்" தோன்றும்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி:
திருப்பாடல்கள் 63;1-5,7-8
கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம்போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. - பல்லவி
2 உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன். 3 ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது;
என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. -பல்லவி
4 என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்;
கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன். பல்லவி
5 அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல என் உயிர் நிறைவடையும்;
என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். - பல்லவி
7 ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன். - பல்லவி
8 நான் உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்டேன்; உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது. - பல்லவி
இரண்டாம் வாசகம் , கிறிஸ்து இயேசுவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையால் நீங்கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள் புனித பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3;26-29சகோதர சகோதரிகளே,, கிறிஸ்து இயேசுவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையால் நீங்கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள். அவ்வாறெனில், கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்து கொண்டீர்கள். இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை: ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை: கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்களும் ஆபிரகாமின் வழித் தோன்றல்களுமாய் இருக்கிறீர்கள். வாக்குறுதியின் அடிப்படையில் உரிமைப்பேறு உடையவர்களாயும் இருக்கிறீர்கள். - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
புனித லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்9;18-24
அக்காலத்தில் இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம், "நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்? " என்று அவர் கேட்டார்.அவர்கள் மறுமொழியாக, "சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர் " என்றார்கள். "ஆனால் நீங்கள் நான் யார் என சொல்கிறீர்கள்? " என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, "நீர் கடவுளின் மெசியா " என்று உரைத்தார்.இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.மேலும் இயேசு, "மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலைசெய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் " என்று சொன்னார்.பின்பு அவர் அனைவரையும் நோக்கி, "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.ஏனெனில், தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார் என்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
"ஆண்டவரே உம்மை ஏத்திப்புகழ்வேன்,
ஏனெனில் நீர் என்னை கைதூக்கி விட்டீர்!
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.
“நம்பிக்கை அளிப்பவராம் இறைவா,
உம் திருச்சபையை வழிநடத்தும்; எம் திருத்தந்தை பிரான்சிஸ்,
ஆயர்கள், குருக்கள், கன்னியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரும்
உம் நற்கருணை பிரசன்னத்திலே, உம் வார்த்தையிலே இணைந்திருந்து
உம் திருச்சபையை சிறப்புற வழிநடத்தி செல்ல வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
வாழ்வின் நிறைவே இறைவா,
வாழ்வு என்னும் கொடைக்காக உமக்கு நன்றி கூறுகிறேன்.
இந்த வாழ்வும், நீர் தந்த பணியும் உமக்கு உகந்ததாக இருக்கின்றனவா என்று என்னையே ஆய்வு செய்துகொள்ள நீர் தருகின்ற இந்த அழைப்புக்காக
உமக்கு நன்றி கூறுகிறேன். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தனித்திருக்கவும்,
உம்மோடு உரையாடி அதன் வழியாக எனது வாழ்வையும், பணியையும் ஆய்வுக்கு உட்படுத்தவும் எனக்குத் தூய ஆவியின் ஞானத்தை
நிறைவாக எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அன்பின் ஊற்றாம் இறைவா,
உம் திருமகன் இயேசுவை நாங்கள் ஆழமாக அறிந்திடவும்,
துன்பத்தின் வழியாகவே நாங்கள் நிறைவாழ்வில் பங்கேற்க இயலும் என்பதை எங்களுக்கு
உணர்த்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஞானத்தின் ஊற்றே இறைவா!
எம் பங்கு மக்கள் அனைவரும் இறைஅன்பிலும, பிறர் அன்பிலும் நாளும் வளரவும், குடும்பங்களில் சமாதானம் நிலவிடவும்,
பிள்ளைகள் நன்கு படித்திடவும் தேவையான அருளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே!
பிரிவினைகளோடும், கசப்புணர்வுகளோடும், பழிவாங்கும் மனநிலையோடும், வேதனைகளோடும், விரக்தியோடும்,
கண்ணீரோடும் வாழும் கணவன் மனைவி அனைவர்மீதும் மனமிரங்கி அவர்களின் அன்பு தூய்மையானதாகவும்,
நிலையானதாகவும் இருக்கவும், அவர்கள் தாங்கள் பெற்றுக்கொண்ட அழைப்பிற்கேற்ப
பிரமாணிக்கமாய் வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திடவேண்டுமென்று தயவாய் உம்மை மன்றாடுகின்றோம்.
கருணையின் தேவா!
எம் பங்கிலுள்ள இளைஞர்கள், இளம் பெண்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளை வீணடித்து விடாமல்,
எதிர்கால வாழ்வை திட்டமிட்டு செயல்படுத்திட தேவையான அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
|
இன்றைய சிந்தனை
''இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர்.
அப்போது அவர்களிடம், 'நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?' என்று அவர் கேட்டார்'' (லூக்கா 9:18)
இயேசு பல அதிசயங்களைச் செய்கிறார் எனக் கேள்விப்பட்ட குறுநில மன்னன் ஏரோது அந்திப்பா இயேசுவைச் சந்திக்க விருப்பம் கொண்டான். ''இவர் யாரோ?'' என்னும் கேள்வியையும் எழுப்பினான் (காண்க: லூக் 9:9). அதன் பிறகு இயேசு ஐயாயிரம் பேருக்கு அதிசயமான விதத்தில் உணவளிக்கும் நிகழ்ச்சியை லூக்கா பதிவுசெய்துள்ளார் (லூக் 9:10-17). வயிறார உண்ட மக்கள் இயேசுவை ஓர் இறைவாக்கினராகப் பார்த்திருப்பார்கள். முற்காலத்தில் புதுமைகள் புரிந்து மக்களுக்கு உணவளித்த எலியா போன்றவர் இயேசு என நினைத்திருப்பார்கள் (காண்க: 1 அர 17:8-14). ஆனால் இயேசு ''தனித்து இறைவனிடம் வேண்டச் செல்கின்றார்'' (காண்க: லூக் 9:18). முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு முன்னர் இயேசு இறை வேண்டல் செய்தார் என லூக்கா பல இடங்களில் குறிப்பிடுகிறார். அதுபோலவே இங்கும் ஒரு முக்கியமான நிகழ்ச்சி நடக்கவிருந்தது. இயேசு சீடர்களிடம் ஒரு கேள்வி கேட்கிறார். அக்கேள்விக்கு அவர்கள் அளித்த பதில் சரியே என இயேசு ஏற்றுக்கொண்டாலும் அதில் ஒரு திருத்தம் கொணர்கிறார்.
''நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?'' - இவ்வாறு இயேசு கேட்ட கேள்விக்கு சீடர்கள் தந்த பதில் சரியானதுதான். மக்கள் இயேசுவை ஓர் இறைவாக்கினராகப் பார்த்தார்கள். ''ஆனால் நீங்கள் நான் யார் என சொல்கிறீர்கள்?'' என்று இயேசு கேட்ட கேள்விக்கு சீடர்களின் பெயரால் பேதுரு அளித்த பதில் ''நீர் கடவுளின் மெசியா'' என்பது (லூக் 9:20). இங்கே லூக்கா நற்செய்தியாளர் இயேசு தம்மைப் படிப்படியாகத் தம் சீடர்களுக்கு வெளிப்படுத்தியதைக் குறிப்பிடுகிறார். இயேசு உண்மையிலேயே கடவுளால் ''திருப்பொழிவு பெற்றவர்'' (மெசியா). ஆயினும் உலகப் பாணியில் அதிகாரம் செலுத்தவோ, ஆட்சியில் அமர்ந்து இஸ்ரயேலை ஒரு வலிமை மிக்க சுதந்திர நாடாக மாற்றிடவோ அவர் வரவில்லை. இயேசு துன்பங்கள் அனுபவிக்க வேண்டும், கொலைசெய்யப்பட வேண்டும் என்பது கடவுளின் திட்டமாக இருந்தது. ஆனால் அவர் சாவையும் முறியடித்து, புதியதொரு வாழ்வுக்கு உயிர்பெற்றெழுவார் (காண்க: லூக் 9:22). ''நான் யார்?'' என இயேசு இன்று நம்மைப் பார்த்துக் கேட்கின்றார். மக்களுக்கு அதியமான விதத்தில் உணவளித்த அதே இயேசு கடவுளை நோக்கி வேண்டுவதில் நேரம் செலவிட்டார். மக்களின் உடல் பசியைப் போக்குவது மட்டுமே அவருடைய நோக்கமாக இருக்கவில்லை. கடவுளோடு ஆழ்ந்த உறவில் நிலைப்பதும் அவருடைய இயல்பாக இருந்தது. கடவுளோடும் மனிதரோடும் இயேசு கொண்டிருந்த உறவு நம்மிலும் துலங்க வேண்டும். ஆக, இயேசுவை நாம் சரியாக அடையாளம் காண வேண்டும் என்றால் அவர் நம் வாழ்வின் மூச்சாக மாற வேண்டும். அவரே நம் உள்ளத்திலிருந்து நம்மை வழிநடத்த நாம் முழுமையாக அவருடைய கைகளில் நம்மை ஒப்படைக்க வேண்டும். அப்போது ''துன்புறும் மெசியா''வாக வந்த இயேசு துன்பங்களின் நடுவிலும் நமக்குத் தோன்றுவார்; நம்மைத் தேற்றி நமக்குத் தம் புது வாழ்வில் பங்களிப்பார். நம்மைக் கடவுளோடும் மனிதரோடும் நல்லுறவில் இணைக்கின்ற பாலமாக விளங்குவார்.
மன்றாட்டு:
இறைவா, உம் திருமகன் இயேசுவை நாங்கள் ஆழமாக அறிந்திட அருள்தாரும்.
|