திருவழிப்பாட்டு ஆண்டு C (09-06-2013)

அக்கைம்பெண்ணைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவு கொண்டு, 
'அழாதீர்' என்றார்/> அக்கைம்பெண்ணைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவு கொண்டு, 
'அழாதீர்' என்றார்/>


திருப்பலி முன்னுரை

இறைமகன் இயேசுவில் அன்பானவர்களே ஆண்டின் பொதுக்காலம் 10 – ஆம் வாரத்தில் திருப்பலியில் பங்கேற்க அணியமாயிருக்கும் உங்கள் எல்லாரையும் அன்புடன் வாழ்த்துகிறேன்.

இயேசு வாழ்வு கொடுக்கவே வந்தார் என்பது இன்று நற்செய்தி தரும் பாடமாகும். உலகத்தில் மக்கள் அனுபவிக்கின்ற துன்பங்கள் கணக்கிலடங்கா. பசியும் பட்டினியும், வறுமையும் ஏழ்மையும், நோயும் நோக்காடும், வீடின்மையும் கல்வியறிவின்மையும் என்று மனிதரை வாட்டி வதைக்கின்ற இழிநிலைகள் இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் பாரெங்கும் பரவியிருப்பது கவலையானதே. எத்தனையோ தேவைகள் இருக்கின்ற போது நம்மை அடுத்திருக்கின்ற மனிதரின் வேதனைகளை நாம் கண்டுகொள்ளாமல் போகின்ற ஆபத்து உள்ளது. உதவி கேட்டுப் பலர் வரும்போது நம் அருகிலிருப்பவருக்கு உதவி தேவை என்பதை நாம் மறந்துவிடக் கூடும். இயேசுவிடம் உதவி கேட்டு எத்தனையோ மனிதர் வந்தனர். கும்பல் கும்பலாக அவரைத் தேடிச் சென்றனர். தம்மை நெருக்கிய கூட்டத்தின் நடுவிலும் இயேசு ஓர் எளிய கைம்பெண்ணின் வேதனையைக் கவனிக்கத் தவறவில்லை.

அப்பெண்ணின் ஒரே மகன் இறந்துவிட்டிருந்தார். கணவனும் இல்லை, மக்களும் இல்லை என்ற அவல நிலைக்குத் தள்ளப்பட்ட அப்பெண்ணைக் கண்டு இயேசு இரக்கம் கொள்கிறார். அவருடைய மகனுக்கு உயிர் அளிக்கிறார். இச்செயல் வழியாக இயேசுவின் வல்லமை விளங்கியது ஒருபுறமிருக்க, அவருடைய இரக்க மனப்பான்மையும் இளகிய மனதும் இங்கே தோன்றுவதையும் நாம் கவனிக்க வேண்டும். எத்தனையோ அலுவல்கள் நமக்கு இருந்தாலும் நம்மை அடுத்திருக்கின்ற ஒருவருடைய தேவையை உணர்ந்து அவருக்கு உதவிசெய்ய நாம் நேரம் ஒதுக்க வேண்டும். பல அலுவல்களில் ஈடுபட்டு சுறுசுறுப்பாக உழைப்பவர்களுக்கு மேன்மேலும் பொறுப்புக்கள் வந்து சேரும் என்பது அனுபவ உண்மை. அந்த வேளைகளிலும் பிறருடைய தேவைகளைக் கண்டு, அவர்கள் நம்மை அணுகுவதற்கு முன்னரே உதவி செய்ய முன்வருவது இயேசுவின் சீடருக்கு அழகு.

தம் ஒரே மகனை இழந்த கைம்பெண் இயேசுவிடம் உதவி கேட்டுக் கைநீட்டவில்லை; ஆனாலும் இயேசு அவருடைய தேவையைத் தாமாகவே உணர்ந்து அவருக்கு உதவிசெய்ய முன்வந்தார். குறிப்பறிந்து உதவி செய்ய எங்களுக்கு நன்மனதைத் தந்தருள தகுந்த விதமாக இத்திருப்பலியில் பங்கேற்று இறையாசீர் பெறுவோம்.முதல் வாசகம்

"நீர் கடவுளின் அடியவரென்றும் உம் வாயிலிருந்து வரும் ஆண்டவரின் வாக்கு உண்மையானதென்றும் தெரிந்து கொண்டேன்"
1அரசர்கள் ஆகமத்திலிருந்து வாசகம் 17;17-24

17 இதற்குப் பின், ஒருநாள், வீட்டுத் தலைவியான அந்தப் பெண்ணின் மகன் நோயுற்றான். அவனது நோய் மிகவும் முற்றவே, அவன் மூச்சு நின்று விட்டது. 18 அவர் எலியாவிடம், "கடவுளின் அடியவரே, எனக்கு ஏன் இப்படிச் செய்தீர்? என் பாவத்தை நினைவ+ட்டவும் என் மகனைச் சாகடிக்கவுமா நீர் வந்திருக்கிறீர்?" என்றார். 19 எலியா அவரிடம், "உன் மகனை என்னிடம் கொடு "என்று சொல்லி, அவனை அவர் மடியிலிருந்து எடுத்துத் தாம் தங்கியிருந்த மாடியறைக்குத் தூக்கிச்சென்று தம் படுக்கையில் கிடத்தினார். 20 அவர் ஆண்டவரை நோக்கி, "என் கடவுளாகிய ஆண்டவரே, எனக்குத் தங்க இடம் கொடுத்த கைம்பெண்ணின் மகனைச் சாகடித்து அவளைத் துன்புறுத்தலாமா?" என்று கதறினார். 21 அவர் அந்தச் சிறுவன்மீது மூன்று முறை குப்புறப்படுத்து ஆண்டவரை நோக்கி, "என் கடவுளாகிய ஆண்டவரே, இந்தச் சிறுவன் மீண்டும் உயிர் பெறச் செய்யும்" என்று மன்றாடினார். 22 ஆண்டவரும் எலியாவின் குரலுக்குச் செவி கொடுத்தார். சிறுவனுக்கு மீண்டும் உயிர் திரும்பி வரவே, அவன் பிழைத்துக் கொண்டான்.23 எலியா சிறுவனைத் தூக்கிக் கொண்டு மாடி அறையிலிருந்து இறங்கி வீட்டிற்குள் வந்து, "இதோ! உன் மகன் உயிருடன் இருக்கிறான்" என்று கூறி அவனை அவன் தாயிடம் ஒப்படைத்தார். 24 அந்தப் பெண் எலியாவிடம், "நீர் கடவுளின் அடியவரென்றும் உம் வாயிலிருந்து வரும் ஆண்டவரின் வாக்கு உண்மையானதென்றும் தெரிந்து கொண்டேன்" என்றார்

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே. எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்;; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும்.
திருப்பாடல்கள் 30;1,3,5,10-12

1 ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை.பல்லவி

3 ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர்.விடவில்லை.பல்லவி

5 அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு.பல்லவி

10 ஆண்டவரே. எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்;; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும்.பல்லவி

11 நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்; என் சாக்குத் துணியைக் களைந்துவிட்டு எனை மகிழ்ச்சியால் உடுத்தினீர்.பல்லவி

12 ஆகவே என் உள்ளம் உம்மைப் புகழ்ந்து பாடும்; மௌனமாய் இராது; என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன்.

இரண்டாம் வாசகம்

தம் மகனைப் பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தவர்க்கு நான் அறிவிக்குமாறு அவரை எனக்கு வெளிப்படுத்தத் திருவுளங்கொண்டார்
புனித பவுல் கலாத்தியரருக்கு எழுதிய நிருபத்திலிருந்து வாசகம்1;11-19

11 சகோதர சகோதரிகளே, உங்களுக்கு ஒன்று தெரிவிக்க விரும்புகிறேன்; நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தி மனிதரிடமிருந்து வந்ததல்ல. 12 எந்த மனிதரிடமிருந்தும் நான் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை; எந்த மனிதரும் அதை எனக்குக் கற்றுக் கொடுக்கவில்லை. மாறாக இயேசு கிறிஸ்து அருளிய வெளிப்பாட்டின் வாயிலாக அது எனக்குக் கிடைத்தது. 13 நான் யூதநெறியைப் பின்பற்றி வந்த காலத்தில் எவ்வாறு நடந்து கொண்டேன் என்பதுபற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். கடவுளின் திருச்சபையை மிகக் கொடுமையாகத் துன்புறுத்தி ஒழிக்க முயன்றேன். 14 மூதாதையர் மரபுகளில் ஆர்வம் மிக்கவனாய் என் இனத்தவருள் என் வயதினர் பலரைவிட யூதநெறியில் சிறந்து விளங்கினேன். 15 ஆனால் தாயின் வயிற்றில் இருந்தபோதே என்னைத் தமக்கென ஒதுக்கிவைத்துத் தமது அருளால் என்னை அழைத்த கடவுள், 16 தம் மகனைப் பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தவர்க்கு நான் அறிவிக்குமாறு அவரை எனக்கு வெளிப்படுத்தத் திருவுளங்கொண்டார். அப்போது நான் எந்த மனிதரிடமும் போய்க் கலந்து பேசவில்லை. 17 எனக்குமுன் திருத்தூதர்களாய் இருந்தவர்களைக் காண எருசலேமுக்குப் போகவுமில்லை. ஆனால் உடனே அரேபியாவுக்குச் சென்றேன். அங்கிருந்து தமஸ்கு நகருக்குத் திரும்பினேன். 18 மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுநான் கேபாவைப் பார்த்துப் பேச எருசலேமுக்குப் போனேன். அங்கே பதினைந்து நாள் அவரோடு தங்கியிருந்தேன். 19 ஆண்டவரின் சகோதரரான யாக்கோபைத் தவிர திருத்தூதருள் வேறு எவரையும் நான் போய்ப் பார்க்கவில்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே. எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்;; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும்.அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித லூக்காஸ் எழுதிய நற்செய்தியில் இருந்து வாசகம் 7;11-17

11 அதன்பின் இயேசு நயீன் என்னும் ஊருக்குச் சென்றார். அவருடைய சீடரும் பெருந்திரளான மக்களும் அவருடன் சென்றனர். 12யேசு அவ்வ+ர் வாயிலை நெருங்கி வந்தபோது, இறந்த ஒருவரைச் சிலர் தூக்கி வந்தனர். தாய்க்கு அவர் ஒரே மகன்; அத்தாயோ கைம்பெண். அவ்வ+ரைச் சேர்ந்த பெருந்திரளான மக்களும் அவரோடு இருந்தனர். 13 அவரைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவுகொண்டு, "அழாதீர்" என்றார். 14 அருகில் சென்று பாடையைத் தொட்டார். அதைத் தூக்கிச் சென்றவர்கள் நின்றார்கள். அப் ஆண்டவரே. எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்;; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும்.பொழுது அவர், "இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு" என்றார். 15 இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார். 16 அனைவரும் அச்சமுற்று, "நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்" என்று சொல்லிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். 17 அவரைப்பற்றிய இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவியது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.விசுவாசிகள் மன்றாட்டுகள்:


"ஆண்டவரே உம்மை ஏத்திப்புகழ்வேன், ஏனெனில் நீர் என்னை கைதூக்கி விட்டீர்!

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

“ எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர் நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்” என்று மொழிந்த எம் அன்பு இறைவா,

உம் திருச்சபையை வழிநடத்தும்; எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், கன்னியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் உம் நற்கருணை பிரசன்னத்திலே, உம் வார்த்தையிலே இணைந்திருந்து உம் திருச்சபையை சிறப்புற வழிநடத்தி செல்ல வேண்டுமென்று தயவாய் உம்மை மன்றாடுகிறோம்.

அன்புத் தந்தையே இறைவா!

கேட்காமலே தருகின்ற பெரிய மனதை எங்களுக்கு தர வேண்டுமென்றும், பெண்கள், அதிலும் சிறப்பாக நலமிழந்த, கணவன் என்ற உறவிழந்த பெண்கள், வயதில் முதிர்ந்த பெண்கள்... எல்லாரையும் நமது சமுதாயம் பேணிக்காக்க வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நானே ஆண்டவர்! கொல்லும் கொள்ளை நோய் எதுவும் உங்கள்மேல் வராது என்ற உன்னத வாக்குறுதியை எமக்களித்த தந்தையே!

இன்று அரசியல், பொருளாதார, சமூக விடுதலைக்காகவும்: கவலை, நோய், துன்பம் போன்றவற்றிலிருந்தும் விடுதலை பெறத் தவித்துக் கொண்டிருக்கும் அனைத்து மக்களும் நீர் கொடுக்கின்ற ஆறுதலைப் பெற்றுக் கொள்ளவும், இயற்கை, செயற்கை அழிவுகளிலிருந்து அவர்களைப் பாதுகாத்திடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஞானத்தின் ஊற்றே இறைவா!

எம் பங்கு மக்கள் அனைவரும் இறைஅன்பிலும, பிறர் அன்பிலும் நாளும் வளரவும், குடும்பங்களில் சமாதானம் நிலவிடவும், பிள்ளைகள் நன்கு படித்திடவும் தேவையான அருளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே!

பிரிவினைகளோடும், கசப்புணர்வுகளோடும், பழிவாங்கும் மனநிலையோடும், வேதனைகளோடும், விரக்தியோடும், கண்ணீரோடும் வாழும் கணவன் மனைவி அனைவர்மீதும் மனமிரங்கி அவர்களின் அன்பு தூய்மையானதாகவும், நிலையானதாகவும் இருக்கவும், அவர்கள் தாங்கள் பெற்றுக்கொண்ட அழைப்பிற்கேற்ப பிரமாணிக்கமாய் வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திடவேண்டுமென்று தயவாய் உம்மை மன்றாடுகின்றோம்.

கருணையின் தேவா!

எம் பங்கிலுள்ள இளைஞர்கள், இளம் பெண்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளை வீணடித்து விடாமல், எதிர்கால வாழ்வை திட்டமிட்டு செயல்படுத்திட தேவையான அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
இன்றைய சிந்தனை

''அக்கைம்பெண்ணைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவு கொண்டு, 'அழாதீர்' என்றார்'' (லூக்கா 7:17)

உலகத்தில் மக்கள் அனுபவிக்கின்ற துன்பங்கள் கணக்கிலடங்கா. பசியும் பட்டினியும், வறுமையும் ஏழ்மையும், நோயும் நோக்காடும், வீடின்மையும் கல்வியறிவின்மையும் என்று மனிதரை வாட்டி வதைக்கின்ற இழிநிலைகள் இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் பாரெங்கும் பரவியிருப்பது கவலையானதே. எத்தனையோ தேவைகள் இருக்கின்ற போது நம்மை அடுத்திருக்கின்ற மனிதரின் வேதனைகளை நாம் கண்டுகொள்ளாமல் போகின்ற ஆபத்து உள்ளது. உதவி கேட்டுப் பலர் வரும்போது நம் அருகிலிருப்பவருக்கு உதவி தேவை என்பதை நாம் மறந்துவிடக் கூடும். இயேசுவிடம் உதவி கேட்டு எத்தனையோ மனிதர் வந்தனர். கும்பல் கும்பலாக அவரைத் தேடிச் சென்றனர். தம்மை நெருக்கிய கூட்டத்தின் நடுவிலும் இயேசு ஓர் எளிய கைம்பெண்ணின் வேதனையைக் கவனிக்கத் தவறவில்லை. அப்பெண்ணின் ஒரே மகன் இறந்துவிட்டிருந்தார். கணவனும் இல்லை, மக்களும் இல்லை என்ற அவல நிலைக்குத் தள்ளப்பட்ட அப்பெண்ணைக் கண்டு இயேசு இரக்கம் கொள்கிறார். அவருடைய மகனுக்கு உயிர் அளிக்கிறார். இச்செயல் வழியாக இயேசுவின் வல்லமை விளங்கியது ஒருபுறமிருக்க, அவருடைய இரக்க மனப்பான்மையும் இளகிய மனதும் இங்கே தோன்றுவதையும் நாம் கவனிக்க வேண்டும்.

எத்தனையோ அலுவல்கள் நமக்கு இருந்தாலும் நம்மை அடுத்திருக்கின்ற ஒருவருடைய தேவையை உணர்ந்து அவருக்கு உதவிசெய்ய நாம் நேரம் ஒதுக்க வேண்டும். பல அலுவல்களில் ஈடுபட்டு சுறுசுறுப்பாக உழைப்பவர்களுக்கு மேன்மேலும் பொறுப்புக்கள் வந்து சேரும் என்பது அனுபவ உண்மை. அந்த வேளைகளிலும் பிறருடைய தேவைகளைக் கண்டு, அவர்கள் நம்மை அணுகுவதற்கு முன்னரே உதவி செய்ய முன்வருவது இயேசுவின் சீடருக்கு அழகு. தம் ஒரே மகனை இழந்த கைம்பெண் இயேசுவிடம் உதவி கேட்டுக் கைநீட்டவில்லை; ஆனாலும் இயேசு அவருடைய தேவையைத் தாமாகவே உணர்ந்து அவருக்கு உதவிசெய்ய முன்வந்தார். வள்ளுவரும் நட்புப் பற்றிப் பேசும் போது ''உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு'' என்று போற்றியுரைப்பார் (குறள் 788). நட்பையும் விஞ்சிச் செல்வது இயேசு நம்மிடம் எதிர்பார்க்கின்ற அன்பு. கடவுளின் பண்பே அன்புதானே!

மன்றாட்டு:

இறைவா, குறிப்பறிந்து உதவி செய்ய எங்களுக்கு நன்மனதைத் தந்தருளும்.