யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

திருவழிபாடு ஆண்டு - C
பொதுக்காலம் 7வது வாரம் சனிக்கிழமை
2013-05-25

புனித ஏழாம் கிறகோரி---திருத்தந்தை


முதல் வாசகம்

மனிதரின் வழிகளை ஆண்டவர் எப்போதும் அறிவார்; அவரின் பார்வையிலிருந்து அவை மறைந்திருப்பதில்லை.
சீராக் ஆகமம் 17;1-15

1 ஆண்டவர் மனிதரை மண்ணால் படைத்தார்; மீண்டும் அந்த மண்ணுக்கே திரும்புமாறு செய்கிறார். 2 அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலவரையை வகுத்தார்; மண்ணுலகில் உள்ளவற்றின்மீது அவர்களுக்கு அதிகாரம் அளித்தார். 3 தமக்கு உள்ளதைப்போன்ற வலிமையை அவர்களுக்கு வழங்கினார்; தமது சாயலாகவே அவர்களை உருவாக்கினார். 4 எல்லா உயிரினங்களும் மனிதருக்கு அஞ்சும்படி செய்தார்; விலங்குகள், பறவைகள்மீது அவர்களுக்கு அதிகாரம் அளித்தார். 5 (தம் ஐந்தறிவைப் பயன்படுத்தும் உரிமையை ஆண்டவர் அவர்களுக்கு அளித்தார்; ஆறாவதாகத் தம் அறிவுத்திறனில் பங்கு கொடுத்தார்; அந்த ஆறறிவையும் விளக்கும் பகுத்தறிவை ஏழாவது கொடையாக வழங்கினார்.) 6 விருப்புரிமை, நாக்கு, கண், காது ஆகியவற்றையும் சிந்திப்பதற்கு ஓர் உள்ளத்தையும் அவர்களுக்குக் கொடுத்தார். 7 அவர்களை அறிவாலும் கூர்மதியாலும் நிரப்பினார்; நன்மை தீமையையும் அவர்களுக்குக் காட்டினார். 8 அவர்களின் உள்ளத்தைப்பற்றி விழிப்பாய் இருந்தார்; தம் செயல்களின் மேன்மையைக் காட்டினார். 9 (தம் வியத்தகு செயல்கள் பற்றி என்றும் பெருமைப்படும் உரிமையை அவர்களுக்கு அளித்தார்.) 10 அவர்கள் அவரது திருப்பெயரைப் புகழ்வார்கள்; இவ்வாறு அவருடைய செயல்களின் மேன்மையைப் பறைசாற்றுவார்கள். 11 அறிவை அவர்களுக்கு வழங்கினார்; வாழ்வு அளிக்கும் திருச்சட்டத்தை அவர்களுக்கு உரிமையாக்கினார். 12 அவர்களுடன் முடிவில்லா உடன்படிக்கை செய்துகொண்டார்; தம் தீர்ப்புகளை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். 13 அவர்களின் கண்கள் அவருடைய மாட்சியைக் கண்டன; அவர்களின் செவிகள் அவரது மாட்சியின் குரலைக் கேட்டன. 14 "எல்லாவகைத் தீமைகள் குறித்தும் கவனமாய் இருங்கள்" என்று அவர் எச்சரித்தார்; அடுத்திருப்பவர்களைப் பற்றிய கட்டளைகளை அவர்கள் ஒவ்வொருவருக்கும் கொடுத்தார். 15 மனிதரின் வழிகளை ஆண்டவர் எப்போதும் அறிவார்; அவரின் பார்வையிலிருந்து அவை மறைந்திருப்பதில்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது இரங்குகிறார்.
திருப்பாடல்கள் 103;13-16,18

தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது இரங்குகிறார்.பல்லவி

14 அவர் நமது உருவத்தை அறிவார்; நாம் தூசி என்பது அவர் நினைவிலுள்ளது..15 மனிதரின் வாழ்நாள் புல்லைப் போன்றது; வயல்வெளிப் மலரென அவர்கள் மலர்கின்றார்கள்.பல்லவி

16 அதன்மீது காற்றடித்ததும் அது இல்லாமல் போகின்றது; அது இருந்த இடமே தெரியாமல் போகின்றது.18 அவருடைய உடன்படிக்கையைக் கடைப்பிடித்து அவரது கட்டளையின்படி நடப்பதில் கருத்தாய் இருப்போர்க்கு அது நிலைக்கும;


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! "சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு 10;13-16

அக் காலத்தில் யேசு சிறு பிள்ளைகளை இயேசு தொட வேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டுவந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர். 14 இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, "சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. 15 இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக் கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார். 16 பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

குழந்தைகளே இறையாட்சி

குழந்தை, ஆண்டவனின் படைப்பில் அற்புதமான படைப்பு. குழந்தைகள் கடவுள் நடந்து செல்லும் பாதச் சுவடுகள். உலகை இன்னும் உருள வைக்க இறைவன் அனுப்பி வைக்கும் உந்து விசை, குழந்தைகள்.ஆகவே குழந்தைகளுக்கு இயேசுவிடம் தனிப்பட்ட இடம் உண்டு. அவரே குழந்தையாகப் பிறந்தது இன்னும் அதிகமாக இவ்வுண்மைக்குச் சான்றாகக் காண்கிறோம்.இறையாட்சியை இக் குழந்தைகளுக்குச் சமமாக்குகிறார்.

சிறு பிள்ளைகள் தன்னிடம் வருவதைச் சீடர்கள் நல்ல எண்ணத்தோடு தடுத்தனர். களைத்த இயேசு கொஞ்சம் இளைப்பாரட்டும் என்ற எண்ணத்தில் தடுத்தனர். களைத்தபோதிலும் குழந்தைகளைச் கொஞ்சுவதில், அவர்களுக்காக நேரம் ஒதுக்குவதில் இயேசு தாராளமாக இருந்தார். நற்செய்தியில் இயேசு கோபம் கொண்டதாகச் சொல்லப்படும் ஒரே இடம் இதுதான். பிற இடங்களில் அவர் கோபங்கொண்டு செயல்பட்டதை நாம் அறிகிறோம். ஆனால் இங்கு மட்டும் அவர் கோபப்பட்டார் என்று சொல்வதன் மூலம் குழந்தைகள் மட்டில் அவருக்குள்ள ஆதங்கத்தின் உச்சத்தைக் காண்கிறோம்.

இன்று இத்தனை சிறப்புடைய குழந்தைகள் பிறப்பதற்குத் தடை. குழந்தைகளோடு பேசி, அன்பைப் பகிர்ந்து வாழ நேரம் இல்லை. குழந்தைகளுக்கு வாழ்க்கைச் சுமை.குழந்தைகள் பிறப்பதற்கும் வாழ்வதற்கும் வாய்ப்பை அதிகமாக்குங்கள். இந்த உலகம் இனிது வாழும். குழந்தைகள் இல்லாத உலகம் அழியும். குழந்தை இல்லாத குடும்பம் அழிவதை அறிவோம். குழந்தை இல்லாத வீட்டுக்கு விருந்தாளி போகக்கூடாது என்கிறார் வாழ்க்கையில் அனுபவித்த ஒருவர். குழந்தைகளின் சிரித்த முகத்தில் மகிழ்ந்து இனிது வாழ்வோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் அன்புப் பெருக்கை உணர்ந்து நாங்கள் வாழ்ந்திட அருள்தாரும்.