யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

திருவழிபாடு ஆண்டு - C
பொதுக்காலம் 7வது வாரம் வெள்ளிக்கிழமை
2013-05-24


முதல் வாசகம்

ஆண்டவருக்கு அஞ்சுவோரே முறையான நட்புப் பேணுவோர்
சீராக் ஆகமம் 6;5-17

5 இன்சொல் நண்பர் தொகையைப் பெருக்கும்; பண்பான பேச்சு உன் மதிப்பை உயர்த்தும். 6 அனைவரோடும் நட்புடன் பழகு; ஆனால் ஆயிரத்தில் ஒருவரே உனக்கு ஆலோசகராய் இருக்கட்டும். 7 ஆய்ந்து நட்புக்கொள்; நண்பரையும் விரைவில் நம்பிவிடாதே. 8 தன்னலம் தேடும் நண்பர்களும் உண்டு; அவர்கள் உன் நெருக்கடியான வேளையில் உன்னோடு இருக்கமாட்டார்கள். 9 பகைவர்களாய் மாறும் நண்பர்களும் உண்டு; அவர்கள் உங்கள் பிணக்கை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி, உனக்கு இழிவைக் கொண்டு வருவார்கள். 10 உன்னுடன் விருந்துண்ணும் நண்பர்களும் உண்டு; அவர்கள் உன் நெருக்கடியான வேளையில் உன்னோடு இருக்கமாட்டார்கள். 11 நீ நல்ல நிலையில் இருக்கும்போது, அவர்கள் உன் உயிருக்கு உயிரான நண்பர்களாய் இருப்பார்கள்; உன் பணியாளர்களை ஆட்டிப் படைப்பார்கள்; 12 நீ தாழ்ந்துவிட்டால் உனக்கு எதிராய் அவர்கள் மாறுவார்கள்; உன் முகத்தில் விழிக்கமாட்டார்கள். 13 உன் பகைவர்களிடமிருந்து விலகி நில்; உன் நண்பர்களிடம் எச்சரிக்கையாய் இரு. 14 நம்பிக்கைக்குரிய நண்பர்கள் பாதுகாப்பான புகலிடம் போன்றவர்கள்; இத்தகைய நண்பர்களைக் கண்டவர்கள் புதையலைக் கண்டவரைப் போன்றவர்கள். 15 நம்பிக்கைக்குரிய நண்பர்களுக்கு ஈடான செல்வம் எதுவுமில்லை; அவர்களது தகைமைக்கு அளவுகோல் இல்லை. 16 நம்பிக்கைக்குரிய நண்பர்கள் நலம் அளிக்கும் மருந்து போன்றவர்கள்; ஆண்டவருக்கு அஞ்சுவோரே இத்தகைய நண்பர்களைக் கண்டடைவர். 17 ஆண்டவருக்கு அஞ்சுவோரே முறையான நட்புப் பேணுவோர். அவர்களை அடுத்தவர்களும் அவர்களைப்போலவே இருப்பார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவரே, நீர் போற்றுதற்கு உரியவர்; எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பித்தருளும்
திருப்பாடல்கள் 119;12,16,1,27-34,35

ஆண்டவரே, நீர் போற்றுதற்கு உரியவர்; எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பித்தருளும் . உம் விதிமுறைகளில் நான் மகிழ்ச்சியுறுகின்றேன்; உம் வாக்குகளை நான் மறக்கமாட்டேன்.பல்லவி

உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என் கண்களைத் திறந்தருளும். 7 உம் நியமங்கள் காட்டும் வழியை என்றும் உணர்த்தியருளும்; உம் வியத்தகு செயல்கள்பற்றி நான் சிந்தனை செய்வேன்.பல்லவி

28 துயரத்தால் என் உள்ளம் கலக்க முற்றுள்ளது; உமது வாக்கின்படி என்னைத் திடப்படுத்தும். 29 பொய் வழியை என்னைவிட்டு விலக்கியருளும்; உமது திருச்சட்டத்தை எனக்குக் கற்றுத்தாரும்.பல்லவி

30 உண்மையின் பாதையை நான் தேர்ந்துகோண்டேன்; உம் நீதிநெறிகளை என் கண்முன் நிறுத்தியுள்ளேன். 31 உம் ஒழுங்குமுறைகளை நான் உறுதியாய்ப் பற்றிக்கொண்டுள்ளேன்; ஆண்டவரே! என்னை வெட்கமடையவிடாதேயும்.பல்லவி 32 நீர் என் அறிவை விரிவாக்கும்போது, உம் கட்டளைகள் காட்டும் வழியில் நான் விரைந்து செல்வேன். 33 ஆண்டவரே! உம் விதிமுறைகள் காட்டும் வழியை எனக்குக் கற்றுத்தாரும்; நான் அவற்றை இறுதிவரை கடைப்பிடிப்பேன்.பல்லவி

34 உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்கு மெய்யுணர்வுதாரும். அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன்.35 உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்; ஏனெனில், அதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்" என்றார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு 10;1-12

1 இயேசு அங்கிருந்து புறப்பட்டு யூதேயப் பகுதிகளுக்கும் யோர்தான் அக்கரைப் பகுதிக்கும் வந்தார். மீண்டும் மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவரும் வழக்கம் போல மீண்டும் அவர்களுக்குக் கற்பித்தார். 2 பரிசேயர் அவரை அணுகி, "கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?" என்று கேட்டு அவரைச் சோதித்தனர். 3 அவர் அவர்களிடம் மறுமொழியாக, "மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?" என்று கேட்டார். 4 அவர்கள், "மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்" என்று கூறினார்கள். 5 அதற்கு இயேசு அவரிகளிடம், "உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார். 6 படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள். "ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். 7 இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். 8 இருவரும் ஒரே உடலாய் இருப்பர். 'இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். 9 எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்" என்றார். 10 பின்னர் வீட்டில் இதைப் பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர். 11 இயேசு அவர்களை நோக்கி, "தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான். 12 தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்" என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''பரிசேயர் இயேசுவை அணுகி, 'கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?' என்று கேட்டு அவரைச் சோதித்தனர்'' (மாற்கு 10:2)

ஒரு பொருள் பற்றிப் பிறர் என்ன நினைக்கிறார்கள் என அறிய விரும்பும்போது நாம் அவர்களிடம் அப்பொருள் பற்றிக் கேள்வி கேட்கிறோம். ஆனால் கேள்விகள் பல விதம். சிலர் நேர்மையான உள்ளத்தோடு பிறருடைய கருத்தை அறியும் ஆவலோடு கேள்வி கேட்பார்கள். வேறு சிலரோ பிறரிடம் குற்றம் காண்கின்ற நோக்கத்தோடு கேள்வி கேட்பார்கள். இயேசுவிடம் கேள்வி கேட்டவர்கள் பலர் இருந்தார்கள். சிலர் நேர்மையான உள்ளத்தோடு அவரை அணுகியதுண்டு. ஆனால் வேறு சிலரோ ''இயேசுவைச் சோதிக்கும் எண்ணத்துடன்'' அவரிடம் கேள்வி கேட்டார்கள். மண விலக்குப் பற்றி இயேசுவிடம் கேட்கப்பட்ட கேள்வி இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்தது. எனவேதான் இயேசு தம்மிடம் கேள்வி கேட்ட பரிசேயரிடம் ஒரு மறு கேள்வியைக் கேட்கிறார்: ''மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?'' (மாற் 10:3). கணவன் மணவிலக்குச் சான்று எழுதி, தன் மனைவியை விலக்கிவிடலாம் என்று மோசே அனுமதி அளித்ததாக அவர்கள் பதிலிறுக்கிறார்கள் (மாற் 10:4). உண்மையில் மோசே மண விலக்குப் பற்றி எந்தவொரு ''கட்டளை''யும் கொடுக்கவில்லை. மாறாக, மண விலக்குச் செய்யும் கணவன் மீண்டும் அதே பெண்ணை மணமுடித்தல் ஆகாது என்பதே சட்டம்.

எவ்வாறிருந்தாலும், அக்காலத்தில் திருமண உறவு சீர்குலையத் தொடங்கியது என்பது மட்டும் தெரிகிறது. இயேசு வீண் வாதங்களில் ஈடுபடுவர் அல்ல. அதே நேரத்தில் அவர் திருமணம் பற்றி ''படைப்பின் தொடக்கத்திலேயே'' கடவுள் வழங்கிய சட்டத்தைத் தம் எதிரிகளுக்கு நினைவூட்டுகிறார். அதாவது, கடவுள் மனிதரை ஆணும் பெண்ணுமாகப் படைத்து, அவர்கள் திருமண உறவில் வாழ்நாள் முழுவதும் நிலைத்து நிற்க வேண்டும் எனவும், ''கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்கலாகாது'' எனவும் தொடக்கத்திலிருந்தே கட்டளை தந்துள்ளார் (காண்க: தொநூ 2:24; மாற் 10:6-9). இன்றைய உலகில் திருமண உறவு பல விதங்களில் முறிந்துவிடும் நிலையில் உள்ளது. கணவனும் மனைவியும் கடவுள் தங்கள் மீது காட்டுகின்ற அன்பின் அடிப்படையில் ஒருவர் ஒருவரை ஏற்கும்போது திருமண அன்பு நிலைத்துநிற்கும். மாறாக, தன்னலப் போக்கு குடும்பத்தின் உள்ளே நுழைந்துவிட்டால் குடும்ப உறவும் அதன் அடிப்படையான திருமண ஒன்றிப்பும் ஆபத்துக்கு உள்ளாகக் கூடும். ஆனால் கடவுளின் விருப்பம் யாதென இயேசு தெளிவாகக் கற்பிக்கிறார். கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்வோர் அனைவரும் திருமண மற்றும் குடும்ப உறவும் ஒற்றுமையும் இன்றைய உலகில் தழைத்தோங்க வேண்டும் என்னும் குறிக்கோளை அடைய உழைத்திட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் அன்புப் பெருக்கை உணர்ந்து நாங்கள் வாழ்ந்திட அருள்தாரும்.