யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

திருவழிபாடு ஆண்டு - C
பொதுக்காலம் 7வது வாரம் திங்கள்கிழமை
2013-05-20


முதல் வாசகம்

ஞானமெல்லாம் ஆண்டவரிடமிருந்து வருகின்றது; அது என்றும் அவரோடு இருக்கின்றது.
சீராக் ஆகமம்1;1-10

1 ஞானமெல்லாம் ஆண்டவரிடமிருந்து வருகின்றது; அது என்றும் அவரோடு இருக்கின்றது. 2 கடல் மணலையோ மழைத்துளியையோ முடிவில்லாக் காலத்தையோ யாரே கணக்கிடுவர்? 3 வான்வெளியின் உயரத்தையோ நிலவுலகின் அகலத்தையோ ஆழ்கடலையோ ஞானத்தையோ யாரே தேடிக் காண்பர்? 4 எல்லாவற்றுக்கும் முன்னர் ஞானமே உண்டாக்கப்பட்டது; கூர்மதி கொண்ட அறிவுத்திறன் என்றென்றும் உள்ளது. 5 (உயர்வானில் உள்ள கடவுளின் வாக்கே ஞானத்தின் ஊற்று; என்றுமுள கட்டளைகளே அதை அடையும் வழிகள்.) 6 ஞானத்தின் ஆணிவேர் யாருக்கு வெளியிடப்பட்டது? அதன் நுணுக்கங்களை அறிந்தவர் எவர்? 7 (ஞானத்தின் அறிவாற்றல் யாருக்குத் தெளிவாக்கப்பட்டது? அதன் பரந்த பட்டறிவைப் புரிந்துகொண்டவர் யார்?) 8 ஆண்டவரே ஒருவரே ஞானியாவார்; தம் அரியணையில் வீற்றிருக்கும் அவர் பெரிதும் அச்சத்திற்குரியவர். 9 அவரே ஞானத்தைப் படைத்தவர்; அதனைக் கண்டு கணக்கிட்டவர்; தம் வேலைப்பாடுகளையெல்லாம் அதனால் நிரப்பியர். 10 தம் ஈகைக்கு ஏற்ப எல்லா உயிர்களுக்கும் அவரே அதைக் கொடுத்துள்ளார்; தம்மீது அன்புகூர்வோருக்கு அதை வாரி வழங்கியுள்ளார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவரே! என்றென்றும் தூய்மையே உமது இல்லத்தை அழகு செய்யும்.
திருப்பாடல்கள் 93;1-2,5

1 ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்; ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார்; ப+வுலகை அவர் நிலையப்படுத்தினார்; அது அசைவுறாது பல்லவி.

2 உமது அரியணை தொடக்கத்திலிருந்தே நிலைபெற்றள்ளது; நீர் தொhன்றுதொட்டே நிலைத்துள்ளீர். பல்லவி

உம்முடைய ஒழுங்குமுறைகள் மிகவும் உறுதியானவை; ஆண்டவரே! என்றென்றும் தூய்மையே உமது இல்லத்தை அழகு செய்யும்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! "போதகரே. தீய ஆவி பிடித்துப் பேச்சிழந்த என் மகனை உம்மிடம் கொண்டு வந்தேன். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு 9;14-29

அக்காலத்தில்பேதுரு யாக்கோப்பு யோவான் ஆகிய மூவரும் மற்ற சீடரிடம் வந்தபொழுது, பெருந்திரளான மக்கள் அவர்களைச் சூழ்ந்திருப்பதையும் மறைநூல் அறிஞர் அவர்களுடன் வாதாடுவதையும் கண்டனர். 15 மக்கள் அனைவரும் இயேசுவைக் கண்ட உடனே மிக வியப்புற்று அவரிடம் ஓடிப்போய் அவரை வாழ்த்தினர். 16 அவர் அவர்களை நோக்கி, "நீங்கள் இவர்களோடு எதைப்பற்றி வாதாடுகிறீர்கள்?" என்று கேட்டார். 17 அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் அவரைப் பார்த்து, "போதகரே. தீய ஆவி பிடித்துப் பேச்சிழந்த என் மகனை உம்மிடம் கொண்டு வந்தேன். 18 அது அவனைப் பிடித்து அந்த இடத்திலேயே அவனைக் கீழே தள்ளுகிறது. அவன் வாயில் நுரை தள்ளிப் பற்களை நெரிக்கிறான்; உடம்பும் விறைத்துப்போகிறது. அதை ஓட்டிவிடும்படி நான் உம் சீடரிடம் கேட்டேன்; அவர்களால் இயலவில்லை" என்று கூறினார். 19 அதற்கு அவர் அவர்களிடம், "நம்பிக்கையற்ற தலைமுறையினரே. எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக்கொள்ள இயலும்? அவனை என்னிடம் கொண்டுவாருங்கள்" என்று கூறினார். 20 அவர்கள் அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவரைக் கண்டவுடன் அந்த ஆவி அவனுக்கு வலிப்பு உண்டாக்க, அவன் தரையில் விழுந்து புரண்டான்; வாயில் நுரை தள்ளியது. 21 அவர் அவனுடைய தந்தையைப் பார்த்து, "இது இவனுக்கு வந்து எவ்வளவு காலமாயிற்று?" என்று கேட்டார். அதற்கு அவர், "குழந்தைப் பருவத்திலிருந்து இது இருந்துவருகிறது. 22 இவனை ஒழித்துவிடத் தீயிலும் தண்ணீரிலும் பலமுறை அந்த ஆவி இவனைத் தள்ளியதுண்டு. உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவு கொண்டு எங்களுக்கு உதவி செய்யும்" என்றார். 23 இயேசு அவரை நோக்கி, "இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்" என்றார். 24 உடனே அச்சிறுவனின் தந்தை, "நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்" என்று கதறினார். 25 அப்போது மக்கள் கூட்டம் தம்மிடம் ஓடிவருவதை இயேசு கண்டு, அந்தத் தீய ஆவியை அதட்டி, "ஊமைச் செவிட்டு ஆவியே,உனக்குக் கட்டளையிடுகிறேன்; இவனை விட்டுப் போ; இனி இவனுள் நுழையாதே" என்றார். 26 அது அலறி அவனுக்கு மிகுந்த வலிப்பு உண்டாக்கி வெளியேறியது. அச்சிறுவன் செத்தவன் போலானான். ஆகவே அவர்களுள் பலர், "அவன் இறந்துவிட்டான்" என்றனர். 27 இயேசு அவன் கையைப் பிடித்துத் தூக்கிவிட்டார். அவனும் எழுந்தான். 28 அவர் வீட்டில் நுழைந்ததும் அவருடைய சீடர் அவரிடம் தனிமையாக வந்து, "அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை?" என்று கேட்டனர். 29 அதற்கு அவர், "இவ்வகைப் பேய் இறை வேண்டலினாலும் (நோன்பினாலும் ) அன்றி வேறு எதனாலும் வெளியேறாது" என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

"நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்"

"நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்" என்ற இயேசுவின் வார்த்தைகளை எந்த அளவுக்கு நாம் நம்புகிறோமோ அந்த அளவுக்கு ஆண்டவனின் ஆசீர் நமக்குக் கிடைக்கும். வாசகத்தில் பார்க்கிறோம், ஒரு கூட்டம் வாதிடுகிறது. படித்தவர்களும் விவரம் தெறிந்தவர்களும் இக்கூட்டத்தினர். வாதத்திலும் விவாதத்திலும் நேரத்தையும் காலத்தையும் கடத்தி யாரும் பலன்பெறாது செய்துவிடுவர்.நம் ஊர்களில் இதற்கென்றே விவரம் தெறிந்த சிலர் உண்டு.இத்தகையோர் மட்டில் கவனமாக இருக்கச் சொன்ன இயேசு அவர்களையும் இறை நம்பிக்கைக்கு அழைக்கிறார்.

பாமர மக்கள் இன்னொரு கூட்டம். இவர்கள் விவரம் தெறியாமல் எதற்கும் வாழ்த்துச் சொல்லும் கூட்டம். எதற்கும் ஆமாம் சொல்லி, கைதட்டி, காலில் விழுந்து கும்பிட்டு, அடுத்தவர்களுக்கு யாசகம் செய்ததில் தங்கள் வாழ்வை இழந்தவர்கள் இவர்கள். கோஷம் போட்டே தங்களை அழித்துக்கொண்டவர்கள் இவர்கள். இயேசு இவர்களின் வாழ்வைச் சுட்டிக்காட்டி இறைவனில் நம்பிக்கை கொண்டு வாழத் தூண்டுகிறார்.

மூன்றாம் குழுவினர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள். இவர்கள் இந் நம்பிக்கையில் தினமும் வளர்ச்சி பெற வேண்டும். கடவுள் நம்பிக்கை நம்மிடம் இருக்கிறது என்ற உணர்வில், பக்தியில் தினமும் செபிக்கவேண்டும். நோன்பிருக்க வேண்டும்.சீடர்களிடம் இறை நம்பிக்கை இருந்தது. ஆனால் போதுமான அளவு வளர்ச்சி பெறவில்லை. இறை நம்பிக்கையை வளர்க்கவில்லை. ஆகவே பேயை ஓட்ட முடியவில்லை. ஆகவே நாம் நம்புவோம். நம்பிக்கைய வளர்ப்போம். வளர்க்க செபிப்போம்.

மன்றாட்டு:

இறைவா, உம் தூய ஆவி எந்நாளும் எங்களோடு இருந்து எங்களை வழிநடத்துவதை உணர்ந்து நாங்கள் ஆறுதல் அடைந்திட அருள்தாரும்.