யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

திருவழிபாடு ஆண்டு - C
பாஸ்கா காலம் 7வது வாரம் வெள்ளிக்கிழமை
2013-05-17


முதல் வாசகம்

பவுல், பேரரசரே விசாரித்துத் தீர்ப்பு அளிக்கும் வரை தம்மைக் காவலில் வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 25;13-21

13 சில நாள்களுக்குப் பின் அகிரிப்பா அரசனும், பெர்னிக்கியுவும் பெஸ்தைச் சந்திக்கச் செசரியா வந்தனர். 14 அவர்கள் பல நாள்கள் அங்குத் தங்கியிருந்தபோது பெஸ்து பவுலுக்கு எதிரான வழக்கை அரசனிடம் எடுத்துக் கூறினார்; "பெலிக்சு கைதியாக விட்டுச் சென்ற ஒரு மனிதர் இங்கு இருக்கிறார். 15 நான் எருசலேமிலிருந்தபோது தலைமைக் குருக்களும், யூதரின் மூப்பர்களும் அவரைப்பற்றிய வழக்கை என்னிடம் தெரிவித்து அவருக்கு எதிராகத் தீர்ப்பளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள். 16 நான் அவர்களைப் பார்த்து, "குற்றம் சாட்டப்பட்டவர் எவரும் குற்றம் சாட்டியவர்க்கு முன் நின்று தம் மீது சுமத்தப்பட்ட குற்றத்தைப் பற்றி விளக்குவதற்கான வாய்பைப் பெற வேண்டும். அதற்குமுன் அவருக்குத் தீர்ப்பு அளிப்பது உரோமையரின் வழக்கமல்ல" என்று கூறினேன். 17 எனவே அவர்கள் இங்கே வந்தபோது, சற்றும் காலம் தாழ்த்தாமல் மறுநாளிலேயே நான் நடுவர் இருக்கையில் அமர்ந்து அவரை என்னிடம் கூட்டிக்கொண்டு வருமாறு ஆணை பிறப்பித்தேன். 18 குற்றம் சுமத்தியவர்கள் எழுந்து பேசியபோது நான் நினைத்திருந்த கொடிய குற்றம் எதுவும் அவர்மீது சுமத்தவில்லை. 19 அவர்கள் அவருக்கு எதிராகச் சொன்னதெல்லாம் தங்கள் சமயத்திலுள்ள சில கருத்து வேறுபாடுகளாகத்தான் இருந்தன. இறந்துபோன இயேசு என்னும் ஒருவரைப் பற்றியும் அவர்கள் பேசினார்கள். இந்த இயேசு உயிரோடு இருப்பதாக பவுல் சாதித்தார். 20 இக்கருத்துச்சிக்கல்களைப் பற்றிக் கேட்டதும் நான் குழம்பிப்போய், "நீர் எருசலேமுக்கு வருகிறீரா? அங்கு இவை பற்றி விசாரிக்கப்பட விரும்பகிறீரா?" எனக் கேட்டேன். 21 பவுல், பேரரசரே விசாரித்துத் தீர்ப்பு அளிக்கும் வரை தம்மைக் காவலில் வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆதலால் இவரைச் சீசரிடம் அனுப்பும்வரை காவலில் வைக்குமாறு ஆணை பிறப்பித்தேன்."

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு
திருப்பாடல்கள் 103;1-2,11-12,19-20

1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! பல்லவி

11 அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவுபோன்று உயர்ந்தது. மேற்கினின்று கிழக்கு எத்துணைத்; தொலைவிலுள்ளதோ; அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார் பல்லவி .

19 ஆண்டவர் தமது அரியணையை விண்ணகத்தில் நிலைநிறுத்தியுள்ளார்; அவரது அரசு அனைத்தின்மீதும் பரவியுள்ளது.20 அவர்தம் சொற்கேட்டு நடக்கும் வலிமைமிக்கோரே! ஆண்டவரின் தூதர்களே! அவரைப் போற்றுங்கள்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு சீமோன் பேதுருவிடம், "யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21;15-19

15 அவர்கள் உணவருந்தியபின் இயேசு சீமோன் பேதுருவிடம், "யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?" என்று கேட்டார். அவர் இயேசுவிடம், "ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!" என்றார். இயேசு அவரிடம், "என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்" என்றார். 16 இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், "யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?" என்று கேட்டார். அவர் இயேசுவிடம், "ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!" என்றார். இயேசு அவரிடம், "என் ஆடுகளை மேய்" என்றார். 17 மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், "யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?" என்று கேட்டார். "உனக்கு என்னிடம் அன்பு உண்டா?" என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், "ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?"" என்றார். இயேசு அவரிடம், ""என் ஆடுகளைப் பேணிவளர். 18 "நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடிவந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன் " 19 பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்ன பின் பேதுருவிடம், "என்னைப் பின் தொடர்" என்றார்..

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

'''இயேசு சீமோன் பேதுருவிடம், 'யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?' என்று கேட்டார். அவர் இயேசுவிடம், ''ஆம் ஆண்டவரேஇ எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!' என்றார்'' (யோவான் 21:15)

முன்னொரு நாள் பேதுரு இயேசுவை மும்முறை மறுதலித்திருந்தார் (காண்க: யோவா 18:15-18, 25-27). தம் தலைவரும் குருவுமான இயேசுவைப் படைப்பிரிவினர் கைதுசெய்து, தலைமைக் குரு முன் கொண்டுபோய் நிறுத்தி, கன்னத்தில் அறைந்து இழிவுபடுத்தியதைப் பேதுரு பார்த்தார். ஆனால் இயேசுவுக்கு ஆதரவாகப் பேச அவர் முன்வரவில்லை. தம் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என அவர் பயந்தார். எனவே, ''இயேசுவை யான் அறியேன்'' என்று கூறி மறுதலித்தார். இயேசுவோ சிலுவையில் அறையப்பட்டு, உயிர்துறந்து, சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்தார். பேதுருவுக்கும் பிற சீடர்களுக்கும் தோன்றி அவர்ளை நம்பிக்கையில் உறுதிப்படுத்தினார். அவ்வாறு தோன்றிய இயேசு பேதுருவிடம் மூன்று முறை கேட்ட கேள்வி இது: ''நீ இவர்களைவிட மிகுதியாக என்னை அன்புசெய்கிறாயா?'' (யோவா 21:15). மூன்று முறை இயேசுவை மறுத்த பேதுரு இப்போது மூன்று முறை, ''ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!'' எனப் பதிலிறுக்கின்றார் (யோவா 21:15). இயேசுவைக் கைவிட்ட பேதுரு இங்கே இயேசுவை அன்புசெய்வதாக உறுதிகூறுகிறார்.

பாவி என்னும் நிலையிலிருந்து புனித நிலைக்குப் பேதுரு மாறி வருவதை இங்கே காண்கின்றோம். தம் தலைவராகிய இயேசுவை இனிமேல் பேதுரு எவ்விதத் தயக்கமுமின்றிப் பின்செல்வார். ஏன், இயேசுவுக்காகத் தம் உயிரையே கையளிப்பார். இதையும் இயேசு பேதுருவுக்கு அறிவிக்கிறார். பேதுருவின் பொறுப்பில் தம் ஆடுகளையும் ஆட்டுக்குட்டிகளையும் ஒப்படைக்கிறார். உண்மையிலேயே பேதுரு ஒரு ''நல்ல ஆயராக'' செயல்பட்டுத் தம் உயிரையும் பலியாக்குவார். இயேசுவை நம்பி ஏற்ற சீடர் குழுவுக்குத் தலைவராக ஏற்படுத்தப்பட்ட பேதுருவின் வாழ்க்கையில் குற்றம் குறைகள் இருந்தன. இன்றும்கூட, திருச்சபைத் தலைவர்களிடத்தில் நாம் குறைகளைக் காண முடியும். ஆயினும் இயேசு குறையுள்ள மனிதரைத் தேர்ந்துகொண்டு தம் மக்களை வழிநடத்தும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைக்கின்றார். எனவே, திருச்சபைத் தலைவர்கள் தாழ்ச்சியுடையவர்களாக இருக்க வேண்டும். மக்களுடைய நலனுக்காகத் தியாகம் செய்ய முன்வரவேண்டும். அதே நேரத்தில் இயேசு தம் திருச்சபையை ஒருநாளும் கைவிட மாட்டார் என்னும் உறுதிப்பாடு நம்மிடம் இருக்க வேண்டும். மனிதரிடத்தில் குறையிருந்தாலும் கடவுள் வல்லமையோடு செயல்பட்டு நம்மை வழிநடத்துவார் என நாம் நம்புகிறோம்.

மன்றாட்டு:

இறைவா, உம்மை அன்புசெய்து உம் திருமகன் காட்டிய வழியில் நாங்கள் நடந்துசெல்ல எங்களுக்கு அருள்தாரும்.