யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

திருவழிபாடு ஆண்டு - C
பாஸ்கா காலம் 6வது வாரம் சனிக்கிழமை
2013-05-11


முதல் வாசகம்

இயேசுவைப்பற்றிய செய்தியைப் பிழையற அறிவித்தும் கற்பித்தும் வந்தார்
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 18;23-28

23பவுல் சிறிது காலம் செலவிட்டபின் அங்கிருந்து புறப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாகக் கலாத்தியா, பிரிகியா, பகுதிகள் வழியாகச் சென்று சீடர்கள் அனைவரையும் உறுதிப்படுத்தினார். 24 அலக்சாந்திரியாவில் பிறந்த அப்பொல்லோ எனும் பெயருடைய யூதர் ஒருவர் எபேசு வந்தடைந்தார். அவர் சொல்வன்மை மிக்கவர்; மறைநூல்களில் புலமை வாய்ந்தவர். 25 ஆண்டவரின் நெறிகளைக் கற்றறிந்தவர்; ஆhவம்மிக்க உள்ளத்தோடு இயேசுவைப்பற்றிய செய்தியைப் பிழையற அறிவித்தும் கற்பித்தும் வந்தார். ஆனால் அவர் யோவான் கொடுத்த திருமுழுக்கை மட்டுமே அறிந்திருந்தார். 26 அவர் தொழுகைக் கூடத்தில் துணிவுடன் பேசத் தொடங்கினார். அவர் பேசியதைக் கேட்ட பிரிஸ்கில்லாவும் அக்கில்லாவும் அவரை அழைத்துக் கொண்டுபோய், கடவுளின் நெறியைத் திட்டவட்டமாக விளக்கினார். 27 அவர் அக்காயாவுக்குப் போக விரும்பிய போது சகோதரர் சகோதரிகள் அவரை ஊக்கப்படுத்தி, அவரை ஏற்றுக்கொள்ளுமாறு சீடருக்குக் கடிதம் எழுதினார்கள். அவர் அங்கே சென்றபோது இறையருளால் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டிருந்தவர்களுக்குப் பெரிதும் துணையாய் இருந்தார். 28 ஏனெனில் அவர் வெளிப்படையாகவும் சிறப்பாகவும் யூதர்களிடம் வாதாடி, "இயேசுவே மெசியா" என மறைநூல்களின்மூலம் எடுத்துக்காட்டினார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்.
திருப்பாடல்கள் 47;1-2,7-9

1 மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். பல்லவி

2 ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே; பல்லவி

7 ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். கடவுள் பிறஇனத்தார் மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். பல்லவி

9 மக்களினங்களின் தலைவர்கள் ஆபிரகாமின் கடவுளுடைய மக்களோடு ஒன்றுகூடுவர்; ஏனெனில், மண்ணுலகின் மன்னர் அனைவரும் கடவுளின் கொற்றத்திற்கு உட்பட்டவர்; கடவுளே அனைத்திற்கும் மேலானவர்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கேளுங்கள்; பெற்றுக் கொள்வீர்கள். அப்போது உங்கள் மகிழ்ச்சியும் நிறைவடையும். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16;23-28

23 அந்நாளில் யேசுதம் சீடரை நோக்கி நீங்கள் என்னிடம் எதையும் கேட்கமாட்டீர்கள். நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை எல்லாம் அவர் உங்களுக்குத் தருவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 24 இதுவரை நீங்கள் என் பெயரால் எதையும் கேட்டதில்லை. கேளுங்கள்; பெற்றுக் கொள்வீர்கள். அப்போது உங்கள் மகிழ்ச்சியும் நிறைவடையும். 25 "நான் உங்களிடம் உருவகமாகவே பேசிவந்துள்ளேன். ஆனால் காலம் வருகிறது. அப்போது உருவகங்கள் வாயிலாய்ப் பேசாமல், தந்தையைப்பற்றி வெளிப்படையாய் எடுத்துரைப்பேன். 26 அந்நாளில் நீங்கள் என் பெயரால் வேண்டுவீர்கள். அப்போது "உங்களுக்காகத் தந்தையிடம் கேட்கிறேன்" என நான் சொல்லமாட்டேன். 27 ஏனெனில் தந்தையே உங்கள்மீது அன்பு கொண்டுள்ளார். நீங்கள் என்மீது அன்புகொண்டு, நான் கடவுளிடமிருந்து வந்தேன் என்று நம்புவதால்தான் தந்தையும் உங்கள் மீது அன்பு கொண்டுள்ளார். 28 நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது உலகைவிட்டுத் தந்தையிடம் செல்கிறேன். "

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''நான் உங்களை மீண்டும் காணும் பொழுது உங்கள் உள்ளம் மகிழ்ச்சி அடையும். உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது'' (யோவான் 16:22)

இயேசு தாம் துன்பங்கள் அனுபவித்து இறக்கப் போவதை முன்னறிவித்ததும் சீடர்கள் துயரத்திற்கு உள்ளானார்கள். ஆனால் அவர்களது துயரம் மகிழ்ச்சியாக மாறுகின்ற நேரம் வரும் என்பதை இயேசு முன்னறிவிக்கிறார். துன்பத்தையும் சாவையும் அனுபவித்தாலும் இயேசு சாவை வென்று உயிர்பெற்றெழுந்தார். அது சீடர்களுக்கு மகிழ்ச்சியைக் கொணர்ந்தது. தம் தலைவரும் ஆண்டவருமாகிய இயேசு தங்களோடு தொடர்ந்து தங்கியிருக்கிறார் என்னும் உணர்வு அவர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. இயேசு உயிர்வாழ்கின்றார் என்னும் உணர்விலிருந்த பிறக்கின்ற மகிழ்ச்சியை இயேசு ஓர் உவமையால் விளக்குகிறார். பேறுகால வேதனை அனுபவிக்கின்ற பெண் தனக்குப் பிறக்கப் போகின்ற குழந்தையின் வரவைக் கண்டு தன் துயரத்தை மறந்து மகிழ்ச்சியடைகிறார். அதுபோலவே சீடர்களும் இயேசுவின் சாவினால் துயரத்திற்கு உள்ளானாலும், புதிய முறையில் இயேசு தங்களோடு உயிர் வாழ்கின்றார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைவார்கள்.

இயேசுவின் உயிர்த்தெழுதலால் நமக்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சியை யாரும் நம்மிடமிருந்து நீக்கிவிட முடியாது (யோவா 16:22). அந்த மகிழ்ச்சி நம் உள்ளத்தை நிரப்பும். அதை யாரும் பறித்துவிட முடியாது. ஏனென்றால் அது கடவுள் நமக்கு இயேசு வழியாகத் தருகின்ற அன்புக் கொடை. உள்ளத்தின் ஆழத்தில் நாம் உணர்கின்ற அந்த மகிழ்ச்சியை ''உலகம்'' புரிந்துகொள்ளாது. ஆனால் கடவுளைத் தங்கள் உள்ளத்தில் ஏற்போர் அந்த மகிழ்ச்சியின் இனிமையைச் சுவைப்பார்கள். தாம் பெற்ற மகிழ்ச்சியை இயேசுவின் சீடர்கள் தம் சகோதர சகோதரிகளோடு பகிர்ந்துகொள்ள முன்வர வேண்டும். இயேசுவை நாம் நம்புவதே இந்த மகிழ்ச்சிக்கு ஒரே நிபந்தனை. அப்போது நம்மோடு தங்கியிருந்து நம்மை வழிநடத்துகின்ற இயேசு நமக்குத் தம் மகிழ்ச்சியையும் அமைதியையும் வழங்குவார். அதை யாரும் நம்மிடமிருந்து பறித்திட இயலாது.

மன்றாட்டு:

இறைவா, உம் மகிழ்ச்சியால் எங்கள் உள்ளங்களை நிரப்பியருளும்.