யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

திருவழிபாடு ஆண்டு - C
பாஸ்கா காலம் 5வது வாரம் வெள்ளிக்கிழமை
2013-05-03

புனித பிலிப்பு புனித யாக்கோப்பு


முதல் வாசகம்

நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே;
1கொரிந்தியர் 15:1-8

1 சகோதர சகோதரிகளே, உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த விழைகிறேன். அதை நீங்களும் ஏற்றுக் கொண்டீர்கள்; அதிலே நிலைத்தும் நிற்கிறீர்கள். 2 நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்; இல்லையேல் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பொருளற்றதே. 3 நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே; மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, 4 அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார். 5 பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார். 6 பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்; சிலர் இறந்து விட்டனர். 7 பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார். 8 எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

படைப்புக்களின்ன அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்ற
திருப்பாடல்கள் 19:2-5

2 ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது. பல்லவி

3 அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை பல்லவி .

4 ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார் பல்லவி .

5 மணவறையிலிருந்து புறப்படும் மணமகனைப் போல அது வருகின்றது; பந்தயத்தில் ஓடும் வீரரைப்போல் அது தன் பாதையில் ஓடுகின்றது.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார்என்கிறார் ஆண்டவர். . அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14;6-14

இயேசு அவரிடம், "வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. 7 "நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிருக்கிறீர்கள்" என்றார். 8 அப்போது பிலிப்பு, அவரிடம், "ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்" என்றார். 9 இயேசு அவரிடம் கூறியது; "பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, "தந்தையை எங்களுக்குக் காட்டும்" என்று நீ எப்படிக் கேட்கலாம்? 10 நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே. 11 நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால் என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள். 12 நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 13 நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன். இவ்வாறு தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார். 14 நீங்கள் என் பெயரால் எதை கேட்டாலும் செய்வேன்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

'''மீண்டும் இயேசு, 'நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்' என்றார்'' (யோவான் 14:6)

இயேசு ம் சீடர்களோடு இறுதி முறையாக உணவருந்துகிறார். யூதாசு இயேசுவைக் காட்டிக்கொடுக்கப் போவதை இயேசு முன்னறிவிக்கிறார். அதுபோல, பேதுரு கூடத் தம்மை மறுதலிக்கப்போகிறார் என இயேசு கூறுகிறார். இதையெல்லாம் கேட்டதும் சீடர்களின் உள்ளத்தில் ஒரே கலக்கம். தங்கள் குருவும் தலைவருமாகிய இயேசு ஏன் இவ்வாறு பேசுகிறார் என அவர்கள் திகைக்கின்றனர். அப்போது இயேசு அவர்களுக்கு ஆறுதல் மொழி கூறுகிறார்: ''நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்'' (யோவா 14:1). சீடர்கள் கவலையை விட்டொழித்து, கடவுளிடத்தில் தங்கள் நம்பிக்கையை வைக்கவேண்டும். கடவுளால் அனுப்பப்பட்டு இவ்வுலகிற்கு வந்த இயேசுவிடம் நம்பிக்கை கொள்ள வேண்டும்

இதுவே இயேசு அவர்களிடமிருந்து எதிர்பார்த்த பதில். இவ்வாறு சீடர்கள் கடவுளையும் இயேசுவையும் நம்பி ஏற்பதாக இருந்தால் அவர்களுக்குக் கடவுளோடு எந்நாளும் நிலைத்து வாழ்கின்ற பேறு கிடைக்கும். இதைக் குறிப்பிட்டே இயேசு, ''என் தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன'' என்றும், ''நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்'' என்றும் கூறுகிறார் (காண்க: யோவா 14:2,3). -- ''தந்தை வாழும் இடம் (இல்லம்)'' என இயேசு எருசலேம் கோவிலை முன்னொரு நாள் குறிப்பிட்டிருந்தார் (காண்க: யோவா 2:16). அந்த இல்லம் இடிபட்டு விழுந்தாலும் அதை மீண்டும் கட்டி எழுப்புவதாக இயேசு கூறியிருந்தார். ''இயேசு தம் உடலாகிய கோவிலைப் பற்றியே பேசினார்'' (யோவா 2:21) என யோவான் குறிப்பிடுகிறார். எனவே, இயேசுவே தந்தை வாழும் இடம் (கோவில்) என்பது தெளிவாகிறது. இவ்வாறு, கடவுளின் இல்லமாக இயேசுவே நம்மிடையே இருப்பதால் இயேசுவின் சீடர்கள் அவரிடத்தில் உறைவிடம் பெறுவார்கள். இயேசு தம்மை நம்புவோருக்குத் தம் வாழ்வில் பங்களிப்பார். அவர்கள் இயேசுவோடு இணைந்திருப்பர். இயேசுவே கடவுளின் இல்லமாக இருப்பதால் அவர்கள் தந்தையோடும் இயேசுவோடும் அன்புறவில் பிணைந்திருப்பர். இவ்வாறு கடவுளின் அன்பில் நிலைத்திருப்போருக்கு இயேசு நிலைவாழ்வை வாக்களிக்கிறார். அந்த வாழ்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் நாம் இயேசுவிடத்தில் நம்பிக்கை கொள்ளவேண்டும். இயேசுவை வழியாகக் கொண்டு, அவர் அறிவிக்கின்ற உண்மையை நம் வாழ்வில் ஏற்றுச் செயல்பட்டால் நிலைவாழ்வைக் கண்டடைவோம். இயேசு கூறுகிறார்: ''வழியும் உண்மையும் வாழ்வும் நானே'' (யோவா 14:6)

மன்றாட்டு:

இறைவா, நிலைவாழ்வுக்கு வழியான இயேசுவை நாங்கள் பின்சென்றிட அருள்தாரும்.