யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

திருவழிபாடு ஆண்டு - C
பாஸ்கா காலம் 5வது வாரம் திங்கட்கிழமை
2013-04-29


முதல் வாசகம்

"நீர் எழுந்து காலூன்னறி நேராக நில்லும்" என்றார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்14:5-18

5 பிற இனத்தாரும் யூதரும் தம் தலைவர்களுடன் சோந்து திருத்தூதரை இழிவுபடுத்தி, கல்லால் எறியத் திட்டமிட்;டனர். 6 இதை அவர்கள் அறிந்து லிக்கவோனியாவிலுள்ள நகரங்களான லிஸ்திராவுக்கும் தெருபைக்கும் அவற்றின் சுற்றுப்புறங்களுக்கும் தப்பிச் சென்றார்கள். 7 அங்கெல்லாம் அவர்கள் நற்செய்தியை அறிவித்தார்கள். 8 லிஸ்திராவில் கால் வழங்காத ஒருவர் இருந்தார். பிறவிலேயே கால் ஊனமுற்றிருந்த அவர் ஒருபோதும் நடந்ததில்லை. அவர் அமர்ந்து 9 பவுல் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் நலம் பெறுவதற்கான நம்பிக்கை இருப்பதைக் கண்டு பவுல் அவரை உற்றுப்பார்த்து 10 உரத்த குரலில், "நீர் எழுந்து காலூன்னறி நேராக நில்லும்" என்றார். அவர் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினார். 11 பவுல் செய்ததைக் கூட்டத்தினர் கண்டு லிக்கவோனிய மொழியில், "தெய்வங்கள் மனித உருவில் நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன" என்று குரலெழுப்பிக் கூறினர். 12 அவர்கள் பர்னபாவைச் "சேயுசு" என்றும், அங்குப் பவுலே பேசியபடியால் அவரை "எர்மசு" என்றும் அழைத்தார்கள். 13 நகருக்கு எதிரிலுள்ள சேயுசு கோவில் அர்ச்சகர் காளைகளையும் பூமாலைகளையும் கோவில் வாயிலுக்குக் கொண்டு வந்து கூட்டத்தினருடன் சோந்து பலியிட விரும்பினார். 14 இதைக் கேள்வியுற்ற திருத்தூதர் பர்னபாவும் பவுலும் தங்கள் மேலுடைகளைக் கிழித்துக்கொண்டு கூட்டத்துக்குள் பாய்ந்து சென்று உரக்கக் கூறியது; 15 "மனிதர்களே, ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப் போன்ற மனிதர்கள்தாம்; நீங்கள் இந்தப் பயனற்ற பொருள்களை விட்டுவிட்டு, விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள அனைத்தையும் உண்டாக்கிய வாழும் கடவுளிடம் திரும்புங்கள் என்ற நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறோம். 16 கடந்த காலங்களில் அவர் அனைத்து மக்களினங்களையும் அவரவர் வழிகளில் நடக்கும்படி விட்டியிருந்தார்; 17 என்றாலும் அவர் தம்மைப் பற்றிய சான்று எதுவும் இல்லாதவாறு விட்டுவிடவில்லை. ஏனெனில் அவர் நன்மைகள் பல செய்கிறார்; வானிலிருந்து உங்களுக்கு மழையைக் கொடுக்கிறார்; வளமிக்க பருவ காலங்களைத் தருகிறார்; நிறைவாக உணவளித்து உங்கள் உள்ளங்களை மகிழ்ச்சி பொங்கச் செய்கிறார்." 18 இவற்றை அவர்கள் சொன்னபின்பு கூட்டத்தினர் தங்களுக்குப் பலியிடுவதை ஒருவாறு தடுக்க முடிந்தது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்


திருப்பாடல்கள்115:1-4,15=16

1 எங்களுக்கன்று, ஆண்டவரே! எங்களுக்கன்று; மாட்சியை உம் பெயருக்கே உரித்தாக்கும்; உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு அதை உமக்கே உரியதாக்கும்.
2'அவர்களுடைய கடவுள் எங்கே' எனப் பிற இனத்தார் வினவுவது ஏன்? 3 நம் கடவுளோ விண்ணுலகில் உள்ளார்; தம் திருவுளப்படி அனைத்தையும்; செய்கின்றார்.
4 அவர்களுடைய தெய்வச்சிலைகள் வெறும் வெள்ளியும் பொன்னுமே, வெறும் மனிதக் கைவேலையே!15 நீங்கள் ஆண்டவரிடமிருந்து ஆசி பெறுவீர்களாக! விண்ணையும் மண்ணையும் உருவாக்கியவர் அவரே.
16 விண்ணகமோ ஆண்டவருக்கு உரியது; மண்ணகத்தையோ அவர் மானிடர்க்கு வழங்கியுள்ளார்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! அல்லேலூயா, அல்லேலூயா என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லையாஎன்கிறார் ஆண்டவர். அல்லேலூயா. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14:21-26

21 என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார். என்மீது அன்பு கொள்பவர்மீது தந்தையும் அன்பு கொள்வார். நானும் அவர் மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன். " 22 யூதா - இஸ்காரியோத்து யூதாசு அல்ல, மற்றவர் - அவரிடம், "ஆண்டவரே, நீர் உம்மை உலகிற்கு வெளிப்படுத்தாமல் எங்களுக்கு வெளிப்படுத்தப் போவதாகச் சொல்கிறீரே, ஏன்?" என்று கேட்டார். 23 அதற்கு இயேசு பின்வருமாறு கூறினார்; "என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். 24 என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை. 25 உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன். 26 என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவா

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்'' (யோவான் 14:26)

இயேசு தம் சீடர்களுக்கு இறுதி அறிவுரை வழங்கும்போது, ''மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு தந்தையிடம் கேட்பேன்'' (யோவா 14:16) என்கிறார். அந்தத் துணையாளர்தாம் தூய ஆவியார். ''துணையாளர்'' என இங்கே குறிப்பிடப்படுகின்ற சொல்லுக்கு இரு பொருள்கள் உண்டு. எபிரேய மரபில் இதற்குத் ''தேற்றுகிறவர்'', ''ஆறுதல் அளிப்பவர்'' என்பது பொருள். இஸ்ரயேல் மக்களுக்குக் கடவுள் ஆறுதல் அளித்தார். அவர்களுடைய துன்பங்களில் அவரே மக்களைத் தேற்றினார். கடவுளின் ஆதரவும் தேற்றுதலும் மக்களுக்கு நிறைவாகக் கிடைத்ததை எசாயா விரிவாக விளக்குகிறார் (காண்க: எசாயா, அதி. 40-55). சிமியோன் இஸ்ரயேலுக்கு அளிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தார் (லூக் 2:25). இயேசு மக்களுக்கு நற்செய்தி அறிவித்து அவர்களுடைய துன்பங்களிலிருந்து விடுதலை அளித்து, ஆறுதல் வழங்கிட வருகின்றார் (லூக் 4:18-19). இயேசுவின் சீடர்கள் அவர் புரிந்த ஆறுதலளிக்கும் பணியைத் தொடர்ந்தார்கள். ''ஆறுதல் அனைத்திற்கும் ஊற்றாகிய கடவுள்'' தம்முடைய ஆறுதலைத் திருத்தூதர்களின் பணி வழியாக மக்களோடு பகிர்ந்துகொள்கிறார். தூய பவுல் இக்கருத்தை அழகாக விளக்குகிறார் (காண்க: 2 கொரி 1:3-7).

துணையாளர் என்னும் சொல்லுக்கு மற்றொரு பொருள் உரோமைப் பின்னணியிலிருந்து பெறப்படுகிறது. இதற்குப் ''பரிந்துபேசுபவர்'', ''சார்பாக வாதாடுபவர்'', அருகிருந்து ''உதவி செய்பவர்'' என்னும் பொருள் உண்டு. இயேசு இறையாட்சிப் பணியை ஆற்றியபோது தாம் புரிந்த செயல்களுக்குக் கடவுள் சாட்சி என்றார்; திருமுழுக்கு யோவானும் இயேசு பற்றிச் சான்றுபகர்ந்தார்; மறைநூலில் எழுதப்பட்டவையும் இயேசுவுக்குச் சான்றாக அமைந்தன. தம் சீடர்கள் தம் பணியைத் தொடரும்போது அவர்களுக்கு இன்னல்கள் ஏற்படும் என்பதை இயேசு முன்னறிவித்தார். அவர்களுக்கு எதிராகக் குற்றம் சாட்டப்படும்போது அவர்களுக்காகப் பரிந்து பேசத் தூய ஆவி துணையாவார் எனவும் இயேசு அறிவிக்கிறார் (காண்க: மாற் 13:9-13; லூக் 12:11-12). இயேசு தந்தையிடம் நமக்காகப் பரிந்துபேசிப் பெற்றுத் தருகின்ற தூய ஆவி திருச்சபையோடு என்றும் தங்கியிருந்து நமக்கு அனைத்தையும் கற்றுத் தருவார். அவர் நம் உள்ளங்களில் எழுப்புகின்ற நல்ல சிந்தனைகள் நம் வாழ்வுக்குத் துணையாகும். கடவுளின் ஆவியே நமக்குச் சார்பாக இருக்கும்போது நாம் எந்தச் சக்திக்கும் அஞ்சவேண்டியதில்லை என இயேசு நமக்குக் கற்பிக்கிறார்.

மன்றாட்டு:

இறைவா, உம் தூய ஆவி எந்நாளும் எங்களோடு இருந்து எங்களை வழிநடத்துவதை உணர்ந்து நாங்கள் ஆறுதல் அடைந்திட அருள்தாரும்.