யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்கா காலம் 3வது வாரம் திங்கள்கிழமை
2013-04-15

புனித ஆன்சலம்


முதல் வாசகம்

``இவன் மோசேக்கும் கடவுளுக்கும் எதிராகப் பழிச்சொற்கள் சொன்னதை நாங்கள் கேட்டிருக்கிறோம்''
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 6: 8-15

அந்நாள்களில் ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராய் மக்களிடையே பெரும் அருஞ்செயல்களையும் அரும் அடையாளங்களையும் செய்து வந்தார். அப்பொழுது உரிமையடைந்தோர் எனப்படுவோரின் தொழுகைக் கூடத்தைச் சேர்ந்த சிலரும் சிரேன், அலக்சாந்திரியா நகரினரும் சிலிசியா, ஆசியா மாநிலத்தவரும் ஸ்தேவானோடு வாதாடத் தொடங்கினர். ஆனால் அவரது ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தை களையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை. பின்பு அவர்கள், ``இவன் மோசேக்கும் கடவுளுக்கும் எதிராகப் பழிச்சொற்கள் சொன்னதை நாங்கள் கேட்டிருக்கிறோம்'' என்று கூறச் சிலரைத் தூண்டிவிட்டனர். அவ்வாறே அவர்கள் மக்களையும் மூப்பர்களையும் மறைநூல் அறிஞர்களையும் அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழச் செய்தார்கள். உடனே அவர்கள் எழுந்துவந்து அவரைப் பிடித்துத் தலைமைச் சங்கத்துக்கு இழுத்துச் சென்றார்கள்; மேலும் பொய்ச் சாட்சிகளைக் கொண்டுவந்து நிறுத்தினார்கள். அவர்கள், ``இந்த மனிதன் இத்தூய இடத்தையும் திருச்சட்டத்தையும் எதிர்த்து ஓயாமல் பேசிவருகிறான்'' என்று கூறினார்கள். மேலும் அவர்கள், ``நசரேயராகிய இயேசு இந்த இடத்தை அழித்துவிடுவார் என்றும், மோசே நமக்குக் கொடுத்திருக்கிற முறைமைகளை மாற்றிவிடுவார் என்றும் இவன் கூறக் கேட்டோம்'' என்றார்கள். தலைமைச் சங்கத்தில் அமர்ந்திருந்த அனைவரும் அவரை உற்றுப்பார்த்தபோது அவரது முகம் வானதூதரின் முகம்போல் இருக்கக் கண்டனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.
திருப்பாடல்கள் 119: 23-24. 26-27. 29-30

23 தலைவர்கள் ஒன்றுகூடி எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தாலும், உம் ஊழியன் உம்முடைய விதிமுறைகளைக் குறித்தே சிந்திக்கின்றேன். 24 ஏனெனில், உம் ஒழுங்குமுறைகள் எனக்கு இன்பம் தருகின்றன; அவையே எனக்கு அறிவுரையாளர். -பல்லவி

26 என் வழிமுறைகளை உமக்கு எடுத்துச் சொன்னேன்; நீர் என் மன்றாட்டைக் கேட்டருளினீர்; உம் விதிமுறைகளை எனக்குக் கற்றுத்தாரும். 27 உம் நியமங்கள் காட்டும் வழியை என்றும் உணர்த்தியருளும்; உம் வியத்தகு செயல்கள்பற்றி நான் சிந்தனை செய்வேன். -பல்லவி

29 பொய் வழியை என்னைவிட்டு விலக்கியருளும்; உமது திருச்சட்டத்தை எனக்குக் கற்றுத்தாரும். 30 உண்மையின் பாதையை நான் தேர்ந்துகொண்டேன்; உம் நீதிநெறிகளை என் கண்முன் நிறுத்தியுள்ளேன். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6:22-2

22 சீடர்கள் புறப்பட்ட கரையிலேயே மறு நாளும் மக்கள் கூட்டமாய் நின்று கொண்டிருந்தார்கள். முந்தின நாள் ஒரு படகைத்தவிர வேறு படகு எதுவும் அங்கு இல்லை என்பதையும் அதில் இயேசுவின் சீடர்கள் மட்டும் போனார்களே அன்றி இயேசு அவர்களோடு அப்படகில் ஏறவில்லை என்பதையும் அவர்கள் கண்கூடாகப் பார்த்திருந்தார்கள். 23 அப்போது, ஆண்டவர் கடவுளுக்கு நன்றி செலுத்திக் கொடுத்த உணவை மக்கள் உண்ட இடத்திற்கு அருகில் திபேரியாவிலிருந்து படகுகள் வந்து சேர்ந்தன. 24 இயேசுவும் அவருடைய சீடரும் அங்கு இல்லை என்பதைக் கண்ட மக்கள் கூட்டமாய் அப்படகுகளில் ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர். 25 அங்கு கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, "ரபி, எப்போது இங்கு வந்தீர்?" என்ற கேட்டார்கள். 26 இயேசு மறுமொழியாக, "நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 27 அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்" என்றார். 28 அவர்கள் அவரை நோக்கி, "எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்கள். 29 இயேசு அவர்களைப் பார்த்து, "கடவுள் அனுப்பியவரை நம்பவதே கடவுளுக்கேற்ற செயல்;"" என்றார்

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

"நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்"

எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் போய், எண்சாண் உடம்புக்கு வயிரே பிரதானம் என்ற கேவலமான நிலைமை இப்பொழுது ஏற்பட்டுள்ளது. எல்லாம் இந்த வயிற்றுக்குத்தான் இந்த பாடு படவேண்டி இருக்கு என்று சர்வ சாதாரணமாக சொல்லுவதைக் கேட்டிருக்கிறோம். இந்த அளவுக்கு உணவுக்காக மட்டுமே இன்றைய மனிதன் உழைக்கிறான். உறவை வைத்துக்கொள்கிறான். வாழ்கையை அமைத்துக் கொள்கிறான். உண்பதற்காக வாழும் மனிதர் இவர்களால் யாருக்கு என்ன பயன்? இவர்கள் தம் வாழ்வில் சாதிப்பது என்ன? இவர்கள் நடை பிணங்கள். இவர்கள் வாழ்வதும் இறப்பதும் ஒன்றுதான். இதற்கு மாறாக, அழியாத உணவுக்காக உழைத்தால் நிலை வாழ்வு நமக்குக் கிடைக்கும். இதனால் பலருக்கும் பயன். நமக்கும் ஒரு நிறைவு. இது ஒரு சாதனை. அப்படியானால், அது என்ன அழியாத உணவு? லூக் 22:15 ல் குறிப்பிடும் பாஸ்கா விருந்தின் அப்பமும் கிண்ணமும், அவை உணர்த்தும் தியாகம்,பாடுகள், மரணம், உயர்ப்பு இவைகளே அந்த அழியாத உணவு. இது ஒரு துன்பக் கிண்ணம்.இந்த துன்பக் கிண்ணத்தில் பருக வேண்டும். இந்த உணவுக்காக உழைக்க வேண்டும். இந்த உணவை உண்ண வேண்டும். இதுவே வாழ்வில் ஒரு நிறைவையும் நிம்மதியையும் உங்களுக்கும் அனைவருக்கும் தரவல்லது. இந்த உணவை முழுமையாக உண்டவர் உழைத்தவர் இயேசு ஒருவரே. உண்மைக்கும் நீதிக்கும் சான்று பகர்ந்து வாழும் நல்லவர்கள் யாவரும் இயேசுவைப்போல இந்த அழியாத உணவுக்காக உழைப்போர். அவர்கள் இறந்தாலும் வாழ்வர். இறந்தாலும் அவர்கள் பெயர் நிலைத்திருக்கும். ஒரு கப் டிPக்காக, கிடைக்கும் சில லட்சம் ரூயஅp;பாய்க்காக விலை போய்விடாமல், சில வருட பதவிக்காக மானமிழந்து போகாமல் நிலையான நிம்மதியான நிறைவான வாழ்வு தரும் வாழ்க்கை வாழ்வோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனின் குரலுக்கு எப்போதும் செவிமடுக்க எங்களுக்கு அருள்தாரும்.