யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்க்கா காலம் 2வது வாரம் வியாழக்கிழமை
2013-04-11


முதல் வாசகம்

நீங்கள் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்ற இயேசுவை நம் மூதாதையரின் கடவுள் உயிர்த்தெழச் செய்தார்.
திருத்தூதர்பணி நூலிலிருந்து வாசகம் 5:27-33

27 அழைத்து வந்தவர்களை அவர்கள் யூதத் தலைமைச் சங்கத்தின்முன் நிறுத்தினார்கள். தலைமைக் குரு அவர்களை நோக்கி, 28 "நீங்கள் இந்த இயேசு பற்றிக் கற்பிக்கக் கூடாது என்று நாங்கள் கண்டிப்பாய்க் கட்டளையிடவில்லையா? என்றாலும் எருசலேம் முழுவதும் நீங்கள் கற்பித்து வருகிறீர்கள். மேலும் இந்த மனிதருடைய இரத்தப் பழியையும் எங்கள்மீது சுமத்தப் பார்க்கிறீர்களே!" என்றார். 29 அதற்குப் பேதுருவும் திருத்தூதரும் மறுமொழியாக, "மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்? 30 நீங்கள் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்ற இயேசுவை நம் மூதாதையரின் கடவுள் உயிர்த்தெழச் செய்தார். 31 இஸ்ரயேல் மக்களுக்கு மனம் மாற்றத்தையும் பாவமன்னிப்பையும் அளிப்பதற்காகக் கடவுள் அவரைத் தலைவராகவும் மீட்பராகவும் தமது வலப்பக்கத்துக்கு உயர்த்தினார். 32 இவற்றுக்கு நாங்களும் கடவுள் தமக்குக் கீழ்ப்படிவோருக்கு அருளும் தூய ஆவியும் சாட்சிகள்" என்றனர். 33 இவற்றைக் கேட்ட தலைமைச் சங்கத்தார் கொதித்தெழுந்து, திருத்தூதர்களைக் கொல்லத் திட்டமிட்டனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்
திருப்பாடல்கள் 34:2,9:17-20

2 நான் ஆண்டவரைப்பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். 9 ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது.

17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். 18 உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். 19 நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல; அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார். 20 அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்; அவற்றுள் ஒன்றும் முறிபடாது.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தை மகன் மேல் அன்பு கூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3:31-36

31 மேலிருந்து வருபவர், அனைவரையும்விட மேலானவர். மண்ணுலகிலிருந்து உண்டானவர் மண்ணுலகைச் சேர்ந்தவர். மண்ணுலகு சார்ந்தவை பற்றியே அவர் பேசுகிறார். விண்ணுலகிலிருந்து வருபவர், அனைவருக்கும் மேலானவர். 32 தாம் கண்டதையும் கேட்டதையும்பற்றியே அவர் சான்று பகர்கிறார். எனினும் அவர் தரும் சான்றை எவரும் ஏற்றுக்கொள்வதில்லை. 33 அவர் தரும் சான்றை ஏற்றுக் கொள்பவர் கடவுள் உண்மையானவர் என்பதை உறுதிப்படுத்துகிறார். 34 கடவுளால் அனுப்பப் பெற்றவர் கடவுளின் வார்த்தைகளைப் பேசுகிறார். கடவுள் அவருக்குத் தம் ஆவிக்குரிய கொடைகளை அளவின்றிக் கொடுக்கிறார். 35 தந்தை மகன் மேல் அன்பு கூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார். 36 மகனிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர். நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார். மாறாகக் கடவுளின் சினம் அவர்கள்மேல் வந்து சேரும்

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''தந்தை மகன் மேல் அன்பு கூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார்'' (யோவான் 3:35)

இயேசு கடவுளைத் தம் தந்தை என அழைத்தார். இவ்வுலக உறவுகளில் தந்தை (தாய்) - பிள்ளை உறவு தனித்தன்மை வாய்ந்தது. பெற்றோர் தம் பிள்ளைக்குக் கடவுளின் துணையோடு உயிர்கொடுக்கின்றனர். பிள்ளை தன் பெற்றோரைச் சார்ந்து வாழ்கிறது; பெற்றோரின் அன்பில் திளைக்கிறது; பெற்றோரின் துணையோடு வாழ்வில் வளம் பெறுகிறது. இயேசு கடவுளைத் தம் தந்தை என அழைத்தபோது இவ்வுலகில் நாம் தந்தை-பிள்ளை உறவு பற்றி அறிகின்ற, பெறுகின்ற அனுபத்தை வெளிப்படுத்துகிறார் என்பதில் ஐயமில்லை. எனினும், இயேசுவுக்கும் கடவுளுக்கும் இடையே நிலவுகின்ற உறவு மனித உறவுகளை விஞ்சியது. மனித அறிவால் அந்த உறவை முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாது. ஏனென்றால் கடவுளின் உள்தன்மையை நேரடியாக அனுபவித்து அறிகின்ற ஆற்றல் மனிதப்பிறவிகளுக்கு இல்லை. இருப்பினும் கடவுளைப் பற்றி நாம் ஒன்றுமே அறியமுடியாது என்பதும் சரியல்ல. ஏனென்றால் கடவுள் தம்மை நமக்குப் பலவிதங்களில் வெளிப்டுத்தியுள்ளார். படைப்பைக் காண்போர் படைத்தவனை ஒருவிதத்தில், சிறிதளவாவது காணமுடியும் என்பதே உண்மை. உலகம் அனைத்தும் கடவுளின் படைப்பு என்றால் கடவுள் ஆற்றல் மிக்கவர் எனவும், நம்மை ஆழ்ந்த விதத்தில் அன்புசெய்பவர் எனவும் நாம் உணரமுடியும். ஆனால் கடவுள் தம்மை வரலாற்று நிகழ்ச்சிகள் வழியாகவும், குறிப்பாக மீட்பு வரலாற்றின் வழியாகவும் வெளிப்படுத்தியுள்ளார். இந்த வரலாற்றின் பதிவை நாம் விவிலியத்தில் காண்கின்றோம். இறுதியாக, கடவுள் தம்மைத் தம் ஒரே மகன் இயேசு வழியாக வெளிப்படுத்தினார். இந்த இயேசுவே கடவுளின் முழுமையான, நிறைவான வெளிப்பாடு என நாம் நம்புகிறோம்.

இயேசு கடவுளைத் தம் தந்தை என அழைப்பதால் கடவுளோடு, கடவுள் தன்மையில் நிலைத்திருப்பவர் என நாம் அறியலாம். ஆனால் இயேசு ஒரு கடவுள் என்றும், அவர் தந்தை என அழைப்பவர் இன்னொரு கடவுள் என்றும் நாம் கருதினால் அது தவறு. ஏனென்றால் கடவுளைத் தம் தந்தை என அழைக்கின்ற இயேசு ''நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்'' என்றார் (காண்க: யோவா 10:30). மேலும், ''உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்'' கடவுளிடமிருந்தும் இயேசுவிடமிருந்தும் புறப்பட்டு வந்து நமக்குத் துணையாக இருப்பார் எனவும் இயேசு போதித்தார் (காண்க: யோவா 14:16-17). இவ்வாறு தந்தை, மகன், தூய ஆவி என ஒரே கடவுள் மூன்று ஆள்களாகச் செயல்படுவதை நாம் இயேசுவின் போதனைவழி அறிந்து, ஏற்று, நம்புகிறோம். கடவுளை நமக்கு வெளிப்படுத்தும் இயேசுவை நம்பிக்கையோடு ஏற்று, அவர் வழியில் செல்வோர் வாழ்வு பெறுவர்.

மன்றாட்டு:

இறைவா, உம்மை நம்பி வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.