யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்கா காலம் 2வது வாரம் புதன்கிழமை
2013-04-10


முதல் வாசகம்

நீங்கள் போய்க் வாழ்வு பற்றிய வார்த்தைகளையெல்லாம் மக்களுக்கு எடுத்துக் கூறுங்கள்
திருத்தூதர்பணி நூலிலிருந்து வாசகம் 5:17-26

17 தலைமைக் குருவும் அவரைச் சேர்ந்த சதுசேயக் கட்சியினர் அனைவரும் பொறாமையால் நிறைந்து 18 திருத்தூதரைக் கைது செய்து பொதுச் சிறையில் காவலில்; வைத்தனர். 19 ஆனால் இரவில் ஆண்டவரின் தூதர் சிறைச் சாலையின் கதவுகளைத் திறந்து அவர்களை வெளியே அழைத்துச் சென்று, 20 "நீங்கள் போய்க் கோவிலில் நின்று வாழ்வு பற்றிய வார்த்தைகளையெல்லாம் மக்களுக்கு எடுத்துக் கூறுங்கள்" என்றார். 21 இதைக் கேட்ட அவர்கள் பொழுது விடிந்ததும் கோவிலுக்குச் சென்று கற்பித்தார்கள். தலைமைக் குருவும் அவரைச் சேர்ந்தவர்களும் அனைத்து இஸ்ரயேல் மக்களின் ஆட்சிப் பேரவையாகிய தலைமைச் சங்கத்தைக் கூட்டித் திருத்தூதர்களைச் சிறையிலிருந்து கொண்டு வருமாறு ஆள் அனுப்பினார்கள். 22 அந்த ஏவலர்கள் அங்கு வந்தபோது சிறையில் அவர்களைக் காணவில்லை. எனவே அவர்கள் திரும்பி வந்து, 23 "நாங்கள் சிறைச்சாலை உறுதியாய்ப் பூட்டப்பட்டிருப்பதையும், காவலர் வாயிலருகில் நின்றுகொண்டிருப்பதையும் கண்டோம். ஆனால் கதவைத் திறந்தபோது உள்ளே எவரையும் காணவில்லை" என்று அறிவித்தார்கள். 24 இவ்வார்த்தைகளைக் கேட்ட கோவில் காவல் தலைவரும், தலைமைக் குருக்களும் அவர்களுக்கு என்னதான் நேர்ந்திருக்கும் என்று மனங்குழம்பி நின்றனர். 25 அப்பொழுது ஒருவர் வந்து, "நீங்கள் சிறையில் அடைத்து வைத்திருந்த மனிதர்கள், அதோ! கோவிலில் நின்று மக்களுக்குக் கற்பிக்கின்றனர்" என்று அவர்களிடம் அறிவித்தார். 26 உடனே காவல்தலைவர் ஏவலர்களுடன் கோவிலுக்குச் சென்று அவர்களை அழைத்துச் சென்றார். மக்கள் கல்லெறிவார்கள் என்று அவர் அஞ்சியதால் வன்முறை எதுவும் கையாளவில்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்
திருப்பாடல்கள் 34:1-8

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப்பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். 3 என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.

4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். 5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. 6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார்.

7 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர். 8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3:16-21

16 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். 17 உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். 18 அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை. 19 ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது. 20 தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. 21 உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''இயேசு, ''தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்' என்றார்'' (யோவான் 3:16)

விவிலியத்திலேயே மிக மையமான ஒரு சொற்றொடர் யோவான் 3:16 என்பது அறிஞர் கருத்து. இதில் கடவுளுக்கும் அவர் அனுப்பிய திருமகன் இயேசுவுக்கும் மனித குலம் முழுவதற்கும் இடையே நிலவுகின்ற உறவு அழகாக, ஆழமாக எடுத்துக் கூறப்படுகிறது. முதன்முதலில் கடவுளின் அன்பு எல்லையற்றது என்னும் கருத்து இங்கே துலங்குகின்றது. அந்த அன்பு மனிதர் வாழ்கின்ற இந்த உலகின்மீது கடவுள் கொண்ட பாசத்தையும் பரிவையும் வெளிப்படுத்துகிறது. இவ்வாறு உலகத்தை எல்லையற்ற விதத்தில் அன்புசெய்கின்ற கடவுள் தம் திருமகனாம் இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்புகிறார். இயேசுவின் வழியாக, குறிப்பாக அவருடைய சிலுவைச் சாவு மற்றும் உயிர்த்தெழுதல் வழியாக (''பாஸ்கா மறைபொருள்'') கடவுளின் அன்பு நமக்கு வெளிப்படுத்தப்பட்டது.

கடவுள் நமக்குக் காட்டுகின்ற அன்பு வெறும் உணர்ச்சியோடு நின்றுவிடுவதில்லை. நம்மைத் தம்மோடு இணைத்து நமக்கு நிலைவாழ்வில் பங்களிப்பதற்காகவே கடவுள் தம் திருமகனை நமக்கு அளித்தார். இவ்வாறு நாம் நிலைவாழ்வில், நிறைவாழ்வில் பங்கு பெறும் பொருட்டு நமக்காகத் தம்மையே பலியாக்கிய இயேசுவை நாம் நம்பிக்கையோடு பற்றிக்கொள்ள வேண்டும். இந்நம்பிக்கை நம்மில் உறுதியாக வேரூயஅp;ன்றியிருக்க வேண்டும். கடவுளின் எல்லையற்ற வல்லமையால் அனைத்தும் கைகூடும் என்னும் உறுதியோடு நாம் கடவுளையும் அவரது மகன் இயேசுவையும் அணுகிச் சென்றால் அவர் நமக்குக் கொடையாகத் தருகின்ற நிலைவாழ்வு எதிர்காலத்தில் ஒருநாள் விடியும் என்பது மட்டுமல்லாமல், ஏற்கெனவே இவ்வுலகில் தொடங்கிவிட்டது என்பதையும் நாம் உணர்வோம். இவ்வாறு கடவுளின் வல்லமையான தூய ஆவியார் நம்மில் செயல்பட்டு நாம் நம்பிக்கைகொண்டோராக மாறும்போது அதிசய செயல்கள் நம்மில் நிகழும். அதன் விளைவாக, நாம் கடவுளின் அன்பை நம் இதயத்தில் உணர்வதோடு அந்த அன்பினை நம் சகோதரர் சகோதரிகளோடு மனமகிழ்வோடு பகிர்ந்திடுவோம்.

மன்றாட்டு:

இறைவா, எங்களை எல்லையற்ற விதத்தில் அன்புசெய்கின்ற உம்மில் நம்பிக்கை கொண்டு வாழ்ந்திட அருள்தாரும்.