திருவழிப்பாட்டு ஆண்டு C (07-04-2013)

தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்,'' என்கிறார் ஆண்டவர்./> தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்,'' என்கிறார் ஆண்டவர்./> தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்,'' என்கிறார் ஆண்டவர்./> தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்,'' என்கிறார் ஆண்டவர்./>


திருப்பலி முன்னுரை

இறைமகன் இயேசுவில் அன்பு நிறை அருட்தந்தை! (அருட்தந்தையர்களே) அன்புநிறை சகோதர்களே! சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் வணக்கம். உயிர்த்தெழுந்த நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால், பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும். இது ஒரு கவிஞனின் உள்ளத்து ஏக்கம் மட்டுமல்ல: இன்றைய உலகின் தேடலும் கூட. இதோ அந்த உயிர்த்த ஆண்டவர் இன்று நற்செய்தியின் வழியாக நமக்குத் தருவது அமைதி.

தனி மனிதர்களும், சமூகங்களும், நாடுகளும் நாடித் தேடும் ஒன்று அமைதி. பொருளாதார வளர்ச்சி ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தாலும், பல நாடுகளும் போர்களாலும், உள்நாட்டுக் குழப்பங்களாலும் அமைதியின்றி தவித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆயுதங்களால் உண்மையான அமைதியைக் கொண்டுவர முடியாது. உறவால்தான் முடியும்.

குடும்பங்களிலும் இன்று அமைதியற்ற சூழல். கணவன்-மனைவிக்கிடையே, பெற்றோர்-பிள்ளைகளுக்கிடையே அமைதியின்றி வாழும் நிலை காண்கிறோம். பணமோ, பொருள்களோ அமைதியைத் தர இயலாது. உறவுதான் அமைதியைத் தரும். முதலில், இறைவனோடு நல்லுறவு கொள்வோம். அப்போது, உலகம் தர இயலாத அமைதியை அவர் நமக்குத் தருவார்.

இயேசுவின் உயிர்ப்பை அவரது சீடர்களாலே புரிந்துகொள்ள முடியவில்லை. தோமா ஆண்டவரின் உயிர்ப்பை நம்ப நிபந்தனை விதிக்கிறார். அன்பே உருவான இறைமகன், தோமாவின் சந்தேகத்தை நீக்கியதோடு நாமும் அவரில் நம்பிக்கைக்கொள்ள அழைப்பு விடுக்கிறார். நம் ஆண்டவரின் அழைப்பை ஏற்று அவரது அன்பின் சாட்சிகளாக வாழ்ந்து காட்டுவோம். அப்போது கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொள்ளாத பலரும் மனந்திரும்ப நாம் உதவ முடியும். புதிய பாஸ்காவின் புனித செம்மறியாம் இயேசுக் கிறிஸ்துவுடன் இணைந்து அமைதியின் வழியில் வாழ்ந்திட பெருமகிழ்ச்சியுடன் இத் திருப்பலியில் பங்கு பெறுவோம்.



முதல் வாசகம்

ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட திரளான ஆண்களும் பெண்களும் இவர்களோடு சேர்க்கப்பட்டார்கள்
திருத்தூதர்பணி நூலிலிருந்து வாசகம் 5:12-16

அந்நாட்களில் மக்களிடையே பல அரும் அடையாளங்களும் அருஞ்செயல்களும் திருத்தூதர் வழியாய்ச் செய்யப்பட்டன. அனைவரும் சாலமோன் மண்டபத்தில் ஒருமனத்தவராய்க் கூடி வந்தனர். 13 மற்றவர் யாரும் இவர்களோடு சேர்ந்துகொள்ளத் துணியவில்லை. ஆயினும் மக்கள் இவர்களைப் பற்றிப் பெருமையாகப் பேசினர். 14 ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட திரளான ஆண்களும் பெண்களும் இவர்களோடு சேர்க்கப்பட்டார்கள். 15 பேதுரு நடந்து செல்லும்போது அவர் நிழல் சிலர் மேலாவது படுமாறு மக்கள் உடல்நலமற்றோரைக் கட்டில்களிலும் படுக்கைகளிலும் கிடத்திச் சுமந்துகொண்டுவந்து வீதிகளில் வைத்தார்கள்; 16 எருசலேமைச் சுற்றியிருந்த நகரங்களிலிருந்து மக்கள் உடல்நலமற்றோரையும், தீய ஆவிகளால் இன்னலுற்றோரையும் சுமந்து கொண்டு திரளாகக் கூடிவந்தார்கள். அவர்கள் அனைவரும் நலம் பெற்றனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
திருப்பாடல்கள் 118:2-4, 22-27

2 'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என் இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! 3 'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என் ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக! 4 'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக!

22 கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! 23 ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! 24 ஆண்டவர் தோற்றவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்.

25 ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றிதாரும்! 26 ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம். 27 ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார்; கிளைகளைக் கையிலேந்தி விழாவினைத் தொடங்குங்கள்; பீடத்தின் கொம்புகள்வரை பவனியாகச் செல்லுங்கள்.

இரண்டாம் வாசகம்


திருவெளிப்பாடு நூலிலிருந்து வாசகம் 1:9-11, 12-13, 17-19

9 உங்கள் சகோதரனும், இயேசுவோடு இணைந்த நிலையில் உங்கள் வேதனையிலும் ஆட்சியுரிமையிலும் மனவுறுதியிலும் பங்குகொள்பவனுமான யோவான் என்னும் நான் கடவுளின் வாக்கை அறிவித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்ததால் பத்மு தீவுக்கு வர நேர்ந்தது. 10 ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று தூயஆவி என்னை ஆட்கொள்ளவே எனக்குப் பின்னால் பெரும்குரல் ஒன்று எக்காளம்போல முழங்கக் கேட்டேன். 11 "நீ காண்பதை ஒரு சுருளேட்டில் எழுதி, எபேசு, சிமிர்னா, பெர்காம், தியத்திரா, சர்தை, பிலதெல்பியா, இலவோதிக்கேயா ஆகிய ஏழு இடங்களிலும் உள்ள திருச்சபைகளுக்கு அதை அனுப்பி வை" என்று அக்குரல் கூறியது. 12 என்னோடு பேசியவர் யார் என்று பார்க்கத் திரும்பினேன். அப்பொழுது ஏழு பொன் விளக்குத்தண்டுகளைக் கண்டேன். 13 அவற்றின் நடுவே மானிடமகனைப் போன்ற ஒருவரைப் பார்த்தேன். அவர் நீண்ட அங்கியும் மார்பில் பொன் பட்டையும் அணிந்திருந்தார். 17 நான் அவரைக் கண்டபொழுது செத்தவனைப்போல் அவரது காலில் விழுந்தேன். அவர் தமது வலக் கையை என்மீது வைத்துச் சொன்னது; "அஞ்சாதே! முதலும் முடிவும் நானே. 18 வாழ்பவரும் நானே. இறந்தேன்; ஆயினும் இதோ என்றென்றும் வாழ்கின்றேன். சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் எனக்கு அதிகாரம் உண்டு. 19 எனவே நீ காண்பவற்றை, அதாவது இப்பொழுது நிகழ்கின்றவற்றையும் இனி நிகழவிருப்பவற்றையும் எழுதிவை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்பகிறேன்அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20:19-31

19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று வாழ்த்தினார். 20 இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். 21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்பகிறேன்" என்றார். 22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, "தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். 23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா" என்றார். 24 பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. 25 மற்றச் சீடர்கள் அவரிடம், "ஆண்டவரைக் கண்டோம்" என்றார்கள். தோமா அவர்களிடம், "அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்" என்றார். 26 எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று வாழ்த்தினார். 27 பின்னர் அவர் தோமாவிடம், "இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்" என்றார். 28 தோமா அவரைப் பார்த்து, "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!" என்றார். 29 இயேசு அவரிடம், "நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" என்றார். 30 வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை. 31 இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


நம் வானகத் தந்தை அன்பில் நிறைந்தவர், அருளில் சிறந்தவர். நாமும் நம் வாழ்வின் குறைகள் நீங்கி நிறை வாழ்வைப் பெற, நமக்குத் தேவையான அருள் வரங்களை இறைவனிடம் மன்றாடிக்கேட்போம்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

நம்பிக்கை அளிப்பவராம் இறைவா,

உம் திருமகன் இயேசுவின் உயிர்ப்பை காணாமலே நம்பி ஏற்றுக்கொண்டிருக்கும் எங்கள் திருத்தந்தை, முதலாம் பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவரும் தங்கள் நம்பிக்கையில் நிலைத்திருந்து, உமது சாட்சிகளாக வாழ வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

அமைதியின் நாயகனே இறைவா,

உம்மைப் போற்றுகிறோம். நாங்கள் விரும்பித் தேடுகிற அமைதியை, நீர் மட்டுமே தரமுடிகின்ற அமைதியை எங்கள் நாட்டுக்கும், குடும்பங்களுக்கும், எங்களுக்கும் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அன்புத் தந்தையே இறைவா!

உம் திருமகன் இயேசுவே உலகின் மீட்பர் என்பதை உலகம் எல்லாம் கண்டுணரவும் விடுதலையின் பாதையில் இயேசுவின் உயிர்ப்பின் ஆற்றலை அனைவரும் அனுபவமாய் பெற்றிட வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உதவிசெய்ய அழைப்பவராம் இறைவா,

ஏழ்மை, தனிமை, வன்முறை, நோய் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் அன்பை இழந்து வாடும் மக்களிடையே, உமது அன்பின் கருவிகளாக செயலாற்றும் வரத்தினை கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

அன்புத் தந்தையே இறைவா,

உமது வார்த்தையை தாம் விரும்பியவாறு விளக்கியுரைத்துக்கொண்டு விசுவாசிகளிடையே பிளவை ஏற்படுத்துவோர் அதிகமாகிவிட்ட இன்றைய நாட்களிலே நீரே உண்மையை வெளிப்படுத்தி உண்மை விசுவாசத்தை நோக்கி மக்களை வழிநடாத்தவும், பிளவுபட்டுக்கிடக்கும் அத்தனை விசுவாசிகளையும் ஒன்று சேர்த்து உமது தலைமைத்துவத்தின் கீழ் அவர்களை வைத்துக் காத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே!

நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும் துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும், இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும், நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

''இயேசு தோமாவிடம், 'நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்' என்றார்'' (யோவான் 20:29)

சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த இயேசு பலருக்குத் தோன்றினார் என நற்செய்தி நூல்களும், திருப்பணிகள் நூலும், தூய பவுலும் குறிப்பிடுகின்றனர். தாம் தேர்ந்துகொண்ட சீடர்களுக்கு இயேசு தோன்றிய நிகழ்ச்சி விரிவாகத் தரப்பட்டுள்ளது. குறிப்பாக, தூய தோமா இயேசுவைக் கண்டு அவரில் நம்பிக்கை கொண்ட நிகழ்ச்சி நம் கவனத்தை ஈர்க்கிறது. ஏனென்றால் இயேசு தோன்றியபோது தோமா அங்கே இல்லை. தோமாவிடம் பிற சீடர்கள் தாங்கள் இயேசுவைக் கண்டதாகக் கூறிய பிறகும் அவர் நம்ப மறுக்கிறார். தாமாகவே நேரடியாக இயேசுவைக் கண்டால்தான் நம்பமுடியும் என அவர் உறுதியாகக் கூறிவிட்டார். எட்டு நாள்களுக்குப் பிறகு இயேசு மீண்டும் ஒருமுறை சீடர்களுக்குத் தோன்றியபோது தோமாவும் கூட இருக்கிறார். இயேசு தோமாவை அழைக்கிறார். தம் அருகே வந்து தம்மைத் தொட்டுப் பார்க்கச் சொல்கிறார். ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்ளக் கேட்கிறார். இயேசுவை அணுகிச் சென்று, அவரைத் தொட்டுப் பார்க்கும் துணிச்சல் தோமாவுக்கு வரவில்லை. ஏன், இயேசுவின் குரலைக் கேட்டதுமே அவருடைய உள்ளம் நெகிழ்ந்துவிட்டது. தம் தலைவரும் போதகருமான இயேசுவே தம் முன்னால் நிற்கிறார் என்னும் எண்ணம் தோமாவின் இதயத்தை நிரப்பிவிட்டது. அப்போது இயேசு தோமாவைப் பார்த்து, 'நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்' என்கிறார். -- இங்கே ''பேறுபெற்றோர்'' எனக் குறிப்பிடப்படுவோர் நாம்தாம். நாம் உயிர்த்தெழுந்த இயேசுவை நேரடியாக நம் கண்களால் காணவில்லை. அவருடைய குரலை நாம் நம் காதுகளால் கேட்கவில்லை. அவரை அணுகிச் சென்று தொட்டுப்பார்க்கவும் நமக்கு வாய்ப்பில்லை. ஆனால் நாம் இயேசுவை நம் ஆண்டவராக, உயிர்த்தெழுந்து நமக்கு உயிர் வழங்கும் இறைவனாக ஏற்கிறோம். தோமாவுக்குத் தோன்றிய ஐயம் நமக்கும் தோன்றலாம். ஆனால் ஐயத்தைத் தவிர்த்து நம்பிக்கை கொள்ள வேண்டும் என்னும் இயேசுவின் அழைப்பு நம் இதயச் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. தோமா இயேசுவைத் தம் ''ஆண்டவர்'' என்றும் ''கடவுள்'' என்றும் அறிக்கையிட்டார் (காண்க: யோவா 20:28). அதுபோல நாமும் இயேசுவை நம் மீட்பராக ஏற்று, அவருடைய வழியில் நடந்துசென்றிட அழைக்கப்படுகிறோம். உண்மையிலேயே நாம் ''பேறுபெற்றோர்''.

மன்றாட்டு:

உயிர்ப்;பின் நாயகனே இயேசுவே, உமக்கு நன்றி. எங்கள் நம்பிக்கை இன்மையை மன்னித்து, எங்களை ஏற்றுக்கொள்வதற்காக நன்றி. நாங்கள் உமது உயிர்ப்பில், உமது உடனிருப்பில், உமது பிரசன்னத்தில் நம்பிக்கை கொள்ளவும், அதனால், நிலைவாழ்வு அடையவும் அருள்தாரும்.