யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 5வது வாரம் வியாழக்கிழமை
2013-03-21


முதல் வாசகம்

உன்னைப் பலுகச் செய்வேன்; உன்னிடமிருந்து நாடுகளை உண்டாக்குவேன்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 17:3-9

3 அப்பொழுது ஆபிராம் பணிந்து வணங்க, கடவுள் அவரிடம் கூறியது: 4 "உன்னுடன் நான் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே; எண்ணற்ற நாடுகளுக்கு நீ தந்தை ஆவாய். 5 இனி உன்பெயர் ஆபிராம் அன்று; 'ஆபிரகாம்' என்ற பெயரால் நீ அழைக்கப்படுவாய். ஏனெனில் எண்ணற்ற நாடுகளுக்கு உன்னை நான் மூதாதையாக்குகிறேன். 6 மிகப் பெருமளவில் உன்னைப் பலுகச் செய்வேன்; உன்னிடமிருந்து நாடுகளை உண்டாக்குவேன். உன்னிடமிருந்து அரசர்கள் தோன்றுவர். 7 தலைமுறை தலைமுறையாக உன்னுடனும், உனக்குப்பின் வரும் உன் வழிமரபினருடனும் என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன். இதனால் உனக்கும் உனக்குப்பின் வரும் உன் வழிமரபினருக்கும் நான் கடவுளாக இருப்பேன். 8 நீ தங்கியிருக்கும் நாட்டையும் கானான் நாடு முழுவதையும் என்றுமுள்ள உரிமைச் சொத்தாக உனக்கும் உனக்குப்பின் உன் வழி மரபினருக்கும் வழங்குவேன். நான் அவர்களுக்குக் கடவுளாக இருப்பேன்" என்றார். 9 மீண்டும் கடவுள் ஆபிரகாமிடம், நீயும் தலைமுறைதோறும் உனக்குப்பின் வரும் உன் வழிமரபினரும் என் உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்
திருப்பாடல்கள் 105:4-9

4 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! 5 அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவு கூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள்.

6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே! 7 அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித்தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன.

8 அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறதியை நினைவுகூர்கின்றார்.

9 ஆபிரகாமுடன் தாம் செய்து கொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8:51-59

51 என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.52 யூதர்கள் அவரிடம், ' நீ பேய் பிடித்தவன்தான் என்பது இப்போது தெரிந்துவிட்டது. ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினர்களும் இறந்தார்கள். ஆனால் என் வார்த்தையைக் கடைப் பிடிப்போர் என்றுமே சாகமாட்டார் என்கிறாயே!53 எங்கள் தந்தை ஆபிரகாமைவிட நீ பெரியவனோ? ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினரும் இறந்தனர். நீ யாரென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்? ' என்றார்கள்.54 இயேசு மறுமொழியாக, ' நானே என்னைப் பெருமைப்படுத்தினால், அது எனக்குப் பெருமை இல்லை. என்னைப் பெருமைப்படுத்துபவர் என் தந்தையே. அவரையே நீங்கள் உங்கள் தந்தை என்றும் சொல்கிறீர்கள்.55 ஆனால் அவரை உங்களுக்குத் தெரியாது; எனக்குத் தெரியும். எனக்கு அவரைத் தெரியாது என நான் சொன்னால் உங்களைப்போல நானும் பொய்யனாவேன். அவரை எனக்குத் தெரியும். அவருடைய வார்த்தையையும் நான் கடைபிடிக்கிறேன்.56 உங்கள் தந்தை ஆபிரகாம் நான் வரும் காலத்தைக் காண முடியும் என்பதை முன்னிட்டுப் பேருவகை கொண்டார்; அதனைக் கண்டபோது மகிழ்ச்சியும் கொண்டார் ' என்றார்.57 யூதர்கள் அவரை நோக்கி, ' உனக்கு இன்னும் ஐம்பது வயது கூட ஆகவில்லை; நீ ஆபிரகாமைக் கண்டிருக்கிறாயா? ' என்று கேட்டார்கள்.58 இயேசு அவர்களிடம், ' ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.59 இதைக் கேட்ட அவர்கள் அவர்மேல் எறியக் கற்களை எடுத்தார்கள். ஆனால் இயேசு மறைவாக நழுவிக் கோவிலிலிருந்து வெளியேறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''இயேசு யூதர்களிடம், 'ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார். இதைக் கேட்ட அவர்கள் அவர்மேல் எறியக் கற்களை எடுத்தார்கள்'' (யோவான் 8:58-59)

இயேசு யார் என்பதைப் புரிந்துகொள்ள மக்கள் எக்காலமுமே முயன்றுள்ளனர். இயேசுவின் சொற்களைக் கேட்ட மனிதர்களில் சிலர் அவரை நம்ப மறுத்தனர். அவருடைய இறப்புக்குப் பிறகு கிறிஸ்தவ சமூகங்கள் அவர் உயிர்த்தெழுந்து தங்களோடு இருப்பதை உணர்ந்து நம்பிக்கையோடு ஏற்றன. இவ்வாறு கிறிஸ்தவ நம்பிக்கை கொண்டோர் எண்ணிக்கை வளர வளர, அவர்களுக்கும் சில யூதர்களுக்கும் இடையே கருத்து மோதல் தொடர்ந்து எழுந்தது என்பதை யோவான் நற்செய்தி காட்டுகிறது. இயேசு உண்மையிலேயே மெசியாதானா? அவரைக் கடவுளின் மகன் என நாம் எப்பொருளில் அழைக்கலாம்? அவர் கடவுளிடமிருந்து வந்தார் என்றால் அவரையே நாம் கடவுள் எனக் கருதலாமா? - இத்தகைய கேள்விகளை யூதர்கள் கிறிஸ்தவ சமூகத்தினரிடம் கேட்டதில் வியப்பில்லை. குறிப்பாக, ஆபிரகாமுக்கும் இயேசுவுக்கும் உள்ள உறவு கருதத்தக்கது. யூதர்கள் ஆபிரகாமைத் தங்கள் தந்தை என ஏற்றனர். ஆனால் இயேசுவோ ஆபிரகாம் பிறப்பதற்கு முன்னரே தாம் இருப்பதாக அழுத்திக் கூறுகிறார். இதைக் கேட்ட ''யூதர்கள்'' இயேசு மீது எறியக் ''கற்களை எடுத்தனர்'' (காண்க: யோவா 8:58-59). இயேசு தம்மையே கடவுளுக்கு நிகராக்கிக்கொண்டார் என்பதே இதற்குக் காரணம்.

இயேசுவைப் பற்றி அறிய வேண்டும் என்றால் நம் ஆய்வு வெறும் வரலாற்று ஆய்வாக மட்டுமே இருந்தால் போதாது. இயேசுவை நாம் ஏற்பதற்கு நமக்கு ''நம்பிக்கை'' வேண்டும். அதாவது, இயேசுவின் சொற்களை நாம் ஏற்று, அவர் கூறுவது உண்மையே என அச்சொற்களை உள்வாங்கி, அதனால் நம் இதயத்தில் ஒரு மாற்றம் நிகழ வேண்டும். இத்தகைய மாற்றம் நிகழாவிட்டால் இயேசுவை நாம் வரலாற்றில் வாழ்ந்த ஒரு தலைசிறந்த மனிதராக மட்டுமே கொள்ளுவோமே தவிர, அவர் கடவுளை நமக்கு வெளிப்படுத்தி, நம்மைக் கடவுளிடம் இட்டுச்செல்கின்ற மெசியா என ஏற்கத் தவறிவிடுவோம்; அவரைக் ''கடவுளின் மகன்'' என்னும் சிறப்புத் தகுதி கொண்டவராக ஏற்றிடத் தயங்குவோம். ஆனால் உண்மையிலேயே இயேசு நம்மிடையே கடவுளின் உடனிருப்பாக வாழ்ந்துவருகிறார் என்றும், அவரைக் கண்டுகொள்ள நம் அகக்கண்களை நாம் திறந்திட வேண்டும் என்றும் கிறிஸ்தவ நம்பிக்கை அறிவுறுத்துகிறது. அதே நேரத்தில் இயேசுவின் காலத்தில் வாழ்ந்த எல்லா யூதர்களுமே இயேசுவைப் புறக்கணித்தனர் என்றோ, அதனால் அவர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றோ நாம் கொள்ளலாகாது. கடவுளின் அன்பிலிருந்து பிறக்கின்ற மீட்புத் திட்டத்தில் யூத மக்களுக்கு எப்போதுமே ஒரு சிறப்பிடம் உண்டு (காண்க: இரண்டாம் வத்திக்கான் சங்கம், கிறிஸ்தவமல்லா மறைகளோடு திருச்சபைக்குள்ள உறவு, எண் 4).

மன்றாட்டு:

இறைவா, யூத குலத்தில் பிறந்து வளர்ந்த இயேசுவை மீட்பராக ஏற்கும் நாங்கள் எல்லா மனிதரையும் உம் பிள்ளைகளாக ஏற்றிட அருள்தாரும்.