யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 2வது வாரம் வெள்ளிக்கிழமை
2013-03-01


முதல் வாசகம்

அவனைக் கொன்று இந்த ஆழ்குழிகளுள் ஒன்றில் தள்ளிவிட்டு, ஒரு கொடிய விலங்கு அவனைத் தின்று விட்டதென்று சொல்வோம்
தொடக்க நூலிலிருந்து வாசகம் 37:3-4,12-13,17-28

3 இஸ்ரயேல் முதிர்ந்த வயதில் தமக்கு யோசேப்பு பிறந்தமையால் அவரை மற்றெல்லாப் புதல்வரையும் விட அதிகமாக நேசித்து வந்தார். அவருக்கு அழகு வேலைப்பாடுகள் நிறைந்த ஓர் அங்கியைச் செய்து கொடுத்தார்.4 அவருடைய சகோதரர்கள் தங்கள் தந்தை அவரை எல்லாரிலும் அதிகமாய் நேசிக்கிறாரென்று கண்டு அவரை வெறுத்தனர். அவர்களால் அவரோடு பாசத்துடன் பேச இயலவில்லை.12 அப்படி இருக்கையில் அவர் சகோதரர் செக்கேமில் தம் தந்தையின் மந்தைகளை மேய்க்கச் சென்றனர்.13 இஸ்ரயேல் யோசேப்பை நோக்கி: ″உன் சகோதரர்கள் செக்கேமில் ஆடு மேய்க்கிறர்கள் அல்லவா? அவர்களிடம் உன்னை அனுப்பப் போகிறேன்,″ என்று கூற, அவர், ″இதோ நான் தயார்″ என்றார்.17 அதற்கு அம்மனிதன், ″அவர்கள் இவ்விடத்தை விட்டுக் கிளம்பி விட்டார்கள். தோத்தானுக்குப் போவோம் என்று அவர்கள் சொல்லிக் கொண்டதை நான் கேட்டேன்″ என்று பதிலளித்தான். யோசேப்பு தம் சகோதரரைத் தேடிச் சென்று தோத்தானில் அவர்களைக் கண்டுபிடித்தார்.18 தொலையில் அவர் வருதைக் கண்ட அவர்கள் தங்களுக்கு அருகில் அவர் வருமுன் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர்.19 அவர் சகோதரர்கள் ஒருவர் ஒருவரை நோக்கி, ″இதோ, வருகிறான் கனவின் மன்னன்!20 நாம் அவனைக் கொன்று இந்த ஆழ்குழிகளுள் ஒன்றில் தள்ளிவிட்டு, ஒரு கொடிய விலங்கு அவனைத் தின்று விட்டதென்று சொல்வோம். அப்பொழுது அவனடைய கனவுகள் என்ன ஆகும் என்று பார்ப்போம்″ என்றனர்.21 ரூபன் இவற்றைக் கேட்டு, அவரை அவர்கள் கையிலிருந்து தப்புவிக்கும் எண்ணத்தில் அவர்களை நோக்கி, ″நாம் அவனைச் சாகடிக்க வேண்டாம்″ என்றார்.22 ரூபன் அவர்கள் நோக்கி, ″அவன் இரத்தத்தை சிந்தாதீர்கள். அவனைக் பாலை நிலத்திலுள்ள இந்த ஆழ்குழிக்குள் தள்ளவிடுங்கள். அவன் மீது கை வைக்காதீர்கள்″ என்று சொன்னார். ஏனெனில் அவர் அவர்கள் கையிலிருந்து அவரைத் தப்புவித்துத் தம் தந்தையிடம் சேர்ப்பிக்கும் நோக்கம் கொண்டிருந்தார்.23 யோசேப்பு தம் சகோதரரிடம் வந்து சேர்ந்தவுடன் அவர் அணிந்திருந்த அழகு வேலைப்பாடுகள் நிறைந்த அங்கியை உரிந்துவிட்டு,24 அவரை ஆழ்குழியில் தூக்கிப் போட்டனர். அது தண்ணீரில்லாத வெறும் குழி.25 பின்பு, அவர்கள் உணவு அருந்தும்படி அமர்ந்தனர். அப்பொழுது அவர்கள் கண்களை உயர்த்தி, கிலயாதிலிருந்து வந்துகொண்டிருந்த இஸ்மயேலரின் வணிகக் குழுவைப் பார்த்தனர். நறுமணப் பொருள்களையும், தைல வகைகளையும் வெள்ளைப் போளத்தையும், அவர்கள் ஒட்டகங்களின் மேல் ஏற்றி எகிப்திற்குச் சென்ற கொண்டிருந்தனர்.26 அப்பொழுது யூதா தம் சகோதரர்களை நோக்கி, ″நாம் நம் சகோதரனைக் கொன்று அவன் இரத்தத்தை மறைப்பதனால் நமக்கு என்ன பயன்? 27 வாருங்கள்; இஸ்மயேலருக்கு அவனை விற்றுவிடுவோம். அவன் மேல் நாம் கைவைக்க வேண்டாம். ஏனெனில் அவன் நம் சகோதரனும் நம் சொந்தச் சதையுமாய் இருக்கிறான்″ என்று சொல்ல, அவர்கள் சம்மதித்தனர்.28 ஆகையால் மிதியான் நாட்டு வணிகர் அவர்களைக் கடந்து செல்கையில், குழியிலிருந்து யோசேப்பை வெளியே தூக்கி அந்த இஸ்மயேலரிடம் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றனர். அவர்களும் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டு சென்றனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவர் செய்த வியத்தகு செயல்களை நினைவு கூறுங்கள்
திருப்பாடல்கள் 105:16-21

16 நாட்டில் அவர் பஞ்சம் வரும்படி செய்தார்; உணவெனும் ஊன்றுகோலை முறித்துவிட்டார். 17 அவர்களுக்கு முன் ஒருவரை அனுப்பிவைத்தார்; யோசேப்பு என்பவர் அடிமையாக விற்கப்பட்டார்.

18 அவர்தம் கால்களுக்கு விலங்கிட்டு அவரைத் துன்புறுத்தினர். அவர்தம் கழுத்தில் இரும்புப் பட்டையை மாட்டினர். 19 காலம் வந்தது; அவர் உரைத்தது நிறைவேறிற்று; ஆண்டவரின் வார்த்தை அவர் உண்மையானவரென மெய்ப்பித்தது.

20 மன்னர் ஆளனுப்பி அவரை விடுதலை செய்தார்; மக்களினங்களின் தலைவர் அவருக்கு விடுதலை அளித்தார்; 21 அவர் அவரைத் தம் அரண்மனைக்குத் தலைவர் ஆக்கினார்; தம் உடைமைகளுக்கெல்லாம் பொறுப்பாளராக ஏற்படுத்தினார்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21:33-43, 45-46

33 ″ மேலும் ஓர் உவமையைக் கேளுங்கள்: நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து அதில் பிழிவுக்குழி வெட்டி ஒரு காவல் மாடமும் கட்டினார்; பின்பு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.34 பழம் பறிக்கும் காலம் நெருங்கி வந்த போது அவர் தமக்குச் சேர வேண்டிய பழங்களைப் பெற்று வரும்படி தம் பணியாளர்களை அத்தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார்.35 தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள்; ஒருவரைக் கொலை செய்தார்கள்; ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள்.36 மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களைவிட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள்.37 தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார்.38 அம்மகனைக் கண்ட போது தோட்டத் தொழிலாளர்கள், ' இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்று போடுவோம்; அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும் ' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.39 பின்பு அவர்கள் அவரைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றுபோட்டார்கள்.40 எனவே, திராட்சைத் தோட்ட உரிமையாளர் வரும்போது அத்தொழிலாளர்களை என்ன செய்வார்? ' என இயேசு கேட்டார்.41 அவர்கள் அவரிடம், ' அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்; உரிய காலத்தில் தமக்கு சேர வேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார் ' என்றார்கள்.42 இயேசு அவர்களிடம், ' கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது; நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! ' என்று நீங்கள் மறைநூலில் ஒருபோதும் வாசித்தது இல்லையா?43 எனவே உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.45 தலைமைக் குருக்களும் பரிசேயரும் அவருடைய உவமைகளைக் கேட்டபோது, தங்களைக் குறித்தே அவர் கூறினார் என்று உணர்ந்து கொண்டனர்.46 அவர்கள் அவரைப் பிடிக்க வழிதேடியும் மக்கள் கூட்டத்தினர் அவரை இறைவாக்கினர் என்று கருதியதால் அவர்களுக்கு அஞ்சினார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''நிலக்கிழார் ஒருவர் தோட்டத் தொழிலாளர்களிடம் தோட்டத்தைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்'' (மத்தேயு 21:33)

தோட்டத்தில் வேலை செய்து காய்கறிகளைப் பயிரிடுவதும் மலர்களை முகிழச் செய்வதும் மனத்திற்கு இதமான பொழுதுபோக்காகவோ தொழிலாகவோ இருக்கலாம். இயேசு வாழ்ந்த பாலஸ்தீன நாட்டில் திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்து பழங்களைக் கனியச் செய்யும் தொழில் சாதாரணமாக நடந்துவந்தது. அதுவே இயேசுவின் வாயில் ஓர் அழகிய உவமையாக உருவெடுக்கிறது. தோட்டத் தொழிலாளர்களிடம் தம் தோட்டத்தைக் குத்தகைக்கு விட்டுவிட்டுப் பயணமாகிச் செல்கிறார் நிலக்கிழார் ஒருவர். அவர் உரிய காலத்தில் பழங்களைப் பெற்றுவரும்படி அனுப்பிய தூதர்களை அக்குத்தகைக்காரர்கள் துன்புறுத்திக் கொன்றுபோடுகிறார்கள். ஏன், நிலக்கிழாரின் சொந்த மகனையே அவர்கள் கொலைசெய்துவிடுகின்றனர். இயேசு இந்த உவமையைத் தம்மைப் பற்றியே கூறினார். அவர்தான் அனுப்பப்பட்ட ''மகன்''. அவரைத்தான் மக்கள் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றுபோட்டார்கள் (மத் 21:39). இது இயேசு எருசலேம் நகருக்கு வெளியே சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டதைக் குறிக்கிறது. இவ்வாறு கொடிய மனத்தோடு செயல்பட்ட அக்குத்தகைக்காரர்களிடமிருந்து ''இறையாட்சி அகற்றப்பட்டு, வேறு மக்களினத்தாரிடம் கொடுக்கப்படும்'' என இயேசு கூறுகிறார். -- இஸ்ரயேல் மக்கள் பிரமாணிக்கமற்ற விதத்தில் நடந்துகொண்டதால் அவர்களிடமிருந்து இறையாட்சி எடுக்கப்பட்டு, பிற இனத்தாரிடம் கொடுக்கப்படும் என இயேசு கூறியதை நாம் நமக்குப் பொருத்திப் பார்க்கலாம். நம் கையில் ஒரு பெரிய பொறுப்பைக் கொடுத்துவிட்டு கடவுள் ''பயணம் போகிறார்'' என நாம் ஒருவிதத்தில் கூறலாம். ஆனால் கடவுள் நம்மைத் தேடி மீண்டும் வரவிருக்கின்றார். அப்போது நாம் என்ன கணக்கு ஒப்புவிப்போம்? நம்மிடம் பொறுப்பாகத் தரப்பட்ட ''தோட்டத்தை'' நாம் நல்முறையில் பண்படுத்தி, அதிலிருந்து பலன் கொணர்ந்தோமா? அல்லது நம் தோட்டத்தைத் தரிசாக விட்டுவிட்டோமா? நாம் கொணர்கின்ற பலன் கடவுளுக்கு உரியது. ஏனென்றால் அவருடைய அருளின்றி நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. இவ்வாறு நாம் பொறுப்புடைய மனிதராக வாழ்ந்தால் கடவுள் நமக்கு வாக்களிக்கின்ற பேரின்பம் நமதாகும்.

மன்றாட்டு:

இறைவா, எங்களுக்குக் கொடைகள் பல அளித்த உமக்கு நாங்கள் எப்போதும் நன்றியறிந்திருக்கச் செய்தருளும்.