யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 1வது வாரம் சனிக்கிழமை
2013-02-23


முதல் வாசகம்

நீ அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்தால், அவர் கூறியபடியே நீ அவருக்குச் சொந்தமான மக்களினமாய் இருப்பாய்
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 26:16-19

16 இந்த முறைமைகளையும் நியமங்களையும் நீ நிறைவேற்றுமாறு உன் கடவுளாகிய ஆண்டவர் இன்று உனக்குக் கட்டளையிட்டுள்ளார். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அவற்றை நிறைவேற்றுவதில் கருத்தாயிரு.17 ஆண்டவரை உன் கடவுளாய் ஏற்பதாகவும் உனக்குக் கடவுளாக இருப்பார் என்றும், அவருடைய வழிகளில் நடப்பதாகவும், அவருடைய நியமங்களையும், கட்டளைகளையும் முறைமைகளையும் கடைப்பிடிப்பதாகவும், அவர் குரலுக்குச் செவி கொடுப்பதாகவும் இன்று நீ அவருக்கு வாக்களித்துள்ளாய்.18 நீ அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்தால், அவர் கூறியபடியே நீ அவருக்குச் சொந்தமான மக்களினமாய் இருப்பாய் என்றும்,19 அவர் உருவாக்கிய எல்லா மக்களினங்களிலும், புகழிலும், பெயரிலும், மாட்சியிலும் உன்னையே உயர்த்துவார் என்றும், அதனால் உன் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினமாய் நீ இருப்பாய் என்றும் ஆண்டவர் இன்று உனக்கு வாக்களித்துள்ளார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.
திருப்பாடல்கள் 119:1-2,4-5,7-8

1 மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர். 2 அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்; முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர்.

4 ஆண்டவரே! நீர் உம் நியமங்களைத் தந்தீர்; அவற்றை நாங்கள் முழுமையாய்க் கடைப்பிடிக்க வேண்டும் என்றீர். 5 உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க, என் நடத்தை உறுதியுள்ளதாய் இருந்தால் எவ்வளவோ நலம்!

7 உம் நீதிநெறிகளை நான் கற்றுக்கொண்டு நேரிய உள்ளத்தோடு உம்மைப் புகழ்வேன். 8 உம் விதிமுறைகளை நான் கடைப்பிடிப்பேன்; என்னை ஒருபோதும் கைவிட்டுவிடாதேயும்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5:43-48

43 ' ″ உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக ″ , ″ பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக ″ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள்.44 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். 45 ' இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.46 உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரி தண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா?47 நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா?48 ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு தம் சீடரை நோக்கி, 'நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?' என்று கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, 'நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்' என்று உரைத்தார்'' (மத்தேயு 16:15-16)

கடவுளின் ஆட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்துக்கொண்டே செல்கிறார் இயேசு. அப்போது மக்கள் அவரைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். ''யார் இவர்?'' என்னும் கேள்வி அவர்கள் உள்ளத்தில் எழுகிறது. அதற்கு ஒவ்வொருவரும் ஓரொரு பதில் கொடுக்கின்றனர். இதை இயேசு தம் சீடர்களிடம் கேட்டு அறிந்துகொள்கிறார். ஆனால் இயேசுவைப் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைத் தவிர அவருடைய சீடர்களே அவரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அறிய அவருக்கு விருப்பம். தம் சீடர்கள் தம்மைச் சரியாகப் புரிந்துகொண்டுள்ளார்களா என்பதை அறிய விழைந்த இயேசு அவர்களிடம், ''நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?'' என்று கேட்கிறார் (மத் 16:15). வழக்கம்போல சீமோன் பேதுரு இயேசுவின் கேள்விக்குப் பதில் தருகிறார். அதாவது இயேசு ''மெசியா''; ''வாழும் கடவுளின் மகன்''. மெசியா மக்களைத் தேடி வந்து, அவர்களை உரோமை ஆதிக்கத்திலிருந்து விடுவித்து அவர்களுச் சுதந்திரம் நல்குவார் என்னும் நம்பிக்கை யூத மக்களிடையே நிலவியது. பேதுரு அதையே இயேசுவிடம் சொல்கிறார். அதே நேரத்தில் மாட்சியுடன் வருகின்ற மெசியா ''கடவுளின் மகனாகவும்'' இருப்பதை சீமோன் வெளிப்படுத்துகிறார். -- தம்மை மெசியா என அழைத்த சீமோன் பேதுருவுக்கு இயேசுவும் ஒரு புதிய பெயர் அளிக்கின்றார். அதாவது, இனிமேல் அவர் ''பேதுரு'' என அழைக்கப்படுவார். அதற்கு, பாறை, கல் என்று பொருள். அந்த உறுதியான கல்லின்மீது திருச்சபை கட்டி எழுப்பப்படும். இதன் பொருள் என்ன? பேதுரு திருச்சபையில் ஒரு முக்கிய பொறுப்பு வகிக்கிறார். பன்னிரு திருத்தூதர்கள் நடுவே பேதுருவை முதல்வராக ஏற்படுத்திய இயேசு தாம் உருவாக்கிய திருச்சபையை அன்புச் சமூகமாக வழிநடத்தும் பொறுப்பையும் அவர்களிடம் கொடுக்கிறார். இருப்பினும், திருச்சபை என்பது இயேசுவின் பெயரால் கூடி வருகின்ற அன்புச் சமூகம். சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த இயேசுவின் ஆவியானவர் திருச்சபையின் உயிர்மூச்சாக இருக்கின்றார். அவருடைய தூண்டுதலுக்கு நாம் செவிமடுக்க வேண்டும்; நம் நடுவே உயிருடன் இருந்து செயலாற்றும் அவருடைய துணையோடு ''இயேசு யார்'' என்னும் கேள்விக்குப் பதில் இறுக்க வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் அன்பை எந்நாளும் துய்த்து வாழ்ந்திட அருள்தாரும்.