யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம்
2013-02-14

திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வியாழக்கிழமை


முதல் வாசகம்

அவரது கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் கடைப்பிடி.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 30:15-20

15 இதோ பார், வாழ்வையும் நன்மையையும், சாவையும் தீமையையும் இன்று நான் உனக்கு முன்பாக வைத்துள்ளேன்.16 அது இதுதான்: இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். உன் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு. அவரைப் பின்பற்றி அவரது வழியில் நட. அவரது கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் கடைப்பிடி. அப்போது நீ வாழ்வாய், நீ பலுகுவாய். நீ உடைமையாகக் கொள்ளப்போகும் நாட்டில் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசிவழங்குவார்.17 ஆனால், உனது உள்ளம் விலகிச் சென்று, நீ செவிகொடாமல் கெட்டலைந்து, வேறு தெய்வங்களை வணங்கி, அவற்றுக்குப் பணிவிடை புரிந்தால்,18 இன்று நான் உனக்கு அறிக்கையிட்டுக் கூறுகிறேன். நீ நிச்சயம் அழிந்துபோவாய். நீ உரிமையாக்கிக் கொள்ளுமாறு, யோர்தானைக் கடந்து சென்றடையும் பூமியில் உன் வாழ்நாள் நீடித்திருக்காது.19 உன் மேல் இன்று நான் விண்ணையும் மண்ணையும் சான்றாக அழைத்து, வாழ்வையும் சாவையும், ஆசியையும் சாபத்தையும் உனக்கு முன் வைக்கிறேன். நீயும் உனது வழித்தோன்றல்களும் வாழும் பொருட்டு வாழ்வைத் தேர்ந்துகொள். 20 உன் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு: அவரது குரலுக்குச் செவிகொடு: அவரையே பற்றிக் கொள். ஏனெனில், அவரே உனது வாழ்வு: அவரே உன் நீடிய வாழ்வு. அதனால், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்னும் உன் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டில் நீ குடியேறுவாய்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் மீது நம்மிக்கை கொண்டவரே பேறு பெற்றவர்
திருப்பாடல்கள் 1:1-4,6

1 நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்;

3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்.4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர்.

6 நேர்மையாளரின் நெறியை ஆணடவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9:22-25

22 மேலும் இயேசு, ' மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலைசெய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் ' என்று சொன்னார்.23 பின்பு அவர் அனைவரையும் நோக்கி, ' என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.24 ஏனெனில், தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்.25 ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, 'என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்' என்றார்''

இயேசுவின் சீடர்கள் இயேசுவைத் தம் தலைவராக, குருவாக ஏற்பவர்கள். சீடர்கள் தம்மைப் ''பின்பற்ற வேண்டும்'' என இயேசு கேட்டார். பின்பற்றுதல் என்பது ஒருவரின் பின்னால் நடந்துசெல்கின்ற வெளிச்செயலை மட்டுமல்ல, உள்ளார்ந்த விதத்தில் நிகழ்கின்ற ஒரு செயலை இவண் குறிக்கிறது. அதாவது, இயேசுவைப் பின்பற்ற விரும்புவர் முதலில் ''தான், தனது'' என்னும் உணர்வைக் கைவிடவேண்டும்; தன்னைப் பற்றி எண்ணாமல் இயேசுவிடத்தில் தன் எண்ணத்தைத் திருப்ப வேண்டும். கடவுள் நமக்குத் தருகின்ற இவ்வுலக வாழ்வு பொருளற்றது என்பதற்காக அல்ல, மாறாக, இயேசு வாக்களிக்கின்ற ''நிலையான வாழ்வுக்கு'' முன்னால் இவ்வுலக வாழ்வு சிறியதே என உணர்ந்து நாம் வாழ்வதற்கு அழைக்கப்படுகிறோம். இயேசுவும் தம்மைப் பற்றிக் கவலைப்படாமல் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதிலேயே கருத்தாயிருந்தார் (காண்க: பிலி 2:6-8). அதுபோலவே இயேசுவின் சீடர்களும் இருக்க வேண்டும். -- தம்மைப் பின்பற்றுவோர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு இயேசு விதிக்கின்ற இரண்டாம் நிபந்தனை நாம் நமது ''சிலுவையைச் சுமக்க வேண்டும்'' என்பதாகும் (மத் 16:24). இதுவும் தன்னலம் துறத்தலைக் குறிப்பதே. சிலுவை என்பது நம் வாழ்வில் ஏற்படுகின்ற இன்னல்களையும் தடைகளையும் சிக்கல்களையும் குறிக்கும் அடையாளம்; குறிப்பாக நாம் இயேசுவைப் போல நம் உயிரையே கையளிக்கவும் தயங்கலாகாது என்பதற்குச் சிலுவை ஓர் அடையாளமாக உள்ளது. எனவே, இயேசுவின் சீடர்களாக வாழ விரும்பும் நாம் முழுமனத்தோடு அவரைப் பின்பற்ற அழைக்கப்படுகிறோம். அவ்வாறு செயல்படும்போது நாம் நம் உயிரையும் ஒரு பொருட்டென மதிக்காமல் அவருக்காகவே வாழ்வோம்; அவருக்காக உயிர் துறக்கவும் தயாராயிருப்போம்.

மன்றாட்டு:

இறைவா, எம் வாழ்வையே பற்றிக்கொள்ளாமல் உம் திருமகனைப் பற்றிக்கொண்டு அவர் வழி சென்றிட எங்களுக்கு அருள்தாரும்.