யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)திருவழிப்பாட்டு ஆண்டு C (13-02-2013)

தவக்காலத்தைத் தொடங்குவோம் ... ! மாற்றம் பெற ஏற்ற காலம்.

இயேசு, 'மக்கள் பார்க்கவேண்டுமென்று அவர்கள்முன் 
உங்கள் அறச்செயல்களைச் செய்யாதீர்கள்!/> இயேசு, 'மக்கள் பார்க்கவேண்டுமென்று அவர்கள்முன் 
உங்கள் அறச்செயல்களைச் செய்யாதீர்கள்!/> இயேசு, 'மக்கள் பார்க்கவேண்டுமென்று அவர்கள்முன் 
உங்கள் அறச்செயல்களைச் செய்யாதீர்கள்!/> இயேசு, 'மக்கள் பார்க்கவேண்டுமென்று அவர்கள்முன் 
உங்கள் அறச்செயல்களைச் செய்யாதீர்கள்!/> இயேசு, 'மக்கள் பார்க்கவேண்டுமென்று அவர்கள்முன் 
உங்கள் அறச்செயல்களைச் செய்யாதீர்கள்!/> இயேசு, 'மக்கள் பார்க்கவேண்டுமென்று அவர்கள்முன் 
உங்கள் அறச்செயல்களைச் செய்யாதீர்கள்!/>


திருப்பலி முன்னுரை

இறைத்திருமகன் இயேசுக் கிறிஸ்துவில் அன்பு கொண்டுள்ள அருட்தந்தை! அருட்தந்தையர்களே) இறைமக்களே! உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்தைக் கூறிக்கொள்வதில் பெரிதும் மகிழ்கிறேன். தவத்தின் அடையாளங்களை அணிந்து நோன்பு நாட்களைத் தொடங்கியிருக்கிற உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறேன்.

நோன்பு, அறச் செயல்கள், இறைவேண்டல் என்னும் முப்பெரும் தவச் செயல்களில் ஈடுபட இன்றைய வாசகங்கள், குறிப்பாக நற்செய்தி வாசகம் அழைப்பு விடுக்கிறது. அதே வேளையில், இந்த தவச் செயல்கள் வெளிவேடமாக மாறிவிடக் கூடாது என்று எச்சரிக்கிறார் ஆண்டவர் இயேசு. காரணம், இவற்றின் வழியாக பிறரின் பாராட்டையும், மதிப்பையும் பெற்றுவிட்டால், அதுவே இத்தவச் செயல்களின் பலன்களை வீழ்த்திவிடுகிறது. பரிசேயர்கள் இவ்வாறுதான் இறையருளை இழந்தனர் எனச் சுட்டிக்காட்டுகிறார் இயேசு.

உலகில் நடைபெறும் பாவச்செயல்களையும் குற்றங்களையும் நினைத்து மனம் வருந்தும் காலம். கொஞ்ச நேரம் கண்ணை ழூடி, இன்று உலகில் நடைபெறும், நடைபெற்ற பாவங்கள், குற்றங்கள், திட்டமிட்ட தவறுகள் இவைகளை நினைத்துப் பாருங்கள். கணக்கிட முடியாது. கற்பனை செய்ய முடியாது. அவ்வளவு பயங்கரம். அவ்வளவு கொடூரம். அவ்வளவு அயோக்கியத்தனம்.

ஒவ்வொரு தனி மனிதனும் சிறிது பெரிதாக செய்கின்ற தவறுகள் ஏராளம் ஏராளம். நீங்கள் உங்களுக்கு எதிராக, கணவன் மனைவி மக்களுக்கு எதிராக இன்றைக்குச் செய்த மிகச் சிறிய தவறுகள் குற்றங்கள் எத்தனை. இப்படி உலகம் எங்கும் எத்தனை ஒவ்வொரு நாளும் நடந்துகொண்டு இருக்கின்றன.

இந்த நாற்பது நாட்களும் இந்த தவறுகளைத் தவிர்த்து, புனிதமான சிந்தனையும் செயலும் நம்மில் அதிகமாக்கிட வேண்டும். ஆண்வரோடு உள்ள உறவை அதிகமாக்க, செபம், கோயில், வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.

கூடுதலாக சில அன்புச் செயல்கள். தான தர்மங்கள், ஏழைகளுக்கு உதவுதல் செய்யுங்கள். உங்களின் சில ஆசைகளை அடக்கி, தேவைகளைக் குறைத்து, நோன்பிருந்து அந்த சேமிப்பை உங்களது நலத்திட்டமாக உதவுங்கள். தவக்காலம் அருளின் காலமாக உங்களுக்கு அமையும். வரம் கேட்டு தொடரும் இத்திருப்பலியில் இறைஞ்சி மன்றாடுவோம். இறையாசீர் பெற்றுக் கொள்வோம்.முதல் வாசகம்

உங்கள் இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்
யோவேல் நூலிலிருந்து வாசகம் 2:12-18

12 இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள் என்கிறார் ஆண்டவர்.13 நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள். அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்: நீடிய பொறுமையுள்ளவர், பேரன்புமிக்கவர்: செய்யக் கருதிய தீங்கைக் குறித்து மனம் மாறுகின்றவர்.14 ஒருவேளை அவர் தம் மனத்தை மாற்றிக்கொண்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு தானியப் படையலையும் நீர்மப் படையலையும் நீங்கள் அளிக்குமாறு உங்களுக்கு ஆசி வழங்குவார். இதை யார் அறிவார்?15 சீயோனில் எக்காளம் ஊதி எச்சரியுங்கள்: புனிதமான உண்ணா நோன்புக்கென நாள் குறியுங்கள்: வழிபாட்டுப் பேரணியைத் திரட்டுங்கள்.16 மக்களைத் திரண்டு வரச்செய்யுங்கள்: புனித கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்: முதியோரைக் கூடிவரச் செய்யுங்கள், பிள்ளைகளையும் பால் குடிக்கும் குழந்தைகளையும் ஒருசேரக் கூட்டுங்கள்: மணமகன் தன் அறையை விட்டு வெளியேறட்டும்: மணமகள் தன் மஞ்சத்தைவிட்டுப் புறப்படட்டும்.17 ஆண்டவரின் ஊழியர்களாகிய குருக்கள் கோவில் மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையே நின்று அழுதவண்ணம், "ஆண்டவரே, உம் மக்கள்மீது இரக்கம் கொள்ளும்: உமது உரிமைச்சொத்தை வேற்றினத்தார் நடுவில் நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாக்காதீர்" எனச் சொல்வார்களாக! 'அவர்களுடைய கடவுள் எங்கே?' என வேற்றினத்தார் கூறவும் வேண்டுமோ?18 அப்பொழுது ஆண்டவர் தம் நாட்டின்மேல் பேரார்வம் கொண்டு தம் மக்கள் மீது கருணை காட்டினார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே! இரக்கமாயிரும்; ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்.
திருப்பாடல்கள் 51:1-4, 10-12, 15

1 கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.2 என் தீவினை முற்றிலும் நீங்கும் படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும்;

3 ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக் கண்முன் நிற்கின்றது.4 உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன்; எனவே, உம் தீர்ப்பினால் உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர்; உம் தண்டனைத் தீர்ப்பில் நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர்.

10 கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்.11 உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும்.12 உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.

15 என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும்.

இரண்டாம் வாசகம்

கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம்
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 5:20-6:2

.20 எனவே நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம்.21 நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்.1 நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்ட அருளை வீணாக்க வேண்டாம் என அவரோடு இணைந்து உழைக்கும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.2 தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்: விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன் எனக் கடவுள் கூறுகிறார். இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்.அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6:1-6, 16-18

1 ' மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது.2 ' நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப்பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர், மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக் கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.3 நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்.4 அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்; மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.5 ' நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப்போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்று விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.6 ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக் கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.16 மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம். தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்கவேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.17 நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள்.18 அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது; மாறாக. மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.விசுவாசிகள் மன்றாட்டுகள்:


ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச் செய்தருளும்: உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்!

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

ஞானத்தின் ஊற்றே எம் இறைவா!

நீர் கொடையாகக் கொடுத்துள்ள திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள்: இன்றைய சவால்கள் நிறைந்த உலகின் நடுவே தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும் உமது அழைப்பை சரியான முறையில் அடையாளம் கண்டு, நீர் அவர்களிடம் ஒப்படைத்துள்ள இறைமக்களை நிறையுண்மையை நோக்கி வழிநடாத்திச் செயல்படவும், உமது திருவுளம் நிறைவேற்றுவதில் அவர்கள் மகிழ்ச்சியடையவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இரக்கத்தின் நாயகனே ஆண்டவரே,

இத்தவக்காலம் என்னும் கொடைக்காக உமக்கு நன்றி கூறுகிறோம். இந்த நாள்களில் நீர் எங்கள்மீது பொழியவிருக்கிற சிறப்பான பேரன்புக்காக, இரக்கத்துக்காக நன்றி கூறுகிறோம். இறைவா, இந்த நாள்களை நாங்கள் பலனுள்ள விதத்தில் செலவழிக்க உமது அருளை, ஆற்றலை எங்களுக்குத் தர வரம் அருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக என்ற ஆசீரோடு குடும்ப உறவை உருவாக்கிய அன்புத் தந்தையே இறைவா!

எமது குடும்பங்களுக்காக உம்மிடம் வருகின்றோம். இன்றைய நாட்களில் குடும்ப உறவுக்கும் ஒற்றுமைக்கும் மகிழ்ச்சிக்கும் தடையாக இருக்கும் அனைத்துத் தீமைகளையும் உமது இரக்கத்தால் தகர்த்தெறிந்து குடும்பங்களில் அமைதியும் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

தூய ஆவியின் வல்லமையைக் கொண்டவரான இயேசுவே,

இறைவா, பிறருக்கு உதவும் வேளையில் நாங்கள் தன்னலம் நாடாது செயல்பட அருள் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

வழிகாட்டும் இறைவா!

நாங்கள் ஒவ்வொரும் நீர் ஏற்படுத்திய திருச்சபை வழியாக நீர் வெளிப்படுத்தும் பாதைகளையும், கற்பிக்கும் உண்மை நெறிகளையும் அறிந்து அவற்றைப் பின்பற்றி, எம் ஆன்மீக வாழ்விற்கெதிராக வரும் சோதனைகளை வென்று அர்த்தமுள்ள வாழ்வு வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எமக்கு ஆதரவளிக்கும் இறைவா!

கடின நோய்களினால் பாதிக்கப்பட்டு வீடுகளிலும், மருத்துவ மனைகளிலிருந்தும் வேதனைப்படும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். மக்களை வாட்டி வதைக்கும் எல்லா நோய்களும் அகன்று, அவர்கள் சுகமடையவும், அவர்களுடைய வேதனைகளைத் தணித்தருளவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இன்றைய சிந்தனை

"வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்" (மத்தேயு6:3)

இன்று சாம்பல் புதன். 'மனிதனே நீ மண்ணாய் இருக்கிறாய் மண்ணுக்கே திரும்புவாய்' என்பதை நினைவுபடுத்ததும் நாள். இவ்வுலகில் நாம் செய்யும் ஆர்பாட்டங்கள் ஏராளம். ஒரு நொடிப்பொழுது நாம் நினைத்துப்பார்த்தால் நாம் செய்யும் ஆர்பாட்டங்கள் தேவையற்றது என உணரலாம். தவக்காலம் அருளின் காலம். இந்த நாற்பது நாட்களும் கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழாவிற்காக நம்மைத் தயரிக்க கொடுக்கப்பட்டிருக்கும் காலம். நம் வாழ்வைச் சீர்தூக்கிப்பார்த்து தீயவைகளை புறம் தள்ளவும் நல்லவைகளை நாடிச்செல்லவும் அழைக்கும் காலம். நமது ஜெபத்தாலும் தவமுயற்சிகளாலும், அருள்வாழ்வாலும் நம்மை இறைவனோடும் பிறரோடும் ஒப்புறவாக்கிக்கொள்ளும் காலம். நற்செயல்கள் தவக்காலத்தில் மட்டுமல்ல எப்பொழுதும் செய்ய வேண்டும். அந்த நற்செயல்களும் விளம்பரத்திற்காகவோ அல்லது பிறர் போற்றவேண்டும் என்பதற்காகவோ புகழுக்காகவோ செய்வது ஏற்புடையதல்ல. ஆலயங்களில் சிலர் குளல் விளக்குகள் (டியுப் லைட்) வாங்கிவைப்பார்கள். விளக்கை விட அதில் பெயர்கள் பெரிதாகப் பொறிக்கப்பட்டிருக்கும். இன்றய நற்செய்தி இவர்களைப் போன்றோருக்கு இயேசு கொடுக்கும் சாட்டையடி. அறம் செய்வோம். நற்செயல்கள் செய்வோம். தர்மம் செய்வோம். பலனை எதிர்பார்த்து அல்ல, நற்பெயருக்காக அல்ல, புகழுக்காக அல்ல. கடவுளின் மாட்சிக்காக, இறையரசு மண்ணில் மலர. இனிது வாழ்வோம்.

மன்றாட்டு:

இறைவா, தூய உள்ளத்தை எங்களுக்குத் தந்தருளும்.