யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 4வது வாரம் வியாழக்கிழமை
2013-02-07


முதல் வாசகம்

புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசுவின் முன்னிலையிலும் நிற்கிறீர்கள்
எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 12:1-4

18 நீங்கள் வந்து சேர்ந்திருப்பது தொட்டுணரக்கூடிய, தீப்பற்றியெரிகின்ற, இருள்சூழ்ந்த, மந்தாரமான, சுழல்காற்று வீசுகின்ற சீனாய் மலை அல்ல.19 அங்கு எக்காளம் முழங்கிற்று: பேசும் குரலொன்று கேட்டது. அக்குரலைக் கேட்டவர்கள் அதற்குமேல் தங்களோடு அது ஒரு வார்த்தைகூடப் பேசவேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள்.21 நான் அஞ்சி நடுங்கிறேன் என்று மோசேயே சொல்லுமளவுக்கு அக்காட்சி அச்சம் விளைவித்தது.22 ஆனால் நீங்கள் வந்து சேர்ந்திருக்கும் சீயோன் மலை வாழும் கடவுளின் நகர்: விண்ணக எருசலேம். அதனைப் பல்லாயிரக் கணக்கான வானதூதர் சூழ்ந்துள்ளனர்.23 விண்ணகத்தில் பெயர் எழுதப்பட்டுள்ள தலைப்பேறானவர்களின் திருச்சபை விழாக் கூட்டமென அங்கே கூடியுள்ளது. நிறைவுபெற்ற நேர்மையாளர்களோடு சேர்ந்து, அனைவருக்கும் நடுவரான கடவுள் முன்னிலையிலும்,24 புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசுவின் முன்னிலையிலும் நிற்கிறீர்கள். ஆபேலின் இரத்தத்தைப் போலன்றிச் சிறந்த முறையில் குரலெழுப்பும் இயேசுவின் இரத்தத்தினால் தெளிக்கப்பட்டிருக்கிறீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

கடவுளே! உமது கோவிலின் நடுவில் உம் பேரன்பை நினைந்து உருகினோம்.
திருப்பாடல்கள் 103:1-2,13-14,17-18

.2 அழகும் உயரமுமாய் தொலை வடக்கில் திகழும் சீயோன் மலை அனைத்து உலகிற்கும் மகிழ்ச்சியால் இலங்குகின்றது; மாவேந்தரின் நகரும் அதுவே. 3 அதன் அரண்மனைகளில் கடவுள் வீற்றிருந்து, தம்மையே அதன் கோட்டை எனக் காட்டியுள்ளார்.4 இதோ! அரசர் அனைவரும் ஒன்று கூடினர்; அணிவகுத்து ஒன்றாக வந்தனர்.

8 கேள்விப்பட்டவாறே நேரில் யாம் கண்டோம்; படைகளின் ஆண்டவரது நகரில், ஆம், கடவுளின் நகரினில் கண்டோம்; கடவுள் அந்நகரை எந்நாளும் நிலைத்திருக்கச் செய்வார். (சேலா)9 கடவுளே! உமது கோவிலின் நடுவில் உம் பேரன்பை நினைந்து உருகினோம்.

10 கடவுளே! உமது பெயரைப் போலவே உமது புகழும் பூவுலகின் கடை எல்லைவரை எட்டுகின்றது; உமது வலக்கை நீதியை நிலைநாட்டுகின்றது.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6:7-13

7 அப்பொழுது அவர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார். அவர்களுக்குத் தீய ஆவிகள் மீது அதிகாரமும் அளித்தார்.8 மேலும், ' பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக் கொண்டு போக வேண்டாம்.9 ஆனால் மிதியடி போட்டுக் கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும் ' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.10 மேலும் அவர், ' நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள்.11 உங்களை எந்த ஊராவது ஏற்றுக் கொள்ளாமலோ உங்களுக்குச் செவி சாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும் பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும் ' என்று அவர்களுக்குக் கூறினார்;12 அப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்;13 பல பேய்களை ஓட்டினார்கள்; உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''அப்பொழுது இயேசு பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார்'' (மாற்கு 6:7)

இயேசுவின் பணியைத் தொடர்வது அவருடைய சீடர்களின் கடமை. இயேசு எந்த உண்மையைப் பறைசாற்றினாரோ அதே உண்மையை வருங்காலத் தலைமுறையினரும் அறிந்து, கடவுளிடமும் அவர் அனுப்பிய திருமகனிடமும் நம்பிக்கை கொள்ளும் விதத்தில் நற்செய்திப் பணி தொடர்ந்து நடைபெற வேண்டும். இயேசு பன்னிரு திருத்தூதரையும் தம்மிடம் அழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பினார் என மாற்கு விவரிப்பது தொடக்க காலத் திருச்சபையில் நிலவிய வழக்கத்தை நம் கண்முன் கொணர்கிறது. யூத வழக்கப்படி, ஒரு நிகழ்ச்சி குறித்து சாட்சி பகர இருவர் தேவை. எனவே, இருவர் இருவராகச் சென்று கடவுளாட்சி பற்றிய நற்செய்தியை அறிவிப்பது வழக்கமாக இருந்தது. அவர்கள் தாங்கள் அறிவித்த செய்தி உண்மையே எனச் சான்று பகர்ந்தார்கள். மேலும், நற்செய்தி அறிவிக்கச் செல்வோர் எளிய வாழ்க்கைமுறையைத் தழுவ வேண்டும் என்பதும் உணர்த்தப்பட்டது. பன்னிரு திருத்தூதரும் இயேசுவின் பணியைத் தொடர்ந்தார்கள். எனவேதான் அவர்கள் ''மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்'' (மாற் 6:12). -- இயேசு அறிவித்த நற்செய்தியை ஏற்போர் வாழ்க்கையில் ஒரு மாற்றம் நிகழ வேண்டும். மன மாற்றம் என்பது மனிதரின் உள்ளத்தின் ஆழத்தில் வேரோட்டமான விதத்தில் நிகழ்கின்ற ஒன்று. உள்ளார்ந்த விதத்தில் நிகழ்கின்ற மாற்றம் கண்ணோட்டங்களையும் பாhர்வைகளையும் மாற்றியமைக்கும். அப்போது நம் வாழ்க்கை முறையும் மாற்றம் பெறும். இவ்வுலகும் ஆங்கே செயலாற்றும் கடவுளின் உடனிருப்பும் நம் உள்ளத்தில் புதிய முறையில் தோன்றும். கடவுளிடமிருந்து நம்மைப் பிரிக்கின்ற அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்துவிட்டு, அவரை நம்பிக்கையோடு அணுகிட நாம் முன்வருவோம். நம் உள்ளத்திலும் வாழ்விலும் மாற்றம் ஏற்படும்போது நாம் பிறருடைய வாழ்விலும் மாற்றம் நிகழ வேண்டும் என்னும் குறிக்கோளைச் செயல்படுத்த ஊக்கத்தோடு ஈடுபடுவோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் வழியாக எங்களுக்கு நீர் வழங்கிய உண்மைக்கு நாங்கள் உறுதியான உள்ளத்தோடு சான்று பகர அருள்தாரும். .