யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 4வது வாரம் செவ்வாய்க்கிழமை
2013-02-05


முதல் வாசகம்

இழிவையும் பொருட்படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டார்.
எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 12:1-4

1 எனவே, திரண்டு வரும் மேகம் போல் இத்தனை சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து நிற்க எந்தச் சுமையையும், நம்மைப் பற்றிக் கொண்டிருக்கும் எந்தப் பாவத்தையும் உதறித்தள்ளிவிட்டு, நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மனஉறுதியோடு ஓடுவோமாக.2 நம்பிக்கையைத் தொடங்கி வழி நடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது கண்களைப் பதிய வைப்போம். அவர் தாம் அடையவிருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும் பொருட்படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டார். இப்போது, கடவுளது அரியணையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.3 பாவிகளால் தமக்கு உண்டான எந்த எதிர்ப்பையும் மன உறுதியோடு தாங்கிக்கொண்ட அவரை எண்ணிப்பாருங்கள். அப்போது நீங்கள் மனம் சோர்ந்து தளர்ந்து போக மாட்டீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வராக!
திருப்பாடல்கள் 22:25-31

25 மாபெரும் சபையில் நான் செலுத்தும் புகழ் உம்மிடமிருந்து எழுவதாக! உமக்கு அஞ்சுவோர் முன்னிலையில் என் பொருத்தனைகளைச் செலுத்துவேன். 26 எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்; ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வராக! அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக!

27 பூவுலகின் கடையெல்லைவரை உள்ளோர் அனைவரும் இதை உணர்ந்து ஆண்டவர் பக்கம் திரும்புவர்; பிற இனத்துக் குடும்பத்தார் அனைவரும் அவர் முன்னிலையில் விழுந்து பணிவர். 28 ஏனெனில் அரசு ஆண்டவருடையது; பிற இனத்தார்மீதும் அவர் ஆட்சி புரிகின்றார்.

29 மண்ணின் செல்வர் யாவரும் அவரைப் பணிவர்; புழுதிக்குள் இறங்குவோர் யாவரும் தம் உயிரைக் காத்துக்கொள்ளாதோரும் அவரை வணங்குவர். 30 வருங்காலத் தலைமுறையினர் அவரைத் தொழுவர்; இனிவரும் தலைமுறையினருக்கு ஆண்டவரைப்பற்றி அறிவிக்கப்படும்.

31 அவர்கள் வந்து, அவரது நீதியை அறிவிப்பர்; இனி பிறக்கப்போகும் மக்களுக்கு 'இதை அவரே செய்தார்' என்பர்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5:21-43

21 இயேசு படகிலேறி, கடலைக் கடந்து மீண்டும் மறு கரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார்.22 தொழுகைக் கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து,23 ' என் மகள் சாகுந்தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள் ' என்று அவரை வருந்தி வேண்டினார்.24 இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக் கொண்டே பின்தொடர்ந்தனர்.25 அப்போது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார்.26 அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். அவர் நிலைமை வர வர மிகவும் கேடுற்றது.27 அவர் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையைத் தொட்டார்.28 ஏனெனில், ' நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன் ' என்று அப்பெண் எண்ணிக் கொண்டார்.29 தொட்ட உடனே அவருடைய இரத்தப் போக்கு நின்று போயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார்.30 உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, ' என் மேலுடையைத் தொட்டவர் யார்? ' என்று கேட்டார்.31 அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், ' இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், ' என்னைத் தொட்டவர் யார்? ' என்கிறீரே! ' என்றார்கள்.32 ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்டவரைக் காணும்படி சுற்றிலும் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்.33 அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய், அஞ்சி நடுங்கிக்கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார்.34 இயேசு அவரிடம், ' மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு ' என்றார்.35 அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக் கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், ' உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்? ' என்றார்கள்.36 அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், ' அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர் ' என்று கூறினார்.37 அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை.38 அவர்கள் தொழுகைக் கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார்.39 அவர் உள்ளே சென்று, ' ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள் ' என்றார்.40 அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள். ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றியபின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக் கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார்.41 சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், ' தலித்தா கூம் ' என்றார். அதற்கு, ' சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு ' என்பது பொருள்.42 உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்மறந்து நின்றார்கள்.43 ' இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது ' என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

"அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்"

உங்கள் வாழ்வு வளமாக அமைய, இயேசு சொல்வதை மட்டும் கேளுங்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்கள் நம்பிக்கையைச் சிதறடிக்கலாம். நண்பர்கள் உங்கள் கடவுள் பக்தியைக் கேலி பேசலாம். உங்களைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகள், உங்கள் மனதில் போராட்டத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தலாம்.இயேசு சொல்லும் ஏவுதல்களுக்கு எப்போதும் செவி சாயுங்கள். "அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்" அவன் தொழுகைக்கூடத் தலைவன். ஆனாலும் தன் பதவியையும் பணத்தையும் பெரிதாக நினைக்கவில்லை. இதன் மத்தியிலும் கடவுள் நம்பிக்கையுடையவனாக இருந்தான். இயேசுவின் காலில் விழுகிறான். இயேசு கை வைத்தால் மகள் குணம் பெறுவாள் என உறுதியாக நம்புகிறான். ஆனால், கூட இருந்தவர்கள் மனம் சலித்து பேசுகின்றனர். உங்கள் வாழ்விலும் இதுபோல பலர் உங்கள் இறை நம்பிக்கையை உடைக்கலாம். கேலி பேசலாம். "அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்" உங்கள் வாழ்வில் என்ன நடந்தாலும் "அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்". நீங்கள் நம்பியிருக்கும் உங்கள் இயேசு உங்களை ஒருபோதும் கைவிடார். உங்களின் எத்தகைய சிக்கலுக்கும் தீர்வு தருவார். எல்லாமே உங்களுக்கு எதிராயினும், எல்லோரும் உங்களுக்கு எதிரான எண்ணம் கொண்டிருந்தாலும், "அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்". நீங்கள் வளமோடு வாழ்வீர்கள். இனிது வாழ்வீர்கள்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் வாழ்க்கையே ஓர் இன்னிசைப் பாடலாக உம்மை நோக்கி எழுந்திட அருள்தாரும். .