யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 4வது வாரம் திங்கட்கிழமை
2013-02-04


முதல் வாசகம்

பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக் கொண்டேன்.
கொரிந்தியருக்கு எழுதிய முதல் நிருபத்திலிருந்து வாசகம் 9:19-27

19 நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக் கொண்டேன்.20 யூதரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர யூதருக்கு யூதரைப் போலானேன். நான் திருச்சட்டத்திற்கு உட்படாதவனாயிருந்தும், திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர அச்சட்டத்திற்கு உட்பட்டவர் போலானேன்.21 திருச்சட்டத்திற்கு உட்படாதவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர திருச்சட்டத்திற்கு உட்படாதவர் போலவும் ஆனேன். ஆனால் நானோ கடவுளின் சட்டத்திற்கு உட்படாதவனல்ல: ஏனெனில் நான் கிறிஸ்துவின் சட்டத்திற்கு உட்பட்டவன்.22 வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவனானேன். எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.23 நற்செய்தியால் வரும் ஆசியில் பங்கு பெறவேண்டி நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்கிறேன்.24 பந்தயத்திடலில் ஓட வந்திருப்போர் பலர் ஓடினாலும் பரிசு பெறுபவர் ஒருவரே. இது உங்களுக்குத் தெரியாதா? எனவே, பரிசு பெறுவதற்காகவே நீங்களும் ஓடுங்கள்.25 பந்தயத்தில் போட்டியிடுவோர் யாவரும் அழிவுறும் வெற்றி வாகை சூடுவதற்காகத் தன்னடக்கப் பயிற்சிகளில் ஈடுபடுவர். நாமோ அழிவற்ற வெற்றி வாகை சூடுவதற்காக இப்படிச் செய்கிறோம்.26 நான் குறிக்கோள் இன்றி ஓடுபவரைப்போல ஓடமாட்டேன். காற்றைக் குத்துபவரைப்போலக் குத்துச் சண்டை இடமாட்டேன்.27 பிறருக்கு நற்செய்தியை அறிவிக்கிற நானே தகுதியற்றவனாக மாறிவிடாதவாறு என் உடலை அடக்கிக் கட்டுப்படுத்துகிறேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக!
திருப்பாடல்கள் 67:1-7

கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! (சேலா)2 அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர். (சேலா)

3 கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக!4 வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். (சேலா)

5 கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக!6 நானிலம் தன் பலனை ஈந்தது; கடவுள், நம் கடவுள் நமக்கு ஆசி வழங்கினார்.7 கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக!


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! எனக்குக் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1:43-51

20 வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தோருள் கிரேக்கர் சிலரும் இருந்தனர்.21 இவர்கள் கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து, ' ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம் ' என்று கேட்டுக் கொண்டார்கள்.22 பிலிப்பு அந்திரேயாவிடம் வந்து அதுபற்றிச் சொன்னார்; அந்திரேயாவும் பிலிப்பும் இயேசுவிடம் சென்று அதைத் தெரிவித்தனர்.23 இயேசு அவர்களைப் பார்த்து, ' மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது.24 கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.25 தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்.26 எனக்குக் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார் ' என்றார்.27 மேலும் இயேசு, ' இப்போது என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது. நான் என்ன சொல்வேன்? ' தந்தையே, இந்த நேரத்திலிருந்து என்னைக் காப்பாற்றும் ' என்பேனோ? இல்லை! இதற்காகத் தானே இந்நேரம்வரை வாழ்ந்திருக்கிறேன்.28 தந்தையே, உம் பெயரை மாட்சிப்படுத்தும் ' என்றார். அப்போது வானிலிருந்து ஒரு குரல், ' மாட்சிப்படுத்தினேன்; மீண்டும் மாட்சிப்படுத்துவேன் ' என்று ஒலித்தது.29 அங்குக் கூட்டமாய் நின்று கொண்டிருந்த மக்கள் அதைக் கேட்டு, ' அது இடிமுழக்கம் ' என்றனர். வேறு சிலர், ' அது வானதூதர் ஒருவர் அவரோடு பேசிய பேச்சு ' என்றனர்.30 இயேசு அவர்களைப் பார்த்து, ' இக்குரல் என் பொருட்டு அல்ல, உங்கள் பொருட்டே ஒலித்தது.31 இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்குள்ளாகிறது; இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான்.32 நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும் போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன் ' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

".. ..உமது வீட்டிற்குப் போய்.. அறிவி"

இயேசு நமக்காக என்னவெல்லாமோ செய்கிறார். நமக்காக எதையும் தாங்கிக்கொள்கிறார். நமக்கு நல்வாழ்வு கொடுப்பதற்காக தான் காயப்படுவதற்கும், இரத்தம் சிந்துவதற்கும்,கொடிய பாடுகள்படவும், தன் உயிரை தியாகம் செய்யவும் முன்வந்தார். இன்றும் நம் வாழ்வு சிறக்க இவை அனைத்தையும் செய்துகொண்டுதான் இருக்கிறார். தீய ஆவியின் பிடியில் சிக்கித் தவித்த மனிதனை அதிலிருந்து விடுவிக்க அவர் எவ்வளவு சிரமப்பட வேண்டியுள்ளது. தீய ஆவியும் கேள்வி கேட்கிறது, "உமக்கு இங்கு என்ன வேலை?" அதுவும் விண்ணப்பம் வைக்கிறது, "நாங்கள் அப்பன்றிகளுக்குள் புகும்படி எங்களை அங்கே அனுப்பிவிடும்". தீய ஆவியை அந்த மனிதனிடமிருந்து விரட்டிய பின் அவருக்குக் கிடைத்த பரிசு, 'தங்கள் பகுதியை விட்டுப் போய்விடுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டார்கள்' என்பதுதான். இயேசுவோ, அதற்காக மனம் வேதனைப்படவோ, தான் செய்து வந்த நற்பணியை நிறுத்திவிடவோ இல்லை. தன் பணி தொடர அம்மனிதனை நோக்கி,"உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கங் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்" என்றார். என் பின்னால் வர வேண்டாம். உன் வீட்டில் நன்றாக வாழ்ந்து, உன் உற்றார் உறவினருக்கு இயேசுவை எடுத்துச் சொல்லி, சாட்சியம் பகர அனுப்பினார். நமக்கும் நாள்தோறும் பல நன்மைகளைச் செய்து, நம் வீடுகளுக்கு அனுப்பியிருக்கிறார். நாம் வாழும் சூழலில் நம் அருகில் வாழ்வோருக்கு இயேசுவை எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற கட்டளையோடு நம்மை அனுப்பியுள்ளார். இதைச் செய்து இனிது வாழ்வோம்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளத்தில் நல்ல எண்ணங்களை எழச் செய்து, அவற்றைச் செயல்படுத்தும் வலிமையை எங்களுக்குத் தந்தருளும்.