யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)



திருவழிப்பாட்டு ஆண்டு C (03-02-2013)

சொந்த ஊரில் !

இயேசு, 'இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் 
ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை/> இயேசு, 'இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் 
ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை/> இயேசு, 'இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் 
ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை/>


திருப்பலி முன்னுரை

என் இனிய அருட்தந்தை! (அருட்தந்தையர்களே) மற்றும் சகோதரர்களே சகோதரிகளே நண்பர்களே! உங்கள் அனைவருக்கும் இயேசுவின் பெயரில் என் அன்பையும் வாழ்த்தையும் உரித்தாக்குகிறேன். ஆண்டின் பொதுக்காலம் 4 ஆம் வாரம். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்று இயேசு கூறும் இறைவார்த்தை பகுதி இன்று நற்செய்தியில் நமக்கு தரப்படுகின்றது.

கடவுளின் பெயரால் மக்களுக்குச் செய்தி அறிவித்தவர்கள் இறைவாக்கினர். பழைய ஏற்பாட்டில் வருகின்ற மோசே, எசாயா, எசேக்கியேல், எரேமியா போன்றோர் எதிர்காலத்தில் என்ன நிகழும் என்பதை மட்டுமே அறிவிக்கவில்லை; அவர்கள் மக்களையும் ஆட்சியாளர்களையும் கண்டித்துப் பேசியதுண்டு; தம் தீய நடத்தையை விட்டுவிட்டு கடவுளை நோக்கித் திரும்பவேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தியதுண்டு.

மக்களுக்குப் பிடிக்காத உண்மைகளையும் கசப்பான எதார்த்தங்களையும் இறைவாக்கினர் துணிந்து அறிவித்ததால் அவர்களுடையே உயிருக்கே ஆபத்து ஏற்பட்ட நேரங்களும் உண்டு. எனவே, இயேசு "இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை" என்று கூறிய சொற்கள் அவருடைய வாழ்க்கையிலேயே உண்மையாயின. இயேசு புரிந்த அரும் செயல்களைக் கண்டு, அவர் அறிவித்த இறையாட்சிச் செய்தியைக் கேட்டு மக்கள் எல்லாரும் உடனே அவரை வரவேற்று ஏற்கவில்லை. அவர்களுக்கு இயேசுவைப் பற்றிப் பல விவரங்கள் தெரிந்திருந்ததால் அவரைப் பற்றி மேலும் அறிய முன்வரவில்லை.

ஒவ்வொரு நாளும் இயேசுவைப் புதிதாக அறிகின்ற மனம் நமக்கு இருந்தால் அவரது சாயல் நம்மில் மேலும் தெளிவாகத் தெரிந்திட வழிபிறக்கும். எனவே, இயேசு என்னும் இறைவாக்கினரின் குரல் நம் உள்ளங்களில் எப்போதும் ஒலிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அக்குரலுக்கு நாம் செவிமடுத்து அவரைத் தயக்கமின்றிப் பின்தொடரவும், இயேசுவின் கருக்கு வாய்ந்த வார்த்தைகளால் உள்ளம் கிழிக்கப்பட்டு, மனந்திரும்பிய புதுவாழ்வு வாழவும், இயேசுவை நம் வாழ்வில் முழுமையாக ஏற்று, உண்மையான கிறிஸ்தவர்களாக வாழும் வரம் வேண்டியும், இந்த திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன் என்கிறார் ஆண்டவர்
எரேமியா நூலிலிருந்து வாசகம் 1:4-5, 17-19

4 எனக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு:5 தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்: நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்: மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன்.17 நீயோ உன் இடையை வரிந்து கட்டிக்கொள். புறப்படு, நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல். அவர்கள் முன் கலக்கமுறாதே. இல்லையேல், அவர்கள் முன் உன்னைக் கலக்கமுறச் செய்வேன்.18 இதோ, இன்று நான் உன்னை நாடு முழுவதற்கும், அதாவது, யூதாவின் அரசர்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் அதன் குருக்களுக்கும் நாட்டின் மக்களுக்கும் எதிராக அரண்சூழ் நகராகவும் இரும்புத் தூணாகவும் வெண்கலச் சுவராகவும் ஆக்கியுள்ளேன்.19 அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும் உன்மேல் வெற்றி கொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன் என்கிறார் ஆண்டவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும் எடுத்துரைக்கும்
திருப்பாடல்கள் 71:1-6, 15-17

1 ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; ஒருபோதும் நான் வெட்கமுற விடாதேயும்.2 உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்; எனக்கு நீர் செவிசாய்த்து என்னை மீட்டுக் கொள்ளும்.

3 என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்; ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர்.4 என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும்; நெறிகேடும் கொடுமையும் நிறைந்தோர் பிடியினின்று என்னைக் காத்தருளும்.

5 என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமைமுதல் நீரே என் நம்பிக்கை. 6 பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர்; உம்மையே நான் எப்போதும் புகழ்ந்து போற்றுவேன்.

15 என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும் எடுத்துரைக்கும்; உம் அருட் செயல்களை என்னால் கணிக்க இயலாது. 16 தலைவராகிய ஆண்டவரே! உமது வலிமைமிகு செயல்களை எடுத்துரைப்பேன்; உமக்கே உரிய நீதிமுறைமையைப் புகழ்ந்துரைப்பேன்.

17 கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்; இனிவரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன்.

இரண்டாம் வாசகம்

நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது
கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் நிருபத்திலிருந்து வாசகம் 12:31 - 13:13

!31 எனவே நீங்கள் மேலான அருள் கொடையையே ஆர்வமாய் நாடுங்கள். எல்லாவற்றையும்விடச் சிறந்த நெறி ஒன்றை நான் உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன்.1 நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன்.2 இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும், மறைபொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும், அறிவெல்லாம் பெற்றிருப்பினும், மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும் என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை.3 என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும் என் உடலையே சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும் என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை.4 அன்பு பொறுமையுள்ளது: நன்மை செய்யும்: பொறாமைப்படாது: தற்புகழ்ச்சி கொள்ளாது: இறுமாப்பு அடையாது.5 அன்பு இழிவானதைச் செய்யாது: தன்னலம் நாடாது: எரிச்சலுக்கு இடம் கொடாது: தீங்கு நினையாது.6 அன்பு தீவினையில் மகிழ்வுறாது: மாறாக உண்மையில் அது மகிழும்.7 அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்: அனைத்தையும் நம்பும்: அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்: அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்.8 இறைவாக்கு உரைக்கும் கொடை ஒழிந்துபோம்: பரவசப்பேச்சு பேசும் கொடையும் ஓய்ந்துபோம்: அறிவும் அழிந்துபோம். ஆனால் அன்பு ஒருபோதும் அழியாது.9 ஏனெனில், நமது அறிவு அரைகுறையானது: நாம் அரைகுறையாகவே இறைவாக்கும் உரைக்கிறோம்.10 நிறைவானது வரும் போது அரைகுறையானது ஒழிந்துபோம்.11 நான் குழந்தையாய் இருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன்: குழந்தையின் மனநிலையைப் பெற்றிருந்தேன்: குழந்தையைப்போல எண்ணினேன். நான் பெரியவனானபோது குழந்தைக்குரியவற்றை அறவே விட்டுவிட்டேன்.12 ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல் மங்கலாய்க் காண்கிறோம்: ஆனால் அப்போது நாம் நேரில் காண்போம். இப்போது நான் அரைகுறையாய் அறிகிறேன்: அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல் முழுமையாய் அறிவேன்.13 ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4:21-30

21 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, "நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று" என்றார். 22 அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, "இவர் யோசேப்பின் மகன் அல்லவா? "எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர். 23 அவர் அவர்களிடம், "நீங்கள் என்னிடம், "மருத்துவரே உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும்" என்னும் பழமொழியைச் சொல்லி, "கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும்" எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள். 24 ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. 25 உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர். 26 ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெணண்ணிடமே அனுப்பப்பட்டார். 27 மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழு நோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது" என்றார். 28 தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங் கொண்டனர்; 29 அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வ+ரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். 30 அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


ஆண்டவர் தம் நாவினால் சூட்டும் புதியதொரு பெயரால் நீ அழைக்கப்படுவாய். ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்: உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

ஆசீரும் அருளும் நிறைந்த அன்புத் தந்தையே இறைவா!

உம்மால் தெரிந்தெடுக்கப்பட்டு அர்ச்சித்து மக்களுக்குப் பணி செய்ய அனுப்பப்பட்ட திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும் அன்பின் சாட்சிகளாகவும்: இறைவார்த்தைச் சிறப்பாகவும், அர்த்தமுள்ள விதத்தில் பகிர்ந்தளிப்பவர்களாகவும் செயற்பட அவர்களுக்கு தூய ஆவியின் கொடைகளை நிறைவாக அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஆளுமையின் நாயகனே இறைவா,

உம்மைப் போற்றுகிறோம். இன்றைய வாசகத்தின் வழியாக நீர் கற்றுத் தரும் இந்தப் பாடத்திற்காக நன்றி. ஆண்டவரே, நான் எனது குடும்பத்தினரை, உறவினரை, உடன் ஊழியர்களைப் பார்க்கின்றபோது, முற்சார்பு எண்ணமின்றிப் பார்க்கவும், அவர்களின் சொந்த இயல்புகள், திறமைகளுக்காக அவர்களை மதிக்கவும் வரம் அருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக என்ற ஆசீரோடு குடும்ப உறவை உருவாக்கிய அன்புத் தந்தையே இறைவா!

எமது குடும்பங்களுக்காக உம்மிடம் வருகின்றோம். இன்றைய நாட்களில் குடும்ப உறவுக்கும் ஒற்றுமைக்கும் மகிழ்ச்சிக்கும் தடையாக இருக்கும் அனைத்துத் தீமைகளையும் உமது இரக்கத்தால் தகர்த்தெறிந்து குடும்பங்களில் அமைதியும் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே!

நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும் துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும், இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும் , நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

புதுவாழ்வு தருபவரான இறைவா,

உமது திருமகனின் வார்த்தைகளால் உள்ளம் கிழிக்கப்பட்டவர்களாய், மனந்திரும்பிய புதுவாழ்வு வாழும் வரத்தை எம் பங்கு மக்கள், அருட்சகோதரிகள், பங்குத்தந்தை அனைவருக்கும் அளித்து, இயேசுவின் வழியில் உமது பிள்ளைகளாக திகழும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

இந்த சினனஞ்சிறு குழந்தைகளுக்கு செய்தபோதெல்லாம் எனகே செய்தீர்கள் என்று மொழிந்த இறைவா,

எம் பங்கில் உள்ள சிறுவர் சிறுமியர்கள் அனைவரும் படிப்பிலும், நல்லொலுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டுமென்றும், இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவரும் தங்கள் எதிர்கால வாழ்வை தன் கண்முன் கொண்டு எப்போதும் உமக்கு ஏற்ற பிள்ளைகளாக வாழ தேவையான அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.




இன்றைய சிந்தனை

"இயேசு, 'இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை' என்றார்" (லூக்கா 4:24)

இறைவாக்கினர் எவருக்கும் தம் சொந்த ஊரில் மதிப்பில்லை என்னும் ஆண்டவர் இயேசுவின் அருள்மொழிகளை இன்று சிந்திப்போம். இறைவாக்கினர்களை மட்டுமல்ல, சிந்தனையாளர்களை, சாதனையாளர்களைக்கூட அவரது சொந்த ஊர் சந்தேகக் கண் கொண்டே பார்க்கின்றது. ஏன்? அதுதான் முற்சார்பு எண்ணம். ஒருவரது பெற்றோர், குடும்பப் பின்னணி, வாழும் சூழல் போன்றவற்றைக் கொண்டே ஒருவரது ஆளுமையையை, செயல்பாட்டைக் கணிக்கின்ற தவறை மானிட சமூகம் காலம் காலமாகச் செய்து வருகிறது என்பதனை இயேசுவின் காலத்திலிருந்து இந்நாள்வரை நிலவும் இந்தச் சமூகத் தீமையைக் கொண்டு நாம் அறிகிறோம். ஒவ்வொரு மனிதரும் அவரவர் மதிப்பீடுகளால், செயல்பாடுகளால், இயல்புகளால் மட்டுமே கணிக்கப்பட வேண்டும். மாறாக, அவர்களது பெற்றோர் யார்? அவர்களது பின்னணி என்ன? என்பன போன்ற தரவுகளால் அல்ல. ஆனால், இயேசுவின் சொந்த ஊரைச் சேர்ந்த மக்கள் இந்தத் தவறினைச் செய்தனர். அதுபோல, இன்றும் ஒவ்வொரு குடும்பத்திலும், பங்கிலும், தொழிலகத்திலும், ஊரிலும் இத்தகைய தவறுகள் நடந்துகொண்டே இருக்கலாம். எனவே, இன்று நான் சந்திக்கின்ற ஒவ்வொரு நபரையும் சற்று உன்னிப்பாகக் கவனித்து, அவர்களை முற்சாற்பு எண்ணமின்றிப் பார்க்கின்ற, மதிக்கின்ற பழக்கத்தை உருவாக்குவேன்.

மன்றாட்டு:

ஆளுமையின் நாயகனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். இன்றைய வாசகத்தின் வழியாக நீர் கற்றுத் தரும் இந்தப் பாடத்திற்காக நன்றி. ஆண்டவரே, நான் எனது குடும்பத்தினரை, உறவினரை, உடன் ஊழியர்களைப் பார்க்கின்றபோது, முற்சார்பு எண்ணமின்றிப் பார்க்கவும், அவர்களின் சொந்த இயல்புகள், திறமைகளுக்காக அவர்களை மதிக்கவும் அருள் தாரும்.