யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 3வது வாரம் வியாழக்கிழமை
2013-01-31


முதல் வாசகம்

நேரிய உள்ளத்தோடும் மிகு உறுதியான நம்பிக்கையோடும் அவரை அணுகிச் செல்வோமாக
எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 10:19-25

19 சகோதர சகோதரிகளே, இயேசுவின் உடலைக் கோவிலின் திரைச்சீலைக்கு ஒப்பிடலாம். இத்திரைச்சீலை வழியாகத் திருத்தூயகத்துக்குள் நுழைய நமக்குத் துணிவு உண்டு.20 ஏனெனில் அவர் இரத்தம் சிந்தி நமக்கெனப் புதியதொரு வழியைத் திறந்து வைத்துள்ளார். இதுவே வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் வழி.21 மேலும் கடவுளுடைய இல்லத்தின்மீது அதிகாரம் பெற்ற பெரிய குரு ஒருவர் நமக்கு உண்டு.22 ஆதலால், தீய மனச் சான்றிலிருந்து விடுவிக்கப்பட்ட உள்ளமும் தூய நீரில் கழுவப்பட்ட உடலும் உடையவர்களாய், நேரிய உள்ளத்தோடும் மிகு உறுதியான நம்பிக்கையோடும் அவரை அணுகிச் செல்வோமாக.23 நமக்கு வாக்களித்தவர் நம்பிக்கைக்கு உரியவர். எனவே நாம் எதிர்நோக்கியிருப்பதைப்பற்றித் தயக்கமின்றி அறிக்கையிடுவதில் நிலையாய் இருப்போமாக.24 அன்பு செலுத்தவும் நற்செயல்கள் புரியவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பக் கருத்தாயிருப்போமாக.25 சிலர் வழக்கமாகவே நம் சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை. நாம் அவ்வாறு செய்யலாகாது: ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுவோமாக. இறுதிநாள் நெருங்கி வருகிறதைக் காண்கிறோம்: எனவே இன்னும் அதிகமாய் ஊக்கமூட்டுவோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே
திருப்பாடல்கள் 24:1-6

1 மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.

2 ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலை நாட்டினவரும் அவரே.3 ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவர் யார்?

4 கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர்; வஞ்சக நெஞ்சோடு ஆணையிட்டுக் கூறாதவர்,5 இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.

6 அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே: யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. (சேலா)


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை. வெளியாகாமல் ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4:21-25

21 இயேசு அவர்களிடம், ' விளக்கைக் கொண்டு வருவது எதற்காக? மரக்காலின் உள்ளேயோ கட்டிலின் கீழேயோ வைப்பதற்காகவா? விளக்குத் தண்டின் மீது வைப்பதற்காக அல்லவா?22 வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை. வெளியாகாமல் ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை.23 கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும் ' என்றார்.24 மேலும் அவர், ' நீங்கள் கேட்பதைக் குறித்துக் கவனமாயிருங்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்; இன்னும் கூடுதலாகவும் கொடுக்கப்படும்.25 ஏனெனில், உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும் ' என்று அவர்களிடம் கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

"விளக்கு ..... .. எதற்காக?" (மாற்கு 4:21)

விளக்குகள் வீட்டின் இருளையும் வீதியின் இருளையும் அகற்றப் பயன்படுகிறது. இயேசு இங்கே குறிப்பிடும் விளக்குகள் உயிருள்ள மனித விளக்குகள். இறை அருள் பெற்று ஒளிரும் கிறிஸ்தவ விளக்குகள். மனிதனின் உள்ளத்துள்ளும் மனித சமுதாய வாழ்கையிலும் படர்ந்திருக்கும் அக இருளை அகற்றும் ஒளி உமிளும் விளக்குகள். "என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே!"(தி,பா 119:105) இயேசுவின் சீடர்கள் நாம், அவரிடமிருந்து பெற்ற ஒளியைத் தாங்கும் எரியும் விளக்குகளாக இருக்க வேண்டும் என்பது அவர் விருப்பம். எரிந்து, சுடர்விட்டு பிரகாசித்து, பலருக்கும் ஒளிகொடுத்து, பலரை உண்மையான நிறைவான வாழ்வுக்குக் கொண்டு வர வேண்டும் என்பது அவரின் ஆசை. நீ எரியும் விளக்கா? அப்படியாயின் எத்தகைய எரியும் விளக்கு? சாதாரண மின்மினியா? வீட்டு விளக்கா? பலருக்கும் பயன்படும் தெரு விளக்கா? திசை மாறியோருக்குப் பயன்படும் கலங்கரை விளக்கா? என்ன நிறம், பச்சை, சிவப்பு, மஞ்சள். எரியும் விளக்காக, தண்டின்மீதுள்ள விளக்காக வாழ்வோம். இயேசு மகிழ்வார். வாழ்த்துக்கள்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் இயேசுவின் போதனையை ஏற்க எங்கள் இதயங்களைத் திறந்தருளும்.