யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 2வது வாரம் சனிக்கிழமை
2013-01-26


முதல் வாசகம்

நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்தோ அவர் பொருட்டு நான் கைதியாக இருப்பதைக் குறித்தோ வெட்கமடையத் தேவை இல்லை
திமொத்தேயுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1:1-8

1 என் அன்பார்ந்த பிள்ளை திமொத்தேயுவுக்கு, கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசு அருளும் வாழ்வு பற்றிய வாக்குறுதிக்கு ஏற்ப அவருடைய திருத்தூதனான பவுல் எழுதுவது: 2 தந்தையாம் கடவுளிடமிருந்தும் நம் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் அருளும் இரக்கமும் அமைதியும் உரித்தாகுக!3 என் முன்னோரைப் போன்று தூய்மையான மனச்சான்றுடன் கடவுளுக்குப் பணியாற்றும் நான் அவருக்கு நன்றி கூறுகிறேன். இரவும் பகலும் இடைவிடாமல் என் மன்றாட்டுகளில் உன்னை நினைவுகூறுகின்றேன்.4 உன் கண்ணீரை நினைவிற் கொண்டு உன்னைக் காண ஏங்குகிறேன்: கண்டால் என் மகிழ்ச்சி நிறைவடையும்.5 வெளிவேடமற்ற உன் நம்பிக்கையை நினைத்துப் பார்க்கிறேன். இத்தகைய நம்பிக்கை முதலில் உன் பாட்டிலோயி மற்றும் உன் தாய் யூனிக்கி ஆகியோரிடம் விளங்கியது. இப்போது உன்னிடமும் உள்ளதென உறுதியாக நம்புகிறேன்.6 உன் மீது என் கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்குள் எழுந்த கடவுளின் அருள்கொடையினைத் தூண்டி எழுப்புமாறு நினைவுறுத்துகிறேன்.7 கடவுள் நமக்குக் கோழையுள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுபாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார்.8 எனவே நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்தோ அவர் பொருட்டு நான் கைதியாக இருப்பதைக் குறித்தோ வெட்கமடையத் தேவை இல்லை: கடவுளின் வல்லமைகேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்
திருப்பாடல்கள் 96:1-8

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; 2 ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள்; அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்.

3 பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். 4 ஏனெனில், ஆண்டவர் மாட்சிமிக்கவர்; பெரிதும் போற்றத் தக்கவர்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர் அவரே.

5 மக்களினங்களின் தெய்வங்கள் அனைத்தும் வெறும் சிலைகளே; ஆண்டவரோ விண்ணுலகைப் படைத்தவர். 6 மாட்சியும் புகழ்ச்சியும் அவர் திருமுன் உள்ளன; ஆற்றலும் எழிலும் அவரது திருத்தலத்தில் உள்ளன;

7 மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள். மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள். 8 ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள்; உணவுப்படையல் ஏந்தி அவர்தம் கோவில் முற்றங்களுக்குள் செல்லுங்கள்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3:20-21

20 அதன்பின் இயேசு வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை.21 அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

".. ..அவர் மதிமயங்கியிருக்கிறார்." (மாற்கு 3:21)

வாழ்க்கை வீணாகி விபரீதமாகிவிடும் உன் முதல் எதிரி உன் மனைவியும் மக்களுமாக இருந்தால். அடுத்து உன் எதிரி உன் உற்றாரும் உறவினரும். அடுத்தது உன் நண்பரும் நலன்கள் பெற்றோரும். வீடு இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமாகிவிடும். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்பவனும் கூட இருந்து குழி பறிப்பவனும் இருக்கும் வரையில் வாழ்க்கை தடுமாறிக்கொண்டுதான் இருக்கும். இயேசுவின் வாழ்க்கையும் இதற்கு விதி விலக்கல்ல. அவரது உறவிரே அவரை பிடித்துக்கொண்டு வரச் சென்றுள்ளனர். அவரை மதிமயங்கியவர் என்ற பட்டம் சூட்டியதும் அவரது உறவும் சுற்றமுமே. உறுதியாக இவர்களின் இவ்வார்த்தைகள் மிகப்பெரும் அதிர்ச்சியையும் தாக்கத்தையும் இழப்பையும் இயேசுவின்மீது ஏற்படுத்தியிருக்கும். ஆனால் உண்மைக்குச் சான்று பகர வேண்டும் என்ற தணியாத தாகம்(யோவா18:37), உம் விருப்பப்படியே நிகழட்டும் என்ற அர்ப்பணம்(லூக்22:42) எளியோர்க்கு நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்ற தீவிரம்(லூக் 4:18) மேலோங்கியிருந்ததால் எந்த பாதிப்பையும் அவரில் எற்படுத்தவில்லை. மாறாக இயேசுவே லூக்கா 12: 49-53 ல் குறிப்பிடுவதுபோல, இவை எல்லாம் இறையாட்சியின் தீவிர செயல்பாட்டின் அடையாளங்கள் அறிகுறிகள் என உயத்துணர முடியுமானால், வாழ்வு வெற்றியாக அமையும்.இந்த அனுபவத்தோடு வாழ வாழ்த்துக்கள்.

மன்றாட்டு:

இறைவா, உம் சிந்தனையால் நாங்கள் ஆட்கொள்ளப்பட அருள்தாரும்.