யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 2வது வாரம் வியாழக்கிழமை
2013-01-24


முதல் வாசகம்

தம்மைத் தாமே பலியாகச் செலுத்தி இதை ஒரே ஒருமுறைக்குள் செய்து முடித்தார்
எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 7:25-8:6

25 ஆதலின், தம் வழியாகக் கடவுளிடம் வருபவரை அவர் முற்றும் மீட்க வல்லவராயிருக்கிறார்: அவர்களுக்காகப் பரிந்து பேசுவதற்கென என்றுமே உயிர் வாழ்கிறார்.26 இத்தகைய தலைமைக் குருவே நமக்கு ஏற்றவராகிறார். இவர் தூயவர், கபடற்றவர், மாசற்றவர், பாவிகளிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவர்.27 ஏனைய தலைமைக் குருக்கள் செய்வது போல, முதலில் தம்முடைய பாவங்களுக்காகவும் பின்னர் மக்களுடைய பாவங்களுக்காகவும் இவர் நாள்தோறும் பலி செலுத்தத் தேவையில்லை. ஏனெனில் தம்மைத் தாமே பலியாகச் செலுத்தி இதை ஒரே ஒருமுறைக்குள் செய்து முடித்தார்.28 திருச்சட்டப்படி வலுவற்ற மனிதர்கள் குருக்களாக ஏற்படுத்தப்படுகிறார்கள். ஆனால் அத்திருச்சட்டத்திற்குப் பின்னர், ஆணையிட்டுக் கூறப்பட்ட வாக்கின் மூலம் என்றென்றும் நிறைவுள்ளவரான மகனே குருவாக ஏற்படுத்தப்படுகிறார்.1 இத்தகைய தலைமைக் குரு நமக்கு வாய்த்துள்ளார் என்பதே இதுகாறும் நாம் கூறியவற்றின் தலையாய கருத்து. இவர் விண்ணகத்தில் பெருமைமிகு கடவுளுடைய அரியணையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.2 அங்கே மனிதரால் அல்ல, ஆண்டவராலே அமைக்கப்பட்ட உண்மையான கூடாரமாகிய தூயகத்தில் ஊழியம் செய்கிறார்.3 ஒவ்வொரு தலைமைக் குருவும் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தவே ஏற்படுத்தப்பட்டிருக்கிறார். எனவே பலி செலுத்துவதற்கு இவரிடமும் ஏதேனும் ஒரு பொருள் கட்டாயம் இருக்க வேண்டும்.4 உலகிலேயே இருந்திருப்பாரென்றால் இவர் குருவாக இருந்திருக்கமாட்டார். ஏனெனில், திருச்சட்டத்தின்படி காணிக்கைகளைச் செலுத்த ஏற்கெனவே இங்குக் குருமார்கள் இருக்கிறார்கள்.5 இவர்கள் வழிபடும் இடம் விண்ணகக் கூடாரத்தின் சாயலும் நிழலுமே. மோசே கூடாரத்தை அமைத்தபோது, மலையில் உனக்குக் காண்பிக்கப்பட்ட முறைப்படி நீ இவற்றையெல்லாம் செய்யுமாறு கவனித்துக்கொள் என்று கடவுள் பணித்தது இதைச் சுட்டிக்காட்டுகிறது.6 ஆனால், இவரோ அவர்களுடைய குருத்துவப்பணியை விட மிக மேன்மையான குருத்துவப் பணியைப் பெற்றிருக்கிறார். ஏனெனில் சீரிய வாக்குறுதிகளின் அடிப்படையில் செய்யப்பட்டு, இவரை இணைப்பாளராகக் கொண்டிருக்கும் உடன்படிக்கை முந்திய உடன்படிக்கையைவிட சிறப்புமிக்கது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்
திருப்பாடல்கள் 40:7-10

7 எனவே, 'இதோ வருகின்றேன்; என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது;8 என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது' என்றேன் நான்.

9 என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக் கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர்.

10 உமது நீதியை நான் என் உள்ளத்தின் ஆழத்தில் மறைத்து வைக்கவில்லை; உம் வாக்குப்பிறழாமையைப் பற்றியும் நீர் அருளும் மீட்பைப்பற்றியும் கூறியிருக்கின்றேன்; உம் பேரன்பையும் உண்மையையும் மாபெரும் சபைக்கு நான் ஒளிக்கவில்லை.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தீய ஆவிகளும் அவரைக் கண்டபோதே அவர்முன் விழுந்து, ' இறைமகன் நீரே ' என்று கத்தின. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3:7-12

7 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் சீடருடன் கடலோரம் சென்றார். கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். மேலும் யூதேயா,8 எருசலேம், இதுமேயா, யோர்தான் அக்கரைப்பகுதி, தீர், சீதோன் ஆகிய இடங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் அவர் செய்தவற்றையெல்லாம் கேள்வியுற்று அவரிடம் வந்தனர்.9 மக்கள் கூட்டம் தம்மை நெருக்கிவிடாதவாறு தமக்காகப் படகு ஒன்றை முன்னேற்பாடாக வைத்திருக்குமாறு அவர் சீடருக்குச் சொன்னார்.10 ஏனெனில், பலரை அவர் குணமாக்கியதால், நோயுற்றோர் அனைவரும் அவரைத் தொடவேண்டுமென்று வந்து அவர்மீது விழுந்து கொண்டிருந்தனர்.11 தீய ஆவிகளும் அவரைக் கண்டபோதே அவர்முன் விழுந்து, ' இறைமகன் நீரே ' என்று கத்தின.12 அவரோ, தம்மை வெளிப்படுத்த வேண்டாமென அவற்றிடம் மிகக் கண்டிப்பாய்ச் சொன்னார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

.. ..அவரைத் தொடவேண்டுமென்று .. .. ..(மாற்கு 3:10)

தாய் தன் குழந்தையைத் தொட்டு அணைக்கும்போது புனிதமான அன்பை பகிர்ந்தளிக்கிறாள். பாதுகாப்பைப் பரிமாறிக்கொள்கிறாள். அந்த அன்பு குழந்தைக்குத் தெம்பு கொடுக்கிறது.அது மருந்தாகிறது, உணவாகிறது. புனிதமான, கலப்படமற்ற தொடுஉணர்வு, குழந்தைக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இதேபோல உடலுக்கும் உள்ளத்துக்கும் உணவாகிறது, மருந்தாகிறது. நோயுற்றோர் அனைவரும் இயேசுவைத் தொடவேண்டுமென்று இயேசுவின்மீது விழுந்துகொண்டிருந்த இந்த நற்செய்தி காட்சியிலும் இதே உணர்வு வெளிப்படுவதைக் காண்கிறோம்.பெருங்கூட்டம் இயேசுவின் மேல் விழுந்து அவரைத் தொட்டது. தொட்ட யாவரும் எல்லாவித நோயிலிருந்தும் குணமடைந்தனர். இயேசுவைத் தொட்ட யாவரும் குணமடைந்தனர். 'அப்பெண் இயேசுவுக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார்" (லூக் 8 :44) இயேசு தொட்ட அனைவரும் குணமடைந்தனர். "இயேசு அவரது கையைத் தொட்டதும் காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று"(மத்8 :15) "அவரைத் தொட்டு, "நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!" (மத் 8 :3)" கண்களைத் தொட்டு, "நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்"(மத் 9 :29)அவர்களைத் தொட்டு," எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்"(மத் 17 :7, மத் 20 :34) நாம் அவரைத் தொட்டாலும் அவர்நம்மைத் தொட்டாலும் நாம் அதன் பலனைப் பெறுகிறோம். கைகளால் இயேசுவைத் தொடும்போதும், செபத்தில் இதயத்தில் இயேசுவைத் தொடும்போதும், நற்கருணை வாங்கும்போது இயேசுவைத் தொடும்போதும் இயேசுவின் தெய்வீக ஆற்றல் இங்கு பரிமாறப்படுகிறது. அது உணவாகிறது, மருந்தாகிறது. நாம் நலமடைகிறோம்,வலுவடைகிறோம். இயேசுவைத் தொடுவோம். இயேசு நம்மைத் தொடும் நிலையில் வைத்துக்கொள்வோம். வாழ்த்துக்கள்.

மன்றாட்டு:

இறைவா, எங்களைத் தொட்டு நலமாக்கியருளும்.