யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 2வது வாரம் செவ்வாய்க்கிழமை
2013-01-22


முதல் வாசகம்

நான் உன்மீது உண்மையாகவே ஆசிபொழிந்து, உன்னைப் பல்கிப் பெருகச் செய்வேன்
எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6:10-20

10 ஏனெனில், கடவுள் நீதியற்றவர் அல்ல. இறைமக்களுக்கு நீங்கள் முன்பு தொண்டாற்றி வந்தீர்கள்: இப்போதும் தொண்டு செய்துவருகின்றீர்கள். எனவே கடவுள் பெயரால் நீங்கள் காட்டிய அன்பையும் உழைப்பையும் அவர் மறக்க மாட்டார்.11 நீங்கள் எதிர்நோக்குவது முழு உறுதிபெறும்பொருட்டு, உங்களுள் ஒவ்வொருவரும் முன்பு காட்டிய அதே ஆர்வத்தையே இறுதி வரை காட்ட வேண்டும் என மிகவும் விரும்புகிறோம்.12 இவ்வாறு நீங்கள், தளர்ச்சிக்கு இடம் கொடாமல், நம்பிக்கையாலும் பொறுமையாலும் இறைவாக்குறுதிகளை உரிமைப்பேறாகப் பெற்றவர்களைப் போல் வாழுங்கள்.13 ஆபிரகாமுக்குக் கடவுள் வாக்குறுதி அளித்தபோது, தம்மைவிடப் பெரியவர் எவர் பெயராலும் ஆணையிட்டுக்கூற இயலாததால் தம் மீதே ஆணையிட்டு,14 நான் உன்மீது உண்மையாகவே ஆசிபொழிந்து, உன்னைப் பல்கிப் பெருகச் செய்வேன் என்றார்.15 இதன்படி அவரும் பொறுமையோடு காத்திருந்து, பின் கடவுள் வாக்களித்ததைப் பெற்றுக்கொண்டார்.16 தங்களைவிடப் பெரியவர் ஒருவர் பெயரால்தான் மக்கள் ஆணையிடுவர். எல்லாச் சச்சரவுகளிலும் ஆணையிட்டே முடிவு கட்டுவர். அம்முடிவை ஆணை உறுதிப்படுத்தும்.17 அவ்வாறே, கடவுளும் தம் வாக்குறுதியை உரிமைப்பேறாகப் பெற்றோருக்குத் தம் திட்டத்தின் மாறாத் தன்மையை மிகவும் தெளிவாகக் காட்ட விரும்பி, ஓர் ஆணையால் தம் வாக்கை உறுதிபடுத்தினார்.18 மாறாத் தன்மையுடைய இவை இரண்டையும் பொறுத்தவரையில் கடவுள் உரைத்தது பொய்யாயிருக்க முடியாது. அடைக்கலம் தேடும் நாம், நம் கண்முன் எதிர்நோக்கியுள்ளதை விடாமல் பற்றிக்கொள்வதற்குத் தளரா ஊக்கம் கொண்டிருக்கவேண்டும்.19 இந்த எதிர்நோக்கே நம் உள்ளத்திற்குப் பாதுகாப்பான, உறுதியான, நங்கூரம் போன்றுள்ளது. இது கோவிலின் திரைச்சீலைக்கு அப்பால் சென்று சேர்ந்திருக்கிறது.20 நமக்கு முன்னோடியாய் அந்தத் திரைச்சீலையைக் கடந்து இயேசு அங்குச் சென்று சேர்ந்திருக்கிறார். மெல்கிசதேக்கு முறைப்படி என்றென்றும் தலைமைக் குரு என்னும் நிலையில் நம் சார்பாக அவர் அங்குச் சென்றிருக்கிறார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவர் உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்
திருப்பாடல்கள் 111:1-5

1 அல்லேலூயா! நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்; நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும் அவருக்கு நன்றி செலுத்துவேன்.

2 ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை; அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர். 3 அவரது செயல் மேன்மையும் மாண்பும் மிக்கது; அவரது நீதி என்றென்றும் நிலைத்துள்ளது.

4 அவர் தம் வியத்தகு செயல்களை என்றும் நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்; அருளும் இரக்கமும் உடையவர் ஆண்டவர். 5 அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு அளிக்கின்றார்; தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2:23-28

23 ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்துகொண்டே வழி நடந்தனர்.24 அப்பொழுது பரிசேயர் இயேசுவிடம், ' பாரும், ஓய்வு நாளில் செய்யக்கூடாததை ஏன் இவர்கள் செய்கிறார்கள்? ' என்று கேட்டனர்.25 அதற்கு அவர் அவர்களிடம், ' தாமும் தம்முடன் இருந்தவர்களும் உணவின்றிப் பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்ததே இல்லையா?26 அபியத்தார் தலைமைக் குருவாய் இருந்தபோது தாவீது இறைஇல்லத்திற்குள் சென்று, குருக்களைத் தவிர வேறு எவரும் உண்ணக்கூடாத அர்ப்பண அப்பங்களைத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா? ' என்றார்.27 மேலும் அவர் அவர்களை நோக்கி, ' ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை.28 ஆதலால் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே ' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

"ஓய்வுநாள் மனிதருக்காக; மனிதர் ஓய்வு நாளுக்காக அல்ல" (மாற்கு 2:27)

பயிர் முக்கிமா? வேலி முக்கியமா? மனிதனா? சட்டமா? பயிர்தான் முக்கியம். மனிதன்தான் முக்கியம். இவற்றில் வேறுபட்ட கருத்து இல்லை. ஒரே நிகழ்ச்சியைப் பார்க்கின்ற இருவரின் கண்ணேட்டத்திற்கு ஏற்ப, கருத்துக்கள் வெளிப்படுகின்றன. ஒருவன் வேலிதான் முக்கியம் என்று வாதிடுகின்றான். மற்றவன் பயிர்தான் முக்கியம் என்று சாதிக்கின்றான். எதிலும் நல்லதையும் சிறந்ததையும் முக்கியமானதையும் பார்க்கும் கண்ணேட்டம் இருந்தால் எதிலும் நல்லது மட்டுமே தெறிய வரும். சீடர்கள் கதிர்களைக் கொய்து தின்றது, இயேசுவைப் பொருத்தமட்டில் பெரிய பிரச்சனை அல்ல. ஏனென்றால், பசியிலும் வரப்பில் வழி நடந்தும் களைத்திருந்த சீடர்களின் நிலைமையை அவர் அறிவார். சட்டமும் சம்பிரதாயமும் அறிவார்.ஆகவே கேட்டார்: "தாமும் தம்முடன் இருந்தவர்களும் உணவின்றிப் பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார்" (வாசிக்க, 1சாமு 21:1-6) "அபியத்தார் தலைமைக் குரவாய் இருந்தபோது தாவீது இறைஇல்லத்திற்குள் சென்று, குரக்களைத் தவிர வேறு எவரும் உண்ணக்கூடாத அர்ப்பண அப்பங்களைத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?"(வாசிக்க,லேவி 24:9). இயேசுவின் பார்வையில் சீடர்களின் நீண்ட பயணம், கழைப்பு, பசி தெறிந்தது. இடமும் வயல்வெளி. செய்த செயலும் பசிக்கு சாப்பிட்டதுதான். அருவடைசெய்து உழைத்து சம்பாதிக்கவில்லை. இவற்றுள் புதைந்திருக்கும் மனிதனைப் பார்த்தார். பரிசேயர்கள் மனிதனையும் மனிதத்தையும் புதைக்கும் சட்டத்தைப் பார்த்தனர். வேலியைக் காக்கும் முயற்சியில் இறங்கினர். பயிரை விட வேலியைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.இயேசுவின்; கண்ணேட்டம் நமக்கிருந்தால் பயிரை வளர்த்துப் பாதுகாப்போம். பலரை அது வாழ்விக்கும். வாழ்த்துக்கள்.

மன்றாட்டு:

இறைவா, காலங்களைக் கடந்த உம்மை எக்காலமும் போற்றிட அருள்தாரும்.