யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 1வது வாரம் வியாழக்கிழமை
2013-01-17


முதல் வாசகம்

நாள்தோறும் ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுங்கள்.
எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3:7-14

7 எனவே, தூய ஆவியார் கூறுவது: ″ ″ இன்று நீங்கள் அவரது குரலைக் கேட்பீர்களென்றால்,8 பாலை நிலத்தில் சோதனை நாளன்று கிளர்ச்சியின்போது இருந்ததுபோல, உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.9 அங்கே உங்கள் மூதாதையர் நாற்பது ஆண்டுகள் என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர்.10 எனவே, அத்தலைமுறையினர் மீது வெறுப்புக்கொண்டு, ″ எப்போதும் இவர்களது உள்ளம் தவறுகிறது: என் வழிகளை இவர்கள் அறியாதவர்கள்: எனவே நான் சினமுற்று11 நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள் என்று ஆணையிட்டுக் கூறினேன்″ என்றார் கடவுள்.″ ″12 அன்பர்களே, நம்பிக்கை கொள்ளாத தீய உள்ளம், வாழும் கடவுளை விட்டு விலகும். இத்தகைய தீய உள்ளம் உங்களுள் எவருக்கும் இராதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.13 உங்களுள் எவரும் பாவத்தால் ஏமாற்றப்பட்டு, கடின உள்ளத்தினர் ஆகாதவாறு, ஒவ்வொரு நாளும் இன்றே என எண்ணி, நாள்தோறும் ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுங்கள்.14 தொடக்கத்தில் நாம் கொண்டிருந்த திட நம்பிக்கையை இறுதிவரை உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தால் நாமும் கிறிஸ்துவின் பங்காளிகளாவோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
திருப்பாடல்கள் 95:6-11

6 வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். 7 அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்!

8 அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். 9 அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர்.

10 நாற்பது ஆண்டளவாய் அந்தத் தலைமுறை எனக்கு வெறுப்பூட்டியதால், நான் உரைத்தது: 'அவர்கள் உறுதியற்ற உள்ளம் கொண்ட மக்கள்; என் வழிகளை அறியாதவர்கள்'. 11 எனவே, நான் சினமுற்று, 'நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்' என்று ஆணையிட்டுக் கூறினேன்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக! அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1:40-45

40 ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, ' நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும் ' என்று முழந்தாள் படியிட்டு வேண்டினார்.41 இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், ' நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக! ' என்றார்.42 உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.43 பிறகு அவரிடம், ' இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும்.44 நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும் ' என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பி விட்டார்.45 ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை; வெளியே தனிமையான இடங்களில் தங்கிவந்தார். எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்து கொண்டிருந்தார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

".. ..போய் உம்மைக் குருவிடம் காட்டி.. .." (மாற்கு 1:43)

அந்த மனிதனுக்குத் தொழுநோய். அவனை யாரும் தொடக்கூடாது. அவனோடு யாருக்கும் ஒட்டும் உறவும் கூடாது. அவன் சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட்டவன். கடவுளால் சபிக்கப்பட்டவன். அவனுக்கு வாழ வேண்டும் என்ற ஆசை இருக்காதா? இயேசு அந்த வாழ்வை தனக்கு மீண்டும் தருவார் என நம்பி, அவர் பாதம் முழந்தாளிட்டு வேண்டுகிறான். இயேசு கையை நீட்டி அவனைத் தொடுகிறார். ஆமாம். அன்போடு, ஆசையோடு, ஆதங்கத்தோடு, விருப்பத்தோடு தொடுகிறார். அவன்; கேட்டதெல்லாம் தொழுநோயிலிருந்து சுகம் பெற வேண்டும் என்பது மட்டுமே. ஆனால் அந்த அன்பு தெய்வம் கொடுத்ததோ அவன் முற்றிலும் எதிர்பாராத கொடைகள். "போய் உம்மைக் குருவிடம் காட்டும் .. .." என்று சொல்லி அவனை ஆண்டவனோடும் சமுதாயத்தோடும் இணைத்தார். அவனைத் தொட்டு குணப்படுத்தி, எல்லோரும் அவனைத் தொட்டு உறவாடும் உயர்நிலைக்கு அவனைக் கொண்டு சென்றார். உன்னால் சமுதாயத்தோடு இணைந்து செல்ல முடியவில்லையா? நீ ஒதுங்கி வாழ்கிறாயா? சமுதாயம் உன்னை வெறுத்து ஒதுக்குகிறதா? உன் பொருளாதாரம், சமுக அந்தஸ்து, உன்னைத் தடுத்து நிறுத்துகிறதா? உன் பாவ வாழ்க்கை உன் நிம்மதியைக் குலைத்து, ஆண்டவன் முன்னிலையிலிருந்து உன்னை அப்புறப்படுத்துகிறதா? இயேசுவிடம் வா. அவர் உன் நோய் அனைத்தையும் குணப்படுத்துவார். வாழ்த்துக்கள்.

மன்றாட்டு:

இறைவா, நன்மை செய்யும் ஆற்றலை எங்களுக்கு அளிப்பவர் நீரே என உணர்ந்து வாழ அருள்தாரும்.