யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 1வது வாரம் புதன்கிழமை
2013-01-16


முதல் வாசகம்

வாழ்நாள் முழுவதும் சாவுபற்றிய அச்சத்தினால் அடிமைப்பட்டிருந்தவர்களை விடுவித்தார்.
எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2:5-12

14 ஊனும் இரத்தமும் கொண்ட அப்பிள்ளைகளைப் போல் அவரும் அதே இயல்பில் பங்கு கொண்டார். இவ்வாறு சாவின்மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையைச் சாவின் வழியாகவே அழித்து விட்டார்.15 வாழ்நாள் முழுவதும் சாவுபற்றிய அச்சத்தினால் அடிமைப்பட்டிருந்தவர்களை விடுவித்தார்.16 ஏனெனில் அவர் வானதூதருக்குத் துணை நிற்கவில்லை. மாறாக, ஆபிரகாமின் வழிமரபினருக்கே துணை நின்றார் என்பது கண்கூடு.17 ஆதலின், கடவுள் பணியில் அவர் இரக்கமும், நம்பிக்கையும் உள்ள தலைமைக் குருவாயிருந்து, மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு எல்லாவற்றிலும் தம் சகோதர் சகோதரிகளைப்போல் ஆக வேண்டிதாயிற்று.18 இவ்வாறு தாமே சோதனைக்கு உள்ளாகித் துன்பப்பட்டதனால் சோதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய அவர்வல்லவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்
திருப்பாடல்கள் 105:1,2,3-4,6-9

1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள். 2 அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்!

3 அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! 4 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்!

6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே! 7 அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித்தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. 8 அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறதியை நினைவுகூர்கின்றார். 9 ஆபிரகாமுடன் தாம் செய்து கொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1:29-39

29 பின்பு அவர்கள் தொழுகைக் கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள்.30 சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள்.31 இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.32 மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள்.33 நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது.34 பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை.35 இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்.36 சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள்.37 அவரைக் கண்டதும், ' எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் ' என்றார்கள்.38 அதற்கு அவர், ' நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கிறேன் ' என்று சொன்னார்.39 பின்பு அவர் கலிலேய நாடுமுழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றி பேய்களை ஓட்டி வந்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

"எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்"

என்ன, எல்லாரும் உங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்களா? எல்லாரும் உங்களைத் தேடுகிறார்கள் என்றால் உங்களுக்கும் உங்களைப் படைத்த இறைவனுக்கும் மகிழ்ச்சி அல்லவா. உங்களால் அவர்கள் எல்லோரும் பல நன்மைகளை அடைந்துள்ளதால், அடைய விரும்புவதால் உங்களைத் தேடுகிறார்கள். இயேசுவை எல்லோரும் தேடிட காரணம் அவரது போதனை புது வாழ்வுக்குப் புரட்சிப் பாதை அமைத்தது. அவர் தொட்டவர்களின் வாழ்க்கை துலங்கியது. பல்வேறு பிணிகளில் வருந்தியவர்கள் குணமடைந்தார்கள். பேய்களை விரட்டினார். மனம் நொந்தவர்கள் நொடிந்தவர்கள் அவரின் நற்செய்தியால் ஆறுதல் பெற்றனர். பல ஊர்கள் நகரங்கள் பலனடைந்தன. தேடமாட்டார்களா, என்ன? எல்லோரும் தன்னைத்தேட தன் வாழ்வின் ஒரு நாளை இவ்வாறு செலவிட்டார். விடியற்காலை வேளைகளில் தனிமையான இடத்தில் இறைவனை வேண்டினார். (மாற்1'35) பகலில் தொழுகைக்கூடம், மக்கள் கூடுமிடங்களில் நற்செய்தி அறிவித்து, நோயைக் குணமாக்கி, பேயை விரட்டி வந்தார்.(மாற் 1'29) மாலை வேளைகளில் மக்கள் கூடுமிடங்கள், தங்கும் வீடுகளில் நற்செய்தி அறிவித்து நோயை குணமாக்கி வந்தார்.(மாற் 1'32) இவ்வாறு நாள் முழுவதும் மக்களுக்காக செலவிட்டதால், எல்N;லாரும் அவரைத் தேடினார்கள். ஏழை மக்களுக்காகச் செலவிட்டுப் பாருங்கள். எல்லோரும் உங்களைத் தேடுவார்கள். நீங்கள் மகிழ்வீர்கள். உங்களில் ஆண்டவனும் மகிழ்வார். வாழ்த்துக்கள்.

மன்றாட்டு:

இறைவா, உம் விருப்பத்தை அறிந்து அதைச் செயல்படுத்திட எங்களுக்கு அருள்தாரும்.