முதலாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 1வது வாரம் திங்கட்கிழமை 2013-01-14
முதல் வாசகம்
இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்
எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1:1-6
1 பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், 2 இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்: இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்: இவர் வழியாக உலகங்களைப் படைத்தார்.3 கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப் படுத்தியபின், விண்ணகத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.4 இவ்வாறு இறைமகன் வான தூதரைவிடச் சிறந்ததொரு பெயரை உரிமைப்பேறாகப் பெற்றார். அந்நிலைக்கு ஏற்ப அவர்களைவிட இவர் மேன்மை அடைந்தார்.5 ஏனெனில், கடவுள் வானதூதர் எவரிடமாவது நீ என் மைந்தர்: இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன் என்றும், நான் அவருக்குத் தந்தையாயிருப்பேன், அவர் எனக்கு மகனாயிருப்பார் என்றும் எப்போதாவது கூறியதுண்டா?6 மேலும் அவர் தம் முதற்பேறான இவரை உலகிற்கு அனுப்பியபோது, கடவுளின் தூதர் அனைவரும் அவரை வழிபடுவார்களாக என்றார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
அனைத்துத் தெய்வங்களே! அவரைத் தாழ்ந்து பணியுங்கள்.
திருப்பாடல்கள் 149:1-6
1 ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவுநாடுகள் களிகூர்வனவாக! 2 மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன; நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம்.
6 வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன; அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன. 7 உருவங்களை வழிபடுவோரும் சிலைகள் பற்றிப் பெருமையடித்துக் கொள்வோரும் வெட்கத்துக்கு உள்ளாவர்; அனைத்துத் தெய்வங்களே! அவரைத் தாழ்ந்து பணியுங்கள்.
9 ஏனெனில், ஆண்டவரே! உலகனைத்தையும் ஆளும் உன்னதர் நீர்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலானவர் நீரே!
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1:14-20
14 யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார்.15 ' காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் ' என்று அவர் கூறினார்.16 அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள்.17 இயேசு அவர்களைப் பார்த்து, ' என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் ' என்றார்.18 உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.19 பின்னர், சற்று அப்பால் சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள்.20 உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''இயேசு தொழுநோயாளர் மீது பரிவுகொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டார்'' (மாற்கு 1:41)
மக்களுக்கு நன்மை செய்துகொண்டே சென்ற இயேசு நோயுற்றோருக்கு குணம் நல்குவதைத் தம் சிறப்பான பணியாகக் கருதினார். மக்களுக்கு நலம் கொணர்வது அவர்கள் பெறுகின்ற மீட்புக்கு வெளி அடையாளம் ஆயிற்று. இவ்வாறு நலம் பெற்ற மனிதருள் பல தொழுநோயாளரும் இருந்தனர். தோல் சம்பந்தமான எந்நோயும் தொழுநோய் எனவே கருதப்பட்டு, அதனால் பீடிக்கப்பட்டோர் பல வகைகளில் துன்பப்பட்டனர். அவர்கள் சமுதாயத்திலிருந்தும் வழிபாட்டிலிருந்தும் விலக்கப்பட்டனர். இவ்வாறு புறக்கணிக்கப்பட்ட மக்களை இயேசு தேடிச்செல்கின்றார். அவர்களோடு கடவுளின் அன்பைப் பகிர்ந்துகொள்கின்றார். தொழுநோயாளரின் அருகில் சென்றாலே தீட்டுப்பட்டுவிடும் என்று கருதப்பட்ட அக்காலத்தில் இயேசு ''தொழுநோயாளர் மீது பரிவுகொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டார்'' (மாற் 1:41). இது ஒரு துணிச்சலான செயல்தான். அக்கால சமுதாயத்தின் மதிப்பீடுகளை இயேசு இங்கே புரட்டிப்போடுகின்றார். நோயோ உடல் ஊனமோ மனிதரை இழிவுபடுத்த முடியாது என இயேசு உணர்த்துகின்றார்.
-- சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டோரை நாடிச் சென்று அவர்களுக்கு நலமளித்து, அவர்களைச் சமுதாயத்தோடு இணைக்கும் பணியை இயேசு செய்கிறார்; வழிபாட்டில் பங்கேற்க வழிவகுக்கின்றார். இன்றைய உலகம் சிலரைத் தொழுநோயாளர்போலக் கருதி ஒதுக்கிவைக்கிறது; அவர்களுக்கு மனித மாண்பை மறுக்கிறது. இயேசு இப்பார்வையை எதிர்க்கிறார். கடவுளின்முன் அனைத்து மனிதரும் ஒரே மதிப்புடையவர்களே எனக் காட்டுகிறார். இப்பார்வையை நாமும் பெற வேண்டும்.
மன்றாட்டு:
இறைவா, உம்மைத் தூய உள்ளத்தோடு நாடிவர எங்களுக்கு அருள்தாரும்.
|