யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
கிறிஸ்து பிறப்புக்காலம்
2013-01-11

திருக்காட்சி விழாவிற்குப் பின் வெள்ளிக்கிழமை


முதல் வாசகம்

சான்று அளிப்பவை மூன்று இருக்கின்றன. தூய ஆவியும் நீரும் இரத்தமுமே அவை
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5:5-13

5 இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்?6 நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவரென தூய ஆவியார் சான்று பகர்கிறார். தூய ஆவியாரே உண்மை.7 எனவே சான்று அளிப்பவை மூன்று இருக்கின்றன.8 தூய ஆவியும் நீரும் இரத்தமுமே அவை. இம்மூன்றும் ஒரே நோக்கம் கொண்டவை.9 மனிதர் தரும் சான்றை நாம் ஏற்றுக்கொள்கிறோமே! கடவுள் தரும் சான்று அதை விட மேலானது அன்றோ! கடவுள் தம் மகனுக்குச் சான்று பகர்ந்துள்ளார்.10 இறைமகன்மீது நம்பிக்கை கொண்டுள்ளோர் இச்சான்றைத் தம்முள் கொண்டிருக்கின்றனர். ஆனால், கடவுள்மீது நம்பிக்கை கொள்ளாதோர் அவரைப் பொய்யராக்குகின்றனர். ஏனெனில் தம் மகனைக் குறித்து அவர் அளித்த சான்றை அவர்கள் நம்பவில்லை.11 கடவுள் நமக்கு நிலை வாழ்வை அளித்துள்ளார். இந்த வாழ்வு அவர் மகனிடம் இருக்கிறது. இதுவே அச்சான்று.12 இறைமகனைக் கொண்டிருப்போர் வாழ்வைக் கொண்டுள்ளனர்: அவரைக் கொண்டிராதோர் வாழ்வைக் கொண்டிரார்.13 இறைமகனிடம் நம்பிக்கை கொண்டுள்ளோருக்கு நிலைவாழ்வு உண்டு என நீங்கள் அறிந்து கொள்ளுமாறு உங்களுக்கு இவற்றை எழுதுகிறேன்

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக!
திருப்பாடல்கள் 147:12-15, 19-20

12 எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக! 13 அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார்.

14 அவர் உன் எல்லைப்புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார். 15 அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது.

19 யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார். 20 அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை; அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது; அல்லேலூயா!


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நான் விரும்புகிறேன் ' உமது நோய் நீங்குக! அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5:12-16

12 இயேசு ஓர் ஊரில் இருந்தபோது, உடலெல்லாம் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் வந்தார். அவர் இயேசுவைக் கண்டு அவர் காலில் விழுந்து, ' ஆண்டவரே, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும் ' என மன்றாடினார்.13 இயேசு கையை நீட்டி, அவரைத் தொட்டு, ' நான் விரும்புகிறேன் ' உமது நோய் நீங்குக! ' என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்கிற்று.14 இயேசு அவரிடம், ' இதை யாருக்கும் சொல்ல வேண்டாம். நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும் ' என்று கட்டளையிட்டார்.15 ஆயினும் இயேசுவைப் பற்றிய செய்தி இன்னும் மிகுதியாகப் பரவிற்று. அவரது சொல்லைக் கேட்கவும் தங்கள் நோய்கள் நீங்கி நலம் பெறவும் பெருந்திரளான மக்கள் அவரிடம் கூடிவந்து கொண்டிருந்தார்கள்.16 அவரோ ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்குச் சென்று தனித்திருந்து இறைவனிடம் வேண்டிவந்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''ஆண்டவரே, நீர் விரும்பினால் என் நோயை நீக்க உம்மால் முடியும்'' (லூக்கா 5:12)

விவிலியத்தைப் புரட்டும்போது நம்பிக்கை என்னும் ஆழ்ந்த சக்தியோடு செயல்பட்ட பல ஆண்களையும் பெண்களையும் நாம் சந்திக்கிறோம். ஆபிரகாம் ''நம்பிக்கையின் தந்தை'' என அழைக்கப்படுகிறார். கடவுள் தம் வாக்கில் தவறாதவர் என்றும் தாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறமாட்டார் என்றும் ஆபிரகாம் முழுமையாக நம்பினார். அதுபோல, இயேசுவைச் சந்தித்த மனிதருள் பலர் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்ததை நாம் காண்கிறோம். அதிசய செயல்களைப் புரிந்த போதெல்லாம் இயேசு மக்களிடமிருந்த நம்பிக்கையே அச்செயல்கள் நிகழக் காரணம் என்று கூறினார். மக்கள் நம்பிக்கை இல்லாதிருந்தபோது அவர்கள் நடுவே இயேசு அதிசய செயல்களை ஆற்ற இயலாமல் போயிற்று. தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இயேசுவை நோக்கி, ''ஆண்டவரே, நீர் விரும்பினால் என் நோயை நீக்க உம்மால் முடியும்'' (லூக் 5:12) என்று மன்றாடினார். இந்த மனிதரின் வார்த்தையில் நம்பிக்கை துலங்குவதை நாம் எளிதில் காணலாம். அவர் தம் விருப்பம் நிறைவேற வேண்டும் என்று கேட்கவில்லை. மாறாக, இயேசுவின் விருப்பம் எதுவோ அதுவே நடக்கட்டும் என்றுதான் அந்த நோயாளர் கருத்துத் தெரிவிக்கிறார். -- இயேசு விரும்பியபடியே நடக்கட்டும் என்று கூறிய நோயாளர் இயேசுவிடம் தம் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். இயேசுவிடம் கடவுளின் சக்தி உண்டு; இயேசு ஆற்றுகின்ற வல்ல செயல்கள் கடவுளிடமிருந்தே புறப்படுகின்ற ஆற்றல் மிக்க அடையாளங்கள் என அந்நோயாளர் நம்பியதால்தான் அவர் இயேசுவை மனதார அணுகிச் செல்கின்றார். அம்மனிதரின் நம்பிக்கை வீண்போகவில்லை. இயேசு அவரைப் பார்த்து, ''நான் விரும்புகிறேன்; உமது நோய் நீங்குக!'' (லூக் 5:13) என்றதும் அம்மனிதரின் உள்ளத்தில் மட்டற்ற மகிழ்ச்சி. தம் மன்றாட்டு கேட்கப்பட்டதை உணர்ந்த அவர் நன்றியுணர்வோடு இயேசுவை நோக்குகின்றார். நம் வாழ்வில் நம்பிக்கை இருந்தால் அதிசய செயல்கள் நிகழும் என இயேசு உணர்த்துகிறார்.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் நம்பிக்கையோடு உம்மை அணுகிவர அருள்தாரும்.