யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
கிறிஸ்து பிறப்புக்காலம்
2013-01-10

திருக்காட்சி விழாவிற்குப் பின் வியாழக்கிழமை


முதல் வாசகம்

இயேசுதான் மெசியா என்று நம்புவோர் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 11-18

19 அவரே முதலில் நம்மிடம் அன்பு செலுத்தியதால் நாமும் அன்பு செலுத்துகிறோம்.20 கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். தம் கண் முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது.21 கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதரர் சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும். இதுவே அவரிடமிருந்து நாம் பெற்ற கட்டளை.1 இயேசுதான் மெசியா என்று நம்புவோர் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். பெற்றவரிடம் அன்பு செலுத்துவோர் பிள்ளைகளிடமும் அன்பு செலுத்துவர்.2 நாம் கடவுள்மீது அன்புகொண்டு அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, கடவுளின் பிள்ளைகள்மீதும் அன்பு கொள்கிறோம் என்பது நமக்குத் தெரியவரும்.3 ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்தான் கடவுள் அன்பு அடங்கியுள்ளது. அவர் கட்டளைகள் நமக்குச் சுமையாய் இருப்பதில்லை.4 ஏனெனில் கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும்: உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே எல்லா இனத்தாரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்
திருப்பாடல்கள் 72:1-2,14-15,17

1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். 2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக!

. 14 அவர்கள் உயிரைக் கொடுமையினின்றும் வன்முறையினின்றும் விடுவிப்பார்; அவர்கள் இரத்தம் அவர் பார்வையில் விலைமதிப்பற்றது. 15 அவர் நீடுழி வாழ்க! சேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும்; அவருக்காக இடையறாது வேண்டுதல் செய்யப்படுவதாக! அவர்மீது ஆசிகள் வழங்கப்பெறுமாறு நாள் முழுதும் மன்றாடப்படுவதாக!

17 அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைப்பதாக! அவர்மூலம் ஆசிபெற விழைவராக! எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக!


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4:12-22

14 பின்பு இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது.15 அவர் அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்து வந்தார். எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினர்.16 இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார்.17 இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது;18 ' ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்19 ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார். '20 பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன.21 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, ' நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று ' என்றார்.22 அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, ' இவர் யோசேப்பின் மகன் அல்லவா? ' எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

"இவர் யோசேப்பின் மகன் அல்லவா?" (லூக்கா 4:22)

பிள்ளை வளர்ப்புக்கு அருமையான எடுத்துக்காட்டாக இப்பகுதியைச் சொல்லலாம். பெற்றோருக்குப் பணிந்திருப்பது, தொழுகைக்கூடம் சென்று கற்றுக்கொள்வது, விவிலியம் வாசிப்பது,செபிப்பது,பலரும் பாராட்ட வாழ்வது, பெற்றோருக்குப் பெருமை சேர்க்க வாழ்வது,இக்கருத்துக்களை அருமையாக எடுத்துச் சொல்லுகிறது இந்த பகுதி;. கலிலேயாவில் உள்ள நசரேத்துக்குச் சென்று தன் பெற்றோருக்குப் பணிந்து வாழ்ந்திருக்கின்றார். தினமும் தொழுகைக்கூடம் சென்று விவிலியம் வாசித்து கற்றுக்கொண்டு இறை அருளிலும் வளர்ந்தார். இயேசுவின் பெற்றோர்கள் அவரை இவ்வாறு வளர்த்து ஆளாக்கினர். இயேசு இளம் வயதில் இப்பண்புகளில் வளர்ந்து தன் பெற்றோருக்குப் பெருமை சேர்த்துள்ளர். அவரது அறிவாற்றல், அருள்வாக்கு,அமைந்த அணுகுமுறை அனைவரையும் கவர்ந்ததால், வைத்த கண் வாங்காமல் இயேசுவையே பார்த்த வண்ணமாய் இருந்துள்ளனர். "இவர் யோசேப்பின் மகன் அல்லவா?" என்று பாராட்டியுள்ளனர். இன்றும் பெற்றோர்கள் தங்கள் குழந்கைகளை இவ்வாறு வளர்க்க வேண்டும். உலகக் கல்வி கொடுத்தால் மட்டும் போதாது. இறை அறிவையும் அனுபவத்தையம் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் உங்கள் உங்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். உலகம் உங்களைப் பாராட்டும். வாழ்த்துக்கள்.

மன்றாட்டு:

இறைவா, உம் ஆவியின் துணையோடு நாங்கள் வழிநடக்க அருள்தாரும்.