யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
கிறிஸ்து பிறப்புக்காலம்
2013-01-08

திருக்காட்சி விழாவிற்குப் பின் செவ்வாய்க்கிழமை


முதல் வாசகம்

அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்.
யோவான் முதல் திருமுகம் 4:7-10

7 அன்பார்ந்தவர்களே, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள்.8 அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை: ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கிறார்.9 நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது.10 நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்புகொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவரே எல்லா இனத்தாரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்
திருப்பாடல்கள் 72:1-4,7-8

1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். 2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக!

3 மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைக் கொடுக்கட்டும்; குன்றுகள் நீதியை விளைவிக்கட்டும். 4 எளியோரின் மக்களுக்கு அவர் நீதி வழங்குவாராக! ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாராக; பிறரை ஒடுக்குவோரை நொறுக்கி விடுவாராக!

7 அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக. 8 ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறுவதற்காகத் தம் சீடரிடம் கொடுத்தார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6:34-44

34 அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.35 இதற்குள் நெடுநேரமாகிவிடவே, சீடர் அவரிடம் வந்து, ' இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, ஏற்கெனவே நெடுநேரம் ஆகிவிட்டது.36 சுற்றிலுமுள்ள பட்டிகளுக்கும் ஊர்களுக்கும் சென்று உண்பதற்கு ஏதாவது அவர்களே வாங்கிக்கொள்ளுமாறு நீர் மக்களை அனுப்பிவிடும் ' என்றனர்.37 அவர் அவர்களிடம், 'நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்' என்று பதிலளித்தார். அவர்கள், 'நாங்கள் போய் இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கி இவர்களுக்கு உண்ணக் கொடுக்க வேண்டும் என்கிறீரா?' என்று கேட்டார்கள்.38 அப்பொழுது அவர், ' உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன? போய்ப் பாருங்கள் ' என்று கூற, அவர்களும் பார்த்து விட்டு, ' ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன ' என்றார்கள்.39 அவர் எல்லாரையும் பசும்புல் தரையில் அமரச் செய்யும்படி சீடர்களைப் பணித்தார்.40 மக்கள் நூறு பேராகவும், ஐம்பது பேராகவும் வரிசை வரிசையாய் அமர்ந்தனர்.41 அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பாhத்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறுவதற்காகத் தம் சீடரிடம் கொடுத்தார். அவ்வாறே அந்த இரு மீன்களையும் எல்லாருக்கும் பகிர்ந்தளித்தார்.42 அனைவரும் வயிறார உண்டனர்.43 பின் எஞ்சிய அப்பத் துண்டுகளையும் மீன் துண்டுகளையும் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.44 அப்பம் உண்ட ஆண்களின் தொகை ஐயாயிரம்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

"நீங்களே.. ..கொடுங்கள்" (மாற்கு 6:37)

பல சாதனைகளைப் படைப்பதற்கும் பல சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் நம்மையும் நம்மைச் சுற்றிலும் உள்ள அறிவை விட நமக்குள் இருப்பவர்பற்றியும் அவரது ஆற்றல்பற்றியும் உள்ள அறிவும் நம்பிக்கையும் மிக அவசியம். சீடர்கள் முதல் பகுதியை அறிந்திருந்தனர். அதாவது, கூட்டம் மிகப் பெரிது, நேரம் நெடு நேரமாகிவிட்டது. அநேகமாக பொழுது சாயும் நேரம். இடமும் பாலைநிலம். சுற்றிலும் உள்ள ஊர்களுக்கு சென்று உணவு வாங்கி வருவதும் இப்போதைக்கு முடியாத காரியம். அப்படியே வாங்குவதாக இருந்தாலும் 200 தெனாரியம் ஆகும். தற்சமயம் கைவசம் ஐந்து அப்பமும் இரண்டு மீனும் உள்ளன. இந்த விவரங்களும் தெளிவும் இருந்தன. ஆனால் இரண்டாம் பகுதியை அறியவில்லை. இயேசுவைப்பற்றிய விவரங்களும் தெளிவும் இன்னும் பெறவில்லை. அவர் கையாளும் வழி முறைகளை தெறிந்திருக்கவில்லை. இயேசு கையாண்ட வழி முறையைக் காண்போம். முதலில் கும்பலை குழுவாக்குகிறார். ஐம்பது நூறாக அமரச் செய்கிறார். அமைதியாக அமர்ந்து நிதானமாக சிந்திக்கத் தூண்டுகிறார். அதன் பின், வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றியதன் மூலம், மக்களுள் புதைந்திருக்கும் கடவுள் உணர்வை தூண்டி துலக்குகிறார். சுயநலம் தவிர்த்து பிறர்நலம் பாராட்டும் பெரிய மனதை தட்டி எழுப்புகிறார். இறுதியாக, உங்களிடம் இருப்பதை முதலில் பரிமாருங்கள் என்று முன்னுதாரணம் காட்டுகிறார். அவ்வளவுதான். "அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய அப்பத் துண்டுகளையும் மீன் துண்டுகளையும் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்".(மாற் 6'42-43). நம் வாழ்வில் முயற்சி செய்வோம். வாழ்த்துக்கள்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளங்களை உம் மகிழ்ச்சியால் நிரப்பியருளும்.