யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
கிறிஸ்து பிறப்புக்காலம்
2013-01-04


முதல் வாசகம்

கிறிஸ்து நேர்மையாளராய் இருப்பதுபோல் நேர்மையாய்ச் செயல்படுபவர் நேர்மையாளராய் இருக்கின்றார்.
யோவான் முதல் திருமுகம் 3:7 - 10

பிள்ளைகளே, எவரும் உங்களை நெறிதவறச் செய்யவிடாதீர்கள். கிறிஸ்து நேர்மையாளராய் இருப்பதுபோல் நேர்மையாய்ச் செயல்படுபவர் நேர்மையாளராய் இருக்கின்றார்.8 பாவம் செய்துவருகிறவர் அலகையைச் சார்ந்தவர்: ஏனெனில் தொடக்கத்திலிருந்தே அலகை பாவம் செய்து வருகிறது. ஆகவே அலகையின் செயல்களைத் தொலைக்கவே இறைமகன் தோன்றினார்.9 கடவுளிடமிருந்து பிறந்தவர் எவரும் பாவம் செய்வதில்லை: ஏனெனில் கடவுளின் இயல்பு அவரிடம் இருக்கிறது. கடவுளிடமிருந்து பிறந்தவராயிருப்பதால் அவரால் பாவம் செய்ய இயலாது.10 நேர்மையாய்ச் செயல்படாதவரும், தம் சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாத வரும் கடவுளிடமிருந்து வந்தவர்களல்ல. இதனால் கடவுளின் பிள்ளைகள் யாரென்றும் அலகையின் பிளளைகள் யாரென்றும் புலப்படும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
திருப்பாடல்கள் 98:1,3-6

1 நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்: கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால்தான் நம்மையும் அறிந்து கொள்ளவில்லை.3 அவரை எதிர்நோக்கி இருக்கிற அனைவரும் அவர் தூயவராய் இருப்பதுபோல் தம்மையே தூயவராக்க வேண்டும்.4 பாவம் செய்யும் அனைவரும் சட்டத்தை மீறுகின்றனர். சட்டத்தை மீறுவதே பாவம்.5 பாவங்களை நீக்கவே அவர் தோன்றினார் என்பது உங்களுக்குத் தெரியும். அவரிடம் பாவம் இல்லை.6 அவரோடு இணைந்திருக்கும் எவரும் பாவம் செய்வதில்லை. பாவம் செய்பவர் எவரும் அவரைக் கண்டதுமில்லை, அறிந்ததுமில்லை.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ' இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1:35-42

35 மறு நாள் யோவான் தம் சீடர் இருவருடன் மீண்டும் அங்கு நின்று கொண்டிருந்தார்.36 இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, ' இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி ' என்றார்.37 அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர்.38 இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு, 'என்ன தேடுகிறீர்கள்?' என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், 'ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?' என்று கேட்டார்கள்.39 அவர் அவர்களிடம், ' வந்து பாருங்கள் ' என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள்.40 யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர்.41 அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, ' மெசியாவைக் கண்டோம் ' என்றார். ' மெசியா ' என்றால் அருள்பொழிவு பெற்றவர் என்பது பொருள்.42 பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, 'நீ யோவானின் மகன் சீமோன். இனி 'கேபா' எனப்படுவாய்' என்றார். 'கேபா' என்றால் 'பாறை' என்பது பொருள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

"ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?" (யோவான் 1:38)

'தங்கியிருத்தல்' உண்மையிலே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இன்றைய காலகட்டங்களில் ஆடுகளை கடத்தி தங்களோடு தங்க வைப்பது இந்த அனுபவம்தானே. ஒருவனோடு தங்கி, உண்டு, உறங்கி சில நாட்கள் இருந்தால் அது அவனில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறதல்லவா!. இத்தகைய பெரும் மாற்றத்தை, புரட்சியை இயேசுவோடு தங்கியிருப்பதும் செய்யவல்லது. இயேசுவோடு தங்கிய யாவரும் இந்த அனுபவம் பெற்றனர். எம்மாவு "எங்களோடு தங்கும்"(லூக்24'29) என்ற அழைப்பு மாபெரும் மாற்றத்தை அச்சீடர்களில் ஏற்படுத்தியது. "சக்கேயு,இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்" (லூக் 19'5) என்ற இயேசுவின் வார்த்தை சக்கேயுவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதும் நமக்கு தெறியும். இவ்வாறு தங்க ஆசைப்பட்டு "ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?" எனக் கேட்டு அவரோடு தங்கியவருள் ஒருவர் அந்திரேயா. அவர் பெற்ற அனுபவம் "மெசியாவைக் கண்டோம்" என்பது. பெற்ற பெரு மகிழ்ச்சியை பேதுருவோடும் பகிர்ந்துகொள்கிறார். தானும் பேரானந்தம் அடைகிறார். பலரையும் இயேசுவில் மகிழச் செய்கிறார்.

மன்றாட்டு:

இறைவா, நீரே அன்பின் ஊற்று என உணர்ந்து உம் அன்பில் நாளும் வளர்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.