News Image

முள்ளிவாய்க்கால் நினைவு நாள்

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினம் என்பது தமிழ் மக்கள் வெறுமனே ஒன்று கூடி நினைவஞ்சலி செலுத்தும் நாளாக மட்டும் கருதப்பட முடியாது.

அது, இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தின் அரசியல் உரிமைகள், மனித உரிமைகள் மற்றும் அரசியல் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக பல தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தின் இறுதி நாள் மட்டுமல்ல அதுவே போராட்டத்தின் தொடர்ச்சியாகும்.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் என்பது வடக்கு கிழக்கில் அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கானது மட்டுமல்ல அந்த வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்துவதற்கான போராட்டமாகவே அமைந்தது.

எனவே தமிழர்கள் மிகப்பெரிய வரலாற்றுப் பொறுப்பை தோளில் சுமக்க வேண்டிய நாளாக இந்த நாள் உள்ளது.

முள்ளிவாய்க்கால் தமிழர் வரலாற்றில் அழியாத வலியையும், வெளிவராத உண்மைகளையும் தாங்கி நிற்கிறது. ஆயுதப் போராட்டம் எவ்வாறு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது? உலக நாடுகள் மற்றும் சர்வதேச அரசியல் சக்திகள் எந்த வகையில் அந்த போரின் முடிவை வடிவமைத்தனர்?

போரின் இறுதிக்கட்டத்தில் அப்பாவி பொதுமக்கள் எவ்வாறு உயிரிழந்தனர்? போராளிகள் எவ்வாறு அழிக்கப்பட்டனர்? மக்கள் எத்தகைய மனிதாபிமான பேரழிவுகளை எதிர்கொண்டனர்? போன்ற பல்வேறு கேள்விகளுடன் இன்னமும் நீதிக்கான போராட்டங்கள் தொடர்கின்றன.

தமிழ் மக்களின் அழிவுக்கு இது வரை யாரும் பொறுப்பு கூற முடியாத நிலையே காணப்படுகின்றது.

முந்தைய அடுத்தது