வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்அனைத்து மத விழாக்களையும் ஒரே நாளில் கொண்டாடிய வாரணாசி

இந்துக்களின் புனித நகரான வாரணாசியில் ஒன்று கூடிய இந்து, இஸ்லாம், சீக்கிய, ஜெயின் மற்றும் கிறிஸ்தவப் பிரதிநிதிகள், தங்கள் மத விழாக்களை ஒன்று கூடி ஒரே நாளில் சிறப்பித்து, வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இயேசுவின் பிறப்பையும், மிலாடி நபியையும், 10வது சீக்கிய குருவின் பிறப்பையும், 23வது ஜெயின் குருவின் பிறப்பையும், இந்து அறுவடைத் திருவிழாவையும் இணைந்து கொண்டாடிய இந்த ஐந்து மதங்களின் பிரதிநிதிகள், மதங்களிடையே ஒத்துழைப்புக்கும், அமைதிக்கும், இணக்க வாழ்வுக்கும் இத்தகையக் கொண்டாட்டங்கள் உதவுகின்றன என்றனர். இந்த பல்சமயக் கூட்டத்தில் அனைத்து மதங்களின் பாடல்களுடன், கிறிஸ்மஸ் கீதங்களும் இசைக்கப்பட்டன.

அன்பின் துணைகொண்டு இவ்வுலகையே ஒப்புரவாக்குவதற்கு ஒரு நல்ல வாய்ப்பைத் தருவதே கிறிஸ்மஸ் விழாவின் நோக்கம் என, இக்கூட்டத்தில் உரை வழங்கினார், கத்தோலிக்கர்கள் சார்பில் பங்குபெற்ற அருள்பணி அனில்தேவ். அனைவரும் ஒன்றிணைந்து இணக்க வாழ்வை மேற்கொள்ளவேண்டியதன் முக்கியத்துவம், இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து மதத்தினராலும் வலியுறுத்தப்பட்டது.

(ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி) [2016-12-26 20:01:13]


தெலுங்கானா மாநிலத்தில் கிறிஸ்தவ பவன்

தெலுங்கானா மாநில அரசு, விஜயவாடா நகரில் ஏற்பாடு செய்த கிறிஸ்மஸ் பெருவிழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய, அம்மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் அவர்கள், ஆலயங்கள் தாக்கப்படுவதையும், அவை அவமரியாதை செய்யப்படுவதையும், இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதாக, உறுதியளித்தார்.

தெலுங்கானா மாநில அரசு, சமயச் சார்பற்றது என்பதால், தனது மாநிலத்தில், கிறிஸ்தவர்கள், பாதுகாப்பாக இருப்பதை உணர வேண்டுமென்று கூறிய கே.சந்திரசேகர் ராவ் அவர்கள், மாநிலத்திலுள்ள அனைத்து இனப் பிரிவினர் மத்தியில், நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு, தன்னை அர்ப்பணிப்பதாகத் தெரிவித்தார். அம்மாநில கிறிஸ்தவ சபைகளுக்கென, நடத்தப்பட்ட இவ்விழாவில் பேசிய கே.சந்திரசேகர் ராவ் அவர்கள், Nagoleவில், 2 ஏக்கர் பரப்பில் கிறிஸ்தவ பவன் ஒன்று அமைக்கப்படும் எனவும் அறிவித்தார். இக்கிறிஸ்மஸ் விழாவில், பல அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் அவர்கள், டிசம்பர் 27, வருகிற செவ்வாயன்று, அனைத்து கிறிஸ்தவ சபைத் தலைவர்களுடன் கூட்டம் ஒன்றையும் நடத்தவுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.

(ஆதாரம் : Ind.Sec. / வத்திக்கான் வானொலி) [2016-12-26 19:53:06]


கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்க ஒடிசா முதலமைச்சர் உறுதி

ஒடிசா தலைநகர் கட்டக்-புவனேஷ்வரில் நடந்த கிறிஸ்மஸ் பெருவிழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட, அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர்கள், அம்மாநில கிறிஸ்தவ சமுதாயத்திற்குப் பாதுகாப்பு வழங்குவதற்கு உறுதியளித்துள்ளார்.

கட்டக்-புவனேஷ்வர் நகரிலுள்ள புனித வின்சென்ட் பேராலயத்தில் இவ்வியாழனன்று நடைபெற்ற கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பட்நாயக் அவர்கள், கிறிஸ்தவர்களுக்கு, கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, கிறிஸ்தவர்களின் தன்னலமற்ற சேவைகளையும் பாராட்டினார். ஒடிசாவில், கிறிஸ்தவர்களின் இருப்பு நன்றாகவே உணரப்படுகின்றது எனவும், ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் பாதுகாப்பு வழங்குவது குறித்து அக்கறை கொண்டிருப்பதாகவும் கூறிய பட்நாயக் அவர்கள், கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கு உறுதியளித்தார்.

பட்நாயக் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில், பல அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும், ஏனைய கிறிஸ்தவ சபைப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
(ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி) [2016-12-26 19:12:45]


அமைதியான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டைச் சிறப்பிக்க கிறிஸ்தவர்கள் ஆவல்

மோதல்கள் நிறைந்த ஒடிசா மாநிலத்தில், அமைதியான மற்றும் மகிழ்வான கிறிஸ்மஸ் பெருவிழாவைச் சிறப்பிக்க, கிறிஸ்தவர்கள் விரும்புகின்றனர் என்று, அம்மாநில தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.

இவ்வாண்டின் கிறிஸ்மஸ் பெருவிழாவுக்கு செய்தி வெளியிட்டுள்ள, கட்டக்-புவனேஷ்வர் பேராயர் ஜான் பார்வா அவர்கள், ஒடிசாவில் நடந்த கிறிஸ்தவர்களுக்கெதிரான வன்முறைகளின் நினைவு, இன்னும் மறையாமல் இருந்தபோதிலும், அம்மாநிலத்தில், 2016ம் ஆண்டில், இறையழைத்தல்கள் அதிகரித்துள்ளன என்று கூறினார். ஒடிசாவில், கிறிஸ்தவ சபைகளுக்கிடையே ஒருமைப்பாட்டுணர்வு அதிகரித்துள்ளது என்றும், கொல்கத்தா அன்னை தெரேசா புனிதராக அறிவிக்கப்பட்டதையடுத்து, அம்மாநிலத்தில், ஒரு சாலைக்கு, அன்னை தெரேசாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்றும், தன் கிறிஸ்மஸ் செய்தியில் கூறியுள்ளார், பேராயர் பார்வா.

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர், கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கெதிரான வன்முறைகள் இடம்பெற்றன எனினும், மறைசாட்சிகளின் இரத்தம், திருஅவையின் வித்து என்பதற்கேற்ப, தலத்திருஅவை வளர்ந்து வருகிறது என்றும், கூறியுள்ளார் பேராயர் பார்வா. 2017ம் ஆண்டு, எல்லாருக்கும், புனிதம், அமைதி, மகிழ்வு மற்றும், வளமை நிரம்பிய ஆண்டாக அமைவதற்கு, தன் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார், கட்டக்-புவனேஷ்வர் பேராயர் ஜான் பார்வா.

(ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி) [2016-12-26 19:09:37]


டீஹார் சிறையில் கைதிகளுக்கு கிறிஸ்மஸ் விழா

இந்தியச் சிறைச்சாலைப் பணி என்ற கத்தோலிக்க அமைப்பு, இந்தியாவின் மிகப்பெரும் சிறையான, டீஹார் சிறையில் கைதிகளுக்கு கிறிஸ்மஸ் விழா நிகழ்ச்சிகளை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.

இந்தியக் கத்தோலிக்கச் சிறைப்பணி அமைப்பு, கடந்த 10 நாட்களாக, இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள சிறைகளில், கிறிஸ்மஸ் விழா நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக, இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர், அருள்பணி சவரிராஜ் அவர்கள், UCA செய்தியிடம் கூறினார். சிறைக் கைதிகளும் சமுதாயத்தின் அங்கம் என்பதை அவர்களுக்கு உணர்த்தவே, இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று, அருள்பணி சவரிராஜ் அவர்கள் எடுத்துரைத்தார்.

இந்திய ஆயர் பேரவையின் ஓர் அங்கமாக செயலாற்றும் இந்திய கத்தோலிக்க சிறைப்பணி அமைப்பில், அருள்பணியாளர்கள், அருள் சகோதரிகள், இளையோர் உட்பட, 6000த்திற்கும் அதிகமான தன்னார்வத் தொண்டர்கள் பணியாற்றுகின்றனர் என்றும், இவர்கள், இந்தியாவின் 800 சிறைகளில், பல்வேறு பணிகளை மேற்கொள்கின்றனர் என்றும், UCA செய்தி கூறுகிறது.

(ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி) [2016-12-26 18:56:24]


தலித் மக்களின் மேம்பாட்டிற்கு இந்தியத் திருஅவை அர்ப்பணம்

சாதிப் பாகுபாடு என்பது மிகப்பெரும் சமூகப் பாவம், தீண்டாமை என்பது திருஅவைக்குள் ஒரு நாளும் சகித்துக்கொள்ளப்படாது' என அறிவித்துள்ளனர், இந்திய ஆயர்கள்.

தலித் மக்களுக்கு சரிநிகர் வேலை வாய்ப்புகளை உறுதிச் செய்வது, அவர்களில் பொதுநிலைத் தலைமைத்துவப் பண்பை ஊக்குவித்தல், ஏழை தலித் மாணவர்களுக்கு கல்வித் உதவித்தொகை வழங்குதல், சமூக நீதிக்கு உதவுதல், அவர்கள் நீதியான உதவிப்பெற உதவுதல் போன்றவற்ற உள்ளடக்கிய வழிமுறைகளை வகுத்துள்ளனர், இந்திய ஆயர்கள்.
தலித் மக்களை மேம்படுத்துவதில் ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் இருக்கும் கடமைகள் வலியுறுத்தப்பட வேண்டும் எனவும், சாதி மற்றும் மத அடிப்படையிலான பாகுபாடுகள் அகற்றப்பட உழைக்க வேண்டும் எனவும், இந்திய கத்தோலிக்க ஆயர்கள், மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

(ஆதாரம் : ICN/வத்திக்கான் வானொலி) [2016-12-26 18:52:33]


மிலாடி நபி விழாவுக்கு கத்தோலிக்கத் தலைவர்கள் வாழ்த்து

இறைவாக்கினர் முகமது அவர்களின், மிலாடி நபி பிறந்த நாள் விழாவையொட்டி, முஸ்லிம் சகோதரர்களுக்கு, நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். ஜம்மு-காஷ்மீர் மாநில கத்தோலிக்கத் தலைவர்கள் டிசம்பர் 13, செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட மிலாடி நபி விழாவுக்கென, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலுள்ள, முஸ்லிம் சகோதரர்களுக்கு, நல்வாழ்த்துக்களைத் தெரிவித்த அம்மாநில கத்தோலிக்கத் தலைவர்கள், அப்பகுதியில் சமய நல்லிணக்கம், உடன்பிறந்த உணர்வு மற்றும், அமைதி நிலவச் செபிப்பதாகவும் கூறியுள்ளனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில், ஸ்ரீநகரிலுள்ள Hazratbal மசூதியில், ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட முஸ்லிம்கள், திங்களன்று செபித்தனர். இம்மசூதியில், வைக்கப்பட்டுள்ள இறைவாக்கினர் முகமது அவர்களின் திருப்பண்டம் (முகமது அவர்களின் தாடியின் ஒரு முடி), ஒவ்வோர் ஆண்டும் மிலாடி நபி அன்று, பக்தர்களின் வணக்கத்திற்கு வைக்கப்படுகின்றது என்று, UCA செய்தி கூறுகிறது. 1635ம் ஆண்டில், அராபியர்கள், இத்திருப்பண்டத்தை இந்தியாவிற்குக் கொண்டு வந்தனர் என்றும், 1700ம் ஆண்டில், இது காஷ்மீருக்குக் கொண்டு வரப்பட்டது என்றும் சொல்லப்படுகின்றது.

(ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி) [2016-12-26 18:47:47]


குடும்பங்கள், உண்மையான நற்செய்தி பள்ளிகள், கர்தினால் டோப்போ

நற்செய்தியின் மகிழ்வை, ஒருவர் ஒருவருடன் பகிர்ந்துகொள்வதற்கு கற்றுக்கொள்ளும் இடமாக அமைந்துள்ள குடும்பங்கள், நற்செய்தியின் உண்மையான பள்ளிகள் எனவும், உண்மையான அன்பில், இரக்கத்தின் மிக அழகான குழு உருவாகின்றது எனவும், திருத்தந்தையின் பிரதிநிதி ஒருவர் கூறினார்.

இலங்கையின் நெகோம்போவில் நடந்துவரும், ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின்(FABC) 11வது கூட்டத்தில், திருத்தந்தையின் பிரதிநிதியாகப் பங்குபெறும், இராஞ்சிப் பேராயர் கர்தினால் டெலஸ்போர் டோப்போ அவர்கள், குடும்பத்தில் நிலவும் விசுவாசமே, அதன் உறுப்பினர்களுக்கு, இயேசுவைப் பின்செல்லக் கற்றுக் கொடுக்கின்றது என்று கூறினார். ஆசியத் திருஅவை, கத்தோலிக்கக் குடும்பங்களின் ஆழமான விசுவாசத்தில் நம்பிக்கை கொண்டிருக்கின்றது எனவும், இல்லத் திருஅவையே, கடவுளின் இரக்கத்தையும், பரிவன்பையும் பரப்பும் முக்கிய கருவி எனவும் கூறினார் கர்தினால் டோப்போ.

டிசம்பர் 04, ஞாயிறன்று நிறைவடைந்த இக்கூட்டத்தில், ஏறக்குறைய 40 நாடுகளிலிருந்து, கர்தினால்கள், பேராயர்கள், ஆயர்கள் என, 140க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். திருத்தந்தையும், இக்கூட்டத்திற்கு, செய்தி அனுப்பியிருந்தார்.

(ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி) [2016-12-11 22:25:47]


மறைந்த தமிழக முதல்வருக்கு திருஅவையின் இரங்கல் மற்றும் பாராட்டு

தமிழக மக்களின் உணர்வுகளையும் எண்ணங்களையும் சரியான முறையில் புரிந்துகொண்டு, அவர்களுக்கேற்ற திட்டங்களை வகுத்து உதவியவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என, தன் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளார் இந்தியக் கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி.

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆழ்ந்த இரங்கலை வெளிப்படுத்தி, செய்தி வெளியிட்டுள்ள கர்தினால் ஆலஞ்சேரி அவர்கள், ஓர் உறுதியான தலைமைத்துவத்தைக் கொடுத்து, அதன் வழியாக தமிழக மக்களின் வளமான வாழ்வுக்கு பங்காற்றியதற்கு, செல்வி ஜெயலலிதாவைப் பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார். தமிழக ஆயர் பேரவைத் தலைவர், மதுரை பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்களும், தமிழக முதல்வரின் மரணம் குறித்து ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுள்ளார்.

தமிழக முதல்வரின் மரணம் குறித்து ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டு, UCA செய்தியிடம் பேசிய, இயேசு சபையின் ஜீவன் பத்திரிகை ஆசிரியர் அருள்பணி ஜோ ஆன்டனி சே.ச. அவர்கள், செல்வி ஜெயலலிதா அவர்கள், தன் கட்சி மற்றும் ஆட்சி நிர்வாகத்திலும் சிறந்த கட்டுப்பாட்டைக் கொண்டிருந்ததோடு, ஏழைகளின் நலனை மனதில் கொண்டு பல்வேறு திட்டங்களைத் தீட்டி வெற்றி கண்டவர் என்று கூறினார்.

(ஆதாரம் : UCAN/Agencies/வத்திக்கான் வானொலி) [2016-12-11 22:12:02]


பொருளாதார வளர்ச்சியில், எல்லாத் தரப்பினரும் சேர்க்கப்பட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இந்தியக் கிறிஸ்தவர்கள் கோரிக்கை

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், சமுதாயத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட மக்களை ஒதுக்காமல், எல்லாத் தரப்பினரையும் இணைப்பதற்கு, உறுதி வழங்குமாறு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை, இந்தியக் கிறிஸ்தவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்தியக் கிறிஸ்தவர்களின் உலகளாவிய அவைத் தலைவர் சாஜன் ஜார்ஜ் அவர்கள், பிரதமர் மோடி அவர்களுக்கு எழுதியுள்ள திறந்த கடிதத்தில், ஊழல், பொருளாதார மற்றும் சமூக சமத்துவமின்மை, சிறுபான்மை மதங்களோடு பிரச்சனை போன்ற கடும் விவகாரங்களால், நாடு இரண்டாகப் பிளவுபட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் நிலவும் 500, 1000 ரூபாய் தாள்கள் பிரச்சனையின் பாதிப்பையும் சுட்டிக்காட்டியுள்ள, சாஜன் ஜார்ஜ் அவர்கள், நாற்பது விழுக்காட்டு இந்தியர்கள், வங்கிகளைப் பயன்படுத்துவதில்லை எனவும், இந்தப் பிரச்சனையில், ஏழைகளும், சமூகநலப் பணிகளில் பணியாற்றும் நிறுவனங்களும் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் கூறியுள்ளார்.

இலட்சக்கணக்கான குடிமக்களுக்கும், சிறுதொழில் முனைவோருக்கும், தங்கள் தொழில்களை நடத்துவதற்கு, அரசின் உதவி தேவைப்படுகின்றது எனவும், புதிய ஆண்டு வளம் பெறுவதற்கு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், எல்லாத் தரப்பினரும் இணைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார் சாஜன் ஜார்ஜ்.

(ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி) [2016-12-11 22:06:57]