வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்பசுவைக் கொலை செய்பவருக்கு மரணதண்டனை அச்சுறுத்தலுக்கு எதிராக கண்டனம்

ஆடுமாடுளைக் கொலை செய்கின்ற அல்லது மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்கின்ற மக்களைத் தூக்கிலிடுவோம் என்று இந்து தீவிரவாதக் குழு ஒன்று அச்சுறுத்தியிருப்பதற்கு எதிராக, தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார், இந்திய ஆயர் ஒருவர்.

விஷ்வ இந்து பரிஷத் குழுவின் அச்சுறுத்தல் பற்றி, யூக்கா செய்தியிடம் பேசிய, இந்திய ஆயர் பேரவையின் சிறுபான்மை இனக் குழுக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பணிக்குழுவின் தலைவரான ஆயர் வின்சென்ட் பார்வா அவர்கள், இந்த அமைப்பு, இந்தியாவில் வன்முறை மற்றும் சமயங்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றது என்று கூறினார்.

பசுக்கொலைக்கு எதிராக தேசிய அளவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும், இச்சட்டத்தை மீறுகின்றவர்கள் கொலைசெய்யப்பட வேண்டும் என்றும், VHP அமைப்பு வலியுறுத்திவருவது பற்றிக் குறிப்பிட்ட ஆயர் பார்வா அவர்கள், மாட்டிறைச்சியைச் சாப்பிடுவதற்கு, தங்கள் மதங்களில் எந்தத் தடையையும் கொண்டிராத சிறுபான்மை மதத்தவரைக் குறிவைத்து, இவ்வாறு வலியுறுத்தப்படுகின்றது என்று கூறினார். இந்தியாவின் 29 மாநிலங்களில், பசுக்களும், எருதுகளும், காளை மாடுகளும் உள்ளன.

(ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி) [2017-12-10 12:27:01]


ஆலப்புழை மறைமாவட்டத்தின் வாரிசு ஆயர் நியமனம்

ஆலப்புழை மறைமாவட்டத்தின் வாரிசு ஆயராக, அருள்பணி ஜேம்ஸ் இரபேல் அனப்பரம்பில் (James Raphael Anaparambil) அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 7, வியாழனன்று நியமித்துள்ளார்.

1962ம் ஆண்டு, கேரளாவின் கண்டக்கடவு எனும் ஊரில் பிறந்த ஜேம்ஸ் இரபேல் அவர்கள், 1986ம் ஆண்டு ஆலப்புழை மறைமாவட்டத்தின் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார். உரோம் நகரின் உர்பானியா பல்கலைக் கழகத்தில், விவிலிய இறையியலில், முனைவர் பட்டம் பெற்ற அருள்பணி ஜேம்ஸ் இரபேல் அவர்கள், குரு மாணவர்களுக்கு ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றியவர்.

கடந்த ஆண்டு முதல், விவிலியத்தின் மலையாள மொழிபெயர்ப்பில் திருத்தங்களைக் கொணரும் பணியில், அருள்பணி ஜேம்ஸ் இரபேல் அனப்பரம்பில் அவர்கள் ஈடுபட்டுள்ளார். ஆலப்புழை மறைமாவட்டத்தின் தற்போதைய ஆயராக 2001ம் ஆண்டு முதல் பணியாற்றிவரும் ஆயர் ஸ்டீபன் அத்திப்பொழியில் அவர்கள், 73 வயது நிறைந்தவர்.

(ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-12-10 12:21:55]


ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஆயர்கள் அழைப்பு

இந்தியாவின் தென் பகுதியைக் கடுமையாய்த் தாக்கியுள்ள ஒக்கி புயலில் பலியானவர்களுக்காகச் செபித்துள்ள அதேவேளை, இப்புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு, இந்திய ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த வாரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் உள்ளிட்ட, தென் கடற்கரைப் பகுதியைத் தாக்கிய ஒக்கிப் புயலில், தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த கத்தோலிக்க மீனவர்களில் குறைந்தது 32 பேர் இறந்துள்ளனர் மற்றும், 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். டிசம்பர் 1,2 நாள்களில் தமிழ்நாடு, கேரளா, இலட்சத்தீவுகள் ஆகிய பகுதியைத் தாக்கிய ஒக்கிப் புயலில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் தங்களின் ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ளனர், இந்திய ஆயர்கள். 560க்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதுமாகவும், 1,500க்கும் மேற்பட்ட வீடுகள், ஒரு பக்கமும் சேதமடைந்துள்ளன மற்றும் ஏறக்குறைய பத்தாயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

டிசம்பர் 10, ஞாயிறன்று, இந்தியாவின் அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும், ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காகச் செபம் செய்ய வேண்டுமெனவும், அந்நாளில் அம்மக்களுக்கு உதவிகள் வழங்கப்படுமாறும், இந்திய ஆயர் பேரவையின் தலைவரான, கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். இந்திய ஆயர் பேரவையின் காரித்தாஸ் அமைப்பு, இடர்துடைப்புப் பணிகளை ஆற்றி வருகின்றது.

(ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி) [2017-12-10 12:01:35]


குஜராத் தேர்தல்களில் நல்ல தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட ஜெபிக்குமாறு வேண்டுகோள்

இந்தியாவில் சிறுபான்மை சமூகங்கள் மத்தியில் பாதுகாப்பற்ற உணர்வு வளர்ந்துவரும் இவ்வேளையில், குஜராத் மாநிலத்தில், வருகின்ற டிசம்பரில் நடைபெறும் தேர்தல்களில், நல்ல தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட செபிக்குமாறு, கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டுள்ளார், அம்மாநில கத்தோலிக்க அதிகாரி ஒருவர்.

குஜராத்தில், டிசம்பர் 9, 14 ஆகிய நாள்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறுவதை முன்னிட்டு மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்டுள்ள, காந்திநகர் பேராயர் Thomas Macwan அவர்கள், கத்தோலிக்கர் தங்கள் மனச்சான்றின்படி வாக்களிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். குறுகிய எண்ணம் கொண்டுள்ள மக்களுக்கு எதிராக நாம் இருக்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ள பேராயர் Macwan அவர்கள், தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுமாறும், நல்ல தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்குச் செபிக்குமாறும் கூறியுள்ளார்.

குறிப்பாக, தனியாகவும், குடும்பமாகவும், குழுவாகவும், பங்குத் தளங்களிலும் செபமாலை செபிப்பது பெரும் உதவியாக இருக்கும் என்றும் கூறியுள்ள பேராயர் Macwan அவர்கள், குஜராத் மாநிலத்திலுள்ள ஆயர்கள் எல்லாருமே, தேர்தலுக்காக, எல்லா இடங்களிலும் செப வழிபாடுகளை நடத்துமாறு விரும்புகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். குஜராத் தேர்தல் முடிவுகள், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும், இம்முடிவுகள் நம் அன்புக்குரிய நாட்டின் எதிர்காலத்தில் நேர்மறை மற்றும் எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும், பேராயரின் அறிக்கை கூறுகின்றது.

(ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி) [2017-12-10 11:49:47]


கத்தோலிக்க உளவியலாளர்களின் தேசிய கருத்தரங்கு

உளவியலாளர்கள் மக்களின் நல்வாழ்வுக்கு உதவ வேண்டுமென்று வலியுறுத்தினார், மங்களூரு ஆயர் அலாய்சியஸ் பால் டிசூசா.

இந்தியாவின் மங்களூருவில் செப்டம்பர் மாதத்தில் நடந்துமுடிந்த கத்தோலிக்க உளவியலாளர்களின் 18வது தேசிய கருத்தரங்கில் உரையாற்றிய ஆயர் அலாய்சியஸ் டிசூசா அவர்கள், கத்தோலிக்க உளவியலாளர்கள், இயேசுவைப் பின்பற்றி, உள்ளம் உடைந்துபோன மக்கள், தங்களைப் பற்றி நன்மதிப்பு கொள்வதற்கு உதவ வேண்டுமென்று கூறினார். ஒவ்வொருவரும் தங்களைப் பற்றி நேர்மறை எண்ணத்தைக் கொண்டிருப்பது, நல்வாழ்வுக்கு மிகவும் முக்கியம் என்றும் ஆயர் கூறினார். இந்திய கத்தோலிக்க உளவியலாளர்கள் அவையும், கர்நாடக உளவியலாளர்கள் அவையும் இணைந்து நடத்திய இந்த மூன்று நாள் கருத்தரங்கில், ஏறத்தாழ 125 கத்தோலிக்க உளவியலாளர்கள் கலந்துகொண்டனர்.

(ஆதாரம் : Daiji world/UCAN /வத்திக்கான் வானொலி) [2017-11-20 01:52:09]


உலக மாமன்றம் திருத்தந்தையின் பரிசு - சலேசிய உலகத் தலைவர்

உலகின் விளிம்புகளுக்குச் சென்று, மறைப்பணியாற்ற வேண்டும் என்பதில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், புனித தொன் போஸ்கோவும் ஒருமித்த கருத்துடையவர்கள் என்று, சலேசிய துறவு சபையின் உலகத் தலைவர், அருள்பணி Ángel Fernández Artime அவர்கள், ஆசிய செய்தியிடம் கூறினார்.

இந்தியாவின் மும்பை நகரின் மாதுங்காவில் அமைந்துள்ள புனித தொன் போஸ்கோ திருத்தலத்தின் 60ம் ஆண்டு நிறைவுக்கென இந்தியாவிற்கு சென்றுள்ள அருள்பணி Artime அவர்கள், இளையோரை மையப்படுத்தி அடுத்த ஆண்டு நடைபெறும் உலக ஆயர்கள் மாமன்றம் குறித்தும், அண்மையில் விடுதலையான சலேசிய அருள்பணியாளர் டாம் உழுன்னலில் அவர்களைக் குறித்தும் தன் கருத்துக்களை வெளியிட்டார். அருள்பணி டாம் அவர்கள் அடைந்த துன்பங்கள், இந்தியாவில் உள்ள சலேசியர்களுக்கு மட்டுமல்ல, மாறாக, உலகெங்கும் கடினமானச் சூழல்களில் மறை பணியாற்றிவரும் அனைத்து சலேசிய துறவியருக்கும் ஓர் உந்து சக்தியாக உள்ளது என்று அருள்பணி Artime அவர்கள் குறிப்பிட்டார்.

உலகின் 132 நாடுகளில் பணியாற்றி வரும் சலேசிய துறவிகள், இளையோரைக் குறித்து கருத்துக்களைத் திரட்டி வருவதாகவும், இளையோரை மையப்படுத்தி நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றம், இவ்வுலகிற்கும், தங்கள் சபைக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கும் ஒரு பரிசு என்றும் அருள்பணி Artime அவர்கள் எடுத்துரைத்தார்.

(ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி) [2017-11-20 01:42:10]


மங்களூருவில் தனித்துவமிக்க செபமாலைக் கண்காட்சி

50000த்திற்கும் மேற்பட்ட செபமாலைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு தனித்துவமிக்க கண்காட்சி, இந்தியாவின் மங்களூருவில் அண்மையில் நிறைவுற்றது.

80 நாடுகளிலிருந்து கொணரப்பட்ட 50000த்திற்கும் அதிகமான செபமாலைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தக் கண்காட்சியை, மங்களூரு ஆயர் Aloysius Paul D'Souza அவர்கள் திறந்து வைத்தார். மங்களூருவின் செபமாலை அன்னை பேராலயத்தின் 450ம் ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அமைந்திருந்த இந்தக் கண்காட்சி, கேரளாவைச் சேர்ந்த Sabu Caiter என்பவரின் முயற்சியால் உருவாக்கப்பட்டது.

புனித அன்னை தெரேசா அவர்கள் பயன்படுத்திய செபமாலை, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் அர்ச்சிக்கப்பட்ட செபமாலை ஆகியவை உட்பட, Sabu Caiter அவர்கள் சேகரித்துள்ள 50000த்திற்கும் அதிகமான செபமாலைகள், மற்றும் 200க்கும் அதிகமான அன்னை மரியாவின் திரு உருவங்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றன.

(ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி) [2017-11-20 01:38:31]


அ.பணி டாம் உழுன்னலிலுக்கு அன்னை தெரேசா விருது

போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஏமன் நாட்டில் கடத்தப்பட்டு, விடுதலை செய்யப்பட்டுள்ள இந்திய அருள்பணியாளர் டாம் உழுன்னலில் அவர்கள், ஏமன் நாட்டில் ஆற்றிய மறைப்பணிகளைப் பாராட்டும் விதமாக, அவருக்கு அன்னை தெரேசா விருது அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை நகரை மையமாகக் கொண்ட Harmony Foundation, சமூக நீதிக்கான அன்னை தெரேசா விருதை, சலேசிய அருள்பணியாளர் டாம் உழுன்னலில் அவர்களுக்கு வழங்கவுள்ளது. இவ்விருது பற்றி UCA செய்தியிடம் பேசிய இந்நிறுவனத்தை உருவாக்கிய, Abraham Mathai அவர்கள், இந்த ஆண்டு இவ்விருதின் தலைப்புக்கேற்ப, அருள்பணி டாம் அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்வு அமைந்துள்ளது என்று கூறினார்.

"எல்லைகளைக் கடந்து பரிவிரக்கம் : புலம்பெயர்ந்தவர் பிரச்சனைக்கு பரிவிரக்கத்துடன் பதிலளித்தல்" என்பதே, இவ்வாண்டின் இவ்விருதின் தலைப்பு என்றும், Mathai அவர்கள் கூறினார். ஏமன் நாட்டின் ஏடெனில், 2016ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இஸ்லாம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு, 18 மாதங்களுக்குப்பின் விடுதலைசெய்யப்பட்டுள்ள, அருள்பணி டாம் அவர்கள், தனது சொந்த மாநிலமான கேரளா திரும்பியுள்ளார். அவருக்கு அங்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

(ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி) [2017-11-13 01:29:06]


சீரோ-மலபார் வழிபாட்டுமுறையின் புதிய மறைமாவட்டங்கள்

இந்தியாவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, Shamshabad மற்றும், ஓசூர் சீரோ- சீரோ-மலபார் வழிபாட்டுமுறையின் புதிய மறைமாவட்டங்களுக்கும், அவற்றிற்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆயர்களுக்கும் ஒப்புதல் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தெலுங்கானா மாநிலத்திலுள்ள Shamshabad மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, இந்நாள்வரை திருச்சூர் துணை ஆயராகப் பணியாற்றிவந்த, ஆயர் Raphael Thattil அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் வடக்கிலுள்ள ஓசூர் சீரோ-மலபார் வழிபாட்டுமுறையின் புதிய மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அருள்பணி Sebastian (Jobby) Pozholiparampil அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையிலுள்ள ஏறத்தாழ ஐம்பதாயிரம் மற்றும், செங்கல்பட்டு, தர்மபுரி, வேலூர், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளிலுள்ள ஏறத்தாழ பதினைந்தாயிரம் சீரோ-மலபார் வழிபாட்டுமுறையின் விசுவாசிகளை, இப்புதிய ஓசூர் மறைமாவட்டம் கொண்டிருக்கின்றது. மேலும், சீரோ-மலபார் வழிபாட்டுமுறையின் இராமநாதபுரம் மற்றும் தக்களை மறைமாவட்டத்தின் திருஆட்சிப் பகுதியின் விரிவாக்கத்தையும் ஏற்றுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

(ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2017-11-13 01:24:49]


உலகில் 250 நகரங்களில், இந்திய அருள்பணியாளரின் கண் தான இயக்கம்

நான்கு ஆண்டுகளுக்கு முன், இந்திய கத்தோலிக்க அருள்பணியாளர் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்ட கண் தான இயக்கம், தற்போது ஐந்து நாடுகளில், 250 நகரங்களில் பரவியுள்ளது என்று, யூக்கா செய்தி கூறுகின்றது.

கிளேரிசியன் சபை அருள்பணியாளர் ஜார்ஜ் கண்ணன்தானம் அவர்கள், 2013ம் ஆண்டில் ஆரம்பித்த கண் தான இயக்கம், கண் விழிவெண்படலம் தானம் செய்யப்படுவதை ஊக்குவித்து வருகிறது. உலக பார்வை தினம் அக்டோபர் 12-இல், இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடு, சீனா, இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளின் 250 நகரங்களில் கண் தானத்தை ஊக்குவித்து, பல்லாயிரக்கணக்கான பேர், கண்களைக் கட்டிக்கொண்டு, விழிப்புணர்வு பேரணிகளில் கலந்துகொண்டனர். இதில் பேராயர்கள், ஆயர்கள், இருபால் துறவியர் ஆகியோரும் உள்ளடங்குவர். இந்த கண் தான இயக்கம், கடந்த நான்கு ஆண்டுகளில், ஐந்து நாடுகளில், நூற்றுக்கணக்கான தன்னார்வ நிறுவனங்கள், மறைமாவட்டங்கள் மற்றும் துறவற நிறுவனங்களில் பரவியுள்ளது.

புது டெல்லியில் நடைபெற்ற பேரணியில், பார்வைத் திறனற்ற நூறு பேர் உட்பட, ஏறத்தாழ 600 பேர் கலந்துகொண்டனர். உலகிலுள்ள பார்வையற்றவர்களில், ஏறத்தாழ நாற்பது விழுக்காட்டினர், அதாவது ஏறத்தாழ ஒரு கோடியே 50 இலட்சம் பேர் இந்தியாவில் உள்ளனர் என்று, அருள்பணி Kannanthanam அவர்கள் அறிவித்தார்.

(ஆதாரம் : UCAN/ வத்திக்கான் வானொலி) [2017-11-13 01:14:04]