வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்இறைஊழியர் அ.பணி லெவே சே.ச. நினைவு நாள் மார்ச் 21

இறைஊழியர் அருள்பணி லெவே சே.ச. அவர்களின் நினைவு நாளான, மார்ச் 21, இப்புதன்கிழமை மாலை 6 மணிக்கு, சருகணி திரு இதயங்களின் ஆலய மைதான மேடையில், சிவகங்கை மறைமாவட்ட மேதகு ஆயர் செ.சூசைமாணிக்கம் அவர்கள் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்படுகின்றது. இப்புதன்கிழமை காலை 5.30 மணிக்கு, அருள்பணி லெவே சே.ச. அவர்களின் கல்லறையில் திருப்பலியும், மாலை 5 மணிக்கு இறைபுகழ் வழிபாடும் நடைபெறும். தமிழகத்தின் சிவகங்கை மறைமாவட்டத்தில், சின்ன அருளானந்தர் எனச் செல்லமாக அழைக்கப்படுபவர், இயேசு சபை அருள்பணி லூயி லெவே. இவர், பிரான்ஸ் நாட்டில் 1884ம் ஆண்டில் பிறந்து, இயேசு சபையில் சேர்ந்து, மதுரை மறைப்பணித்தளத்தில் நற்செய்திப் பணிசெய்யும் ஆர்வத்தில், 1908ம் ஆண்டில், தனது 24வது வயதில், தமிழகம் வந்து சேர்ந்தார். சிவகங்கை மறைமாவட்டத்திலே தனது இறப்புவரை, அதாவது 1973ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி வரை ஆன்மீகப் பணியாற்றினார். அருள்பணி லூயி லெவே அவர்கள், இந்தியா வந்த பின்னர், தனது தாயகமான பிரான்ஸ் நாட்டிற்குச் செல்லவே இல்லை. இம்மாமனிதரை புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கான முதல் கட்டப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, அவர் பற்றிய மேலும் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ”ஓ இயேசுவே, அன்பின் அரசரே, உமது அன்புள்ள இரக்கத்தை நம்புகிறேன்” என்னும் சிறிய செபத்தை இவர் அடிக்கடி சொல்வார். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2018-03-20 23:11:58]


பெங்களூரு உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயர்

பெங்களூரு உயர்மறைமாவட்டத்தின் பேராயர் Bernard Blasius Moras அவர்கள், நிர்வாகப்பணிகளிலிருந்து ஓய்வுபெறுவதைத் தொடர்ந்து, புதிய பேராயராக, பெல்காம் ஆயர் பீட்டர் மச்சாடோ அவர்களை, இத்திங்களன்று நியமித்துள்ளார் திருத்தந்தை. 2004ம் ஆண்டு பெல்காம் மறைமாவட்டத்திலிருந்து மாற்றப்பட்டு, பெங்களூருவின் ஆயராக நியமிக்கப்பட்ட பேராயர் மொராஸ் அவர்கள், தன் 76ம் வயதில் பணி ஓய்வு பெற்றுள்ளார். 1954ம் ஆண்டு பிறந்து, 2006ம் ஆண்டு பெல்காம் ஆயராக நியமிக்கப்பட்ட ஆயர் பீட்டர் மச்சாடோ அவர்கள், தற்போது, பெங்களூருவின் பேராயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளார். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2018-03-19 21:40:18]


கத்தோலிக்க மருத்துவமனை தாக்கப்பட்டுள்ளதற்கு ஆயர்கள் கண்டனம்

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில், அருள்சகோதரிகள் நடத்துகின்ற ஒரு கத்தோலிக்க மருத்துவமனையும், அருள்சகோதரிகளும் தாக்கப்பட்டது குறித்து, தங்களின் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர், இந்திய கத்தோலிக்க ஆயர்கள். இவ்வாரத்தில், உஜ்ஜய்ன் நகரில், கும்பல் ஒன்று, 44 ஆண்டுகளாக நடத்தப்பட்டுவரும் புஷ்பா மறைப்பணி மருத்துவமனைக்கு முன்புறமுள்ள நிலம், தங்களில் ஒருவருக்குச் சொந்தம் என்று சொல்லி, அம்மருத்துவமனையின் சுவர்களைத் தகர்த்து, அவசரச் சிகிச்சைப் பிரிவுக்கு நுழையும் வாயிலையும் அடைத்துள்ளது. அடுத்த அறிக்கை வரும்வரை, சர்ச்சைக்குரிய இடத்தில் வேறெந்த நடவடிக்கைகளும் இடம்பெறக் கூடாது என்று, நிர்வாகம் ஆணையிட்டிருப்பதாக, காவல்துறை தலைவர் Neeraj Pandey அவர்கள், யூக்கா செய்தியிடம் கூறியுள்ளார். ஏறத்தாழ அறுபது பேர் அடங்கிய கும்பல், பெரிய இயந்திரங்களைக் கொண்டு சுவர்களைத் தகர்த்தபோதும், அதைத் தடுக்கவந்த அருள்சகோதரிகள் உட்பட, மருத்துவமனை பணியாளர்கள் தாக்கப்பட்டபோதும், காவல்துறை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்ததைக் குறைகூறியுள்ளனர் ஆயர்கள். போபால் பேராயர் லியோ கொர்னேலியோ, உஜ்ஜய்ன் ஆயர் சாக்கோ தொட்டுமரிக்கல், ஆயர் மஸ்கரீனஸ் ஆகிய மூவரும், அம்மருத்துவமனையைப் பார்வையிட்ட பின்னர், கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர். (ஆதாரம் : CBCI /வத்திக்கான் வானொலி) [2018-03-18 00:52:00]


திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மீது ஆசியர்கள் உயர்மதிப்பு

உலக மக்களில் மூன்றில் இரு பாகத்தினர் வாழ்கின்ற ஆசியக் கண்டத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மிகவும் பிரபலம் அடைந்தவராக இருக்கின்றார், 90 விழுக்காட்டுக்கு மேற்பட்ட ஆசிய மக்கள், திருத்தந்தை மீது, மிக, மிக உயர்வான மதிப்புக் கொண்டுள்ளனர் என்று, இந்திய திருஅவைத் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு நிறைவைமுன்னிட்டு, ஓர் அமெரிக்க இயேசு சபை ஊடகத்திற்குப் பேட்டியளித்த, மும்பை பேராயர், கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள், இந்தியா மற்றும் சீனாவுக்கு திருத்தூதுப் பயணங்கள் மேற்கொள்வதற்குரிய வாய்ப்பு, சி9 கர்தினால்கள் அவையின் பணிகள் உட்பட சில தலைப்புக்களில் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். தென் கொரியா, இலங்கை, பிலிப்பீன்ஸ், மியான்மார், பங்களாதேஷ் ஆகிய, ஆசிய நாடுகளுக்கு, திருத்தந்தை மேற்கொண்ட திருத்தூதுப் பயணங்கள், கத்தோலிக்கரின் ஆன்மீக வளர்ச்சிக்கு உதவியுள்ளன என்றுரைத்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், 2018ம் ஆண்டில் திருத்தந்தை இந்தியாவுக்கு வரக்கூடிய வாய்ப்பு உள்ளது என்ற தன் நம்பிக்கையைத் தெரிவித்தார். திருத்தந்தை, சீனாவுக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்வதற்கு மிகவும் ஆவலாய் உள்ளார் என்றும், திருப்பீட சீர்திருத்தம் குறித்த பணிகள், ஏறத்தாழ நிறைவடையும் கட்டத்தில் உள்ளது, இந்த ஆண்டில் அப்பணி முடிந்துவிடும் என நம்புவதாகவும் கூறினார், கர்தினால் கிரேசியஸ். சி9 கர்தினால்கள் அவையில் ஒருவராகிய, கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள், இந்திய ஆயர் பேரவை மற்றும் ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவராவார். (ஆதாரம் : americamagazine /வத்திக்கான் வானொலி) [2018-03-15 00:07:23]


கருணைக் கொலைக்கு எதிராக இந்திய கத்தோலிக்கத் திருஅவை

தீராத நோயால் பாதிக்கப்பட்டு துன்புறும் நோயாளர்கள் கண்ணியமாக இறக்கும் வகையில், அவர்களை கருணைக்கொலை செய்வதற்கு, இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளவேளை, எல்லா வகையான கருணைக் கொலைகளுக்கு எதிரான தன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது, இந்திய கத்தோலிக்கத் திருஅவை. இந்திய உச்ச நீதிமன்றம், கருணைக்கொலையை அனுமதித்து, இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ள தீர்ப்பையொட்டி, ஆசியச் செய்தியிடம் கருத்து தெரிவித்துள்ள, இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் வளர்ச்சிப் பணிக்குழுவின் செயலர், அருள்பணி ஸ்டீபன் பெர்னான்டோ அவர்கள், கருணைக்கொலைக்கு ஆதரவாகத் தெரிவிக்கப்படும் பரிந்துரைகளை, திருஅவை புறக்கணிக்கின்றது என்று தெரிவித்தார். கருவையோ, கருவில் வளரும் குழந்தையையோ, வயது வந்தவரையோ, வயதானவரையோ, தீராத நோயால் துன்புறுவோரையோ அல்லது இறந்துகொண்டிருக்கும் மனிதரையோ, யாராய் இருந்தாலும், அப்பாவி மனித உயிர்களைக் கொலை செய்வது எந்த விதத்திலும் அனுமதிக்கப்பட முடியாதது என்று கூறினார், அருள்பணி ஸ்டீபன் பெர்னான்டோ. மேலும், கருணைக்கொலையை சட்டமுறைப்படி அங்கீகரிப்பது, இறப்பது நல்லது என்ற சோதனைக்கு உட்படும் மனிதர்கள் உட்பட, நலிந்த மக்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்று, இந்திய ஆயர் பேரவை எச்சரித்துள்ளது. தீராத நோய் உடையவர்கள் மற்றும், செயலற்ற நிலையில் படுத்தபடுக்கையாக இருக்கும் நோயாளர்களை, விதிகளுக்கு உட்பட்டு, அவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் செயற்கை சுவாசத்தை அகற்றி, கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று, ‘காமன்காஸ்’ எனும் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனுத்தாக்கல் ஒன்று செய்து இருந்தது. இந்த மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நான்கு நீதிபதிகளும், நான்கு விதமான கருத்துக்களைத் தெரிவித்திருந்தாலும், கருணைக்கொலை என்ற விடயத்துக்கு அனைவரும் அனுமதி அளித்துள்ளனர். தீராத நோயால் பாதிக்கப்பட்டு துன்புறும் நோயாளர்களை, அவர்களுக்கு பொருத்தப்பட்டுள்ள, உயிர்காக்கும் சாதனங்களை அகற்றுவதன் மூலம், அவர்கள் கண்ணியமாக இறப்பதற்கு அனுமதிக்கலாம். வாழ்வதற்கு விருப்பம் இல்லாத ஒரு மனிதர், செயலற்ற, முடங்கிய நிலையில் துன்புற வேண்டிய அவசியம் இல்லை. தீராத நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளி, தான் இறக்க விரும்புவதை முன்கூட்டியே உயிலாக எழுதுவதும், அவர்களை கருணைக்கொலை செய்வதும், இத்தீர்ப்பில் அனுமதிக்கப்படுகிறது. (ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி) [2018-03-13 00:37:42]


இந்தியா, திருஅவையின் வருங்காலத்திற்கு நம்பிக்கை

திருஅவையின் வருங்காலத்திற்கு ஏராளமான வாக்குறுதிகளை, இந்தியத் திருஅவை வழங்குகின்றது என்று, புதியவழி நற்செய்தி அறிவிப்பு பற்றி பெங்களூருவில் நடைபெற்ற கூட்டத்தில் கூறினார், திருப்பீட அதிகாரி ஒருவர். பாப்பிறை மறைப்பணி கழகங்கள் நடத்திய மூன்று நாள் கூட்டத்தில் உரையாற்றிய, நற்செய்தி அறிவிப்பு பேராயத்தின் இணைச் செயலரும், பாப்பிறை மறைப்பணி கழகங்களின் தலைவருமாகிய பேராயர், Giovanni Pietro Dal Toso அவர்கள், இவ்வாறு கூறினார். பாப்பிறை மறைப்பணி கழகங்களின் ஆரம்பம், அதன் நோக்கம் மற்றும் அதன் பணிகள் பற்றி எடுத்துரைத்த பேராயர் Dal Toso அவர்கள், இந்தியத் திருஅவை ஆற்றிவரும் நற்செய்திப் பணிகளைப் பாராட்டி ஊக்குவித்தார். 2019ம் ஆண்டு அக்டோபர், சிறப்பு மறைப்பணி மாதமாகக் கடைப்பிடிக்கப்படுவது குறித்துப் பேசிய பேராயர் Dal Toso அவர்கள், இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மறைமாவட்டமும் இதற்குரிய தயாரிப்புக்களைத் தொடங்குமாறும், தலத்திருஅவைகளின் மேய்ப்புப்பணித் திட்டத்தில், நற்செய்தி அறிவிப்பு, மைய நிகழ்வாக அறிவிக்கப்படுமாறும் கேட்டுக்கொண்டார். பெங்களூருவில், மார்ச் 7ம் தேதி தொடங்கிய பாப்பிறை மறைப்பணி கழகங்களின் கூட்டம், மார்ச் 09, இவ்வெள்ளிக்கிழமையன்று நிறைவடைந்தது. (ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி) [2018-03-10 18:26:33]


இந்தியா, திருஅவையின் வருங்காலத்திற்கு நம்பிக்கை

திருஅவையின் வருங்காலத்திற்கு ஏராளமான வாக்குறுதிகளை, இந்தியத் திருஅவை வழங்குகின்றது என்று, புதியவழி நற்செய்தி அறிவிப்பு பற்றி பெங்களூருவில் நடைபெற்ற கூட்டத்தில் கூறினார், திருப்பீட அதிகாரி ஒருவர். பாப்பிறை மறைப்பணி கழகங்கள் நடத்திய மூன்று நாள் கூட்டத்தில் உரையாற்றிய, நற்செய்தி அறிவிப்பு பேராயத்தின் இணைச் செயலரும், பாப்பிறை மறைப்பணி கழகங்களின் தலைவருமாகிய பேராயர், Giovanni Pietro Dal Toso அவர்கள், இவ்வாறு கூறினார். பாப்பிறை மறைப்பணி கழகங்களின் ஆரம்பம், அதன் நோக்கம் மற்றும் அதன் பணிகள் பற்றி எடுத்துரைத்த பேராயர் Dal Toso அவர்கள், இந்தியத் திருஅவை ஆற்றிவரும் நற்செய்திப் பணிகளைப் பாராட்டி ஊக்குவித்தார். 2019ம் ஆண்டு அக்டோபர், சிறப்பு மறைப்பணி மாதமாகக் கடைப்பிடிக்கப்படுவது குறித்துப் பேசிய பேராயர் Dal Toso அவர்கள், இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மறைமாவட்டமும் இதற்குரிய தயாரிப்புக்களைத் தொடங்குமாறும், தலத்திருஅவைகளின் மேய்ப்புப்பணித் திட்டத்தில், நற்செய்தி அறிவிப்பு, மைய நிகழ்வாக அறிவிக்கப்படுமாறும் கேட்டுக்கொண்டார். பெங்களூருவில், மார்ச் 7ம் தேதி தொடங்கிய பாப்பிறை மறைப்பணி கழகங்களின் கூட்டம், மார்ச் 09, இவ்வெள்ளிக்கிழமையன்று நிறைவடைந்தது. (ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி) [2018-03-10 18:21:55]


இந்திய ஆயர் பேரவை தலைமையகத்தில் அனைத்துலக பெண்கள் நாள்

மார்ச் 8, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட அனைத்துலக பெண்கள் நாளையொட்டி, புது டில்லியில் உள்ள இந்திய ஆயர் பேரவை தலைமையகத்தில், பேரவையின் செயலர் ஆயர் தியடோர் மஸ்கரீனஸ் அவர்கள் சிறப்புத் திருப்பலியை நிறைவேற்றினார் என்று, பேரவை செய்திக்குறிப்பொன்று கூறுகிறது. "முன்னேற்றத்திற்காக வலியுறுத்துங்கள்" (“Press for Progress”) என்ற மையக்கருத்துடன் சிறப்பிக்கப்படும் இந்த உலகநாள், முதன்முறையாக இந்திய ஆயர் பேரவை தலைமையகத்தில் கொண்டாடப்பட்டது என்று இச்செய்திக்குறிப்பு கூறியுள்ளது. மேலும், பாகிஸ்தானில், லாகூர் நகரில் இயங்கிவரும் தொமினிக்கன் அமைதி மையத்தில், கிறிஸ்தவ, இஸ்லாமிய பெண்கள் இணைந்து, பெண்கள் நாளைச் சிறப்பித்தனர் என்று ஆசிய செய்தி கூறுகிறது. பாகிஸ்தான் தேர்தல்களில் பெண்கள் வேட்பாளர்களாக இருப்பது, சொத்துக்களுக்கு சம உரிமை பெறுவது, கல்வி பெறுவது, போன்ற சமுதாய உரிமைகளை முன்வைத்து, இந்த பெண்கள் நாள் கூட்டம் நடைபெற்றது என்று ஆசிய செய்தி கூறியுள்ளது. (ஆதாரம் : CBCI / வத்திக்கான் வானொலி) [2018-03-09 01:11:42]


ஹோலிப் பண்டிகையில் கிறிஸ்தவர்கள் இணைய போபால் பேராயர் லியோ

வண்ணங்களின் திருவிழா என்றும் அழைக்கப்படும் ஹோலிப் பண்டிகையில், அனைத்து மதத்தினரும் கலந்துகொள்வது, பல்வேறு மதத்தவருக்கு இடையே பாலம் அமைக்க உதவியாக இருக்கும் என்று, இந்திய கத்தோலிக்க பேராயர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இந்துக்கள் கொண்டாடும் ஹோலி பண்டிகை குறித்து யூக்கா செய்தியிடம் கருத்து தெரிவித்துள்ள, மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் பேராயர், லியோ கொர்னேலியோ அவர்கள், இவ்விழா, அனைத்து இந்தியருக்கும், மகிழ்வு, ஒற்றுமை, அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் விழாவாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில், ஒற்றுமையும் நல்லிணக்கமும் காக்கப்பட வேண்டுமென்றும், இதற்கு கிறிஸ்தவ சமுதாயம் தன் முழுஆதரவை வழங்குகின்றது என்றும் கூறியுள்ள பேராயர், லியோ கொர்னேலியோ அவர்கள், இப்பண்டிகையில் கிறிஸ்தவர்கள் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் கிறிஸ்தவர்க்கெதிரான நடவடிக்கைகள் அதிகமாக இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில், 2017ம் ஆண்டில், கிறிஸ்தவர்க்கெதிராக 736 தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன, இவை 2016ம் ஆண்டைவிட, இருமடங்கு அதிகம் என்று யூக்கா செய்தி கூறுகிறது. (ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி) [2018-03-04 01:39:26]


இந்தியாவில் கலப்புத் திருமணங்களை ஊக்குவிக்கும் ஆயர்கள்

இந்தியாவில் வெவ்வேறு சாதிகளுக்கிடையே கலப்புத் திருமணங்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில், CBCI எனப்படும் இந்திய ஆயர் பேரவை புதிய இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ளது. தலித் மக்களுக்கு எதிரான பாகுபாடுகள் களையப்படவும், சாதி மனப்பான்மை நீக்கப்படவுமென, இந்திய ஆயர் பேரவையின் பிற்படுத்தப்பட்டோர் பணிக்குழுவின் முயற்சியின்பேரில் இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 20,21 ஆகிய தேதிகளில், பெங்களூருவிலுள்ள இந்திய சமூக நிறுவனத்தில் நடைபெற்ற கருத்தரங்கில், இந்த இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கருத்தரங்கில், மறைமாவட்ட மற்றும் மாநில அளவில் பிற்படுத்தப்பட்டோர் பணிக்குழுக்களின் குறைந்தது 110 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த இணையதளம் பற்றி கருத்து தெரிவித்த, இந்திய ஆயர் பேரவையின் பிற்படுத்தப்பட்டோர் பணிக்குழுவின் செயலர் அருள்பணி தேவசகாய ராஜ் அவர்கள், இந்திய ஆயர் பேரவை நிறைவேற்றிய தலித் மக்கள் பற்றிய தீர்மானங்கள் அமல்படுத்தப்படுவதை ஊக்குவிக்கும் நோக்கத்தில், இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறினார். இந்தியாவிலுள்ள கத்தோலிக்கரில், அறுபது விழுக்காட்டினர் அதாவது ஒரு கோடியே 20 இலட்சம் பேர் தலித்துகள் என்று ஆசியச் செய்தி கூறுகின்றது. இந்திய ஆயர் பேரவை தொடங்கியுள்ள புதிய இணையதளம் www.dalitchristianscbci.org (ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி) [2018-02-25 10:23:16]