வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்கேரளாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள்

ப்ரல் மாதத்தின் துவக்கத்திலிருந்து, கடந்த 16 நாள்களில், இந்தியாவின் கேரளா மாநிலத்தில் மூன்று கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 16, இத்திங்களன்று கேரளாவின் காசரக்கோடு மாவட்டத்திலுள்ள உக்கிநட்கா என்ற ஊரில் அமைந்துள்ள இயேசுவின் திரு இருதயக் கோவில் கல்லறைத் தோட்ட வாசல் சிலுவையும், 7 கல்லறைகளும் சேதமாக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னதாக, ஏப்ரல் 10ம் தேதி, நெய்யாற்றின்கரா மறைமாவட்டத்திலுள்ள மேய்ப்புப்பணி மையத்தை, ஏறத்தாழ 500 பேர் கொண்ட கும்பல், கல்லெறிந்து சேதப்படுத்தியுள்ளனர். மேலும், உயிர்ப்பு விழாவுக்கு முந்திய நாளான புனித சனிக்கிழமையன்று, ஆலப்புழா மாவட்டத்திலுள்ள புன்னமூடு என்ற இடத்தில், ஆர்த்தடாக்ஸ் கோவில் ஒன்றை சேதப்படுத்தியதோடு, அக்கோவிலில் பணியாற்றும் கிறிஸ்தவப் போதகரையும் தாக்கியுள்ளனர். இத்தாக்குதல்கள் குறித்து கண்டனத்தை வெளியிட்ட இந்தியக் கிறிஸ்தவர்களின் உலக அவைத்தலைவர், சஜன் ஜார்ஜ் அவர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிராக எழுந்துள்ள விரோதப் போக்கு அண்மைய ஆண்டுகளில் அதிகம் வளர்ந்துள்ளது என்றும், இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார். (ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி) [2018-04-17 23:31:12]


வெறுப்புணர்வுக்கு எதிராகச் செயல்பட மதத் தலைவர்கள் உறுதி

இந்தியாவில், சகிப்பற்றதன்மையும், வகுப்புவாத வன்முறைகளும் அதிகரித்துவருகின்றவேளை, பல்வேறு மதங்களின் உண்மையான போதனைகளைப் பரப்புவதற்கு, நாட்டின் பல்சமயத் தலைவர்கள் உறுதி எடுத்துள்ளனர். இப்புதன், வியாழன் ஆகிய இரு நாள்களில் (ஏப்ரல் 11,12) மத்திய பீரதேச மாநிலத்தின் இந்தோரில், இந்தியாவின் 1,500க்கும் மேற்பட்ட, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ, சீக்கிய, ஜைன மற்றும் புத்த மதங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டத்தில், இந்தியாவில் காணப்படும் வெறுப்புணர்வுக்கு எதிராகச் செயல்பட உறுதி எடுக்கப்பட்டது. இந்தியாவில் மத நல்லிணக்கத்திற்காக உழைக்கும் மூன்று நிறுவனங்கள் இணைந்து நடத்திய இக்கூட்டம் பற்றி யூக்கா செய்தியிடம் பேசிய, Adil Sayeed அவர்கள், நாட்டில் வகுப்புவாத வன்முறை அதிகரித்து வருவதால், அதற்குத் தீர்வு காண வேண்டிய நிலையில் நாம் உள்ளோம் என்று தெரிவித்தார். இந்தியாவில், 2017ம் ஆண்டில் கிறிஸ்தவர்க்கெதிராக 736 தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன, 2016ம் ஆண்டில் இவ்வெண்ணிக்கை 348 ஆக இருந்தது என்று செய்திகள் கூறுகின்றன. (ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி) [2018-04-15 10:42:48]


விபத்தில் இறந்த குழந்தைகளுக்காக இந்திய ஆயர்களின் அனுதாபம்

இந்தியாவின் இமாலய மலைப்பகுதியில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்காக இந்திய ஆயர் பேரவை தன் ஆழ்ந்த அனுதாபங்களையும் செபங்களையும் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 9, இத்திங்களன்று, இமாச்சல பிரதேச மாநிலத்தின் நுர்பூர் (Nurpur) என்ற இடத்தில், 40 குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, ஏறத்தாழ 330 அடி ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததால், பயணம் செய்த 30க்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டனர். இந்த விபத்தைக் குறித்து, வத்திக்கான் வானொலிக்கு பேட்டியளித்த, இந்திய ஆயர் பேரவையின் செயலர், ஆயர் தியடோர் மாஸ்கரீனஸ் அவர்கள், சரியாகப் பராமரிக்கப்படாத சாலைகள், சாலை விதி முறைகளை மீறுதல் ஆகிய காரணங்களால் பெருமளவு உயிர்கள் இந்தியாவில் பலியாகின்றன என்று கூறினார். குழந்தைகளின் மரணம், இந்திய ஆயர்களுக்கு பெரும் வேதனையைத் தந்துள்ளது என்று கூறிய ஆயர் மாஸ்கரீனஸ் அவர்கள், இக்குழந்தைகளைப் பறிகொடுத்துள்ள பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், தங்கள் அனுதாபங்களையும், செபங்களையும், பேரவை சார்பாகத் தெரிவிப்பதாகக் கூறினார். அடிபட்ட குழந்தைகளில் பலர், சரியான, உடனடியான மருத்துவ உதவிகள் கிடைக்காததால் உயிரிழந்துள்ளனர் என்பதை தன் பேட்டியில் குறிப்பிட்ட, ஆயர் மாஸ்கரீனஸ் அவர்கள், இந்தியாவின் பல பகுதிகளில் நிலவும் பரிதாபமான மருத்துவ பராமரிப்பைக் குறித்து தன் வேதனையை வெளியிட்டார். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2018-04-12 02:17:07]


பிரிவினையை உண்டாக்கும் சக்திகளிடம் சரணடைய வேண்டாம்

ஒடிசா மாநிலத்தின், சுந்தர்கார் மாவட்டத்தில், கிறிஸ்து உயிர்ப்பு திருவிழிப்பு திருவழிபாட்டின்போது, சேதப்படுத்தப்பட்ட கிறிஸ்தவ ஆலயங்களை, இந்திய ஆயர்களின் பிரதிநிதிகள் குழு ஒன்று பார்வையிட்டு, இந்திய ஆயர் பேரவையின் சார்பில், அப்பகுதி கத்தோலிக்கருடன் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளது. இக்குழுவினரை வரவேற்ற அப்பகுதி கத்தோலிக்கரோடு சேர்ந்து செபித்த இக்குழு, இக்குற்றச் செயல்களைப் புரிந்தவர்களை மன்னிக்கவும், அவர்களின் மனமாற்றத்திற்காகச் செபிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளது. ஏப்ரல் 07, இச்சனிக்கிழமையன்று, இந்திய ஆயர் பேரவையின் செயலர், ஆயர் தியோடர் மஸ்கரீனஸ் அவர்கள் தலைமையில், கட்டக்-புவனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா, ரூர்கேலா ஆயர், கிஷோர் குமார் குஜூர் மற்றும், ஏனைய ஆயர்களும், சேதப்படுத்தப்பட்ட கிறிஸ்தவ ஆலயங்களைப் பார்வையிட்டனர். Salangabahal நகரிலுள்ள புனித தோமையார் ஆலயத்திற்கு முதலில் சென்ற அக்கழு, சேதப்படுத்தப்பட்ட அன்னை மரியா திருவுருவம் மற்றும் அந்த ஆலயத்தின் முன்புறக் கெபியில் தலைதுண்டிக்கப்பட்ட குழந்தை இயேசு திருவுருவத்தையும் பார்வையிட்டது. சேதப்படுத்தப்பட்ட ஏனைய ஆலயங்களையும் இக்குழு பார்வையிட்டது. அச்சமயத்தில் கருத்து தெரிவித்த, ஆயர் மஸ்கரீனஸ் அவர்கள், அமைதியைக் குலைப்பதற்குத் திட்டமிட்டு ஆற்றப்பட்ட செயல் இது என்று கூறினார். மேலும், அறிக்கை ஒன்றை வெளிட்ட இந்த ஆயர்கள் பிரதிநிதிகள் குழு, சரியான நேரத்தில் காவல்துறை வந்து, அந்த மாவட்டத்தில் அனைத்து ஆலயங்களுக்கும் பாதுகாப்பு அளித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளது. அத்துடன், பிரிவினையை உண்டாக்கும் சக்திகளிடம் சரணடைய வேண்டாமெனவும், கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டுள்ளது அக்குழு. (ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி) [2018-04-09 20:39:16]


'சத்யமேவ ஜயதே' என்ற கூற்றின் வெளிப்பாடாக உயிர்ப்பு

இந்தியாவின் மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றும் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் அனைவரும், நீதியோடும், உண்மையோடும் மக்களுக்கென உழைக்கவேண்டும் என்ற வேண்டுதலை, இந்த புனித வாரத்தில் கிறிஸ்தவர்கள் எழுப்பவேண்டும் என்று, இந்திய ஆயர் பேரவையின் செயலர், ஆயர் தியோடோர் மஸ்கரீனஸ் அவர்கள் கூறினார். நடைபெறும் புனித வாரத்தைக் குறித்து பீதேஸ் (Fides) செய்திக்கு வழங்கிய ஒரு பேட்டியில், இப்புனித வாரத்தில் கடைபிடிக்கப்படும் அனைத்து வழிபாட்டு நிகழ்வுகளும், இந்திய தலத்திருஅவை அனுபவித்துவரும் பல்வேறு நிகழ்வுகளை நினைவுறுத்துகின்றன என்று ஆயர் மஸ்கரீனஸ் அவர்கள் எடுத்துரைத்தார். இயேசுவின் வாழ்வு மற்றும் மரணம் குறித்து பேசிய காந்தியடிகள், குற்றமற்ற ஒருவர், பிறரின் நலனுக்கென தன்னையே பலியாக வழங்கியதால், இவ்வுகிற்கு மீட்பைக் கொணர்ந்தார் என்று கூறியுள்ளதை, ஆயர் மஸ்கரீனஸ் அவர்கள் தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார். 'சத்யமேவ ஜயதே' அதாவது, வாய்மையே வெல்லும் என்ற இந்திய கூற்றின் ஒரு வெளிப்பாடாக, இயேசுவின் உயிர்ப்பு விளங்கியது என்று ஆயர் மஸ்கரீனஸ் அவர்கள் வலியுறுத்திக் கூறினார். (ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி) [2018-03-31 01:45:17]


இந்தியாவில் மதச்சார்பற்ற அரசு ஆட்சிக்கு வரவேண்டுமென்று செபம்

இந்தியாவில் அடுத்த ஆண்டில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற அரசு, ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக, மார்ச் 18, கடந்த ஞாயிறு முதல், மார்ச் 25, இஞ்ஞாயிறுவரை, இந்தியக் கிறிஸ்தவர்கள் செப வாரத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர்,. தேர்தலில் மக்களாட்சி வெல்லவும், பணம் விநியோகிக்கப்படுவது தவிர்க்கப்படவும் நாட்டின் பொதுநலனில் அக்கறையுள்ள தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படவும், கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்படவும், இச்செப வாரத்தில் உண்ணா நோன்பிருந்து செபிக்குமாறு, கிறிஸ்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஒடிசா மாநிலத்தில், கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் மீண்டும் இடம்பெறுவதாக, இம்மாதத்தில், பீதேஸ் செய்தி கூறியுள்ளது. Tangaguda கிராமத்தில், 35 இந்துக் குடும்பங்களுக்கு அருகில் வாழ்கின்ற, மூன்று கிறிஸ்தவக் குடும்பங்கள், கடுமையாய்த் தாக்கப்பட்டனர் என்று, மார்ச் 3ம் தேதியன்று, பீதேஸ், செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. மேலும், இந்தியாவில், இந்து தேசியவாதப் போக்கும், சகிப்பற்றதன்மைச் சூழலும் அதிகரித்து வரும்வேளை, இந்திய ஊடகவியலாளர்கள், பதியமுறையில் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர் என்று, ஓர் ஊடக உரிமைக் குழு கூறியுள்ளது. இந்தியாவில், ஒவ்வோர் ஆண்டும், மூன்று செய்தியாளர்கள் வீதம் கொல்லப்படுகின்றனர் எனவும், பத்திரிகை சுதந்திரத்தைப் பொருத்தவரை, 180 நாடுகளில் இந்தியா 136வது நாடாக உள்ளது எனவும், பத்திரிகை சுதந்திரக் குறியீடு, மதிப்பிட்டுள்ளது. இந்தியாவில், கடந்த 24 ஆண்டுகளில், 70க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. (ஆதாரம் : UCAN/Agencies / வத்திக்கான் வானொலி) [2018-03-25 01:16:08]


இந்தியாவில், ஏப்ரலை, 'தலித் வரலாற்று மாதமாக’க் கொண்டாட...

ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதத்தை, 'தலித் வரலாற்று மாதம்' என்று சிறப்பிக்க, இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர் என்று ஆசிய செய்தி கூறுகிறது. தலித் மக்களின் விடுதலைக்காக போராடி, தங்கள் வாழ்வைத் தியாகம் செய்தவர்களை நினைவுகூர, ஏப்ரல் மாதம் தகுந்ததொரு தருணம் என்று, இந்திய ஆயர் பேரவையின், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பணிக்குழு, மடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வரலாற்று மாதத்தைச் சிறப்பிக்கும் வகையில், தலித் மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்தோரின் வாழ்க்கை குறிப்புக்களை இப்பணிக்குழுவினருக்கு மார்ச் 25ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் 120 கோடி மக்கள் தொகையில், 20 கோடியே 10 இலட்சம் பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்தியாவில் வாழும் தலித் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 78 இலட்சம் என்றும் ஆசிய செய்தி கூறுகிறது. (ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி) [2018-03-22 23:18:06]


இறைஊழியர் அ.பணி லெவே சே.ச. நினைவு நாள் மார்ச் 21

இறைஊழியர் அருள்பணி லெவே சே.ச. அவர்களின் நினைவு நாளான, மார்ச் 21, இப்புதன்கிழமை மாலை 6 மணிக்கு, சருகணி திரு இதயங்களின் ஆலய மைதான மேடையில், சிவகங்கை மறைமாவட்ட மேதகு ஆயர் செ.சூசைமாணிக்கம் அவர்கள் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்படுகின்றது. இப்புதன்கிழமை காலை 5.30 மணிக்கு, அருள்பணி லெவே சே.ச. அவர்களின் கல்லறையில் திருப்பலியும், மாலை 5 மணிக்கு இறைபுகழ் வழிபாடும் நடைபெறும். தமிழகத்தின் சிவகங்கை மறைமாவட்டத்தில், சின்ன அருளானந்தர் எனச் செல்லமாக அழைக்கப்படுபவர், இயேசு சபை அருள்பணி லூயி லெவே. இவர், பிரான்ஸ் நாட்டில் 1884ம் ஆண்டில் பிறந்து, இயேசு சபையில் சேர்ந்து, மதுரை மறைப்பணித்தளத்தில் நற்செய்திப் பணிசெய்யும் ஆர்வத்தில், 1908ம் ஆண்டில், தனது 24வது வயதில், தமிழகம் வந்து சேர்ந்தார். சிவகங்கை மறைமாவட்டத்திலே தனது இறப்புவரை, அதாவது 1973ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி வரை ஆன்மீகப் பணியாற்றினார். அருள்பணி லூயி லெவே அவர்கள், இந்தியா வந்த பின்னர், தனது தாயகமான பிரான்ஸ் நாட்டிற்குச் செல்லவே இல்லை. இம்மாமனிதரை புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கான முதல் கட்டப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, அவர் பற்றிய மேலும் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ”ஓ இயேசுவே, அன்பின் அரசரே, உமது அன்புள்ள இரக்கத்தை நம்புகிறேன்” என்னும் சிறிய செபத்தை இவர் அடிக்கடி சொல்வார். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2018-03-20 23:11:58]


பெங்களூரு உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயர்

பெங்களூரு உயர்மறைமாவட்டத்தின் பேராயர் Bernard Blasius Moras அவர்கள், நிர்வாகப்பணிகளிலிருந்து ஓய்வுபெறுவதைத் தொடர்ந்து, புதிய பேராயராக, பெல்காம் ஆயர் பீட்டர் மச்சாடோ அவர்களை, இத்திங்களன்று நியமித்துள்ளார் திருத்தந்தை. 2004ம் ஆண்டு பெல்காம் மறைமாவட்டத்திலிருந்து மாற்றப்பட்டு, பெங்களூருவின் ஆயராக நியமிக்கப்பட்ட பேராயர் மொராஸ் அவர்கள், தன் 76ம் வயதில் பணி ஓய்வு பெற்றுள்ளார். 1954ம் ஆண்டு பிறந்து, 2006ம் ஆண்டு பெல்காம் ஆயராக நியமிக்கப்பட்ட ஆயர் பீட்டர் மச்சாடோ அவர்கள், தற்போது, பெங்களூருவின் பேராயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளார். (ஆதாரம் : வத்திக்கான் வானொலி) [2018-03-19 21:40:18]


கத்தோலிக்க மருத்துவமனை தாக்கப்பட்டுள்ளதற்கு ஆயர்கள் கண்டனம்

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில், அருள்சகோதரிகள் நடத்துகின்ற ஒரு கத்தோலிக்க மருத்துவமனையும், அருள்சகோதரிகளும் தாக்கப்பட்டது குறித்து, தங்களின் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர், இந்திய கத்தோலிக்க ஆயர்கள். இவ்வாரத்தில், உஜ்ஜய்ன் நகரில், கும்பல் ஒன்று, 44 ஆண்டுகளாக நடத்தப்பட்டுவரும் புஷ்பா மறைப்பணி மருத்துவமனைக்கு முன்புறமுள்ள நிலம், தங்களில் ஒருவருக்குச் சொந்தம் என்று சொல்லி, அம்மருத்துவமனையின் சுவர்களைத் தகர்த்து, அவசரச் சிகிச்சைப் பிரிவுக்கு நுழையும் வாயிலையும் அடைத்துள்ளது. அடுத்த அறிக்கை வரும்வரை, சர்ச்சைக்குரிய இடத்தில் வேறெந்த நடவடிக்கைகளும் இடம்பெறக் கூடாது என்று, நிர்வாகம் ஆணையிட்டிருப்பதாக, காவல்துறை தலைவர் Neeraj Pandey அவர்கள், யூக்கா செய்தியிடம் கூறியுள்ளார். ஏறத்தாழ அறுபது பேர் அடங்கிய கும்பல், பெரிய இயந்திரங்களைக் கொண்டு சுவர்களைத் தகர்த்தபோதும், அதைத் தடுக்கவந்த அருள்சகோதரிகள் உட்பட, மருத்துவமனை பணியாளர்கள் தாக்கப்பட்டபோதும், காவல்துறை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்ததைக் குறைகூறியுள்ளனர் ஆயர்கள். போபால் பேராயர் லியோ கொர்னேலியோ, உஜ்ஜய்ன் ஆயர் சாக்கோ தொட்டுமரிக்கல், ஆயர் மஸ்கரீனஸ் ஆகிய மூவரும், அம்மருத்துவமனையைப் பார்வையிட்ட பின்னர், கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர். (ஆதாரம் : CBCI /வத்திக்கான் வானொலி) [2018-03-18 00:52:00]


பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்